Friday, January 11, 2008

வரலாற்றை மறந்து செல்லும் மகிந்த

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டதன் மூலம் மேற்குலக நாடுகளின் தலையீடு நீக்கப்பட்டதாக ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது.

மேற்குலக நாடுகளின் சூழ்ச்சி காரணமாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட இருந்த ஆபத்து நீங்கியுள்ளதாகவும் அது கூறுகின்றது.

அத்துடன் இந்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கத்தை விலகவைத்த பெருமையையும் அது தனதாக்கிக் கொண்டுள்ளது.

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் எப்பொழுதோ விலகிக்கொண்டு விட்டது என்பதே உண்மையாகும். ஆனால் இவ்வளவு காலமும் அது ஒப்பந்தத்திலிருந்து விலகி அல்லது ஒப்பந்தத்தை மீறி மேற்கொண்ட நடவடிக்கைகள் போர்நிறுத்த மீறல் என்ற அடிப்படையிலேயே பார்க்கப்படும்.

இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமான மேற்கு நாடுகளின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்டாலும் இவ்வாறான ஒரு ஒப்பந்தத்திற்கு விடுதலைப் புலிகளுடன் வரவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள ஆட்சியாளருக்கு அன்று இருந்தது என்பது மறுக்க முடியாது.

ஆறு வருடகாலமாக பாரிய இராணுவ நடவடிக்கைகள் பலவற்றை எடுத்து பெருமளவு நிதியையும் வளங்களையும் இதற்காகப் பயன்படுத்தியும் யுத்தத்தில் வெற்றி பெறமுடியாத நிலையில் சந்திரிகா அரசாங்கம் இருந்தது.

நீண்ட பாரிய நடவடிக்கையான ஜெயசிக்குறு நடவடிக்கையைக் கைவிட்டு, எவ்வாறாயினும் வன்னிப் பிரதேசத்தை ஊடறுத்து யாழ். குடாநாட்டுக்குத் தரைப்பாதையொன்று அமைக்கும் முயற்சியில் சந்திரிகா அரசாங்கம் தோல்வி கண்டது.

அதுமட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் - 03 நடவடிக்கைக்கு ஈடுகொடுக்க முடியாத சிங்களப்படைகள் ஆக்கிரமித்த பகுதிகளைக் கைவிட்டு ஓடுவது மட்டுமல்லாது ஆனையிறவையும் கைவிட்டு முகமாலை வரை ஓடியது.

புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்தநிறுத்த அறிவித்தலை அவர்களின் பலவீனமாக எடுத்துக் கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள் ஆனையிறவைக் கைப்பற்றும் கனவுடன் மேற்கொண்ட அக்கினிச் சுவாலை முகமாலையிலேயே முறியடிக்கப்பட்டு பாரிய இழப்பைச் சந்தித்தது.

அது மட்டுமல்லாது சிறிலங்காவிற்கான அனைத்துலக முக்கிய நுழைவாயிலாகிய கட்டுநாயக்க விமானத்தளத்தில் பாரிய இழப்பைச் சந்தித்து திகைத்து நின்றது.

இந்நிலையிலேயே நோர்வேயிடம் சரணடைந்தார் சந்திரிகா அம்மையார். அத்துடன் சமாதானம் பற்றிப்பேசிய ரணில் விக்கிரமசிங்கவை சிங்கள மக்கள் ஆட்சியிலும் ஏற்றினார்.

இந்த ஒப்பந்தத்தில் மேற்குலக அனுசரணையுடன் ரணில் கையொப்பமிட்டாலும் இதனை அடிப்படையாகக்கொண்டு தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கும் எண்ணத்தை அவர் கொண்டிருக்கவில்லை.

அனைத்துலகை ஏமாற்றி விடுதலைப் புலிகளைச் சமாதானத்துக்கு விரோதமானவர்களாகக் காட்டி புலிகளுக்கு எதிராக சர்வதேசத்தின் உதவியைப் பெற்று தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்து விடுவதே அவரது நோக்கமாக இருந்தது.

இந்தச் சதுரங்க விளையாட்டில் அவர் பதவியைப் பறி கொடுத்தது மட்டுமல்ல, சிறிலங்காவின் சனாதிபதிப் பதவியையும் அவரால் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

இதன் பின்னர் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையையே ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தார். அதாவது இந்த ஒப்பந்தம் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான வலுச்சமநிலையின் அடிப்படையில் இருதரப்பையும் சமதரப்பாக ஏற்றுக்கொண்டது. இதனை அவர் நிராகரித்தார்.

இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டபோது அவரது கட்சியின் தலைவியாகிய சந்திரிகா அம்மையார் உயர்பதவியாகிய சனாதிபதிப் பதவியிலிருந்து கொண்டு அமைச்சரவைக்கு தலைமை வகித்துக் கொண்டிருந்ததன் மூலம் அதனை ஏற்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது மகிந்த ஒப்பந்தத்தைப் படிப்படியாகச் சிதைத்து அதனைச் செயலிழக்கச்செய்து அதனை இப்போது கைவிட்டு வெளியேறியிருக்கின்றார்.

அனைத்துலகம் அல்லது மேற்குலகத்தைப் பொறுத்த வரை பெயரளவிலேனும் இந்த ஒப்பந்தம் நீடித்துச்செல்ல வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. ஆனால் இந்த விருப்பத்திற்கு மாறாகத் தொடர்ச்சியாகச் செயற்பட்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வந்த மகிந்த இப்போது அதிலிருந்து விலகி விடுவது என்ற நிலைக்கு வந்திருக்கின்றார்.

இதற்கு மேற்குலகம் கவலை தெரிவிப்பதற்கும் மேலாக என்ன செய்யப்போகின்றது என்பதே இன்றைய கேள்வியாகும்.

இது ஒருபுறமிருக்க மகிந்த அரசாங்கம் இதன் மூலம் எதனைச் சாதித்துவிட முடியும் என எதிர்பார்க்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக அது எடுத்த எந்த இராணுவ நடவடிக்கையையும் எதிர்கொண்டவர்கள் விடுதலைப் புலிகளே தவிர போர் நிறுத்த ஒப்பந்தத்தால் இவற்றில் ஒன்றைக்கூட தடுத்து நிறுத்திவிட முடியவில்லை. அவ்வளவு தூரம் செயலிழந்துபோன ஒன்றை வெளிப்படையாகவே கைவிட்டு விட்டதன் மூலம் ஜே.வி.பி. பெருமைப்பட்டுக்கொள்ள மேலும் ஒரு விடயத்தை மகிந்த உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்றே கூறலாம்.

இப்பொழுது தொடர்ச்சியாகப் புலிகளைத் தடைசெய்தல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாதிருத்தல் என அடுக்கடுக்காக ஜே.வி.பி. முன்வைத்திருக்கின்ற கோரிக்கைகளை மகிந்த அரசு ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளது.

ஆனால் ஜே.வி.பி. தனது தேசப்பற்றுக்குக் கிடைத்த வெற்றியாக இதனைப் பரப்புரை செய்யுமே தவிர மகிந்த ஆட்சி மக்களுக்கு நன்மைகளைச் செய்வதாக அது கூறப்போவதில்லை.

மகிந்த அரசு இந்த விடயத்தில் மேற்கொள்கின்ற கண்மூடித்தனமான செயற்பாடுகளின் விளைவுகளையும் ஜே.வி.பி. ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அவற்றையெல்லாம் மகிந்தவே ஏற்றுக் கொள்ளவேண்டியவராவர்?.

-வேலவன்-

0 Comments: