Saturday, January 5, 2008

"மீளமுடியாத பொறிக்குள் சிங்கள தேசம்"

சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்பரவரி 04 ஆம் திகதி ஆட்சியாளர்களால் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவரது வருகைக்கு முன்னர் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கப் போவதாகவும் சிறிலங்கா ஊடகங்கள் கூறுகின்றன.

இதற்கெனத் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்குமாறு சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவால் அனைத்துக் கட்சிக் குழுவுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பலமுறை கூடிக் கலைந்தும் எந்தவொரு தீர்வுத்திட்டத்தைத் தானும் முன்வைக்க முடியாத அக்குழு இப்பொழுது அதிலிருந்து முக்கிய கட்சிகள் வெளியேறிய நிலையில் உருக்குலைந்து போய் உள்ளது. இந்தக் குழுவில் ஆரம்பம் முதலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கதவடைப்புச் செய்யப்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வோ இதில் கடமைக்குச் சிலமுறை கலந்துகொண்டு விட்டு இக்குழுவை கை கழுவிவிட்டது.

தமிழ் மக்களுக்கான உரிமைகள் என்பதை எவ்வகையிலும் வழங்கப்படுவதற்குத் தாம் துணை போக முடியாது என்று கூறி ஜே.வி.பி. வெளியேறி விட்டது.

இப்போது எஞ்சியிருப்பது ஆளும் கட்சியும் அதன் அடி வருடிகளும் மட்டுமே. அதிலும் ஜாதிக ஹெல உறுமய இக்குழுவின் எந்தச் செயற்பாட்டையும் உள்ளிருந்தே தடுத்து நிறுத்துவது என்ற முடிவுடனேயே இதன் அமர்வுகளுக்குச் சென்று வருகிறது.

எதுவிதத்தீர்வையும் எட்டமுடியாது இரண்டு மாதங்கள் மகிந்தவால் உறங்கு நிலையில் வைக்கப்பட்டிருந்த இக்குழு இப்பொழுது தட்டி எழுப்பப்பட்டு ஓட ஓட விரட்டப்படுகிறது. வரும் 25 ஆம் திகதிக்குள் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்றும் இப்போது கூறப்படுகிறது. இப்போது மன்மோகன் சிங்கின் வருகைக்கு முன் தீர்வுத்திட்டம் என்று கூறப்படுவதும் கூட ஒரு புதிய விடயமல்ல. ஏனெனில் இவ்வாறு ஏற்கெனவே பல காலக்கெடுக்கள் எல்லாம் இவ்வாறு அறிவிக்கப்பட்ட போதும் கூட எதுவுமே நடைபெற்று விடவில்லை.

ஆனால் இவையெல்லாம் ஒரு புறமிருக்க மகிந்த சகோதரர்களும் சிறிலங்காவின் தரைப்படைத் தளபதியும் தமிழ் மக்களின் போராட்டத்தை ஒழித்துக்கட்ட நாட்குறித்து அறிவித்துக் கொண்டிருக்கின்றனர். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் கூறுகின்றனர்.

எனவே யுத்தம் என்ற குறிக்கோளிலிருந்து அவர்கள் விலகி விடவில்லை என்பது வெளிப்படுகின்றது.

சிறிலங்காவின் இன்றைய அரசியல் பொருளாதாரச் சூழ்நிலையானது போர் என்பதிலிருந்து மகிந்த அரசாங்கம் எவ்வகையிலும் பின்வாங்க முடியாத சூழலையே கொண்டுள்ளது. அவ்வாறானதொரு சூழலை மகிந்த உருவாக்கி வைத்திருக்கின்றார் என்பதே உண்மை நிலையாகும்.

கடந்த இரண்டு வருடகாலமாக மகிந்த தனது ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவர் யாருக்காகவும் ஒரு போலி அரசியல் தீர்வைக்கூட முன்வைக்க முடியாத சூழலையே உருவாக்கியுள்ளது. அதாவது அவர் இன்று ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய என்பவற்றின் பிடிக்குள் சிக்கியுள்ளவராயுள்ளார். இதனால் மிகக்குறைந்த பட்சம் குறைந்தது அவருடன் ஒட்டிக்கொண்டிருப்போரை அல்லது அவர் ஏமாற்ற விரும்பும் உலக சக்திகளைத் திருப்திப்படுத்தக் கூடியதான தீர்வு ஒன்றைக் கூட முன்வைக்க முடியாதவராக உள்ளார்.

அதேவேளை அவரது யுத்தத் தயாரிப்புக்குச் செலவழித்த நிதி, அவரது ஆட்சியில் இடம்பெற்று வரும் ஊழல்கள், முறைகேடு களால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீரழிவு சிறிலங்காவை மீள முடியாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

அவர் விரிவடைந்து செல்லும் யுத்தத்திற்குப் பெருமளவு நிதியைத் தீனியிட வேண்டியுள்ள அதேவேளை யுத்தமானது சிறிலங்காவின் வருமான மூலங்கள் அனைத்தையும் முடக்கியுள்ளது. இதன் காரணமாக விலைவாசி ஏற்றம், பொருளாதாரச்சுமை என்பது மகிந்த அரசாங்கத்திற்கு எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாததாகி விட்டது.

இன்று இவற்றிலிருந்து சிங்கள மக்களைத் திசை திருப்பும் வழியாக சூதாடிகள் பின்பற்றும் வழிமுறையையே மகிந்த ஆட்சி பின்பற்ற வேண்டியுள்ளது.

அதாவது மேலும் மேலும் யுத்தத்திற்குத் தீனிபோட்டு அதில் முழுமையாக இறங்குவதைத் தவிர மகிந்த அரசுக்கு வேறு வழி எதுவும் இப்போது இல்லை.

சிங்கள மக்களுக்கு மகிந்த ஆட்சி ஊட்டி வைத்திருக்கின்ற யுத்த வெறி ஒருபுறம், யுத்தத் தயாரிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மறுபுறமாக மகிந்தவை ஆட்சிப்பீடம் ஏற்றியவர்களின் எதிர்ப்பைச் சந்திக்காது இருக்க மகிந்த அந்த வழியையே தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார். இதன் காரணமாகவே இப்போது மகிந்தவும் அவரின் யுத்தக் குரலான கோத்தபாயவும் யுத்தத்துக்குக் காலக்கெடுக்களை விதித்து அறிவிப்புக்களை ஆவேசமாக விடுத்துவருகின்றனர்.

சந்திரிகா அம்மையார் தனது ஆட்சிக்காலத்தில் ஆறு தேர்தல்களைச் சந்தித்து அவற்றில் வெற்றிகொண்டதாகக் கூறிக்கொள்வார். அவ்வாறு ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ஒவ்வொரு படை நடவடிக்கையையும் மேற்கொண்டு தனது படையை வலுவுக்கு மிஞ்சி பரவலடையச் செய்தார். இறுதியில் அவர்கள் எல்லாவற்றையும் கைவிட்டுப் பாய்ந்தோட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது எத்தகைய தேர்தலையும் நடத்தக்கூடிய மனோ தைரியத்தை மகிந்த கொண்டவராக இல்லை. ஆனால் விலைவாசி ஏற்றம் என்பது அவருக்கு நெருக்கடி கொடுக்கும் ஒன்றாகியுள்ளது. இதனைத் திசைதிருப்ப அவர் யுத்தத்தைப் பயன்படுத்த வேண்டும். எவ்வாறாயினும் ஒவ்வொருமுறை விலைவாசி ஏறும்போதும் அவரால் படை நடவடிக்கை ஒன்றைச் செய்து விடவும் முடியாது என்பதும் வெளிப்படை.

அதேவேளை படை நடவடிக்கை தொடரத் தொடரப் பக்க விளைவாக அதிகரிக்கப்போகின்ற பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்வதென்பதும் மகிந்தவால் முடியக்கூடிய காரியமாக இல்லை. இந்த இடைவிடாத சுழற்சி மகிந்தவின் ஆட்சிக்கு மட்டுமல்ல சிங்கள தேசத்திற்கும் மீள முடியாத சிக்கல்களையே ஏற்படுத்தும்.

-வேலவன்-

0 Comments: