Friday, January 4, 2008

"அர்த்தமற்ற உடன்படிக்கை குறித்து ஏன் இந்த ஆரவாரம்?"

2002 பெப்ரவரியில் நோர்வேயின் அனுசரணையுடன் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. நேற்று முன்தினம் புதன்கிழமை இதுதொடர்பாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம கொழும்பில் உள்ளவெளிநாட்டு தூதுவர்களுக்கு நேற்று விளக்கமளித்திருக்கிறார். போர் நிறுத்த உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அதிலிருந்து விலகுவதாக இருந்தால் நோர்வே அரசாங்கத்துக்கு 14 நாட்கள் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும். அந்த முன்னறிவித்தல் கடிதத்தை வெளியுறவு அமைச்சர் நேற்று மாலை இலங்கைக்கான நோர்வே தூதுவரிடம் கையளித்திருக்கிறார்.
நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின் ஒரேயொரு விளைபயன் என்று ஒரு கட்டத்தில் இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கை வர்ணிக்கப்பட்டதுண்டு. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் இருந்து 2003 ஏப்ரிலில் விடுதலை புலிகள் விலகியபோதிலும் கூட, போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு அவர்கள் ஒருபோதுமே தயாராக இருந்ததில்லை. 2006 நவம்பர் மாவீரர்தின உரையில் தான் பிரபாகரன் போர்நிறுத்த உடன்படிக்கை செயலிழந்து விட்டது என்று கூறியிருந்தார். சமாதான முயற்சிகளுக்கு எதிரான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற பேரினவாத சக்திகளை அரவணைத்துக் கொண்டு 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ஷ போர் நிறுத்த உடன்படிக்கையில் மாற்றங்களைச் செய்வதாகவும் நோர்வேயின் அனுசரணையைக் கைவிடுவதாகவும் நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். அதிகாரத்துக்கு வந்து இருவருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்டபோதிலும், ஜனாதிபதி ராஜக்ஷ போர்நிறுத்த உடன் படிக்கையில் இருந்து விலகுவதற்கு பெரிதாக அக்கறை காட்டவில்லை. இதற்கு சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களே பெருமளவுக்குக் காரணமாக இருந்ததென்று நம்பப்பட்டது.

தற்போதைய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்ததன் பின்னணி என்ன? கடந்த சில வருடங்களாக குறிப்பாக இருவருடங்களாக போர் நிறுத்த உடன்படிக்கை என்று ஒன்று இலங்கையில் நடைமுறையில் இருந்தது என்று எவராவது கூறுவாரானால், உண்மையில் அவர் சித்தப்பிரமை பிடித்தவராகத்தான் இருக்கமுடியும். மக்கள் முற்றுமுழுதான போரையொத்த சூழ்நிலையிலேயே அவலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். போர் நிறுத்த உடன்படிக்கை சீர்குலைந்து இலங்கையில் மோதல்கள் மீண்டும் தீவிரமடைவதை சர்வதே சமூகத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. கடந்த சில மாதங்களாக மோதல்கள் உக்கிரமடைந்த வேளையிலும் போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷ எதையுமே பேசவில்லை. கடந்த வருட நடுப்பகுதியில் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, `அரசாங்கம் தற்போது மேற்கொள்கின்ற படை நடவடிக்கைகளுக்கு அந்த உடன்படிக்கை எந்தவிதத்திலும் தடையாக இல்லை' என்று தான் கூறியிருந்தார்.

ஆனால், கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்தும் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவது குறித்தும் அவரும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் முழு முச்சாகப் பேசியதைக் காணக் கூடியதாக இருந்தது. இதனிடையே ஜே.வி.பி. போன்ற பேரினவாதச் சக்திகளும் உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலகி வன்னி மீது முற்று முழுதான போரைத் தொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையைத் தீவிரப்படுத்த ஆரம்பித்தன. அரசாங்கமும் வடபகுதி மீதான போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் அர்த்தமற்றதாகிப் போய்விட்ட ஒரு உடன்படிக்கை தொடர்பில் ஏன் இந்த ஆரவாரம்? முற்றுமுழுதான போருக்கு சர்வதேச சமூகமும் அரசாங்கத்திற்கு பச்சைக் கொடி காட்டி விட்டதா?

thinakkural.com

0 Comments: