Thursday, January 24, 2008

காலாவதியான காகிதத் திட்டத்துக்கு உயிர் கொடுத்து உசுப்பேற்றும் முயற்சி

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களையும் ஏனைய சில கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் மாலையில் தமது அலரி மாளிகை இல்லத்துக்கு அழைத்துப் பேச்சு நடத்தினார்.

அதிகாரப் பகிர்வுக்கான முன்னேற்பாடாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டவற்றைத் தாம் நடைமுறைப்படுத்த விழைகின்றார் என்ற தகவலை ஜனாதிபதி அங்கு கூடியிருந்த கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1988 இல் இந்திய அமைதிப்படைகளின் பிரசன்ன காலத்தில் கொண்டுவரப்பட்டதே அரசமைப்பின் இந்த 13 ஆவது திருத்தம்.
அதை அப்போது முழு அளவில் எதிர்த்த மஹிந்தர் அணியே இப்போது அதைத் தூசு தட்டித் தூக்கி எடுத்துத் தூர் வாருகின்றது.

அவ்விவகாரத்தை ஒட்டி நேற்று முன்தினம் மாலையில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமே ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினாராம் ஆனந்தசங்கரியார்.
""இருபது வருடங்களுக்கு முன்னர் நோயாளிக்கு "அல்ஸர்' (குடல்புண்) நோய்க்குக் கொடுத்த மருந்தை, இப்போது அதே நோயாளி "கான்ஸர்' (புற்றுநோய்) அடைந்திருக்கும் சமயத்தில் அதற்கும் கொடுக்க முனைகின்றீர்களே.....! இது நியாயமா?'' என்று ஜனாதிபதியிடமே நேரில் கேட்டார் சங்கரியார். ஜனாதிபதியும் ஏதோ கூறி, சங்கரியாரைச் சமாளித்தார் என்று தகவல்.
ஆனந்தசங்கரி கூறியவை கனகச்சிதமாகச் சரியானவைதான். ஆனால் இருபது வருடத்துக்கு முன்னர் வேறு ஒரு வருத்தத்துக்கு கொடுத்த அதே மருந்தை இப்போது மோசமான, பிற நோயால் பீடிக்கப்பட்டு நோய் முற்றியிருக்கும் அதே நோயாளிக்குக் கொடுக்க முயலும் இந்த "டாக்டர்' அதன் மூலம் பெருத்த தவறு இழைக்கின்றார் என்பதை உணர்ந்திருந்தும், அந்த "டாக்டரின்' பக்கமே தொடர்ந்தும் தொங்கிக் கொண்டிருக்கும் சங்கரி போன்ற தமிழரை என்ன செய்வது என்பதுதான் புரியவில்லை.

முரண்பாடுகளின் மொத்த வடிவம்தான் தென்னிலங்கையின் அரசியல் முறைமை என்றால் அதில் தப்பில்லை என்பதை தென்னிலங்கை அரசியல் தலைமைகள் தொடர்ந்து அச் சொட்டாக நிரூபித்து வருகின்றன.

இருபது வருடங்களுக்கு முன்னர் ஒற்றைக்காலில் நின்று தாம் எதிர்த்த அதே அம்சங்களை, இப்போது நல்ல விடயங்கள் என்று புகழ்கின்றார் இலங்கை ஜனாதிபதி. இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண அந்த அடிப்படையே சிறந்தது எனப் புகழாரம் சூட்டவும் அவர் தவறவில்லை.
முன்னைய ஐ.தே.கட்சி அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் தமிழர் தரப்புடன் புலிகளுடன் பேச்சு நடத்திய போது, அதுவரை போரினாலும் இயற்கைப் பேரழிவுகளினாலும் பாதிக்கப்பட்டு, அவலப்படும் ஈழத் தமிழர்களின் கஷ்டங்களை இன்னல்களை உடனடியாகக் களைவதற்கும் அவர்களது அவசர அவசிய மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் இடைக்கால நடவடிக்கைத்திட்டம் ஒன்றைச் செயற்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அத்தகைய இடைக்கால ஏற்பாடு குறித்து ஏதும் பேசக்கூடாது என்றும்
இறுதித் தீர்வு பற்றியதாகவே இரு தரப்புப் பேச்சுகள் அமைய வேண்டும் என்றும்
புலிகளுடன் அமைதிப் பேச்சில் ஈடுபட்ட அந்த அரசின் மீது கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.
இன்று ஜனாதிபதியாக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே அன்று அப்படி ஒற்றைக்காலில் நின்று அடம்பிடித்தது.

இடைக்கால ஏற்பாடுகள் குறித்துப் புலிகளுடன் பேச இணங்கியமையைக் காரணம் காட்டியே, அப்போது புலிகளுடன் அமைதிப் பேச்சில் ஈடுபட்டிருந்த ரணிலின் அரசின் மூன்று முக்கிய அமைச்சு அதிகாரங்களை மஹிந்தரின் இன்றைய ஆசனத்தில் அன்று அமர்ந்திருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிடுங்கினார். அன்று அதை மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது அணியில் இன்று இருப்போர் எல்லோரும் நியாயப்படுத்தினர்.

இப்போது அதே மஹிந்தர் "இடைக்கால ஏற்பாடு' என்ற பெயரோடு, ஊரிப்போன 13 ஆவது திருத்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறார் அதுவும் அதன் கீழ் பகிர்ந்தளிக்க உறுதிப்படுத்தப்பட்ட பல அதிகாரங்களை வெட்டிக் குறைக்கும் கபடத் திட்டத்துடன்.
இராணுவத் தீர்வு முயற்சியைக் கைவிட்டு நம்பகத் தன்மையுடைய விசாலமான அதிகாரப் பகிர்வுக்கு இலங்கை அரசு முன்வரவேண்டும் என இந்திய பிரிட்டிஷ் பிரதமர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ள பின்னணியில் சர்வதேச சமூகத்தின் காதில் பூச்சுற்றுவதற்காக பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் என்ற நாடகத்தை இப்போது அரங்கேற்றுகின்றார் மஹிந்தர்.
இருபது வருடங்களுக்கு முன்பே பயனின்றித் தோற்றுப்போய், காலாவதியான காகிதத் திட்டத்துக்கு இப்போது உயிரூட்டி, உலவவிட்டு, அதிசயம் படைக்கப் போகின்றவராக அவர் தம்மைக் காட்டுகின்றார்.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் சிறுபான்மையினரையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் தென்னிலங்கை அரசியல் தந்திரோபாயத்தின் நரித் தந்திரத்தின் மற்றொரு அங்கம் இப்போது அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பெயரால் கட்டவிழ்கிறது. அவ்வளவே.

Uthayan.com

0 Comments: