Sunday, April 20, 2008

கருணாநிதியிடமிருந்து இலங்கைத் தமிழர் எதிர்பார்ப்பது....

இலங்கையில் சமாதானப் பேச்சுக்களை இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும் உலகத் தமிழர்களின் மூத்த தலைவருமான மு.கருணாநிதி யோசனை தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மோதலில் ஈடுபடும் தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்பதும் சமாதானப் பேச்சுகள் பிரயோசனமானவையாகவும் பொருத்தமான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதாகவும் அமைய வேண்டும் என்பதும் கலைஞரின் யோசனையின் பிரதான அம்சமாகக் காணப்படுகிறது.
சமாதான அனுசரணையாளரான நோர்வே கடந்த வாரம் இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் இந்தியா தீர்க்கமான பங்களிப்பை வழங்கும் என்று உறுதிபடத் தெரிவித்திருந்த நிலையில் இப்போது தமிழக முதல்வரும் மத்திய அரசாங்கத்திடம் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார். 1999 இன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பிலும் விடுதலைப் புலிகளின் இணக்கப்பாட்டுடனும் சமாதான அனுசரணையாளராக நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒஸ்லோ தற்போது முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருக்கும் சமாதான நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம் அளிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்ற அதேசமயம் இப்போது அந்தப் பொறுப்பை இந்தியாவிடமே மீண்டும் ஒப்படைக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தின் களநிலைமைகளை நன்கு உணர்ந்திருப்பதன் அறிகுறியாகவே அதாவது இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் ஆசீர்வாதமின்றி எதுவுமே நடக்கப்போவதில்லை என்பதை முழுமையாக விளங்கிக் கொண்டதன் விளைவாகவே நோர்வே தற்போது தீர்க்கமான பங்களிப்பை புதுடில்லி வழங்கும் என்று கூறியிருக்கிறது.

ஒஸ்லோவில் கடந்த 10, 11 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தெற்காசியாவில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான மாநாட்டைத் தொடர்ந்தே இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் மீண்டும் சர்வதேச அரங்கில் சிறியளவில் முனைப்புக் கொண்டிருக்கின்றன என்ற சிறுதுளி நம்பிக்கை முளைவிட்டிருக்கின்றது. இதற்கு வலுவூட்டுவது போன்று தமிழக முதல்வரும் யோசனை தெரிவித்திருக்கின்றார். நோர்வேயில் இடம்பெற்ற மாநாடு தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனும் விளக்கமாக எடுத்துக்கூறியிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் வேதனைகளையும் அவலங்களையும் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். வைகோவின் கருத்துகளை செவிமடுத்த இந்தியப் பிரதமரும் இலங்கைத் தமிழரின் கஷ்டங்களை இந்தியா அலட்சியப்படுத்தி விடமுடியாது என்று கூறியிருக்கிறார்.

1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் புகலிடம் தேடி தமிழ்நாட்டில் தஞ்சமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையின் இன நெருக்கடியில் நேரடியாக புதுடில்லி தலையிட்டது. ஆனாலும், வடக்கு கிழக்கை தமது பாரம்பரிய தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான முழுமையான உத்தரவாதத்தை இந்திய நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கத் தவறி விட்டதாகவே கருத முடிகிறது. தமிழ் மக்களின் முழுமையான இணக்கப்பாடின்றியே கொழும்புடன் 1987 இல் புதுடில்லி ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தில் முக்கியமாக விதந்துரைக்கப்பட்ட எந்தவொரு முக்கியமான அம்சங்களும் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பது யாவரும் அறிந்ததொன்றேயாகும். யாவற்றுக்கும் மேலாக அந்த ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த தமிழர்களின் வரலாற்று ரீதியான வதிவிடமான வடக்கு, கிழக்குப் பிராந்தியம் இப்போது துண்டாடப்பட்டுவிட்டது. அதேசமயம் கிழித்தெறியப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த அதிகாரப் பரவலாக்கல் அம்சங்கள் கூட இலங்கை - இந்திய உடன்படிக்கையின் கீழான தீர்வுத் திட்டத்தில் இல்லையென அச்சமயம் தமிழ்த் தரப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த இந்தியா ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டுமென்ற கருணாநிதியின் யோசனை வரவேற்கத்தக்க விடயமேயானாலும் புதுடில்லி நிர்வாகமானது இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுக்கு அப்பால் தற்போது அதி முக்கியமான விடயமாக தோற்றம் பெற்றிருக்கும் வர்த்தக நலன்களுக்கு பாதிப்பின்றி பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்குமா என்பதே தமிழ் மக்கள் மனதிலுள்ள பரவலான சந்தேகமாகும். பக்கத்து வீட்டுக்காரன் உதவாவிடில் மற்றைய அயலவர்கள் எமது நலன்களை கவனிக்க தயாராக இருக்கின்றனர் என்ற செய்தியையே கொழும்பு மீண்டும் மீண்டும் விடுத்து வருகிறது. இந்நிலையில் புதுடில்லி நிர்வாகம் வர்த்தக நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தனது காய்களை நகர்த்துவதாக தென்படுகிறது. இதனால் புதுடில்லியின் கண்ணோட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் இரண்டாம் பட்சமான நிலைமைக்கே தள்ளப்படும் நிலைமையே காணப்படுகிறது.

இதனை மாற்றியமைத்து இலங்கையில் தமிழ் மக்கள் சமவுரிமைகளுடன் வாழ்வதற்குரிய உத்தரவாதத்தையும் ஏற்பாடுகளையும் இந்தியா மேற்கொள்வதற்கு அதனை வழிநடத்தக்கூடிய அரசியல் அதிகார பலம் தற்போது தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் உள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தில் கலைஞரின் தி.மு.க. பலம் வாய்ந்த பங்காளியாக இருக்கும் நிலையில் இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வை பெற்றுக் கொள்வதற்கு அவர் தனது பலத்தையும் செல்வாக்கையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதே இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலுமுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். தமிழ் நாட்டிலுள்ள ம.தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக உரத்துக்குரல் கொடுத்துவரும் நிலையில் `நானும் ஒருவன்' என்ற ரீதியில் கருத்துக்கள் யோசனைகளை தெரிவிப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தமது இருப்பே கேள்விக்குறியாகியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க முழு அளவிலான செயற்பாட்டில் கலைஞர் ஈடுபட வேண்டும். இதனையே இந்த முதுபெரும் தலைவரிடமிருந்து தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


நன்றி தினக்குரல்

0 Comments: