Saturday, January 26, 2008

சிங்கள தேசத்தின் யுத்தப் பிரகடனம் - பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட பிழையான முடிவு

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறிலங்கா அரசு விலகிக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் பலத்த கண்டனங்கள், விமர்சனங்கள் என்பவற்றைச் சட்டை செய்யாமல் விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்துவிடும் நோக்குடன், அதற்கூடாக தமிழ் மக்களின் எதிர்ப்பை நிர்மூலம் செய்து விடும் நோக்குடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தை இலக்காகக் கொண்டு போர் முடுக்கி விடப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னான காலப்பகுதியில் ஒரு சில வருடங்கள் மென்னிலையாக நடந்து வந்த யுத்தம் 2005 நவம்பரில் தற்போதைய அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னால் உக்கிரமடையத் தொடங்கியது. தொடர்ந்த காலப் பகுதியில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அரசுத் தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ மீதான கிளைமோர்த் தாக்குதல், கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மற்றும் கொலன்னாவ எண்ணைய்க் குதம் என்பவற்றின் மீது நடாத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல், அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடாத்தப்பட்ட அழித்தொழிப்புத் தாக்குதல் போன்றவை நிகழ்த்தப்பட்ட காலத்தில் பிரகடனம் செய்துவிடாத யுத்தத்தை சிங்கள தேசம், இன்று எதுவுமேல்லாத ஒரு சூழலில், அதுவும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்காக சிங்களப் படைகளும் ஒட்டுக் குழுக்களும் சர்வதேசத்தின் பலத்த கண்டனத்திற்கு இலக்காகியுள்ள சூழலில் எதற்காகப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் கண்டறிய சர்வதேச சமூகம் துடியாய்த் துடிக்கின்றது.

சிங்கள தேசம் யுத்தத்தைப் பிரகடனம் செய்த விதம் நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கவில்லை. ஒருவகையில் இந்த முடிவு அவர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. சிங்களக் கடும் போக்காளர்களான ராஜபக்ஷ சகோதரர்கள் இந்த முடிவை கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துக்கு முன்பாக மேற்கொள்ளக் கூடும் எனவே எதிர்பார்க்கப்பட்டது. ~போர்நிறுத்த உடன்படிக்கை 5 வருடங்களைக் கடந்தும் நீடித்தால் விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து விடும். எனவே அதற்கு முன்பாக ஒப்பந்தத்திலிருந்து சிங்கள தேசம் வெளியேறிவிட வேண்டும்| என சிங்களக் கடும்போக்கு வாதிகள் அப்போது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அப்போது கூட மகிந்த ராஐபக்ஷ இந்த முடிவை எடுக்கவில்லை. ஆனால் இப்போது அம்முடிவை எடுத்திருக்கின்றார் என்றால் யுத்தத்தில் வெல்ல முடியும் என்ற துணிவு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதானே அர்த்தம்? சர்வதேச சமூகத்தைச் சமாளித்துவிட முடியும் என்ற துணிவு உருவாகியிருக்கின்றது என்பதுதானே அர்த்தம்? அதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்?

முதலில், கடந்த டிசம்பரில் வெளியான செய்திகளைப் பார்த்தால் இதனை ஓரளவு ஊகிக்க முடியும். டிசம்பர் மாத ஆரம்பத்தில் மகிந்த யப்பானுக்குச் சென்றிருந்தார். அவரால் நிதியுதவிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு 1.9 பில்லியன் யென் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மனித உரிமை மீறல்களுக்காக சிங்கள தேசம் மீது கடுமையான கண்டனங்களைச் சர்வதேச சமூகம் முன்வைத்திருந்த வேளையிலேயே இந்த நிதியுதவி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி ஊடாக யப்பான் சொல்ல விரும்பும் சேதி மனித உரிமைகளை சிறிலங்கா மீறுவதையிட்டுத் தான் கவலைப்படவில்லை என்பதே. யப்பானின் கடந்த கால வரலாற்றை அதுவும் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முந்திய காலகட்ட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் யப்பானுக்கும் மனித உரிமைகளுக்கும் உள்ள சம்பந்தம் என்னவென்பது புரியும்.

மனித குல வரலாற்றில் ஹிட்லர் நடாத்திய வதைமுகாம் படுகொலைகளுக்கு நிகராக சீனாவின் நான்கிங் பிரதேசத்தில் யப்பானியப் படைகள் நடாத்திய படுகொலைகளும் அட்டூழியங்களும் மறக்கப்பட முடியாதவை. அதேவேளை, போரின் வலி, அதன் கொடூரம் என்ன என்பதை ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் யப்பானியர்கள் நேரடியாக அனுபவித்திருந்தும் கூட இன்னொரு மக்கள் கூட்டம் அத்தகைய அனுபவத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கக் கூடாதென அவர்கள் நினைக்கவில்லை.

யப்பான் உட்பட வெளிநாடுகள் வழங்கிய நிதியுதவியின் பலத்திலேயே 2008 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த வரவு செலவு திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இம்முறை கையாண்ட வழிமுறைகள் மிகவும் கீழ்த்தரமானவை வெட்கக் கேடானவை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு சிலர் அரசின் பக்கம் சேரவுள்ளதாக ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே அரசு பிரசாரத்தில் ஈடுபட்டது. அது சாத்தியமற்றுப் போன நிலையில் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக அல்லது எதிராக வாக்களிப்பதைத் தடுத்து விடுவதற்காக மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் சிலர் கடத்தப்பட்டு வாக்களிப்பு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டார்கள். ஒரு தடவையல்ல இரு தடவை இந்தச் சம்பவம் அரங்கேறியது. எதிர்க்கட்சிகள் இதனைக் கண்டித்த போதிலும் அரச சார்புக கட்சிகளோ அரச பிரதிநிதிகளோ இதனைக் கண்டிக்கவில்லை. சர்வதேச சமூகத்தின் எதிர்வினையோ வெறும் வாய்ப்பேச்சு அளவிலேயே இருந்தது.

இதேவேளை, எமது கிட்டிய அயல்நாடான இந்தியாவும் உலகப் பொலிஸ்காரனான அமெரிக்காவும் சமாதானம் மூலம் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என உதட்டளவில் கூறிக்கொண்டு மறைமுகமாக சிங்கள தேசத்திற்கு ஆயுத பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து சிறிலங்கா விலகிக் கொண்டமை தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஐp கருத்துக் கூறுவதற்கு மறுத்தமை, அமெரிக்க கப்பற்படையின் பசுபிக் பிராந்திய கமாண்டர் அண்மையில் சிறிலங்காவுக்கு விஐயம் மேற்கொண்டு கடற்படைக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை, கடற்பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்திய வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி அண்மையில் தெரிவித்திருந்த கருத்து என்பவை மேற்கூறிய வாதத்தை மெய்ப்பிக்கச் சிறந்த உதாரணங்களாகும்.

சிங்கள தேசமானது தமிழ் மக்களின் எதிர்ப்பை முறியடிக்கத் தேதி குறிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. 1978 இல் பயங்கரவாத தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்திய போது அப்போதைய ஐனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஒரு வருடத்திற்குள் தமிழ் மக்களின் எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாகச் சூழுரைத்திருந்தார். அந்த எதிர்பார்ப்பு, அதனால் உருவான நம்பிக்கை என்பவையே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தரமான சட்டமாக்காமல் தற்காலிக ஏற்பாடுகள் என்ற பதப்பிரயோகத்தோடு அறிமுகப்படுத்தும் துணிவை அவருக்கு வழங்கியது. இதனைத் தொடர்ந்து தனது மருமகனான பிரிகேடியர் புல் வீரதுங்காவை யாழ்ப்பாணம் அனுப்பினார். அப்போது அவருக்கு சிறிலங்கா படைகளால் சிறந்த புலனாய்வு அதிகாரிகளாக விளங்கிய தமிழர்கள் உதவிக்கு இருந்தார்கள். ஆனாலும அவர்களால் தமிழர் போராட்டத்தை நசுக்கி விட முடியவில்லை. மாறாக அவர்களால் போராட்டத்தை விசுவரூபம் கொள்ளச் செய்யவே முடிந்தது.

பின்னர் சந்திரிகா அம்மையார் காலத்தில் தமிழர் எதிர்ப்பை முறியடிக்க மற்றுமோர் கெடு விதிக்கப்பட்டது. இம் முறை அவரின் மாமன் அநுருத்த ரத்வத்த களமிறக்கப்பட்டார். பல ஒட்டுக் குழுக்களும் அனுசரனையாக இருந்தன. ஆனாலும் கூட தமிழர் போராட்டத்தை நசுக்கிவிட முடியவில்லை.

~எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாராம்| என்பதைப் போல இப்போது 2008 இல் மீண்டுமொரு கெடு விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் தமிழர் எதிர்ப்பை முறியடிக்கப் போவதாக சூழுரைக்கப்பட்டுள்ளது. முன் அனுபவத்தை வைத்தும் தமிழர் தரப்பிலுள்ள பலத்தை வைத்துக் கொண்டும் பார்க்கும் போது முடிவு ஊகிக்கக்கூடியதாகவே உள்ளது.

ஆனால், இங்கு நாம் கவனத்தில் கொண்டுள்ள விடயம் இந்தக் காலவரை பற்றியது. 2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னான காலப்பகுதியில் உலக அரங்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது அதிகம் பேசப்படும் விடயமாக இருந்து வருகின்றது.

விடுதலைப் புலிகள் தரப்பில் விடப்பட்ட சில தவறுகள், புலம்பெயர் தமிழர் சமூகத்தின் அசமந்தப் போக்கு, சிறிலங்கா தரப்பில் லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற சிறந்த இராஐதந்திரிகளின் வெளியுலகப் பிரசாரம் ஆகியவை தமிழர் போராட்டத்தை பயங்கரவதாத போராட்டமாக சர்வதேச சமூகம் கருதுவதற்கு வழி சமைத்தது.

அமெரிக்கா தலைமையிலான ~பயங்கரவாதத்துக்கு எதிரான போர்| எனும் நடவடிக்கையின் கவர்ச்சி தற்போது உலக அரங்கில் மங்கத் தொடங்கியுள்ளது. பின்லாடனை ஒழித்துக் கட்டுவது என்ற பெயரில் ஆப்கானிஸ்தானிலும், சதாம் ஹாசைனை அகற்றி விட்டு ஐனநாயகத்தை நிலைநாட்டுவதாககு; கூறிக் கொண்டு ஈராக்கிலும் Nஐhர்ஐ; புஷ் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தங்களில் இணைந்து கொண்ட ஆரம்ப கட்டக் கூட்டாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேயர் பதவி விலகியமை, அமெரிக்க மக்களிடையே உருவாகி வரும் யுத்தத்துக்கு எதிரான மனோபாவம், உலகெங்கும் அமெரிக்கப் பிரiஐகளுக்கு உருவாகியுள்ள ஆபத்துக்கு அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையே காரணம் என்ற புரிதல் ஆகியவை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அரசுத் தேர்தலில் ஐனநாயகக் கட்சி வேட்பாளர் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்பு போன்ற விடயங்கள் சிறி லங்காவின் கண்களுக்கு ஆபத்தை முன்னறிவிக்கும் சகுனங்களாகத் தென்படுகின்றன. தனது ~பயங்கரவாதத்துக்கு எதிரான போர்| எனும் வெற்றுக்கோஷம் இனிமேல் கவனத்தில் எடுக்கப்படாது என்பது புரியத் தொடங்கியுள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள பதட்டமே சிங்கள தேசத்தை நிதானமாக யோசிக்க விடாமல் யுத்தத்தை ஜோர்ஜ் புஷ்சின் காலத்திலேயே முடிவுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் எனச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. ஏனைய காரணங்கள் யாதாவது இருக்குமானால் அவை நிச்சயம் துணைக் காரணங்களே.

ஆனால், தனது முடிவு பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு பிழையான முடிவு என்பதைச் சிங்கள தேசம் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. போர்க் களத்திலும் இராஜதந்திரக் களத்திலும் தற்போது உள்ள நிலைமைகள், ஏற்பட்டுவரும் மாற்றங்கள் என்பவை இதையே குறித்து நிற்கின்றன.

-சண். தவராஜா-

0 Comments: