Tuesday, January 1, 2008

பொருளாதார நெருக்கடிகளை மூடி மறைக்கப் புலிப் பூச்சாண்டி!

நான்காம் ஈழ யுத்தம் முழு அளவில் வெடிப்பதற்கான சுவடுகளைப் பதித்து 2007 ஆம் ஆண்டு நம்மை விட்டுக் கழிந்திருக்கின்றது.
நாட்டின் களமுனையில் யுத்தம் வெடித்ததோ இல்லையோ, ஒவ்வொரு வீடுகளினதும் சமையல் களத்தில் சமர் வெடிக்கும் நிலைமை மட்டும் நிச்சயமாகிவிட்டது.

எகிறிக் குதிக்கும் விலைவாசி உயர்வுக்கு முகம் கொடுக்க முடியாமல் சாதாரண குடிமகன் ஒவ்வொருவனும் குடும்பத் தலைவன் ஒவ்வொருவனும் துடியாய்த்துடிக்கின்றான்.
நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம், மாதத்துக்கு மாதம் விலைவாசி அதிகரிப்பு என்று பெரும் நெருக்கடியைத் தந்து பிரிந்து சென்றிருக்கின்றது 2007 ஆம் ஆண்டு. பிறந்திருக்கும் புத்தாண்டு இன்னும் எத்தனை அவலத்தைத் தரப்போகின்றதோ என்று மலைத்துப்போய் இலங்கைத் தீவின் குடிமக்கள் ஏங்கி நிற்கின்றார்கள்.

இலங்கையில் தினசரி ஊதிப் பெருத்துவரும் பணவீக்கத்தைப் பார்க்கும்போது, அதனால் ஏற்படும் விலை அதிகரிப்புக்கு சாதாரண குடும்பத்தினால் முகம் கொடுத்துச் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை.
பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் பத்து வீதமாக இருந்த பணவீக்கத்தை இப்போது இருபது வீதத்துக்கும் அதிகமாக உயர்த்தி சாதனை படைத்திருக்கின்றது மஹிந்தரின் இந்த அரசு.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தூரநோக்குக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள், காத்திரமான நடவடிக்கைகள், சிறப்பான செயற்பாடுகள் போன்றவை மூலம் பணவீக்கத்தை மூன்று முதல் ஐந்து சத வீதத்துக்குள் கட்டுமட்டாக வைத்திருக்க, இலங்கையில் மட்டும் அது கட்டுமட்டின்றி ஊதிப் பருக்கிறது. கடந்த ஒக்டோபரில் மட்டும் பணவீக்கம் 24 வீதத்தை எட்டியதாகப் பூர்வாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குப் பின்னரான இறுதிக் காலாண்டில் அதன் அளவு இன்னும் மோசமாக இருக்கும். புள்ளி விவரங்கள் வெளிவரும்போதுதான் உண்மை நிலைவரம் அம்பலமாகும்.

மேலும், தீவிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் அரசு, அப்பிரச்சினைகளை முகம் கொள்வதற்காக பண நோட்டுக்களைப் புதிதாகக் கண்மூடித்தனமாக அச்சிட்டுத் தள்ளுகின்றது. கடந்த வருடத்தில் ஏப்ரலுக்கும் செப்டெம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்வாறு நாலாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகைக்குப் புதிய பண நோட்டுக்களை அச்சிட்டுத் தள்ளியிருக்கின்றது அரசு. இது, பண வீக்க வீதத்தை மேலும் முடுக்கிவிட்டிருக்கின்றது என்றால் மிகையாகாது.
கடந்த வாரத்தில் மக்களின் அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருளான கோதுமைமாவின் விலை 9 ரூபாவால் திடீரென அதிகரித்தது. இது சுமார் பதினைந்து வீத விலை அதிகரிப்பாகும்.
இதேசமயம் வீட்டு சமையலுக்கான எரிவாயுவின் விலையும் எகிறியிருக்கின்றது. 12.5 கிலோ எரிவாயு சிலின்டரின் விலை நாளை முதல் 175 ரூபாவால் அதிகரிக்கின்றது. இது சுமார் பன்னிரண்டரை வீத அதிகரிப்பாகும்.

இதேபோல அண்மைக்காலத்தில் பெற்றோல், டீசல், மண் எண்ணெய் போன்ற எரிபொருள்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்வடைந்துள்ளன.
போதாக்குறைக்குப் பிறக்கும் இந்தப் புத்தாண்டுடன் மின்சாரக் கட்டணங்களும் உயரப்போகின்றன என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியிருக்கின்றது.
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள்களை மானிய அடிப்படையில் வழங்குவது தொடர்பாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நேற்று முடிவடைந்த வருடத்துடன் காலாவதியாகி விட்டதாலேயே மின்சாரக் கட்டணம் "ஷொக்' அடிக்கும் விவகாரமாக மாறியிருக்கின்றது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவை தவிர, அரசியல் ஸ்திரமின்மை, உயர் பணவீக்கம், முதலீட்டு வீழ்ச்சி, சட்ட ஒழுங்குக் குழப்பம், வாழ்நிலைச் சீர்கேட்டால் வெடிக்கக் கூடிய வேலைநிறுத்தம் முதலிய தொழிற்சங்க நடவடிக்கைகள் போன்றவற்றால் இந்தப் புதுவருடத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் என ஊகம் கூறப்படுகின்றது.
ஆனால் இத்தகைய ஏதுநிலை குறித்தெல்லாம் கவலைப்படாமல் தன்பாட்டில் யுத்த வெறிப்போக்கில் முன்நகர்கின்றது மஹிந்தரின் அரசு.
"செல்லும் செல்லாது எல்லாம் செட்டியார் தலை மீது' என்பார்கள். அந்த மாதிரி நாட்டின் சீர்கெட்டு வரும் மோசமடைந்துவரும் பொருளாதார இக்கட்டு நிலைமைக்கான பொறுப்பெல்லாம் புலிகளின் மீதும் யுத்தத்தின் மீதும் சுமத்தப்பட்டு விடுகின்றன.
அடுத்த ஆறுமாத காலத்துக்குள் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் கூண்டோடு பூண்டோடு அழித்து விடுவோம், அதற்காகப் பெரும் யுத்தத் தயாரிப்புக்கு கட்டுமட்டில்லாமல் நிதியைச் செலவிடவேண்டியிருக்கின்றது, அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை இலங்கைத் தீவின் மக்கள் முகம் கொண்டு சமாளித்தேயாக வேண்டும் என்றெல்லாம் அரசுத் தரப்பில் சமாதானம் கூறப்படுகின்றது.

தனது தீர்க்கதரிசனமற்ற பொருளாதாரக் கொள்கை, நிர்வாகச் சீர்கேடு, ஊழல் மோசடிகள் காரணமாக நாட்டின் நிதி நிலைமையை அதல பாதாளத்துக்குள் வீழ்த்தி, இக்கட்டில் சிக்கிக் கிடக்கும் அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையை மூடி மறைப்பதற்காகப் புலிப் பூச்சாண்டியைக் காட்டி எல்லாப் பிரச்சினைகளையும் அமுக்கப் பார்க்கின்றது. அனைத்து நெருக்கடிகளுக்குமான பொறுப்புக்களை யுத்தத்தின் மேல் சுமத்தித் தான் தப்பப் பார்க்கின்றது.
விலைவாசி உயர்வு உட்பட்ட பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் திணறி அல்லாடும் தென்னிலங்கை மக்களை புலிப்பூச்சாண்டி காட்டி எத்தனை காலத்துக்கு மஹிந்தரின் அரசு சமாளிக்கப் போகின்றது? முடிவு தெரிய நீண்ட காலம் செல்லாது. போர்முனை வெற்றி அல்லது பொதுமக்கள் கிளர்ச்சி அரசு எதிர்கொள்ளும் பரிசு எது என்பது விரைவில் தெரியவந்துவிடும்.

uthayan.com

0 Comments: