Friday, February 1, 2008

சிறிலங்காவின் சுதந்திர நாளைத் துக்க நாளாகக் கொண்டு அவர்தம் நுகர்வுப் பொருள்களையும் புறக்கணிப்போம்

சுதந்திர வாழ்வென்பது நாட்டு மக்கள் அனைவரும் தமது ஜனநாயக உரிமைகளைச் சரிசமனாகப் பெற்று அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்தலேயாகும். இச்சுதந்திரமானது தமிழ் மக்களைக் கைவிட்டுப் போனநிலையில், எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சிறிலங்கா அரசானது, தனது 60 ஆவது சுதந்திர விழாவினை மிகவும் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.

பிரித்தானிய அரசு இலங்கையை விட்டு வெளியேறியபோது, அப்போது அவர்களுடன் செயற்பட்டுவந்த எமது தமிழ்த் தலைவர்கள், தக்க முறையில் எமக்குரிய ஆட்சியதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளத் தவறியமையால், இன்று எம்மினம் விபரிக்க முடியாத அளவிற்கு அவலத்தில் ஆழ்ந்துள்ளது.

காலம் காலமாக ஆண்டுவந்த சிங்கள ஆட்சியாளர்கள், தமிழர்களைப் புறக்கணித்ததுடன், நாட்டிலிருந்து அவர்களை இல்லாதொழிக்கும் நோக்கில்; பல்வேறுபட்ட தாக்கங்களை அவர்கள் மீது செலுத்தினார்கள். தந்தை செல்வாவைத் தலைவராகக் கொண்ட தமிழரசுக் கட்சியினரால் இவற்றிற்கான எதிர்ப்புப் போராட்டமாக அகிம்சை வழி பின்பற்றப்பட்டது. இப் பாதையும் வெற்றியளிக்காத நிலையிலேயே, அரசுக்கெதிரான நடவடிக்கையானது, எமது இளைஞர்களின் ஆயுதமேந்திய போராட்டமாக மாற்றம் பெற்றது.

இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்று வரையான 60 ஆண்டுக்காலப் பகுதியில் தமிழ் மக்கள் அடைந்து வரும் துன்ப, துயரங்கள் அளப்பரியன. கிழக்கு மாகாணங்களிற் தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களிலிருந்து காடையர்களாற் பலவந்தமாக அடித்துத் துரத்தப்பட்டு அகதிகளானார்கள். சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். அவர் தம் ஊர்ப் பெயர்களும் சிங்களப் பெயர்களாக மாற்றம் பெற்றன. விவசாய நிலங்கள் யாவும் அன்னியர் வசமாகின. தமிழர்களின் இதயபூமியாகிய மணலாறும் இக்கதியைப் பெற்று வெலிஓயா என மாற்றப்பட்டது.

கல்வியிற் தமிழ் மாணவர்களின் உயர்வினைக் கண்ட சிங்களம் மனம் பொறுக்காது தரப்படுத்தல் முறையை வெளிப்படுத்தியது. இதனாற் பல்கலைக் கழக அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் எம்மாணவர்கள் நன்கு பாதிக்கப்பட்டார்கள். வேலை வாய்ப்புக்களிற் தமிழர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள். சிங்கள மொழி அரச மொழியாக்கப்பட்டமையால் இவர்கள் மேலும் பின்னடைவுகளுக்கு ஆளானார்கள்.

மக்களோடு மக்களாக நின்று போராடிய எம்மிளைஞர்கள் சிங்கள அரசிற்கு மாத்திரமன்றி, இந்திய அரசிற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள். இதன் பேறாகத் திம்புப் பேச்சு வார்த்தை, இலங்கை இந்திய ஒப்பம், அமைதிப்படை எனப் பாரதமும்; எமது போராட்டத்தினுள் நுழைந்து நன்கு மூக்குடைபட்டுச் சென்றது. ஓன்றன் பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்த தலைமைகள் சமாதானம், பேச்சுவாhத்தை, ஒப்பந்தம் எனப் பேசியவாறே வெளிநாடுகளிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்களைப் பெற்று எமது மக்களை அழித்தனர். பயங்கரவாதத்திற்கெதிரான போரென உலகெங்கும் பொய்புரட்டுப் புனைந்து, விடுதலைப் புலிகளுக்கெதிரான, பாதகமான விதத்திற் பரப்புரைகளை மேற்கொண்டு, அவர்களை இந்நாடுகள் தடை செய்யும்படியான நிலையை உருவாக்கினர். போர்ச் சமநிலையில் எமது வீரர்கள் உயர்ந்தபோது சமாதானம் எனக்கூறி, இக்கால இடைவெளிக்குள் அபிவிருத்தியென்ற போர்வையில் உலக நாடுகளிலிருந்தும் பெருந்தொகைப் பணத்தைப் பெற்று, உலகிலேயே தனது நாட்டு மக்களைக் கொல்லும் மாபெரும் பயங்கரவாத அரசாக, இன்று இச்சிங்கள தேசம் தனது பௌத்த, இனவாதக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. சுனாமி அழிவிற்கான புனரமைப்பு நிதிகள் வெளிநாடுகளிலிருந்து தாராளமாகக் கிடைத்த போதிலும் தமிழ்ப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டன.

இன்றைய காலகட்டத்தில் என்றுமில்லாதவாறு இனவழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. எதிரியின் குண்டு வீச்சினால் எமது தாயகமானது சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு வருகிறது. காணாமற்போதல், கடத்தல், கப்பம் அறவிடுதல், சிறைகளில் அடைத்தல், சித்திரவதைகள் போன்றன தாராளமாக இவ்வரசினால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

எமது நாட்டை வளம்படுத்த வேண்டிய எதிர்காலச் சந்ததியான, கல்வியெனும் பெரும் மூலதனத்தைக் கொண்ட, பல்கலைக்கழக மாணவர் தொட்டுச் சாதாரண வகுப்பிற் கற்கும் சிறார் வரை, மாணவ சமுதாயம் பெரும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கிபீர் விமானங்களினாலும், கண்ணிவெடிகளாலும், மக்கள் குடியிருப்புக்களுடன், இம்மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்- கொல்லப்படுகின்றனர். செஞ்சோலை மாணவிகள், நாகர்கோவிற் பாடசாலை மாணவர்கள், நவம்பர் 27 இல் முதலுதவிப் பயிற்சி முடித்துத் திரும்பியபோது கொல்லப்பட்ட 6 சிறார்கள், தருமபுரத் தாக்ககுதலில் 3 மாணவர்கள் போன்றன இதற்கு எடுத்துக்காட்டாகும்.

இக்கட்டுரையைப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் செய்தியொன்று கிடைக்கிறது. 'மன்னாரிற் தட்சணாமருதமடு என்னுமிடத்தில் பாடசாலை விட்டுப் பேரூந்திற் திரும்புகையில்;, ஆழ ஊடுருவும் அணியினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 மாணவர் உட்படப் 18 பொதுமக்கள் உயிரிழப்பு" என்பதே அதுவாகும். இது இன்றைய சுதந்திர விழாவினைக் கொண்டாட இருக்கும் சிங்கள அரசின் தமிழர்களுக்கான பரிசாகும். ஓவ்வொரு ஆண்டுத் தொடக்கத்திலும் புத்தாண்டுப் பரிசாக இவ்வாறான அழிப்புக்களை ஆங்காங்கே ஏற்படுத்துதலும் அரசின் கொள்கையாகும்.

இக் கொலைகளிலிருந்து, சிங்கள தேசம் எவ்வாறான எதிர்ப்புணர்வுடன் தனது ஒவ்வொரு செயற்பாட்டையும் நடத்தி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எமது மக்களுக்கான பணிகளை மிகவும் முனைப்புடன் புரிந்து வந்த தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாட்களைக் கொன்றதுடன், அதன் செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்தினர். ஏ-9 பாதை முற்றாகத் தடை செய்யப்பட்டு வடபகுதி மக்களுக்கான போக்குவரத்தை இல்லாதொழித்து, அவர்களை ஏனைய பகுதிகளிலிருந்தும் பிரித்துத் தனிமைப்படுத்தி, அவாதம் வாழ்விடங்களையும் பாதுகாப்பு வலயம் என்னும் போர்வையிற் பறிமுதல் செய்துள்ளனர். பெரும் பொருளாதாரத் தடையை அவர்கள் மீது திணித்துப் பட்டினிச்சாவுகளுக்கு ஆளாக்கியுள்ளனர். பாடசாலையிற் கல்வி கற்கவேண்டிய மாணவர்கள் பாணுக்காக நாள் முழுவதும் வரிசையிற் காத்திருக்கும் பரிதாப நிலையேற்பட்டுள்ளது.

தமிழினப்பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் என மக்கள் வகை தொகையின்றிக் கொல்லப் படுகின்றனர் அமைதிப் பேச்சு வார்த்தையென உலகெங்கும் சுற்றிவந்த அமைதிப் புறாவினைக் குண்டு போட்டுக் கொன்றதுடன், இன்று அதற்கான ஒப்பந்தத்தையும் இல்லாதொழித்தனர்.

கிழக்கு மாகாணத்திற்; பெருந் தொகையான மக்கள் இடம் பெயர்ந்து கொடும் பட்டினிச் சாவுகளுக்காளாகி, மழையிலும் வெயிலிலும் மரநிழல்களே தங்குமிடமாகத் தமது வாழ்வினைக் கழிக்கின்றனர். போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் அரசு விலகியதால் கண்காணிப்புக்குழுவினரும் நாட்டை விட்டு வெளியேறினர். இதன்பின்னர் அழிக்கப்படும் தமிழினத்தின் தொகையானது, கட்டுமீறிக் காணப்படுகிறது. அமைதிப் பேச்சுக் காலத்தில வெளிநாடுகளிடம் இருந்து குவித்த ஆயுதங்களின் பலத்தால் தமிழ்ப் பகுதிகளை நோக்கி நாலாபுறமும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய தாங்க முடியாத பெரும் கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் எம்மினத்தை மூழ்கவைத்து இனவழிப்புச் செய்துவரும் அரசானது, தமிழீழம் முழுவதும் தனக்கேயானதென்னும் எண்ணக் களிப்பில் தனது 60 ஆவது சுதந்திர நாளைக் கொண்டாட இருக்கிறது.

இந்த நிலையில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்? அன்றைய நாளைக் கரிநாளாக ஏற்று, வேலைத்தலங்கள் - பாடசாலைகளுக்குக் கறுப்பப் பட்டியணிந்து செல்லவேண்டும். நாம் நிலைகொண்டுள்ள நாடுகளின் பல்லின மக்களுக்கும், பிரித்தானிய அரசு கொடுத்துச் சென்ற சுதந்திரம் சிங்கள மக்களுக்கானதே அன்றித் தமிழர்களுக்கானதல்ல என்பதைத் தெரியப் படுத்தவேண்டும். எமது எதிர்ப்பினை வெளிப் படுத்து முகமாக இங்குள்ள மக்கள், மாணவர்கள் அணிதிரள்வதோடு, எமது பக்க நியாயங்களை இந்நாட்டு அரசுகளும் அறிந்துகொள்ள வழி செய்யவேண்டும்.

இதேவேளை எமக்கிருக்கும் மிக முக்கியமான பிறிதொரு புறக்கணிப்புப் போராட்டத்தினையும் நாமொவ்வொருவரும் கண்டிப்பாக இக் கொடும் நாளிலிருந்து பின்பற்றுவோமாக!

மேற்படி, எம்மினம் அழிக்கப்படுவதற்குக் கிடைக்கப்பெறும் பணத்தின் ஒரு பகுதியைச் சிறீலங்கா அரசு மறைமுகமாகப் புலம்பெயர்ந்து வாழும் எம்மிடமிருந்தும் பெற்றுக் கொள்கிறது. இது எவ்வாறு? அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும், நுகர்வுப் பொருட்கள் மூலமாகவும், அவர்தம் விமான சேவை வாயிலாகவும், வேறு பல இன்னோரன்ன வழிகளிலுமாகும். எம்மை அறியாமலே இம்மாபெரும் தவறிற்கு உடந்தையாக இருந்து வருகிறோம். எனவே நாம் இதுபற்றி ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எம்மக்களினதும், போராளிகள் - மாவீரர்களினதும் அளப்பரிய ஈகைகளினாற் சுகம்பெற்று வாழும்நாம் நன்மைதான் செய்யாவிடினும் தீமை செய்யாதிருப்போமாக! இங்குள்ள வியாபார நிலையங்களும் இப் பொருள்களுக்கு ஈடானவற்றை எமக்காதரவான நாடுகளிலிருந்து தருவிக்க வேண்டும்!

எம்மையெல்லாம் ஈன்றெடுத்த தமிழீழத் தாயவள், எதிரியால் நாற்புறமும் அழித்துச் சிதைக்கப்பட்டு வரும்போது, பிள்ளைகளாகிய நாம் இவற்றைச் சிந்திக்காது, வந்தேறு நாட்டின் சுக போகங்களைப் பெரிதென எண்ணி, இந்நாட்டு வாழ்வியலின் நிலையாமையை எண்ணிப்பாராது செயலாற்றும் நிலை மாறவேண்டும்!

எனவே எதிர்வரும் பெப்ருவரி 4 ஆம் நாளைக் கரிநாளாகக் கொண்டு அன்றைய நாளிலிருந்து மேற் குறிப்பிட்ட தீர்மானங்களுக்கு இசைந்து நடப்போமென உறுதியெடுப்போமாக!

-பவித்திரா (கனடா)-

1 Comment:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சமீபத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட துண்டு சீட்டு மிகின் லங்கா, கொடுத்தவர் முன்னே கிழித்தெரிந்தேன். நாம் ஏற வேண்டாம். என் அன்பு வேண்டுகோள்!

அன்புடன்,
ஜோதிபாரதி.