Thursday, January 31, 2008

மீண்டும் இருண்ட யுகத்தை நோக்கி ஊடகத்துறை

இலங்கைத் தீவில் தமிழ்த் தேசியத்துக்காகவும் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பி வந்த ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தனது கொடூர அராஜகத்தை வெளிப்படுத்தி வந்த அதிகார வர்க்கத்தின் அரூபக் கரங்கள் இப்போது மொழி, இனம், தேசியம் கடந்து விரிந்து நீளத் தொடங்கியுள்ளன.

அதிகாரத்தின் அத்துமீறல்களை அராஜகங்களை துஷ்பிரயோகங்களை ஊழல், மோசடிகளை அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி, நீதி, நியாயத்தை நிலைநாட்டக் குரல் எழுப்பும் ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் அரூபக் கரங்களினால் சட்ட விரோதமான அணுகுமுறைகளின்படி கையாளப்படும் கேவலம் இத்தீவில் இன்று அரங்கேறுகின்றது.
கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்கும் ஊடக உரிமைக்கும் காவலர்களாகச் செயற்படும் சர்வதேச அமைப்புகள் பலவும் கொழும்பு அரசின் ஊடகக் கையாள்கை நெறிமுறை குறித்துப் பெரும் விசனமும், அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துத் தொடர்ந்து ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களது தேசிய ஊடகப் பணி என்பது கடந்த இரண்டரை தசாப்த காலமாகவே மரணப் பொறி என்றாகி விட்டது. எந்நேரமும் சாவைச் சந்தித்தாக வேண்டும் என்ற புறமொதுக்கித் தள்ள முடியாத யதார்த்தப் பீதிக்குள்தான் அவர்களது அன்றாடப் பணிகள் தொடர்கின்றன.

ஆனால், தென்னிலங்கையில் சிங்கள, ஆங்கில ஊடகவிய லாளர்களின் நிலைமை முன்னர் சற்று மேம்பட்டிருந்தது. ஆனால் இன்றோ அவர்களின் நிலையும் அதுவேயென்றாகி இழிகடைக் கட்டத்தை எட்டி நிற்கின்றது.

எண்பதுகளின் கடைசியிலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் நிலவிய இருண்ட யுகத்தை நோக்கித் தென்னிலங்கை ஊடகத்துறையும் சென்றுகொண்டிருக்க, தமிழ்த் தேசிய ஊடகங்களும், "சட்டியிலிருந்து அடுப்பில் வீழ்ந்த கதையாக' மேலும் நெருக்குதல்களை எதிர்கொள்ளும் அதி உச்ச அச்சுறுத்தல் அவலத்தை எட்டியிருக்கின்றன.
எண்பதுகளின் கடைசியில் ரிச்சர்ட் டி சொய்சா போன்ற துணிச்சலான ஊடகவியலாளர்கள் மர்மமான முறையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் தென்னிலங்கை ஊடகத்துறை வரலாற்றில் மிக மோசமான நெருக்குவாரங்களை எதிர்கொண்டது.
அப்போது மனித உரிமைகளுக்காகவும், கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்காகவும், ஊடக உரிமைகளுக்காகவும் எழுந்த எதிர்ப் போராட்டங்களின்போது முன்னின்று மக்கள் சக்தியை வெளிப்படுத்திய தலைவர்களில் ஒருவர் அப்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தென்னிலங்கைப் பிரமுகர் மஹிந்த ராஜபக்ஷ.

தென்னிலங்கை ஊடகத்துறையைப் பொறுத்தவரை 1994 உடன் அன்றைய இருண்ட யுகம் விலகியது.
ஆனால் அன்று மனித உரிமைகளுக்காகவும், கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்காகவும் அயராது குரல் எழுப்பிய மனித உரிமைவாதி என்று மதிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, இன்று இலங்கையின் சர்வ அதிகாரங்களையும் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகி, ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் தென்னிலங்கை ஊடகத்துறையும் மீண்டும் இருண்ட யுகத்துக்குள் பிரவேசித்திருக்கின்றது.
ஊடகத்துறையினருக்குத் தீங்கிழைக்கும் விதத்தில் அடிக்கடி இடம்பெறும் தாக்குதல்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல் பாணியிலான அதிகாரிகளின் பகிரங்கக் கருத்து வெளிப்பாடுகள், ஊடகவியலாளரின் கருத்துகளைத் திரிவுபடுத்தி அவர்களைப் "பயங்கரவாதிகள்' ஆகவும் "இராஜதுரோகிகளாகவும்' சித்திரிக்க அரச அதிகாரம் எடுக்கும் எத்தனங்கள் என்பன இன்று சர்வதேசக் கவனிப்புக்கும் கருத்துச் சுதந்திரத்துக்காகக் குரல் எழுப்பும் பல அமைப்புகளின் கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கின்றன.

அமைதி முயற்சிகளுக்கு சாவுமணி அடித்து முழு யுத்தத் தீவிர வெறியில் போர்ப் பிரகடனம் செய்திருக்கும் கொழும்பு நிர்வாகம் கள யுத்தத்தில் வெல்ல முன்னர், பிரசார யுத்தத்தில் வெற்றி கொள்ளத் துடிக்கின்றது. அதற்கு முட்டுக்கட்டையாக ஊடகங்கள் இருப்பதால் அவை மீண்டும் ஓர் இருண்ட யுகத்தை நோக்கி அதிகாரத்தின் அரூபக் கரங்களினால் நெட்டித்தள்ளப்படுகின்றன. அவற்றின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு, அசாதாரண நிசப்தத்துக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமைதி முயற்சிகளுக்கு ஆப்பு வைக்கும் செயற்பாடுகள் 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே தமிழ் ஊடகத்துறையும் கொடூர அடக்குமுறை அராஜகத்துக்குள் வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது தென்னிலங்கை ஊடகத்துறையும் அந்தக் கொடூர அந்தகாரத்துக்குள் இழுத்து வீழ்த்தப்படுகின்றது.

அமைதிக்கான சமாதானத்துக்கான ஒளிக்கீற்று மீண்டும் தென்படும் போதுதான் இன்று இருள் யுகத்தில் சிக்கிக்கிடக்கும் ஊடகங்களும் வெளிப்பட்டு வெளிச்சத்துக்கு வரக்கூடியதாக இருக்கும்.

நன்றி -. உதயன்

0 Comments: