Friday, January 4, 2008

போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா ஏன் முறிக்கிறது?

-எரிமலை-

சிறிலங்கா அமைச்சரவையில் ஏகமனதாக எடுக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவது என்ற தீர்மானமானது சிறிலங்காவிற்கான நோர்வேத் தூதுவர் தூர காற்றமிற்கு இரவு 8.30 மணியளவில் அமைச்சரவையில் பங்குபற்றிய ஒருவரால் அறிவிக்கப்பட்டது. இச்செய்தியானது நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் பேச்சுவார்த்தைக்கான நோர்வே அனுசரணையாளர் குழுத்தலைவருமான எரிக் சொல்கெய்மிற்கு உடனடியாகவே அறிவிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்கள்; இந்த விடயத்தினை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன.

சிறிலங்கா அமைச்சரவை இன்று மாலை நடாத்திய கூட்டத்தில் போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்து விட்டதாகவும் இதனை உடன்படிக்கையின் சரத்துக்கு அமைய மற்றைய தரப்பிற்கு (விடுதலைப் புலிகளுக்கு) தெரிவிக்கவுள்ளதாகவும்| தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மைய இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்தார். இச்சரத்தின்படி இந்த முடிவானது போர் நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட மற்றைய தரப்பிற்கு அறிவிக்கப்பட்டு இரண்டு வாரகாலத்தில் இவ்வுடன்படிக்கை செயலற்றுப் போய்விடும்.

இந்த விடயத்தினை நோர்வேயின் சமாதானத்திற்கான விசேட தூதுவர் ஜோன் கான்சன் பௌயர் உத்தியோகபூர்வமாக விடுதலைப் புலிகளுக்கு புதன்கிழமை இரவு 10.00 மணிக்குத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நோர்வே வெளிவிவகார அமைச்சினால் எமது நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் ஊடக அறிக்கை ஒன்று விடப்பட்டிருந்தது. இதில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய விடயங்களாக,

'2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து சிறிலங்கா அரசானது விலகிக்கொள்வதாக அறிவித்தமை தொடர்பாக நோர்வே தனது கவலையினைத் தெரிவித்துக் கொள்கின்றது' என்ற தலைப்புடன் வெளிவந்துள்ள இந்த ஊடகக் குறிப்பிலே எரிக் சொல்கெய்ம் தெரிவித்த கருத்துக்களானது,

'சிறிலங்கா அரசாங்கம் இந்த பாரதூரமான முடிவினை எடுத்ததையிட்டு நான் மிகுந்த கவலையடைகின்றேன். இந்த முடிவானது இரண்டு தரப்பினராலும் தொடர்ச்சியாக மிகவும் கொடூரமான முறையில் வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்ற சூழ்நிலையில் எடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக வன்முறையும் பகைமையும் மேலும் தீவிரமாக அதிகரிக்கப்போகின்றது என்பதையிட்டு நான் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளேன். அத்துடன் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பது தொடர்பில் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்' என்று எரிக் தெரிவித்துள்ளார்.

'2000 ஆம் ஆண்டில் அப்போதைய சிறிலங்கா சனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவினாலும் விடுதலைப் புலிகளினாலும் உத்தியோகப+ர்வமாக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே நோர்வே சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராகச் செயற்படுவதற்குச் சம்மதித்தது. இந்த அழைப்பானது அண்மையில் 2006 ஒக்ரோபர் மாதம் சனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் புதுப்பிக்கப்பட்டது. ~தற்போது சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒரு தலைப்பட்சமாக மேற்கொள்ளப்பட்ட முடிவு காரணமாகச் சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவே நேரடியாக பாதிப்படையப்போகின்றது. ஏனெனில் இந்தக் கண்காணிப்புக் குழுவினது செயற்பாட்டிற்கான ஆணையானது இந்த உடன்படிக்கையில் இருந்தே பெறப்படுகின்றது.' என்று அந்த ஊடகக் குறிப்பிலே மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேத் தரப்பினர் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முடிவினால் மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளதுடன் இலங்கைத் தீவின் எதிர்காலச் சமாதான முயற்சிகள் மற்றும் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பது தொடர்பாகக் குழப்பமும் அடைந்துள்ளார்கள். வருகின்ற வாரத்திலே நோர்வே அனுசரணையாளர்கள் இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யப்பான் ஆகிய நாடுகளுடன் ஒரு செய்மதித் தொலைத்தொடர்பு மாநாடு நடாத்தவுள்ளார்கள். அதிலே இந்த விடயம் தொடர்பாகத் தீவிரமாக ஆராயவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் நோர்வேயின் விசேட தூதுவர் ஜோன் கான்சன் பௌயர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு இது தொடர்பாக கலந்துரையாடவுள்ளார். அத்துடன் கொழும்பில் உள்ள நோர்வேத் தூதுவர் பல்வேறு வெளிநாட்டுத் தூதுவர்களுடனும் இராஜதந்திரிகளுடனும் இலங்கைத்தீவின் எதிர்கால சமாதான முயற்சிகள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.

கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும், சனாதிபதி மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து விலகுவது தொடர்பாகவும் விடுதலைப் புலிகளைத் தடை செய்வது தொடர்பாகவும் பத்திரிகைகளுக்கு செவ்விகள் அளித்திருந்தார். எனவே நோர்வே எவ்வகையான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சிறிலங்கா அரசாங்கமானது போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகியதில் இருந்து பின்வாங்கமாட்டாது. அத்துடன் விடுதலைப் புலிகளைத் தடைசெய்வதே அதனது அடுத்த நடவடிக்கையாக இருக்கும். ஏனெனில் இப்போது மகிந்த அரசாங்கமானது தனது ஆட்சியைத் தக்கவைப்பதற்கு ஜே.வி.பி.யின் ஆதரவு அதற்குத் தேவைப்படுகின்றது. எனவே போரினைத் தீவிரப்படுத்துதல், நோர்வே அனுசரணையாளர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்றுதல், சர்வதேசத் தொண்டர் நிறுவனங்கள் மீது அழுத்தங்களைப் போடுதல் என்ற ஜே.வி.பி.யின் நிபந்தனைகளுக்கு மகிந்த அரசானது உடனடியாகவே செவிசாய்த்து அதனை மேற்கொள்வதற்கு பின்நிற்காது. அத்துடன் மகிந்த ராஜபக்சவிற்கும் இவை அனைத்தும் பிடித்தமான நடவடிக்கைகள்தான் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. எனவே ~எனது முதுகை நீ சொறி, நான் உனது முதுகை சொறிகிறேன்| நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில் நாம் அனைவரும் கண்டுகளிக்கலாம்.

புத்தாண்டு 2008

புத்தாண்டு 2008 தொடங்கியதில் இருந்து இப்பத்தி எழுதப்படும் வரை இலங்கைத் தீவில் இடம்பெறும் சம்பவங்கள் இந்த ஆண்டு எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதனைக் கட்டியங்கூறி நிற்கின்றன.

புத்தாண்டு தினத்தினைக் கொண்டாடுவதற்காக கொழும்பு கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்றவேளையில் காலை 9.55 மணிக்கு ஈ.பி.டி.பி துரோகக் கும்பலைச் சேர்ந்த ஒருவரால் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடந்த புதன்கிழமை சிறிலங்காப் படையினரை ஏற்றிச்சென்ற சொகுசு பேரூந்தானது கொழும்பு நகரிலே கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளானதில் இரண்டு படையினர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டும் 28 பேர் காயங்களுக்கும் உள்ளானார்கள்.

இது தவிர விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் மீது சிறிலங்கா விமானப்படையினர் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி பொதுமக்களுக்கு உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் ஏற்படுத்தி வருகின்றார்கள்.

வன்னியின் மேற்குப் பிராந்தியத்தில் மன்னார்-வவுனியா, வடபோரரங்கில் கிளாலி-முகமாலை-நாகர்கோவில் மற்றும் வன்னி கிழக்குப் பிராந்தியத்தில் மணலாறு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாகச் சமர்கள் இடம்பெற்று வருகின்றன.

சிறிலங்கா சனாதிபதியும் சிங்களப் படைத்தளபதிகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரானது மிகவிரைவில் முடிவிற்கு கொண்டுவரப்படும் என்று சிங்கள மக்களுக்கு பரப்புரை செய்தபடி போருக்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவழித்துக் கடுமையான இன அழிப்புப் போரினை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி மாத்தறையில் உரையாற்றிய சனாதிபதி மகிந்த விடுதலைப் புலிகள் மிக விரைவில் முற்றுமுழுதாக அழிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் சனாதிபதிகள் ஜோன் கென்னடி மற்றும் லின்டன் ஜோன்சன் ஆகியோர்கள் வியட்நாம் போரின் போதும், ரஷ்யர்கள் ஆப்கானிஸ்தானில் முகாஜீதீன்களுக்கு எதிராகப் போரிட்டபோதும் இவ்வாறே தெரிவித்தார்கள். ஆனால் இறுதியில் யார் வென்றார்கள் என்பதை வரலாறு தெளிவாகவே பதிந்து வைத்திருக்கின்றது. ஏன் 1997 இல் சிறிலங்காவின் அப்போதைய சனாதிபதியாக இருந்த சந்திரிகாவும் அவரது பாதுகாப்பு அமைச்சரும் மாமனாருமான ஜெனரல் அநுருத்த ரத்வத்தவும் யாழ். குடாநாட்டை கைப்பற்றிப் பின்னர் வன்னியிலே ஜெயசிக்குறு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த வேளையில் ரத்வத்த பீற்றிக்கொண்டதாவது, 1998 பெப்ரவரி மாதம் சிறிலங்காவின் 50 ஆவது ஆண்டு சுதந்திர விழாவினைக் கொண்டாடும்போது நான் வன்னியை முழுமையாகக் கைப்பற்றி தேசியத்தலைவருடன் கை குலுக்குவேன் என்று தெரிவித்திருந்தார். இப்போது மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் இவ்வாறு அலட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

வியட்நாம் போர் முடிவடைந்து பல வருடங்களின் பின்னர் போரிலே கொல்லப்பட்ட வீரர்களை நினைவுகூருவதற்காக அமெரிக்க மற்றும் வட வியட்நாம் தளபதிகள் ஒன்றாக நின்றிருந்த வேளை ஒரு அமெரிக்கப்படைத் தளபதி வியட்நாம் தளபதியைப் பார்;த்து ~நீங்கள் நடாத்திய எந்த ஒரு சமரிலுமே உங்களால் எங்களைத் தோற்கடிக்க முடியவில்லையே| என்று கூறியபோது அந்த வியட்நாமியத் தளபதி கூறியதாவது ~உண்மைதான். ஆனால் நாங்கள் ஒட்டுமொத்தமான வியட்நாமிய விடுதலைப் போரிலே வெற்றிபெற்று விட்டோமே. அதுதான் முக்கியம்.| என்று அமைதியாகத் தெரிவித்தார். இதனை மகிந்தவின் சகோதரர்களும் அவரது படைத்தளபதிகளும் புரிந்துகொள்வது நல்லது.

0 Comments: