இவ்வளவு ஆன பின்னரும் இந்நிலையிலும் யுத்த நிறுத்த உடன்பாட்டை வரிக்கு வரி கடைப்பிடித்து, நூறு வீதம் பின்னபற்றத் தாம் தயாராக இருக்கிறார்கள் எனத் தெரிவித்து விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிவிப்பு சமய சந்தர்ப்பத்துக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட சிறந்த இராஜதந்திரக் காய் நகர்த்தலன்றி வேறில்லை.
இன்னும் முழு யுத்தத்துக்குச் செல்லத் தயாரான தரப்பு நாங்கள் அல்லர், இலங்கை அரசே என்று சர்வதேச சமூகத்துக்குத் தெட்டத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உணர்த்தும் புலிகளின் நல்லதோர் தீர்மானம் இது என்பது தெளிவு.
இலங்கை அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு காரணமாக முறிக்கப்படும் இந்த யுத்த நிறுத்த உடன்பாடு தொடர்பாக ஒரு முக்கிய அம்சம் இப்போது கவனிக்கப்படவேண்டியுள்ளது. அது அந்த உடன்படிக்கை உருவான சூழல் பற்றியதும் முறிக்கப்படும் சூழ்நிலை சம்பந்தமானதுமாகும்.
எத்தகைய பின்னணியில் இந்த உடன்பாடு செய்யப்பட்டது என்பது குறித்து விடுதலைப் புலிகள் கூறுவதை முதலில் அவதானிக்கலாம்.
""தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய இராணுவ வெற்றிகளைக் குவித்து, படை வலுச் சமநிலையில் மேலோங்கியிருந்த நிலையில், 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசு போரில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாதென்பதை உணர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்வந்தது. இதனடிப்படையிலேயே போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.'' என்று மீண்டும் இப்போதும் புலிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
இது புலிகள் தரப்புக் கூற்று. இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பின் நிலைப்பாடு இது என்பதால் அது உண்மையாகி விடுமா நியாயமாகுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
சரி. புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்தது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கட்சி அரசுதான். அந்தக் கட்சியே புலிகள் கூறும் இந்தக் கருத்து சரி என்பதை சில தினங்களுக்கு முன்னர்தான் பகிரங்க அறிக்கை மூலம் ஒப்புக் கொண்டிருந்தது.
யுத்த நிறுத்த உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக முறிக்கும் மஹிந்த ராஜபக்ஷ அரசின் முடிவைக் குறை கூறி, சில தினங்களுக்கு முன்னர் பகிரங்க அறிக்கை விடுத்த அன்றைய பிரதமரும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.கட்சித் தலைவரும், அன்று இந்த யுத்த நிறுத்த உடன்பாட்டில் ஒப்பமிட்ட இலங்கை அரசுத் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அந்த உடன்பாட்டுக்குத் தமது அரசு இணங்கி வந்தமைக்கான காரணங்களை அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியிருந்தார்.
""நாங்கள் பல இராணுவப் பின்னடைவுகளை எதிர்கொண்டு, நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து, ஒரு மிக நெருக்கடியான காலகட்டத்திலே இருந்தபோதுதான் 2002 இல் ஐ.தே.க. அரசு புலிகளுடன் ஒரு யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு வந்தது. புலிகள் வடக்கில் முக்கியமான இராணுவத் தளங்களைக் கைப்பற்றி கட்டுநாயக்கா விமான நிலையம் போன்ற முக்கிய பொருளாதார இலக்குகளைத் தாக்கியிருந்தனர். கொழும்புத் துறைமுகம் இயங்க முடியாத நிலையில் இருந்தது. பொருளாதார வளர்ச்சி எதிர்த்திசையில் இருந்தது. இந்தப் பின்னணியில், தொடரும் இனப்பிரச்சினைக்குப் பேச்சுமூலம் தீர்வு காண்பதும், நாட்டின் ஆட்புல இறைமையைப் பாதுகாப்பதுமே யுத்த நிறுத்த உடன்பாட்டின் நோக்கமாக இருந்தன.'' என்று ரணில் இப்போது கூறுகின்றார்.
முக்கிய இராணுவத் தளங்களைப் புலிகள் தாக்கிக் கைப்பற்றி, பொருளாதார இலக்குகளை அழித்து வருகையில் நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக தனது அரசு புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்தது என்று குறிப்பிடுவதன் மூலம், இராணுவ ரீதியில் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக உருவாகக் கூடிய பாரதூரமான விளைவுகளை சமாளிக்கவே தாம் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்பாட்டுக்குச் சென்றார் என்பதை இன்றும் ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
ஆக, இராணுவச் சமவலு நிலையில் பின்னடைவுகளைக் கண்டு, தோல்வியுற்றுத் துவண்ட நிலையிலேயே தென்னிலங்கை அரசு யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு வந்தது என்பதைப் புலிகள் மட்டுமல்லாமல், அந்த ஒப்பந்தத்தை சிங்களத் தரப்பில் ஒப்பமிட்டுச் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்கவும் ஒப்புக்கொள்கின்றார்.
இந்த ஆறுவருட கால யுத்த நிறுத்த வேளையில் தனது இராணுவப் பின்னடைவுகளைச் சரிசெய்து, இராணுவச் சமவலு நிலையில் தான் மீண்டும் மேலோங்கி விட்டதான எண்ணம் தென்னிலங்கை அரசுத் தரப்புக்கு வந்து விட்டதால் அது, இப்போது மீண்டும் யுத்த கர்ஜனை புரிகின்றது என்பதும் வெளிப்படை.
ஆனால் இந்த இராணுவச் சமவலு நிலையில் மேம்பட்டு நிற்கிறோம் என்ற கொழும்பின் கருத்து நிஜமா, யதார்த்தமா, அல்லது மாயையா, அளவுக்கு மீறிய வெறும் மனத்தைரியமா என்பதே கேள்வி.
இதற்கு முன்னர் ஆட்சிக்கு வந்த தென்னிலங்கை அரசுகளும் இவ்வாறு இராணுவ வலிமை குறித்து அளவுக்கு மீறிய மனக்கோட்டை கட்டிக்கொண்டு, கையைச் சுட்டுக்கொண்ட பட்டறிவுகள் நிறையவே உண்டு.
இராணுவ ரீதியில் மேலாதிக்க நிலையில் நிற்கிறோம் என்ற மன நம்பிக்கையே தென்னிலங்கையை இன்று இப்படி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் தூக்கிக் கடாசும் துணிவைத் தந்தது என்பதும் தெளிவு.
எனவே, கொழும்புக்கு இந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் உதவி, ஒத்துழைப்பு வழங்கி, இந்நிலைப்பாட்டுக்கு அது வருவதற்குத் தூண்டிய சர்வதேச சமூகத்தின் சில அங்கத்துவ நாடுகளும் கூட, யுத்த நிறுத்தத்தை முறிக்கும் இலங்கை அரசின் இத்தவறுக்குக் கூட்டுச் சேர்ந்து குற்றப் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
Uthayan.com
Saturday, January 12, 2008
மேலாண்மை நம்பிக்கையே யுத்த தீவிரத்துக்குக் காரணம்
Posted by tamil at 6:48 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment