யுத்த நிறுத்த உடன்பாடு குறித்து விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த அசாத்தி யமான பொறுமை ஓரளவிற்கு நன்மையளித்துள்ளதென்றே கொள்ளமுடியும். அதாவது சிறிலங்கா அரசை சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் இனம் காண்பதற்கு அது பெரிதும் உதவியுள்ளது என்றால் அது மிகையாகமாட்டாது.
சிறிலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியமையானது சர்வதேச சமூகத்திற்கு ஏமாற்றம் அளித்ததென்பது வெளிப்படையானது. இதனைப் பல நாடுகளும் - அதாவது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் பிரதிபலிக்கவே செய்தன.
சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் இதற்கு முன்னர் யுத்த நிறுத்த உடன்பாடுகளைஃஇணக்கங்களை மேற்கொண்டிருந்ததாயினும் அவற்றில் இருந்து வெளியேறியதற்கான பழிகளைப் பெரும்பாலும் விடுதலைப் புலிகளே ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. அதாவது, யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறும் வகையிலான நிர்ப்பந்தம் புலிகள் மீது திணிக்கப்பட்டது. இதன் காரணமாக புலிகள் வெளியேறினர் ஆயினும் வெளியேறியதற்கான குற்றச்சாட்டை விடுதலைப் புலிகளே ஏற்க வேண்டியதாகியது.
ஆனால், இம்முறை விடுதலைப் புலிகள் பெரிதும் பொறுமை காத்தனர். சிறிலங்கா அரசாங்கம் பெரும் அழுத்தங்களைக் கொடுத்த போதும் புலிகள் உடன்பாட்டு விடயத்தில் நிலைப்பாட்டை மாற்றவில்லை. சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகள் வெளியேறி விடுவார்கள் என எண்ணிக் கொடுத்த அழுத்தங்களின் போதும் புலிகள் உடன்பாட்டு விடயத்தில் அக்கறையாகவே இருந்தனர்.
இதற்கு மூன்று காரணங்கள் அடிப்படையாக இருந்தன.
1) இது ஒரு சர்வதேச உடன்படிக்கையான படியால் ஒருதலைப்பட்சமாக இதனை முறித்துக்கொள்ள விடுதலைப் புலிகள் விரும்பவில்லை.
2) இனப்பிரச்சினைத் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாகக் கொள்ளத்தக்கதாகையால் இதில் அக்கறை காட்டினர்.
3) கடந்த காலத்தைப் போன்று யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து வெளியேறியதற்கான குற்றச்சாட்டைத் தவிர்த்துக் கொள்ள விரும்பினர்.
விடுதலைப் புலிகளின் இத்தகைய நிலைப்பாடானது குறிப்பிடத்தக்க அளவிற்கு அவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது. அதுவே இன்று போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா வெளியேறியது தொடர்பாக சர்வதேசம் வெளிப்படுத்திவரும் அதிருப்தியும் இனப்பிரச்சினை விடயத்தில் சர்வதேசம் வெளிப்படுத்தி வரும் உணர்வுகளும் ஆகும்.
யுத்த நிறுத்த காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்களும் தமிழர் தாயகத்தின் மீது மேற் கொண்டதான பாரிய படை நடவடிக்கைகளும் பெரும் மனித அழிவுகளும் சிறிலங்கா அரசு மனித உரிமை விடயத்தில் மட்டுமல்ல, இன ரீதியிலான வகையிலும் ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வந்ததனை உறுதி செய்வதாகியது.
யுத்த நிறுத்த உடன்பாட்டுக் காலத்தில் சில விடயங்கள் சர்வதேச அமைப்புக்களினாலும் பல நாடுகளினாலும் அறியப்பட்டவையாக இருந்தன. இது குறித்து தமது அக்கறையையும் அவை வெளிப்படுத்தியிருந்தன.
ஆனால், சிறிலங்கா அரசாங்கமோ அன்றி அதன் அதிகாரிகளோ இவற்றைப் பொருட்படுத்தவில்லை. ஒரு ~அங்கீகரிக்கப்பட்ட அரசிற்கு| தமது பிரதேசத்திற்குள் எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான அதிகாரம் இருப்பதாகவே அது கூறிக்கொண்டது அவ்வாறே செயற்பட்டும் வந்தது.
குறிப்பாகச் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சிறிலங்கா அரசின் மீது பாரிய குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியபோது அதனை ஏற்றுக்கொள்ளவோ, அவற்றைச் சீர்செய்யவோ அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. மாறாக, குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமைப்புக்களையும், உயர் அதிகாரிகளையும் சாடுவதிலும், குற்றம் சாட்டுவதிலுமே அது அக்கறை காட்டியது.
ஒரு வகையில் பார்க்கப்போனால், குற்றச் சாட்டுக்களை முன்வைத்தவர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கவும், தகுதியற்றவர்கள் எனக் கூறவும்கூட அது தயங்கவில்லை. இதனால், சிறிலங்கா அரசு மீது மனித உரிமை அமைப்புக்கள் சுமத்தி வந்த குற்றச்சாட்டுக்கள் படிப்படியாக மேற்கு நாடுகளினாலும் சுமத்தப்பட்டன.
ஆனால், சிறிலங்கா அரசாங்கம் இவற்றைப் பொருட்படுத்தாதது மட்டுமல்ல, யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறும் தீர்மானத்தையும் மேற்கொண்டது. சிறிலங்கா அர சின் இத்தீர்மானத்திற்கு வலுவான அடிப்படையான காரணிகள் மூன்று இருந்தன.
1) விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை.
2) பௌத்த -சிங்களப் பேரினவாத சக்தி களின் ஆதரவு அரசிற்கு அவசிய மானதாக இருந்தமை.
3) சர்வதேச நாடுகள் தொடர்பான புரிதலும் சர்வதேச அமைப்புக்களின் பலவீனமும் ஆகும்.
சுருக்கமாகக் கூறுவதானால், கிழக்கில் கிடைக்கப்பெற்றதாகக் கருதும் இராணுவ வெற்றிகள் இராணுவத் தீர்விலும் வரவு-செலவுத் திட்டம் உட்பட பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவைப்பட்ட பௌத்த-சிங்கள அடிப்படைவாத சக்திகளின் ஆதரவும் அவசியமானதாக இருந்தன.
மற்றொரு புறத்தில், சர்வதேச நாடுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பேசி வரினும் தொடர்ந்து வழங்கி வந்த பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளால் மனித உரிமை விடயம் முக்கியம் வாய்ந்ததொன்றாக சிறிலங்கா அரசால் கொள்ளப்படவில்லை.
இதேசமயம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரினும் அவர்களின் தீர்மானங்கள் அரசுகளின் தீர்மானங்கள் போன்று அழுத்தங்களுடன் கூடி யவையாக இருக்கப்போவதில்லை என்பது சிறிலங்கா அரசின் அபிப்பிராயமாகவும் இருந்தது.
ஆகையினால், அமைப்புக்களின் தீர்மானங்கள் பற்றி கவலைப்படவோ, அது குறித்து அக்கறை கொள்ளவோ அது தயாராக இருக்கவில்லை. மேலும் இத்தீர்மானங்களை சில நாடுகளின் ஆதரவுடன் முறியடித்துவிடலாம் என்பதும் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.
சிறிலங்கா அரசின் இத்தகைய தீர்மானங் களே இறுதியில் யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து அது வெளியேறுவதற்கும் அடிப்படையாகியது. இத்தகைய தீர்;மானமானது சர்வதேச நாடுகளின் நிலைப்பாட்டில் சிறிதாயினும் தாக்கத்தையோ மாற்றத்தை ஏற்படுத்தும் என்றோ, இது ஒரு அதிருப்திக்குரிய விடயமாக மாறும் என்றோ சிறிலங்கா அரசு எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆனால், சிறிலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறியமையானது சர்வதேச நாடுகளின் - குறிப்பாக, சிறிலங்காவிற்கு உதவிகளை வழங்கி வரும் இணைத் தலைமை நாடுகளுக்கு அதிருப்தியைத் தோற்றுவிப்பதாகவிருந்தது. சிறிலங்கா அரசு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்கான கதவுகளை அடைத்துவிட்டதாக அவை கருதின.
சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல் விடயத்தில் ஏற்கனவே, கவலை கொண்டிருந்த சர்வதேச நாடுகள், யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசு வெளியேறியதோடு இராணுவத் தீர்வில் தீவிரத்தை வெளிக்காட்டத் தொடங்கியதும் தமது நிலைப்பாட்டையும் அபிப்பிராயத்தையும் வெளிப்படுத்தத் தொடங்கின. அது மட்டுமன்றி, இதுவரை வெளிக்காட்டாதவாறு தமது செயற்பாட்டையும் வெளிக்காட்டின.
இதில் குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகள் சிறிலங்காவிற்கு படைக்கல உதவிகள் வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. இதில் பிரிட்டன் எத்தகைய படைத்துறை உதவிகளும் வழங்கப்பட மாட்டாது எனப் பாராளுமன்றத்தில் தெரிவித்தது. அமெரிக்க சனாதிபதி ஆயுதங்களை வழங்குவதைக் கட்டுப்படுத்தும் ஆவணத்தில் கையொப்பம் இட்டார்.
இதற்கு முன்னதாகவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஜேர்மனி, சுவீடன் போன்றவை சிறிலங்காவிற்கான உதவிகளை மட்டுப்படுத்தி யிருந்ததோடு, மனித உரிமை விடயத்திலும் இனப்பிரச்சினை தொடர்பான அரசின் அணுகுமுறையிலும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன.
இதேபோன்று சில இராசதந்திர ரீதியிலான நடவடிக்கைகளும் வெளிக்காட்டப்பட்டன. எடுத்துக்காட்டாக, சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்திருந்தார்.
அதாவது, சிறிலங்காவுடன் - சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தன்னை இணைத்து அடையாளப்படுத்திக் கொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரும்பாமையே இதற்குக் காரணமாகும்.
அத்தோடு, ஐ.நா. மனித உரிமை அமைப்புக்கள் போன்றவையும் சிறிலங்கா குறித்து பொறுமை இழக்கும் கட்டத்தை அடைந்துள்ளன எனக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறி யிருந்தது. அவ்வாறு இல்லாதுவிட்டால், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் குறித்து சிறிலங்காவின் பிரதி நிதியான தயான் ஜெயத்திலக கூறியவை கூற்று முட்டாள் தனமானது என ஐ.நா. மனித உரிமை அமைப்பின் இயக்குநர் சாடியிருக்க மாட்டார்.
இந்த வகையில் பார்க்கையில், சர்வதேச அமைப்புக்களும் பல சர்வதேச நாடுகளும் இரண்டு விடயங்களைப் புரிந்து கொண்டுள்ளன என்பது வெளிப்பட்டது. இதில் ஒன்று சிறி லங்கா அரசாங்கம் இன ரீதியிலான ஒடுக்கு முறையை மேற்கொண்டுள்ளது என்பது. இரண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இராணுவத் தீர்வையே அது முன்வைத்துள்ளது என்பது.
இந்நிலையிலும் சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்காதுவிடினும், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் நியாயப்பாட்டை ஓரளவேனும் புரிந்து கொள்ள வும் ஏற்றுக்கொள்ளவும் தலைப்பட்டுள்ளன எனக் கூறலாம், நம்பலாம்.
இதேவேளை, சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் சிறிலங்கா அரசுடனான உறவையோ அன்றி நெருக்கத்தையோ கைவிட்டு விட்டதாகவோ, சிறிலங்காவைப் புறம்தள்ளி விட்டதாகவோ இங்கு கொள்வதற்கும் இல்லை.
பல நாடுகள் தமிழ் மக்களின் பிரச்சினையை முற்றாகவே புறம்தள்ளிவிட்டு சிறிலங்காவிற்கு இராணுவ, பொருளாதார உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளன என்பதும், சில நாடுகள் இனப்பிரச்சினை மற்றும் மனித உரிமை விவகாரம் போன்ற விவகாரத்தில் அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தும் போது தமது பூகோள, பிராந்திய நலன்களை முனைப்புப்படுத்தி சிறிலங்காவுடன் நெருக்கமாகவும் இருக்கவும் செய்கின்றன என்பதும் யதார்த்தமானதே.
தென்னாபிரிக்காவில் பெரும்பான்மை கறுப்பின மக்களின் ஆட்சி நிலை நிறுத்தப்படுவதற்கு முன்னர் சிறுபான்மை இன வெள்ளையர் அரசு பாரிய இன ஒடுக்குமுறையில் ஈடுபடுகின்றது என உலகால் அறியப்பட்டே இருந்தது. பல நாடுகள் கண்டிக்கவும் செய்தன. இருப்பினும் பல நாடுகள் அதனுடன் இராஜீக உறவுகளைக் கொண்டே இருந்தன. அதற்குச் சில உதவிகளையும் வழங்கவுமே செய்தன.
ஆனால், தென்னாபிரிக்கா கறுப்பின மக்களின் போராட்டம் நியாயப்பாடானதென்பதும் இன ஒடுக்குமுறைக்கு எதிரானது என்பதும் உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலை தவிர்க்கப்பட முடியாததொன்றாகியது. இதற்காக தென்னாபிரிக்கா கறுப்பின மக்கள் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டியதாகவே இருந்தது.
இதனை ஒத்ததானதொரு வரலாறு உருவாகும் வகையிலான முனைப்புக்களை தமிழ் மக்கள் தற்பொழுது மேற்கொள்ளுதல் வேண்டும். அதாவது சர்வதேச ரீதியில் தற்பொழுது உருவாகியுள்ள சாதகமான சூழ்நிலையை - அதாவது, எமக்குப் பூரண ஆதரவு என்ற நிலை இல்லாதுவிடிலும் மாறிவரும் சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதில் முக்கியமான பாத்திரத்தை உலகின் பல பாகங்களிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முன்னெடுத்தல் வேண்டும். ஏனெனில், அவற்றை முன்னெடுப்பதில் அங்குள்ள மக்களுக்குத் தடைகள் எவையும் இருப்பதாக இல்லை. எமது நியாயப்பாட்டை எம்மீதான அடக்குமுறையை சனநாயக முறைக்குள் உட்பட்ட விதத்திலேயே அவர்களால் வெளிக் கொண்டுவர முடியும். அதற்கான வாய்ப்புக்கள் அங்கு மறுக்கப்படுவதாக இல்லை.
-ஜெயராஜ்-
Friday, January 25, 2008
புலிகளின் அசாதாரண பொறுமையும் சூழ்நிலை மாற்றமும்
Posted by tamil at 3:08 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment