Monday, January 21, 2008

ஒரு சுண்டைக்காயிடம் சரணடையலாமா?


அடுத்த மாதம் இலங்கை சுதந்திர தின பவள விழா நடைபெறுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் பங்குகொள்வார் என்று கொழும்புச் செய்திகள் கூறின. இதற்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. பிரதமர் செல்லமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அப்படி மன்மோகன் சிங் கலந்துகொள்வாரானால், இலங்கை அரசின் தமிழ் இன ஒழிப்புப் போராட்டத்திற்கு இந்தியா அங்கீகாரம் அளிக்கிறது என்று பொருள். இதனை நாம் கூறவில்லை. ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ் உலகமே இப்படிக் கண்டனம் தெரிவித்தன.

மனித உரிமைகளை ராஜபட்சே அரசு இரும்புக் கால்களில் நசுக்கிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நிரந்தர மனித உரிமை ஆணையம் செயல்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிவித்தது. அதனை ராஜபட்சே அரசு ஏற்க மறுத்துவிட்டது.

சென்ற ஆண்டு பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்ததில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதனை சர்வதேச பத்திரிகை அமைப்புகளும் மனித நேய அமைப்புகளும் கண்டித்தன. ‘ஈழ மக்களுக்கு ஆதரவாக எழுதுபவர்களை நாங்கள் பத்திரிகையாளர்களாக மதிப்பதில்லை’ என்று ராஜபட்சே ஆணவத்தோடு அறிவித்தார்.

ஈழ மக்களுக்கு ஆதரவாக அண்மையில் லண்டனில் நடந்த பெரும் பேரணியில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இப்படி ஒரு பக்கம் ஈழ மக்களின் நியாயங்களை உலகம் புரிந்து கொண்டு வருகிறது.

இன்னொரு பக்கம் ஈழத்தமிழ் இனத்தையே அழிக்கும் அராஜகங்களை இலங்கை அரசு கட்டவிழ்த்து விடுகிறது. ‘விடுதலைப்புலிகளை வேட்டையாடுவதாகச் சொல்லிக்கொண்டு இலங்கை ராணுவம் அப்பாவித் தமிழர்களைச் சுட்டுக்கொல்கிறது’ என்று முதல் நாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மகேசுவரன் கூறுகிறார். இது மென்மையான விமர்சனம்தான். ஆனால், அடுத்த நாள் கொழும்பு ஆலயத்திற்கு வந்த அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இப்படி அங்கே இலங்கை அரசின் பயங்கரவாதம் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் ரத்தத் தடாகத்தில் நீந்தி, அந்த மயானபூமிக்கு நமது பிரதமர் செல்வது சரியாக இருக்குமா? நியாயமாக இருக்குமா? என்று பலரும் கேள்வியெழுப்பினர்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர், இஸ்லாமிய மக்கள் தங்கள் உரிமை என்ன என்று கேட்டு பாகிஸ்தானைப் பெற்றுக்கொண்டனர். ஆனால் இலங்கை விடுதலையடைந்தபோது, தங்கள் உரிமை என்ன என்று கேட்க அந்த நாட்டுத் தமிழர்கள் தவறிவிட்டனர். அதன் விளைவை இன்றுவரை இலங்கைத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் எதிர்கொள்கின்றனர்.

சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டே மலையகத் தமிழர்களின் குடியுரிமையை இலங்கை அரசு பறித்தது. அவர்களை நாடற்றவர்களாக நடு வீதியில் நிறுத்தியது. ஈழத் தமிழர்களின் பரம்பரை நில உரிமை பறிக்கப்பட்டது. தமிழ்ப் பிரதேசத்தில் ஓசையின்றி சிங்களக் குடியேற்றங்கள் நடந்தன. இலங்கையில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் காரியங்களைத் தொடர்ந்து செய்தனர். பாய் மரம் இல்லாத கப்பலாகத் தமிழர்கள் கவலைக்கடலில் தத்தளித்தனர்.

இலங்கையின் ஒரே ஆட்சி மொழி, நீதிமன்ற மொழி சிங்களம்தான் என்று அறிவித்தது. யாழ்ப்பாணத்தில் இருந்த மிகப்பெரும் தமிழ் நூலகத்தை சிங்கள வெறியர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். 1974_ம் ஆண்டு அதே நகரில் உலகத் தமிழர் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டை சிங்கள இன வெறியர்கள் தாக்கினர். இலங்கை அரசோ துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. ஈழத் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதனை இலங்கை அரசு செயலில் காட்டியது. அதன் பின்னர்தான் அந்த மண்ணின் புதல்வர்கள் ஆயுதம் ஏந்தினர். ஈழத்தின் இந்த அடிப்படைப் பிரச்னையைப் புரிந்த எவரும் இன்றைய சிங்கள இனவாத அரசிற்கு ஆராதனை செய்யமாட்டார்கள்.

உரிமைக்காகப் போராடும் ஈழம் இதுவரை ஒரு லட்சம் புதல்வர்களை, புதல்விகளை சிங்கள இன வெறிக்குப் பலிகொடுத்திருக்கிறது. கொழும்பு_யாழ்ப்பாண நெடுஞ்சாலை அடைக்கப்பட்டதால் மூன்று லட்சம் தமிழர்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் தங்கள் பிறந்த மண்ணிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தனை கொடுமைகளுக்கு மேல் அங்கெல்லாம் இலங்கை ராணுவம் முகாம் போட்டிருக்கிறது. அந்தத் தமிழ்ப் பிரதேசத்தைத்தான் விடுதலை செய்துவிட்டோம் என்று ராஜபட்சே கொக்கரிக்கிறார்.

யூதர்களை ஹிட்லர் திட்டமிட்டு அழித்தான். அதேபோல ஈழத்தமிழர்களை சிங்கள இனவாத அரசு திட்டமிட்டு அழித்துக்கொண்டிருக்கிறது. அன்னை இந்திரா காந்தி இருந்தவரை ஈழப் பிரச்னையில் இந்தியா மிகச் சரியான பாதையில் பயணித்தது. அதன் பின்னர் தடம் புரண்ட இந்தியாவை, சிங்கள இனவாத அரசு மிரட்டியே காரியங்களைச் சாதித்துக் கொண்டுவருகிறது. அதன் சிகரமாக மன்மோகன் சிங்கை தங்கள் சுதந்திர தின விழாவிற்கு வரும்படி அழைத்தது. அந்த நாட்டின் சுதந்திர தின விழாவை இலங்கைத் தமிழர்கள் அறுபது ஆண்டுகளாகத் துக்க நாளாகக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இந்திரா காந்தி காலத்தில் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் கச்சத் தீவை இழந்தோம்.

ராஜிவ்காந்தி _ ஜெயவர்த்தனே காலத்தில் ஈழத்தில் அமைதியை ஏற்படுத்த இந்திய ராணுவம் சென்றது. ஆனால், ஜெயவர்த்தனே என்ன கோரினார்? பிரபாகரனைப் பிடித்துத் தரச் சொன்னார். அப்படி பிடிக்க முடியாத இந்திய ராணுவம் இங்கிருந்து என்ன பயன் என்றார். ஒரு கட்டத்தில் இந்திய ராணுவத்திற்கு எதிராகப் போராடுவதற்காக தமிழ்க் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கினார். இந்திய ராணுவம் எத்தகைய அவலநிலையில் அங்கிருந்து வெளியேறியது என்பதனை நாம் மறந்துவிட வில்லை.

அதனைவிடக் கொடுமையாக பிரேமதாசா அக்கினிச் சொற்களை அம்புகளாக வீசினார். ‘விடுதலைப் புலிகளோடு மோதி இந்திய ராணுவ வீரர்கள் மடிந்து கொண்டிருக்கும்போது, நமது (சிங்கள) வீரர்கள் பந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்’ என்றார். இப்படி ஆணவம் ஆர்ப்பரித்தது. நாம் தலை குனிந்தோம்.

இதுவரை இலங்கையோடு ஏற்பட்ட ஒப்பந்தங்களெல்லாம் இந்தியாவிற்குப் பாதகமாகத்தான் அமைந்தன. சிங்கள இனவாத நரிகள் நம்மை ஏமாற்றியது மட்டுமல்ல; அவமானப்படுத்தவும் செய்கின்றன. கொழும்பில் மரியாதை அணிவகுப்பை ஏற்ற ராஜிவ் காந்தியை ஒரு ராணுவ வெறியன் துப்பாக்கியால் அடித்துக் கொலை செய்ய முயற்சிக்கவில்லையா? அவன் இன்றைக்கு சிங்கள வெறியர்களுக்கு ஒரு வி.ஐ.பி.! இந்திய ராணுவம் வல்லமைமிக்கதுதான். ஆனால், எங்கள் மண்ணில் இறங்கியதும் எமது சுட்டு விரல் அசைவிற்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று ஜெயவர்த்தனேக்கள் திமிரை அள்ளித் தெளிக்கவில்லையா? ஒரு வல்லரசிற்கு ஒரு சுண்டைக்காய் உத்தரவிட்டது.

‘இந்தியா ஆயுதம் தரவில்லையென்றால் பாகிஸ்தானில், சீனத்தில் வாங்குவோம்’ என்று இந்தியாவை இலங்கை அதிபர் ராஜபட்சே மிரட்டிக் கொண்டிருக்கிறார். இது எவ்வளவு பெரிய பொய்? இலங்கை ராணுவமே இன்றைக்கு பாகிஸ்தான், சீன ராணுவத்தின் ஆதிக்கத்தில்தான் இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளிலிருந்து மட்டுமல்ல, அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட எத்தனையோ நாடுகளிலிருந்து நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது.

இந்தியாவும் இப்போது விமான ஏவுகணைகள் உள்பட ஏராளமான ஆயுதங்களை அளிக்கிறது என்பதனை நமது ராணுவத் தளபதி தீபக் கபூரே பட்டியலிட்டார்.

அன்றைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி அவமானங்களைக் கொள்முதல் செய்தோம். இன்றைக்கு இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்களை அளித்து எதனைக் கொள்முதல் செய்யப்போகிறோம்?

இந்திய_சீன எல்லை மோதலின்போது இலங்கை என்ன நிலை எடுத்தது? இந்தியாவிற்கு எதிரான நிலை எடுத்தது.

இந்தியா _ பாகிஸ்தான் போர்களின் போது இலங்கை என்ன நிலை எடுத்தது? நமக்கு எதிரான நிலைதானே எடுத்தது?

ஒரு பக்கம், ஈழப் பிரச்னைக்கு ராணுவரீதியாகத் தீர்வு காண முடியாது என்று இந்திய அரசு அறிவிக்கிறது. இன்னொரு பக்கம், தமிழகத்தின் காலடியில் கிடக்கும் ஒரு சுண்டைக்காயிடம் ஏமாந்து ஆயுதங்களை அளிக்கிறது. நம் அரசு தெளிவான பாதைக்குத் திரும்ப வேண்டாமா?

-குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments: