Thursday, January 31, 2008

வன்னிப் பிரதேசக் கொடூரங்கள் மட்டும் கொழும்பின் கண்ணில் படுவதேயில்லை

மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மடுப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவி மாணவர்கள் 20 பேர் உட்பட 18 சிவிலியன்கள் கோரப் பலியாகியிருக்கின்றார்கள். மூன்று ஆசிரியர்கள், பத்து மாணவர்கள் உட்பட 17 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

இந்தக் கோர கொடூர சம்பவம் பற்றிய செய்திகளைத் தென்னிலங்கை ஊடகங்கள் கையாளும் முறையைப் பார்க்கும்போதே வன்னித் தமிழ் மக்களை எவ்வளவு ஓரவஞ்சகத்துடன் தென்னிலங்கைச் சமூகம் அணுகுகின்றது என்பது புலனாகிவிடும்.

வன்னிப்பிரதேசத்தில் கோரக் குண்டுவெடிப்பில் அப்பாவி மாணவர்கள் சிறார்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை உரிய முக்கியத்துவம் கொடுத்து வெளியிடக்கூடத் தென்னிலங்கை ஊடகங்களின் "ஊடக மனச்சாட்சி' இடம் கொடுக்கவில்லைப் போலும்.
நேற்று முன்தினம் பிற்பகலில் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இடம்பெற்ற இந்த அராஜகத் தாக்குதலில் அப்பாவிகள் குறிப்பாக ஏதுமறியாப் பள்ளிச் சிறார்கள் கொல்லப்பட்ட செய்தியே நேற்று முற்பகல் வரை தென்னிலங்கைக்குச் சரியாகச் சென்றடையவில்லை. அப்படியிருக்க நேற்றுக்காலை வெளியான வார மத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்று, குண்டு வெடிப்பின் கொடூரம் பற்றிய தகவல்களை அமுக்கிக் கொண்டு ""பாடசாலை பஸ் குண்டு வெடிப்புத் தொடர்பாகக் குழப்பம்'' என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.
மற்றொரு ஆங்கிலத் தினசரி ஒன்று "பாடசாலைப் பிள்ளைகளைப் படைகள் கொன்றன என்று புலிகள் கூறுகின்றார்கள், இராணுவம் மறுப்பு' என்ற சாரப்பட செய்தியை நசுக்கி, அமுக்கி வெளியிட்டிருந்தது.

இக்குண்டு வெடிப்பில் அப்பாவிச் சிறுவர்கள் கொல்லப்பட்ட கொடூரத்தை அம்பலப்படுத்துவதிலும் பார்க்க அப்படிக் கொல்லப்பட்ட சிறார்களும், பொதுமக்களும் தமிழர்கள் என்பதால் அந்த மக்களின் பாதிப்பைப் பகிரங்கப்படுத்துவதிலும் பார்க்க அக் கொடூரத்துக்கான குற்றச்சாட்டு அரசுப் படைத் தரப்பின் மீதோ, சிங்கள மேலாண்மைப் போக்குப் பேரினவாதத்தின் மீதோ விழுந்து விடாமல் உறுதி செய்து கொள்வதில்தான் தென்னிலங்கை ஊடகங்களின் கவனமும் சிரத்தையும் அதிகம் ஈடுபாடு காட்டின.
சிங்கள நாளிதழ்களின் போக்குக்கூட அப்படித்தான் அமைந்தது.
ஆக, தமிழ் ஊடகங்கள் மட்டும் நடந்த கொடூரத்தை, அதற்குரிய முக்கியத்துவத்துடன் வெளிப்படுத்தியிருந்தன.

"புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த முகாம் தகர்ப்பு', "பிரபாகரன் படுகாயம்', "அவசர வைத்திய சிகிச்சைக்காகத் தமிழ்நாட்டுக்குச் செல்வதற்குப் பிரபாகரன் முயற்சி' என்ற அளவில் வன்னிக்குள், குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்புக்குள், இடம்பெறக்கூடிய "இரகசியங்களை' எல்லாம் "துல்லியமாக' தேடிப்பிடித்து அம்பலப்படுத்தும் தென்னிலங்கை ஊடகங்களுக்கு இலத்திரனியல் ஊடகங்களுக்கும் கூட வன்னிக்குள் இப்படி பச்சிளம் சிறார்கள் கொன்றொழிக்கப்பட்ட கொடூரம் பற்றிய செய்தியை சுயாதீனமாகத் தேடிப் பெற்றுக்கொள்ளவே முடியவில்லை. விசேடமாக அவ்வாறு தேடிப்பெற்று உண்மையை வெளிப்படுத்தும் மனம் அவற்றுக்கு அடியோடு இருக்கவில்லை.

இந்தக் கிளைமோர்க் கொடூரத்தை அநியாயத்தை கூட புலிகள் வெளிப்படுத்திய தகவலாக அறிக்கையிட்டு, அதன்மூலம் அதனுள் புதைந்திருக்கும் உண்மைத்தன்மை குறித்துத் தென்னிலங்கைச் சமூகம் மத்தியில் ஒரு சந்தேகத்தை அவநம்பிக்கையை விதைத்து, அந்த அவநம்பிக்கைப் பின்புலத்திலேயே நாமும் அச்செய்தியை வெளியிட்டோம் என்று காட்டி, சமாளித்துக் கொள்ளவே அவை அனைத்தும் முயன்றன.

தென்னிலங்கை ஊடகங்களின் நிலைமைதான் இது என்று பார்த்தால் கொழும்பு அரசினதும், அதிகாரிகளினதும், படைகளினதும் அணுகுமுறை கூட அப்படித்தான் இருக்கின்றது.
தென்னிலங்கையில் சிவிலியன்கள் பாதிக்கப்படும் ஒரு அனர்த்தம் குண்டு வெடிப்போ, தாக்குதலோ நடந்துவிட்டால், அது குறித்து விழுந்தடித்து விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி, அந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கும் உற்றாருக்கும் அனுதாபம் தெரிவித்து, இறந்தவரின் இரத்தம் காய்வதற்குள் நஷ்ட ஈட்டையும் அனுப்பி வைக்கும் அரசுத் தரப்புக்கு, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இவ்வாறு கோரக் குண்டுவெடிப்பில் அப்பாவிப் பாடசாலைச் சிறுவர்கள் கொல்லப்பட்டமையைக் கண்டிக்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ கூட மனம் வரவில்லை. குறைந்த பட்சம் உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு அவர்களும் தனது நாட்டு மக்களே என்று உரிமை கொண்டாடும் அரசினால் அனுதாபம் தெரிவிக்கக்கூட முடியவில்லை.

இப்படி அப்பாவிச் சிறார்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டமை பற்றிய செய்திகளை வெளியிடும் திராணி அரசு சார்பு நாளிதழ்களுக்கும் இருக்கவில்லை. ஒரு வரிச் செய்திகூட இதுகுறித்து அவற்றில் பிரசுரமாகவில்லை.

இவ்வாறு இந்தக் கொடூரக் குண்டு வெடிப்புப் பற்றியும், அதன் கோரம் தொடர்பாகவும் வெளியான செய்திகளை அமுக்குவதில் தென்னிலங்கை காட்டும் சந்தேகத்துக்குரிய சிரத்தையே இதில் தென்னிலங்கையின் சம்பந்தத்தை வலுப்படுத்தும் ஓர் ஆதாரமாகக் கவனிக்கத்தக்கது என்பதும் கவனத்தில் கொள்ளக்கூடியதே.

தென்னிலங்கையில் இதுபோல இடம்பெறும் கொடூரங்களை விழுந்தடித்துக் கண்டித்து, புலிகள் மீது குற்றம் சுமத்தி, பாதிப்புற்றோருக்கு அனுதாபம் தெரிவிக்கும் ஆனந்தசங்கரி போன்ற குழுவினரும், வன்னியில் விமானக்குண்டு வீச்சுகளிலும், இத்தகைய கிளைமோர்களிலும் அநியாயமாகப் பலியாகும் அப்பாவிகள் குறித்து அதீத மௌனம் காக்கின்றார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனாலும் அது பிச்சைக்காரனின் நன்றிக்கு ஒப்பான விசுவாசம் என்று கருதி அந்த மௌனத்தை நியாயப்படுத்தி ஒதுக்கி விடுவதே பொருத்தமானது.

நன்றி .- உதயன்

0 Comments: