Thursday, January 24, 2008

சந்திரிகா - ஜே.வி.பி எதிர்ப்பை புறந்தள்ளவா பிரபாகரன் மீதான தாக்குதல் நாடகம் ?

பிரபாகரனை தேடி குண்டு வீசுவதாகவும், அவரைப் பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்றும் மிகந்த அரசு தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக நேற்று நடைபெற்ற குண்டு வீச்சில் பிரபாகரன் குறிவைக்கப்பட்டதாகவும் அவர் தப்பிவிட்டதாகவும் பரபரப்பு செய்தி வெளியிட்டது. இது ஒரு அடிமட்டமான மலினமான செய்தி என்று இளந்திரையன் மறுத்திருந்தார். இவை குறித்த பலதரப்பட்ட கேள்விகள் இங்கு தரப்படுகின்றன.

01. பிரபாகரனை குறிவைப்பதாக பிரச்சாரம் செய்தால் சந்திரிகா, அனுரா, ஜே.வி.பி போன்ற எதிர்ப்பாளரை புறந்தள்ளி சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற துட்டகைமுனுவாக தான் ஆகலாம் என்பது மகிந்தவின் அரசியல் வியூகம். சிறீலங்கா அரசு இன்று கூட எல்லாளன் துட்டகைமுனு மனப்பான்மையிலேயே இருக்கிறது என்று பிரபாகரன் மாவீரர்நாள் உரையில் கூறியதை நாம் மறுக்க முடியாது.

02. எவ்வளவோ வல்லமை இருந்தும் சிறீலங்கா அரசு போல பிரபாகரன்; சவால் விடவில்லை. அவரும் சவால் விட்டால் இந்த விவகாரம் துட்டகைமுனு எல்லாளன் போர் போல மோசமான இடத்திற்குள் போய்விடும் என்பது அவருக்குத் தெரியும். அப்படி மகிந்தவா? நானா? என்று நேருக்கு நேர் சவால் விட்டு, மகிந்தவை சிங்கள இனத்தின் துட்டகைமுனுவாக தூக்கி வைக்கும் தவறை அவர் செய்யமாட்டார் என்பதே அவருடைய மௌனத்தின் பொருள். பிரபாகரனுடன் நேரடியாக மோதுவதாகக் காட்டி சந்திரிகா கூட்டத்தை பின் தள்ளி உள்ளுர் அரசியலில் முதன்மை பெற மகிந்த நினைப்பதை அவர் அறிவார்.

03. எந்தவொரு பிரச்சனையையும் புலிகளுடனோ அல்லது சிங்கள அடிப்படை வாதிகளிடமோ நேரடியாக சந்தித்து பேச இயலாத நிலையில் முற்றான கவனத் திசை திருப்பலுக்குள் நுழைந்திருக்கிறது அரசு என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

04. மாவீரர்நாளன்று பிரபாகரன் காயமடைந்தார் என்றும், இப்போது தாக்குதல் நடைபெற்றது என்றும் கூறி பரபரப்பு உண்டு பண்ணியுள்ளது சிங்கள அரசு. சிங்கள மக்களின் உளவியலுக்கும், களத்திற்குள் நுழைய மறுக்கும் இராணுவத்திற்கும், வெற்றிக்காக தவிக்கும் இனவாதிகளின் ஒடிந்த மனதுகளுக்கு ஒத்தடம் கொடுக்க இதைவிட்டால் அரசிடம் வேறு எதுவும் இல்லை.

05. இந்தத் தாக்குதல் பிரபாகரனை மிக மிக உயர்வாக மதிப்பது அவருடைய எதிரிகள்தான் என்பதைக் காட்டுகிறது. இவ்வளவு பிரச்சாரம் நடக்கிறது பிரபாகரன் என்ன செய்கிறார் ? இதுபற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை. இந்த நேரத்தில் மௌனம் காக்கும் மனவலிமை கொண்ட தலைவர்கள் எங்கும் இல்லை என்று எல்லோரும் பிரபாகரனை பெருமையுடன் நோக்க வழி செய்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஷ.

06. சிறீலங்காவில் முக்கியமான ஒருவரைக் கொல்வதன் மூலம் பரபரப்பு ஏற்படுத்தும், வெடி கொழுத்தி மகிழ்வதுமான அவல நிலைதான் நாட்டுக்கான ஜீவனுள்ள உளவியலாக மாறி வருகிறது. புத்தாண்டு பிறக்க மகேஸ்வரன் சுடப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது. இப்போது அடுத்த பரபரப்புக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பதினைந்து நாளைக்கு ஒரு மனிதக் கொலையின் பரபரப்பை மாந்த எண்ணுகின்றன சிங்கள ஊடகங்கள். அதிகாலை எழுந்தவுடன் யார் கொல்லப்பட்டார்கள் என்ற பரபரப்புக்காக ஏங்கும் வாழ்வுக்குள் மக்கள் போய்விட்டார்கள். வாழ்வின் வெற்றியை எண்ணி மகிழாது மரணங்களை பேசும் வெற்றுச் சூனிய நிலையை மக்களிடையே ஏற்படுத்துவது தவறான செயல். பிரிட்டன் பாராளுமன்றில் இலங்கைக்காக கண்ணீர் விடுகிறோம் என்று கூறப்பட்டது கவனிப்பிற்குரியது.

07. சிறீலங்காவின் போர்க்களங்களில் என்ன நடந்ததென்பதற்கு இன்று உறுதி செய்யப்பட்ட செய்திகள் கிடையாது. மகாவம்ச காலத்து கட்டுக்கதைகள் போல செய்திகள் வெளியாகின்றன. யாருடைய செய்திகளையும் நாம் கேட்பதில்லை என்று இலங்கையில் இருந்து வரும் ஐரோப்பா வரும் சாதாரண மக்களே கூறுகிறார்கள்.

08. பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்பேன் என்று மகிந்த கூறுகிறார். இதனால் இந்தியா மகிழ்ச்சியடையும் என்றும் நம்புகிறார். 1.40.000 இந்தியப் படைகளை இறக்கி பிடிக்க முடியாத பிரபாகரனை மகிந்த பிடிப்பார் என்றால் அது இந்தியாவைவிட மகிந்த திறமைசாலி என்று கூறுவதாகவே அமையும். இந்தியாவாலேயே பிடிக்க முடியாத பிரபாகரனை பிடித்தது நமது சிங்கள இராணுவம் என்று ஜே.வி.பி பேசினால் இந்தியா ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் என்று நினைப்பது பரிதாபமான எண்ணம். பிரபாகரனை ஒப்படைக்க முன் இந்தியாவிற்கு எதிராக போராடுங்கள் என்று புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய சிங்கள இராணுவத்தை ஒப்படைக்காமல் இருப்பது ஏன் என்று இந்தியாவின் மனதில் ஒரு கேள்வி எழாதா ?

09. இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக சொல்கிறீர்கள் செய்யவில்லை… பிரபாகரனைப் பிடிப்பதாக சொல்கிறீர்கள் பிடிக்கவில்லை.. முப்பது வருடங்களாக வெறுவாய் சப்புவதைவிட உருப்படியாக எதைச் செய்கிறீர்கள் என்பதே இந்தியாவின் மன ஆதங்கமாக இருக்கிறது. எதையாவது உருப்படியாக செய்தாலே சிறீலங்கா குடியரசு தினத்திற்கு வருவேன் என்று மன்மோகன் சிங் கூறியதன் பொருள் இதுதான்.

10. பிரபாகரனைப் பிடிப்பது, சுப. தமிழ்ச்செல்வனைக் கொல்வது, மகேஸ்வரனைக் கொல்வது, யோசப்பரராஜசிங்கத்தை கொல்வது எல்லாளன் துட்டகைமுனு வேடம் போடுவதல்ல பிரச்சனைகளின் தீர்வு. இவைகள் அனைத்தும் சுற்றியும் சுற்றியும் சுப்பரின் கொல்லைக்குள் ஓடும் வேலைகள் மட்டுமே.

11. இறப்பவரின் எண்ணிக்கையை குறைப்பதுதான் அபிவிருத்தி. நோர்வே, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் சிறீலங்காவிடமிருந்து கேட்பது இதைத்தான். வெற்றுக் கொலைப் பட்டியல்கள் அல்ல. சிறீலங்கா உலக அமைதிக்கு ஒத்துழைக்க வேண்டும். உள்நாட்டு போர்கள் நடந்தால் அவ்வழியால் சர்வதேசப் பயங்கரவாதம் ஊடுருவும் என்று பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுண் கூறியுள்ளார். இவைகளை உணர்ந்து அமைதியை ஏற்படுத்தா விட்டால் மாறிவரும் உலகம் சிறீலங்காவை தூக்கி வீசும் அபாயம் இருக்கிறது. புலிகளைக் காட்டி உலகை ஏமாற்றும் அரசியல் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. பிரபாகரன் எதிர் மகிந்த ! எல்லாளன் எதிர் துட்டகைமுனு ! என்று பேசியதையே பேசியபடி சுற்றிச் சுற்றி ஓட சுப்பரின் கொல்லையல்ல சிறீலங்கா

alaikal.com

0 Comments: