Friday, January 4, 2008

இனப் பாகுபாட்டுக் கொடூரம் இன்னும் தீவிரமாகும் சூழல்

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி கைச்சாத்தான யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு சட்ட ரீதியான சாவு உறுதியாகிவிட்டது. இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது பற்றிய இலங்கை அரசின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு அறிவிக்கப்பட்டதும், பதினான்கு நாட்களில் நடைமுறைக்கு வரக்கூடியதாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கான மரணச்சான்றிதழ் எழுதப்பட்டுவிடும்.
இலங்கை அரசின் இந்த முடிவின் காரணமாக, இதுவரை செத்துச் செயலிழந்து, சேடம் இழுத்துக்கொண்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிராணன் நிரந்தரமாக வெளியேறப் போகிறது. அதுமட்டுமல்ல.

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் தனது ஐந்தரை வருடப் பணியை முடித்துக்கொண்டு மூடை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வெளியேற வேண்டியதுதான்.
இதுவரை அனுசரணைப் பணியாற்றிய நோர்வேக்கும் இனி அந்த வேலை நிலுவையில் நிற்கப் போவதில்லை. அதுவும் முடிந்தமாதிரித்தான்.

இந்த அனுசரணைப்பணிக்கு 2000 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் நோர்வே உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டது.

2005 நவம்பரில் அவரின் அதிகார காலம் முடிவுற்றது. நோர்வேயையும் அதன் அனுசரணைப் பணியையும் கடுமையாக விமர்சித்துத் தூற்றிவந்த பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளின் பின்புல ஆதரவோடு மஹிந்த ராஜபக்ஷ அரசுத் தலைவரானார். அவரை ஆட்சிப் பீடத்துக்கு முன்தள்ளிக் கொண்டு வந்த பேரினவாத சக்திகள் நோர்வேயின் பங்களிப்பை கடுமையாக எதிர்த்து வந்ததால் நோர்வேயின் அனுசரணைப்பணி மீண்டும் இடம்பெறுவதற்கு வாய்ப்பேயில்லை என அப்போது கருதப்பட்டது.

ஆனால் புதிய அரசுத் தலைவர் மஹிந்தவும் 2006 ஜனவரியில் நோர்வேயை அனுசரணைப் பணிக்கு மீண்டும் அழைத்ததால் நோர்வே மீண்டும் தனது நகர்வுகளை முன்னெடுத்தது.
எனினும், அது கூட நீண்ட காலம் நீடிக்கவில்லை.
மஹிந்தரின் புதிய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஜெனிவாவில் இடம்பெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுகள் 2006 ஒக்டோபரில் முன்னேற்றமின்றி, முட்டுக்கட்டையில் முடிவடைந்ததை அடுத்து, நோர்வேயும் தன்பாட்டில் தனது அனுசரணைப் பணியை இடைநிறுத்த வேண்டியதாயிற்று.

பிணக்கில் சம்பந்தப்பட்டுள்ள இரு தரப்பினரான இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மீண்டும் கேட்டாலன்றி புதிய அமைதி எத்தனங்கள் எதிலும் ஈடுபடுவதில்லை என நோர்வே அப்போதே தீர்மானித்து அறிவித்திருந்தது.

மீண்டும் அத்தகைய அழைப்பு ஏதும் வராத நிலையிலேயே, இப்போது யுத்த நிறுத்த ஒப்பந்தமே முடிவுக்குக் கொண்டுவரப்படுவதால், இனி அனுசரணைப் பணிக்கு வாய்ப்போ தேவையோ இல்லை என்றாகி விட்டது.

கடந்த வரவு செலவுத் திட்ட சமயத்தில் ஆட்சி கவிழும் ஆபத்தை எதிர் நோக்கிய மஹிந்த அரசு, கடைசி நேரத்தில் பௌத்த சிங்களத் தீவிரப் போக்கும் பேரினவாதத் திமிரும் கொண்ட ஜே.வி.பியின் காலில் விழுந்து, அதைத் தாஜா செய்து, அக்கட்சியின் தயவில் கடைக்கண் பார்வையில் தப்பிப்பிழைக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது. ஜே.வி.பியிடம் அந்த உதவியைப் பெறுவதற்காக அரசுத் தலைமை சில வாக்குறுதிகளை அதற்கு வழங்கியது என்றும், அவற்றைப் புத்தாண்டில் நடைமுறைப்படுத்த அரசு ஜே.வி.பிக்கு உறுதி தந்தது என்றும் இப்பத்தியில் ஏற்கனவே விளக்கமாக விவரமாக குறிப்பிட்டிருந்தோம்.

அத்திட்டப்படியே எல்லாம் நடக்கின்றன; விடயங்கள் கட்டவிழ்கின்றன.
அந்த வாக்குறுதிப்படி புத்தாண்டு பிறந்ததும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது பற்றிய அறிவிப்பை இலங்கை அரசு விடுத்திருக்கின்றது.

இரண்டு வார முன்னறிவித்தல் காலம் கடந்ததும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக செத்ததும் ஏற்கனவே ஜே.வி.பிக்குத்தான் கொடுத்த மற்றொரு வாக்குறுதிப்படி, புலிகள் இயக்கம் மீது இலங்கையிலும் தடை விதிக்கும் அறிவிப்பை அரசு விடுக்கும்.
அதன் பின்னர் அடுத்த வாக்குறுதிப்படி இலங்கை நாட்டின் இறைமையைப் பேணும் விதத்தில் காத்திரமான நடவடிக்கை எடுத்தல் என்ற பெயரில் தமிழர் தேசம் மீது முழு அளவில் ஒரு கோர யுத்தத்தை அது கட்டவிழ்த்துவிடும்.

இவை எதிர்பார்க்கப்பட்ட விடயங்களே.

ஆனாலும் மஹிந்த அரசின் இந்த உத்தேச நிகழ்ச்சி நிரல் யுத்தத் தீவிரப் போக்குச் செயற்பாடு இதுவரை அரசுக்கு வெளியே நின்று அரசுத் தலைமைக்கு அவ்வப்போது தொல்லை மற்றும் தொந்தரவு கொடுத்து வந்த ஜே.வி.பியை மீண்டும் அரசுத் தரப்புக் கூட்டணிக்குள் கூட்டி வந்து சேர்ப்பதற்கு வழி செய்தாலும் செய்யலாம் என்பதே நிலை.
ஆகவே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் இந்தத் தீர்மானம், பௌத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனையில் மூழ்கிக் கிடக்கும் தீவிரவாதிகளை அவரின் பின்னால் மீண்டும் ஐக்கியப்பட்டு அணி திரளச் செய்யப் போகின்றது.

இதன் விளைவு, சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான இனப்பாகுபாட்டுக் கொடூரம் இலங்கைத் தீவில் இன்னும் தீவிரம் பெறவே வழிசெய்யும் என்பது நிச்சயம்.

Uthayan.com

0 Comments: