சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததென்னு
எப்பண்ணா வந்ததென்னு எனக்கும் தெரியல்லண்ணா
அப்பண்ணா நாம இன்னும் அடிமைகள் தானா அண்ணா !
இந்தப் பாடல் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் கொழும்புத் துறைமுகத்தில் வைத்து ரஜினிகாந்த் நடித்த தீ படத்திற்காக எடுக்கப்பட்டது. பின் திபை;படத்தில் இடம் பெறுவதற்கு தடையும் விதிக்கப்பட்ட பாடல். 30 வருடங்களுக்கு முன் மட்டுமல்ல சிறீலங்காவின் சுதந்திரத்தின் மீது கேள்வி கேட்க இன்றும் இந்தப் பாடல் பொருத்தமாகவே இருக்கிறது.
சிறீலங்காவில் அடுத்த மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள 60 வது சுதந்திரதினம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரில் ஏதாவது சாதனை படைத்துவிட்டு செங்கம்பளத்தில் நடந்து வந்து சுதந்திரக் கொடியை ஏற்றுவதற்கு ராஜபக்ஷ சகோதரர்கள் படாதபாடு படுகிறார்கள். எண்ணங்கள் நிறைவேறாவிட்டால் புலிகள் மீது தடையை விதித்தாவது சுந்திரக் கொடியை ஏற்றிவிடத் துடிக்கிறார்கள் கோத்தபாய ராஜபக்ஷ. அவர் காலை ஒன்றும் மாலை ஒன்றுமாக பேசினாலும் பல முனைகளில் இருந்து இராணுவம் வன்னிக்குள் உட்புகவே முயல்கிறது. இருப்பினும் விடுதலைப்புலிகளின் பலமான எதிர்ப்புக்களை தாண்ட முடியாமல் தினசரி இழப்புக்களுடன் திரும்பிக்கொண்டிருக்கிறது. இதனால் போரின் வெற்றி அரசுக்கு கானல்நீராக மாறியிருக்கிறது.
ஆனையிறவில் கொடியேற்றலாம், அல்லது கிளிநொச்சி நோக்கி படையை நகர்த்தலாம் என்று மனப்பால் குடித்த அரசு அதையெல்லாம் நிறைவேற்ற முடியாது என்பதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்துள்ளது. போரின் போக்கு சுதந்திர தினத்தை பலத்த இராணுவப் பின்னடைவுகளுடன் சந்திக்க நேர்ந்தாலும் ஆச்சரியப்பட இல்லை என்றளவிற்கு அரசுக்கு எதிராகவே உள்ளது. இந்தவிடயம் இன்று பலாலித் தளத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் இருந்தே தெரிகிறது.
மறுபுறம் வன்னி மண்ணில் சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும் தாக்குதல்கள், குண்டு வீச்சுக்கள் யாவற்றையும் மூச்சுப் பிடித்து தாங்கிய வண்ணமிருக்கிறார்கள் புலிகள். சிங்கள அரசியல் கட்சியான ஐ.தே.கவே சுதந்திரத்தை பகிஸ்கரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர் கோத்தபாய ராபக்சவும் முனைகின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
சிங்கள மக்களும் இந்தப் போரின் காட்டுத்தர்பாரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் புலிகள் மீது பழி போட்டு செய்தி எழுதின. இப்போது நிலமை தலைகீழாக மாறுகிறது. இறந்தவர்கள் தமிழ் மக்களாக இருக்கலாம் என்று சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து வெளிநாட்டுச் செய்தியாளர் உண்மையை எழுதமாட்டார்கள் என்பது தெரிந்ததே. மேலைநாடுகள் சிறீலங்கா பற்றிய செய்திகளை எழுதுவது போலவே அவர்களின் சுதந்திரமும் இருக்கும் என்பதையும் உணர முடிகிறது.
இது இவ்விதமிருக்க மன்மோகன்சிங் சிறீலங்கா வரமாட்டார் என்பது இதுவரை உறுதியாகிவிட்டது. பித்தம் தலைக்கேறியவன் போல இடைக்கால அரசு, மட்டக்களப்பு தேர்தல் என்று சம்மந்தா சம்மந்தமில்லாத முஸ்தீபுகளில் இறங்கி எதைச் செய்வதெனத் தெரியாது அலப்பாரிக்கிறது மகிந்த அரசு.
சுதந்திரம் அடைந்து அறுபது வருடங்கள் ஓடி விட்டன. அதில் 30 வருடங்கள் போரினால் இரத்தம் சிந்தியாகிவிட்டது. மிகுதி 30 வருடங்கள் இனக்கலவரத்தில் ஓடிவிட்டது. பிரித்தானிய அரசு இந்தியாவிற்கு சுதந்திர்தை வழங்கி பெருமையடைந்தது போல, இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கியதால் பெருமையடையவில்லை என்பதையும் அறிய முடிகிறது. சிறீலங்காவில் நடைபெறும் நிகழ்வுகளால் நாம் கண்ணீர் விடுவதாக சென்ற வாரம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் பேசப்பட்டது இதற்கு சிறந்த உதாரணம்.
மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கக் கொண்டாடுவதே சுதந்திரதினம்.
சுதந்திரம் என்பது தமக்கு மட்டுமே என்று அதிகார வர்க்கங்கள் நினைத்தால் அது சுதந்திரமாகாது.
நாட்டை சுடுகாடாக்கி சுதந்திரக் கொடிக்கு பெருமை தேடக் கூடாது.
புதைகுழிகளில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்களைப் பார்க்க மக்கள் அனுமதிக்கப்படாத அவலம் நாட்டில் நிலவுகிறது.
நடக்கப் போவது சுதந்திர தினமா அல்லது சுடுகாட்டுத் தினமா என்ற கேள்வியை அரைகுறையாக புதைக்கப்பட்ட அழுகிய சடலங்கள் எழுப்புகின்றன.
சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததென்னு
எப்பண்ணா வந்ததென்னு எனக்கும் தெரியல்லண்ணா
அப்பண்ணா நாம இன்னும் அடிமைகள் தானா அண்ணா !
இந்தப்பாடலே சுதந்திரதின கீதமாகக் கேட்கிறது…
நன்றி - அலைகள்
Tuesday, January 29, 2008
சிறீலங்காவில் நடக்கப்போவது சுதந்திர தினமா சுடுகாட்டு தினமா ?
Posted by tamil at 2:42 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment