கடந்த ஒக்ரோபர் மாதம் 22 ஆம் நாள் அனுராதபுரத்தில் இருந்த சிறிலங்காவின் வான்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் வான் வழியிலும் தரை வழியிலுமான தாக்குதலொன்றைச் செய்ததை அடுத்து, அம் மாவட்டத்தின் பாதுகாப்பு பற்றி சிறிலங்கா படைத்தரப்பும், அரச தலைமையும் சிண்டைப் பிய்த்துக்கொண்டு யோசித்த பின், அம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளுக்கான கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சனத் கருணாரத்ன நியமிக்கப்பட்டார், அவருக்கு உச்ச அளவு அதிகாரங்கள் தரப்பட்டன.
அதிகாரங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருந்த போதும் அதைச் செலுத்துவதற்கான ஆட்தொகையை இட்டு நிரப்பும் பணி இன்றுவரை நடந்துகொண்டே இருக்கிறது. கிழக்கில் இருந்து அகற்றப்பட்ட காவல்துறைக் கொமாண்டோக்களில் பெரும்பகுதியினர் அனுராதபுரத்தின் பின்தளங்களுக்கான காவல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் மாவட்டம் பலப்படுத்தப்படுவதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன.
வடகிழக்குத் தமிழர் தாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள போரினை நடத்துவதற்கான கட்டுப்பாட்டு மையத்ததை அமைப்பதற்கு மிகச்சிறந்த இடமாக அனுராதபுரம் உள்ளது.
படையச் செயற்பாடுகளில் பெரும் பங்களிப்புக்களைச் செய்யும் கொழும்பு, காலி, திருமலை ஆகிய முதன்மைத் துறைமுகங்களின் விநியோகத்தைத் தொடுக்கும் மையப்புள்ளியாக அனுராதபுரம் திகழ்கிறது.
இங்குள்ள மரபுச்சமர் முனைகள் அனைத்தையும் குறுகிய காலத்தில் தரைவழியாக அல்லது குறுகிய பறப்புக்காலத்தில் வான் வழியாக அடையைக்கூடிய அமைவிடத்தில் அது இருக்கிறது.
வடகிழக்குத் தமிழர் தாயகத்தில் வன்குடியேற்றங்களைச் செருக வசதியாக, அத்தாயக நிலப்பரப்போடு ஒட்டியிருக்கிறது அனுராதபுரம்.
ஏலவே பல படைய ஆய்வுகளிற் தெரிவிக்கப்பட்டது போல இங்குள்ள மரபுக்களங்களுக்கான வழங்கல், பயிற்சி, ஆளணி முகாமைத்துவம், இலத்திரனியல் உள்ளிட்ட வேவு மற்றும் புலனாய்வு போன்ற செயற்பாடுகளின் மைய நரம்புப் பிரதேசமாக அனுராதபுரம் உருக்வெடுத்துள்ளது. மரபுக் களமுனை உக்கிரம் பெறப்பெற அனுராதபுரத்தின் முக்கியத்துவம் உயரும்.
மொத்தத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பின் எல்லைகளில் புதையுண்டு நிற்கும் பல டிவிசன் படையினரின் ஒரு நம்பிக்கை மையம் என்று அனுராதபுரத்தைச் சொல்லாம்.
கொழும்பில் விடுதலைப் புலிகள் தாக்குதலொன்றைச் செய்யும்போது ஒப்பீட்டளவில் மேலதிகாரிகள் மட்டத்தில் கிலேசம் பரவும்.
அனுராதபுரம் தாக்கப்படும்போது களநிலை நிருவாகம் நேரடியாகப் பாதிக்கப்படுவதோடு களநிலைச் சிப்பாய்களும் அதை நேரடித் தாக்கமாகவே உணர்கின்றனர்.
களமுனையில் காயப்படும் சிங்களச் சிப்பாய்களிற் பெருவாரியானோர் அனுராதபுரத்தில் இருக்கும் படைய மருத்துவமனைக்கும், அது இப்போது அடிக்கடி நிரம்பிவிடுவதால் அங்குள்ள பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்படுவதுண்டு. அதைவிட, அவர்கள் விடுப்பிற்குச் செல்வதற்கான வாசலாகவும் அனுராதபுரமே உள்ளது.
விடுப்பில் செல்லும் வீரர்களைக் களிப்பூட்டும் ‘சோடசவுபசார’ மையங்களும் அனுராதபுரத்தின் இன்னுமோர் சிறப்பம்சம். இவற்றையும் தாண்டி, அனுராதபும் தங்களின் புனித நகர் என்ற எண்ணக்கருவும் சிங்களர் உள்ளங்களில் ஆழப் புதைக்கப்பட்டு நிற்கிறது.
இந்நிலையில், கையெட்டும் தொலைவில் உள்ள பாதுகாப்பிடம் என்ற உணர்வை அனுராதபுரத்தின்பால் கொண்டிருக்கும் சிங்களச் சிப்பாய், அங்கு நடக்கும் சிறு சம்பவத்தைக் கூட தனக்கு முதுகுப்புறத்தில் ஏற்பட்டுள்ள அபாயம் என்றே பார்ப்பான்.
இவ்வாறான காரணங்களின் அடிப்படையில், அனுராதபுரத்துதை சம்பவங்கள் இன்றிப் பேணவேண்டிய நிர்ப்பந்தம் சிறிலங்காவிற்கு உண்டு. அதற்காக பெருமளவு ஆளணியையும் வளங்களையும் எத்தனங்களையும் சிறிலங்கா படைத்தரப்பு அங்கே குவித்து வருகிறது. நீண்டகால நோக்கில் அதைப் பாதுகாப்பதற்கான முதலீட்டையும் செய்து வருகிறது.
அனுராதபுரத்தின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டே மதவாச்சி சோதனைச் சாவடி அமைக்கட்டது.
எவ்வாறான முயற்சிகளை சிறிலங்கா ஆட்சியாளர் செய்த போதிலும் அனுராதபுரத்தில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதிலும் அவ்விடத்தைச் சம்பவங்களின்றிப் பேணுவதிலும் சிறிலங்கா படைத்தரப்பினர் பாரிய சவால்களைச் சந்தித்தே வருகிறார்கள்.
மணலாறு மற்றும் பதவியா கிராமங்களில் வன்குடியேறி, இப்போது இடம்பெயர்ந்துள்ள சிங்கள மக்கள் இன்றும் அகதிகளாகவே உள்ளனர். அக்கிராமங்களில் பல இன்றும் எறிகணைப் பரிமாற்றங்களின்போது தாக்குதலுக்கு உள்ளாகுகின்றன. படையினரே அங்கு காணப்படுகின்றனர்.
கெப்பிற்றிக்கொல்லாவ போன்ற இடங்களில் அவ்வப்போது கிளைமோர்த் தாக்குதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அவ்வாறான தாக்குதல் நிகழும் சாலைகளில் பயணிக்கும் சகல வண்டிகளுக்கும் சன்னம் துளைக்காத பாதுகாப்புத் தகடுகள் பொருத்துவதற்கான முயற்சிகளை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு செய்துவருகிறது.
ஆனாலும், அந்த வண்டியை நம்பி ஏறுவதற்கு மக்கள் விருப்பப்படாத நிலையில் மேலும் பாதுகாப்பை அதிகரித்து இயல்புநிலை பேணவேண்டிய நிர்ப்பந்த நிலையில் இப்போது காவல்துறைக் கொமாண்டோக்களும் இறக்கி விடப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு வரவேற்பு வழங்குவது போல அனுராதபுரத்தின் எல்லையில், வில்பத்து தேசியப் பூங்கா பகுதியில் இந்த வாரமும் சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது, இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
தமிழர் தாயகப் பகுதியிலும் அதற்கு அப்பாலும் நிகழும் சம்பவங்கள் கொழும்பு ஆட்சியாளருக்கு வௌ;வேறு விதமான அழுத்தங்களைக் கொண்டுவரத்தக்கனவாக அமைந்திருக்கின்றன.
அம்பாந்தோட்டையில் நிகழும் படையிருக்கு எதிரான தாக்குதல்கள் அங்கே குடிமக்கள் இடப்பெயர்வை உண்டாக்கியதோடு, இன்னுமோர் போர்முனை திறக்கப்பட்டதற்குச் சமமான ஆட், பொருள், எத்தனச் செலவை அரச படைக்கு ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை கஞ்சிகுடிச்சாற்றுப் பகுதியில் படையினர் மீது அடிக்கடி நடத்தப்படும் தாக்குதல்கள் கிழக்கில் புலிகளை அகற்றிவிட்டோம் என்ற அரசாங்கத்தின் கொக்கரிப்பிற்குச் சவால் விடுப்பதோடு அங்கே நிரந்தரமான படையமர்வைப் பேணவேண்டிய நிர்ப்பந்தத்தையும் உண்டாக்கியுள்ளன.
கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவேறு தாக்குதல் சம்பவங்களில் படைத்தரப்பில் மூவர் கொல்லப்பட்டிருக்கின்றனர், குறைந்தது 10 பேர் காயமடைந்திருக்கின்றனர். மாகாண சபைத் தேர்தலுக்காக அரசாங்கம் தயார்படும் தருணத்தில் இது நிகழ்ந்திருப்பது இருவேறு நிர்ப்பந்தங்களை அரசாங்கப் படைகளுக்குத் தந்திருக்கிறது.
ஒன்று, அங்கிருந்து காவல்துறைக் கொமாண்டோக்களை அகற்றுவதை நிறுத்திவிட்டு அப்பகுதிகளுக்கு மேலதிக துருப்புக்களைத் தருவித்து பாதுகாப்பைக் குறைந்தது மாகாண சபைத் தேர்தல் வரையாவது பேணவேண்டும். அல்லது, அகற்றப்படும் கொமாண்டோக்களுக்குப் பதிலாக சீர்மப் படையினரைக் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு பலமான அழுத்தங்கள் எழுந்த போதிலும், கிழக்கில் கொண்டுள்ள சாதகமான படையச் சூழ்நிலையை அது மாறு முன்னரே பயன்படுத்திவிட வேண்டும் என்ற கருத்தை அரச தலைமைக்குப் பரிந்துரைத்துள்ள படைத்தலைமை, மாகாண சபைத் தேர்தலை நிகழ்த்தி முடித்த கையோடு கிழக்கில் இருக்கும் படையின் அளவை வெகுவாகக் குறைத்து, அப்படைகளை வன்னிக் களமுனையில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
மன்னாரிலும், மணலாற்றிலும் ஏற்பட்டுள்ள தொய்வுநிலைக்கு மழையிலும் சிக்கன்குன்யாவிலும் பழிபோட்டு மழையிலேயே குளிர்காய்ந்திருக்கிறது படைத்தலைமை. அந்த முனைகளுக்கான ஆளணித் தேவையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துச் செல்கிறது. இந்நிலையில், கிழக்கில் மென்மேலும் துருப்புக்களை முடக்குவதைப் படைத்தலைமை விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தனது அரசியல் நிகழ்ச்சி நிரலைப் படைய நிகழ்வுகளோடு பின்னி வைத்துள்ள மகிந்தருக்கு, அதற்கு உடன்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. அந்த இடைப்பட்ட காலத்தில் கிழக்கிலும் தெற்கிலும் புலிகளைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படலாம்.
எவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்லப்பட்டாலும், கிழக்கில் படைகளை ஐதாக்குவது, காவல்துறைக் கொமாண்டோக்களை எடுப்பது உட்டபட, 'ஜயசிகுரு" நிகழ்சிகளையே பலருக்கும் நினைவூட்டும் என்பதில் ஐயமில்லை.
படை நடவடிக்கையொன்று, காலம், இலக்கு, செலவுத்தானம் ஆகிய பரிமாணங்களில், தனது சொந்த நிகழ்ச்சி நிரலில் இருந்து தடம்மாறுவதற்கான குணங்குறிகள் வன்னிப் போர்முனைகளில், குறிப்பாக மன்னார் முனையில் காணப்படுவதாக படைத்துறை அவதானிகள் எண்ணத் தலைப்பட்டுள்ளனர்.
புலிகளின் வலிந்த தாக்குதல் ஒன்றை எதிர்பார்க்கும் அதேவேளை, அத்தாக்குதலை எப்படியாவது முறியடித்துவிட வேண்டும் என்று கங்கணங்கட்டி நிற்கிறது படைத்தரப்பு.
ஒக்ரோபர் 22 தாக்குதல் போன்ற அல்லது அதிலும் பலபங்கு குறைவான வீச்சுள்ள தாக்குல் ஒன்றே களமுனையை மோசமாகப் பாதித்து விடும் என்ற நிலையில், அனுராதபுரத்தில் ஆள்வலுவை அதிகரிப்பதைத் தவிர படைத்துறைக்கு வேறு தேர்வுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
நன்றி: வெள்ளிநாதம்
Friday, April 4, 2008
'களத்திற்கு வெளியே எழுந்துள்ள சவால்கள்"
Posted by tamil at 2:14 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment