இன்றுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாகச் செயலிழக்க இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நான்காம் ஈழ யுத்தம் மும்முரமாகக் கட்டவிழப் போகின்றது. அதன் கோரமும், அகோரமும் எப்படி அமையும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கின்றது.
இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்திலேயே, இவ்வாறு அதை முறிக்கும் நிலை வரலாம் என்று கருதப்பட்டதாலேயே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் பற்றிய வழிமுறையையும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த யுத்த நிறுத்த உடன்பாடு நின்று, நிலைத்துத் தாக்குப் பிடிப்பதற்கான அடிப்படை விவகாரம் ஒன்று குறித்து, அந்த உடன்பாடு செய்யப்பட்ட காலத்தில் இருந்தே திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு வந்தது.
யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுவதற்கும் அது தொடர்வதற்கும் அதில் சம்பந்தப்பட்ட தரப்புகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுத் தரப்புக்கும் இடையில் இருக்கும் இராணுவ வலுச் சமநிலை தொடர்ந்தும் மாறாமல் பேணப்படுவது அவசியம் என யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவரும், நோர்வே அனுசரணைத் தரப்பும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தமை நினைவுகொள்ளத் தக்கது.
அந்த இராணுவ வலுச் சமநிலை குழம்பிப் போனதே இன்றைய அவல நிலைக்கு யுத்த நிறுத்த ஒப்பந்தம் தூக்கிக் கடாசப்படும் நிலைமை ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் என்பது தெட்டத் தெளிவு.
இன்றுடன் செல்லாக்காசாகும் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டவர்கள் இருவர். இலங்கை அரசு சார்பில் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஒருவர். மற்றவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன்.
இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கும் தற்போதைய அரசின் முடிவு, உத்தியோகபூர்வமாக அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு அறிவிக்கப்பட்டபோது, மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இருவர் சார்பிலும் ரணில் விக்கிரமசிங்க சார்பில் அவரது கட்சியான ஐ.தே.கட்சியினாலும், வே. பிரபாகரன் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினாலும் வெளியிடப்பட்ட இரு வேறு அறிக்கைகளில் ஒரு விடயம் பொதுவாக அமைந்திருந்ததை நாம் அவதானிக்க முடியும்.
அரசுப் படைகள் இராணுவப் பின்னடைவுகளைச் சந்தித்து, புலிகளை போரியல் ரீதியாகத் தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்தபோதே இந்த யுத்த நிறுத்தத்துக்கு அப்போது அரசு இணங்கி வந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது தெரிவித்திருக்கிறார்கள்.
அதேபோல
வடக்கில் பல முக்கிய படை நிலைகளைப் புலிகள் கைப்பற்றி, கட்டுநாயக்கா விமான நிலையம் போன்ற பொருளாதார இலக்குகளைத் தாக்கி, பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திய நிலையிலேயே இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து, பேச்சு மூலமான ஒரு தீர்வைக் காணும் நோக்கோடு இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அப்போதைய ஐ.தே. கட்சி அரசு ஒப்பமிட்டது என அக்கட்சி இப்போது கூறுகின்றது.
ஆக, பல இராணுவப் பின்னடைவுகளை இலங்கை அரசுப் படைகள் சந்தித்து, பெரும் இக்கட்டு நிலையில் அரசுத் தரப்பு இருந்தபோதே வேறு வழியின்றி அப்போதைய அரசு யுத்த நிறுத்தம் என்ற அமைதி வழித் தீர்வை நாடியது.
அத்தகைய நிலையுடன் அமைதி முயற்சிகள் குழம்பாமல் தொடர்ந்திருக்க வேண்டுமாயின் அன்றைய இராணுவ வலுச் சமநிலை தொடர்ந்தும் அதே மாதிரிப் பேணப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அரசும், புலிகளும் சம தரப்பு அந்தஸ்தோடு செய்துகொண்ட யுத்த நிறுத்தம், அந்த சமதரப்பு அந்தஸ்தில் தொடரும் சமயத்தில் பல்வேறு மேற்கு நாடுகள் புலிகள் இயக்கம் மீது தடை விதித்து, அதன் தர நிலையைத் தாழ்த்தி, அதன் மூலம் அரசு புலிகள் இடையேயான சம அந்தஸ்து நிலைப்பாட்டைப் பங்கப்படுத்தித் தவறிழைத்தன.
அதேசமயம், யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த கொழும்பு அரசு தனது இராணுவ போரியல் திறமைகளை வளர்த்து விருத்தி செய்யக் கூடியதாக நேரடியாகவும், பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் மறைமுகமாகவும், சில நாடுகள் அளவுக்கு அதிக மாகவும் உதவியமை, நிலைமையைக் குழப்பக் காரணமாகின.
இதனால் யுத்த நிறுத்த காலத்தின் ஆரம்பத்தில் அரசு புலிகள் இடையே சமனாக இருந்த இராணுவ வலு நிலைமை இப்போது தனக்கு சாதகமாக முற்றிலும் சாய்ந்துவிட்டது எனக் கொழும்பு அரசு நம்பிக்கையுடன் கருதும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் அது போரியல் வெறி பிடித்து, யுத்த சந்நதம் கொண்டு, போர்முரசு அறைகின்றது.
ஆகவே, இவ்வாறு யுத்த நிறுத்தத்தை தூக்கிக் கடாசி, போரியல் போக்கில் முனைப்போடு கொழும்பு தீவிரம் கொண்டு அலைவதற்கு கொழும்பு அரசை வைவதில் அர்த்தமில்லை. அந்த வழியில் கொழும்பு செல்வதற்கான சூழலை விளைவுகளைச் சிந்திக்காமல் புலிகள் மீது கண்மூடித்தனமாகத் தடை விதித்தும், கொழும்பின் இராணுவச் செயல் போக்குத் திட்டத்துக்கு பின்னூட்டல் ஒத்தாசை வழங்கும் விதத்தில் பல்வேறு உதவிகளைச் செய்தும் விவகாரத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிய நாடுகளைத்தான் முதலில் வையவேண்டும். அவையே இந்தப் போரியல் சமவலு நிலையைக் குழப்பி, யுத்த நிறுத்தத்தை அர்த்தமற்றதாக்கின என்பது கண்கூடு.
Uthayan.com
Tuesday, January 15, 2008
போர் வலுச் சமநிலை குழம்பியதால் வந்த வினை
Posted by tamil at 10:24 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment