Wednesday, January 9, 2008

புறக் குடத்தில் ஊற்றிய நீராகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யோசனை

விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கும் இலங்கை அரசின் ஒருதலைப்பட்சத் தீர்மானம் சர்வதேச மட்டத்தில் எதிர்பார்த்ததை விடக் கடுமையான கண்டனத்துக்கும், அதிருப்திக்கும், விசனத்துக்கும் உள்ளாகியிருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷ அரசின் போரியல் தீவிரப் போக்குக்கு முண்டு கொடுத்து உதவும் பாகிஸ்தான், சீனா, ஈரான் போன்ற நாடுகள் மௌனம் சாதிக்க, பெரும்பாலும் ஏனைய சர்வதேச உலகம் முழுவதும், இலங்கை அரசின் தீர்மானத்தைக் குறை கூறியிருக்கின்றன.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறைபாடுகளைக் கவனிக்காமல் அதற்குத் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவோம் என இலங்கைக்கு அதிகளவில் உதவிகளை வழங்கும் ஜப்பான் முன்னர் கூறியிருந்தது. அந்த நாடு கூட இப்போது யுத்த நிறுத்த உடன்பாட்டை முறித்துக் கொள்ளும் இலங்கை அரசின் தீர்மானத்தை ஆட்சேபித்திருக்கின்றது.
தவிரவும் ஐ.நா., அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகியவையும் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றன.

மேலும், இலங்கையில் இதுவரை காலமும் யுத்த நிறுத்தப் பணிகளைக் கண்காணித்த நோர்ட்டிக் நாடுகள் சார்பில், ஸ்கண்டிநேவியன் குழுமத்தில் அங்கம் வகிக்கும் டென்மார்க்,சுவீடன், நோர்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் கூட்டுச் சேர்ந்து இலங்கையின் முடிவை விமர்சித்திருக்கின்றார்கள்.
இதைவிடவும், இருபத்தியைந்துக்கும் அதிகமான ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் இப்போது இலங்கை அரசின் விவேகமற்ற தீர்மானம் குறித்து ஆழ்ந்த கவலையும், கடும் அதிருப்தியும் வெளியிட்டிருக்கின்றது.

இவற்றை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இலங்கை அரசின் இந்தக் குறுகிய நோக்குக்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக உலகளாவிய ரீதியில் கருத்து நிலைப்பாடு உருவாகி வருவதை உணர முடியும்.

ஆனால், போர்த்தீவிரத்தில் துடிக்கும் மஹிந்தவின் அரசுக்கு இந்த சர்வதேசக் கருத்தியல் நிலைப்பாடு குறித்துக் கவலை ஏதும் இல்லை என்பதுதான் விசனத்துக்கும் வேதனைக்குமுரிய விடயமாகும்.

இலங்கையில் மனித நேய, மனித உரிமை விவகாரங்கள் உட்பட்ட நாட்டின் நிலைவரம் ஏற்கனவே மோசமடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசின் தற்போதைய இராணுவத் தீவிரத்தினால் நிலைமை இன்னும் மிகமிக மோசமாகப் போகின்றது என அச்சம் வெளியிட்டிருக்கின்றது.
யுத்த நிறுத்த உடன்பாடு இல்லாமல் போனதால், இப்பிணக்குக்கு பேச்சு மூலமான நிரந்தர அமைதித் தீர்வுக்கான வாய்ப்பு குறுகி, விலகிப் போயுள்ளது என்றும் அது தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

இந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டு, நிலைமையை முன்னேற்றமடையச் செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை ஒன்றை எடுக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழிகாட்டி, ஆலோசனை கூறியிருக்கின்றது. ஆனால் அந்த உபதேசம் யுத்தச் சூட்டில் கொதித்து நிற்கும் கொழும்பு அரசின் காதுகளில் ஏறுமா என்பதே கேள்வி.

"போரியல் தீவிரப் போக்கைக் கைவிட்டு இயன்ற விரைவில் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும். அப்படிப் பேச்சுகளை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க அடித்தளத்தை இடுவதாயின், பேச்சுக்கு வழிசெய்யும் அதிகாரப் பகிர்வுத்திட்டம் ஒன்றை இலங்கை அரசு விரைந்து முன்வைக்க வேண்டும். முன்னர் பிரேரிக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களை விட மேம்பட்டதான குறிப்பிடத்தக்களவு அதிகாரப் பகிர்வுடன் கூடியதான தீர்வுத்திட்டம் முன்னெடுக்கப்படுவது மிக அவசியம்.' என்ற சாரப்பட ஐரோப்பிய ஒன்றியத் தலைமை வலியுறுத்தியிருக்கின்றது.
இந்த ஆலோசனையில் இரண்டு விடயங்கள் கவனிக்கத் தக்கவை.
ஒன்று முன்னர் பிரேரிக்கப்பட்டவற்றை விட மேம்பட்டதான அதிகாரப் பகிர்வுத் திட்டம் அவசியம்.

அடுத்தது இயன்ற விரைவில் அது முன்வைக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த இரண்டையுமே கொழும்பு அரசு கவனிக்காது, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசனையைக் காதில் வாங்கிக் கொள்ளாது என்பதை உறுதியாகக் கூறலாம்.
ஏற்கனவே முன்மொழியப்பட்ட சமஷ்டி, வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபைத் தீர்வு போன்றவற்றையெல்லாம் நிராகரித்து, "கழுதை தேய்ந்தால் குட்டிச்சுவர்' என்பது போல மாவட்ட சபைகளுக்கும், கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் அதிகாரத்தைப் பகிர்வது குறித்து மஹிந்தரின் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அரற்றிக் கொண்டிருக்கின்றது.

கிளிநொச்சியைக் கைப்பற்றினால் மாவட்ட சபைக்குப் பதிலாக நகரசபைக்கும், அதையும் தாண்டி முல்லைத்தீவையும் பிடித்தால் நகரசபைக்குப் பதிலாக கிராமசபைக்கும் அதிகாரத்தைப் பகிர்வது பற்றி ஆலோசிக்கலாம் என்ற மேலாண்மைச் சிந்தனைப் போக்கிலேயே மஹிந்தரின் அரசு மூழ்கிக் கிடக்கின்றது.

அதேசமயம், அதிகாரப் பகிர்வுக்கான தமது திட்டத்தை இதோ வெளியிடுகிறோம், அதோ வெளியிடுகிறோம் என்று கூறிக் கூறியே கடந்த இரண்டு வருட காலத்தை இழுத்தடித்துவிட்ட இந்த அரசு, எந்தத் திட்டத்தையும் விரைவில் அறிவிக்கும் என்று நம்புவதற்கும் இடமேயில்லை என்பதும் யதார்த்தம்.

ஆகவே முன்பு முன்வைக்கப்பட்டவற்றை விட மேம்பட்ட அதிகாரப் பகிர்வுத் தீர்வை, விரைந்து வெளியிடுமாறு இலங்கை அரசுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ள ஆலோசனை புறக்குடத்து நீராக வீணாகும், கொழும்பினால் அந்த வழிகாட்டல் உதாசீனப்படுத்தப்படும் என்பதை உறுதியாகக் கூறலாம்.


Uthayan.com

0 Comments: