Sunday, January 6, 2008

இராணுவ வழித் தீர்வை நாடினால் விபரீத விளைவுகள் விளைவது உறுதி

ஆறாண்டு கால யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்று ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசு எடுத்திருக்கும் முடிவு சர்வதேச சமூகத்துக்கு ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இலங்கை அரசின் இந்த முடிவு தனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கின்றது.

கனடா தனது ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியை யும் வெளியிட்டிருக்கின்றது.
சர்வதேச சமூகத்தின் ஒன்றமைந்த கட்டமைப்பான ஐ.நாவின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இலங்கை அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து வேதனை வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கையில் யுத்தநிறுத்தக் கண்காணிப்புப் பணி யில் ஈடுபடுவதற்கான அதிகாரிகளை இதுவரைத் தந்து தவி வந்த நோர்ட்டிக் நாடுகளும் இலங்கை அரசின் தான் தோன்றித்தனமான முடிவு குறித்து கூட்டாகக் கவலை வெளியிட்டிருக்கின்றன.

போர்வெறித் தீவிரத்தில் நிற்கும் கொழும்பு அரசு, அதன் காரணமாக இலங்கையில் தமிழர் தாயகம் மீது கொடூரப் போர் ஒன்றை முழு அளவில் கட்டவிழ்த்து விட உருக்கொண்டு நிற்கின்றது. அத்தகைய கடும் நடவடிக் கையைச் செயற்படுத்துவற்கான சூழ்நிலையை உரு வாக்குவற்காகவே யுத்தநிறுத்தத்தை முறிக்கும் ஒரு தலைப்பட்சமான முடிவை அது எடுத்து, செயற்படுத்தத் துடியாய்த் துடிக்கிறது.

இது, இந்தப் பிராந்தியத்தின் வல்லாதிக்க நாடான இந்தியாவையும் கூட கடும் விசனத்தில் ஆழ்த்தியிருக் கின்றது என்பது வெளிப்படை.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது என இலங்கை தீர்மானித்த பின்னர், அது குறித்துக் கருத்து வெளியிட்ட இந்தியா உட்பட சகல சர்வதேச நாடுகளும் ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூறுவதில் ஒன்றுபட்டு நிற்கின்றன.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ நட வடிக்கை மூலம் ஒருபோதும் தீர்வு காணமுடியாது என் பதுதான் அந்த விடயம்.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவரை அனைத்து நாடுகளும் இப்போதும்கூட இதைத்தான் வலியுறுத்திக் கூறியிருக்கின்றன.

இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு ஏதும் காண முடியாது என்று தான் உறுதியாக திடமாக நம்புவதாக இந்தியா தெளிவாக எடுத்துரைக்கின்றது.
ஆனால் மஹிந்தரின் அரசு அதைக் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. இராணுவ நடவடிக்கை வழியை நாடுவது என்பதில் மஹிந்தரின் அணி திட்டவட்டமான உறுதியோடு நிற்கின்றது.

இந்த இராணுவ வழிப்போக்கு பெரும் உயிரிழப்புக் களையும் நாசங்களையும் போரழிவுகளையும் நிச்சயம் ஏற்படுத்தும் என்பது திண்ணம். யுத்தநிறுத்தத்திலிருந்து விலகும் இலங்கை அரசின் ஒரு தலைபட்ச முடிவு அத் தகைய பேரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதை சர்வதேச சமூகம் பகிரங்கமாகவே சுட்டிக்காட்டுகின்றது. அதே சம யம், இராணுவ வழியில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதையும் அது தெளிவுபடுத்துகின்றது.

ஆனால், அந்த வழியை நாடி, யுத்த பேரழிவுக்கும், போரழிவுக்கும் வகை செய்யும் விதத்தில் இலங்கை அரசு எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து கண்டனம் தெரிவிக்க சர்வதேச சமூகம் பின்னடிக்கின்றது. கொழும்பின் முடிவு குறித்து கவலை, வேதனை, துக்கம் தெரிவிப்பதோடு எல்லா நாடுகளும் அடங்கி விடுகின்றன.
இது ஏன்?
கொழும்பு அரசு தன்னை இறைமையுள்ள, சட்டரீதி யான அரசாகக் காட்டிக்கொள்கின்றது. அதை சர்வதேசங் களும் ஏற்றுக்கொண்டுள்ளன. அந்த அரசு தனது நாட் டில், தனது படைகளோடு மோதிவரும் ஓர் இனக் குழுமப் பிரிவினரை, "பயங்கரவாதிகளாகச் சித்திரித்து, "பயங்கர வாதிகளுடனான போர்' ஒன்றைப் பிரகடனப்படுத்தியி ருப்பதால், அதை எடுத்த எடுப்பிலே கண்டிக்கவோ அல் லது ஆட்சேபனை தெரிவிக்கவோ முடியாத இக்கட்டும் நெருக்கடியும் சர்வதேச சமூகத்துக்கு உள்ளது.

அதனாலேயே அது குறித்து இலங்கை அரசின் யுத்த தீவிரப் போக்குக் குறித்து கவலை தெரிவிப்பதுடன் சர்வதேச சமூகம் அடங்கிவிடுகிறது.

அதேசமயம், இலங்கை இனப்பிரச்சினைக்கு இரா ணுவ வழித் தீர்வு சாத்தியமற்றது என்ற யதார்த்தத்தை இச் சமயத்திலும் வலிமையாக வலியுறுத்துவதன் மூலம், அவ்வழியை நாடி வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஆபத்து அதிகம் உள்ளது என்பதை இலங்கைக்கு சர்வதேச சமூ கம் சொல்லாமல் சொல்லி நினைவூட்டவும் விழைகிறது.

இராணுவவழித் தீர்வில் ஒரே பிடியாக நிற்கும் கொழும் புக்கு, அதன் பாதகத் தன்மை குறித்து எடுத்துக்கூறியும் பயன் இல்லை என்பதும் சர்வதேசத்துக்கும் நன்கு தெரி யும். "முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா' எனச் சும்மாவா சொன்னார்கள்?

ஆகவே, அதன் விபரீத விளைவுகளை கொழும்பு எதிர்கொள்ளும் வரை கவலை வெளியிட்டுப் பார்த்தி ருப்பதைத் தவிர சர்வதேச சமூகத்துக்கு மாற்று மார்க்கம் ஏதுமில்லை.
"கனியிருக்கக் காய் கவர்வது' போல பேச்சு மூலமான அமைதித் தீர்வைப் புறம் ஒதுக்கி, இராணுவ வழித் தீர்வை நாடுவோர் காய் புளிக்கும் போதுதான் "எட்டாப் பழம் புளிக்கும்' என்று திரும்பி வருவார்கள். அப்போது அமைதித் தீர்வு என்ற கனியைப் பெறுவதற்கும் காலம் கடந்து விட்டிருக்கும். அச்சமயத்தில் அரசியல் தீர்வை நாட எத்தனிப்பது "கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு' ஒப்பானதாக இருக்கும் என்பது நிச்சயம்.

Uthayan.com

0 Comments: