Friday, January 11, 2008

மாகாணசபை எனும் மாயமான்!

"மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக' முடிந்திருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடு.

சுமார் ஒன்றரை வருடத்துக்கும் மேலாக ஐம்பதுக்கும் அதிக அமர்வுகளை நடத்திய பின்னர் "பழைய குருடி கதவைத் திறவடி' என்பது போல "பழைய கள்ளை புதிய மொத்தையில்' ஊற்றி எடுத்து வந்திருக்கிறது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு.
தாம் ஆட்சிக்கு வந்தால் தென்னிலங்கைத் தரப்புகளுடன் முதலில் கலந்தாலோசனை மற்றும் பேச்சுகள் நடத்தி, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்கப்பாட்டை மூன்று மாதங்களுக்குள் உருவாக்குவார் என்றும்
அந்த இணக்கப்பாட்டுடன் தமிழர் தரப்போடு பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண்பார் என்றும்
இலங்கைத் தீவின் மக்களுக்கு தேர்தல் காலத்தில், தமது தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக வாக்குறுதி அளித்தே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவிக்கு வந்தார்.
மூன்று மாதங்கள் என்ற கணக்கு இரண்டு வருடங்களையும் தாண்டிய நிலையில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு முடிவுற்ற நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சிபார்சு செய்யும் அறிக்கை இதோ வரப்போகின்றது எனக் கட்டியங்கள் கூறப்படுகின்றன.
இந்தா வருகிறது, அந்தா வருகிறது என இழுத்தடிக்கப்பட்ட இந்த சிபாரிசுத் திட்டம் இம்மாத இறுதிக்குள் எப்படியும் வரும் என்று இப்போது கொழும்பில் உறுதியாகக் கூறப்படுகின்றது. அதை நம்புவோமாக!
சரி. "லேட்' ஆக (காலம் பிந்தி) வந்தாலும் "லேட்டஸ்ட்' ஆக (நவீனமாக) வந்தால் நல்லது என்று எதிர்பார்த்தால் கடைசியில் அந்த சிபாரிசும் "லேட்' ஆனதாக (காலஞ்சென்றதாக) வருவதுதான் விசனம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் 1987 நவம்பரில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை முழு அளவில் நடைமுறைப்படுத்தக் கோரும் சிபார்சைத்தான் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இப்போது தனது முடிவாக முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி அதை வழிப்படுத்தியிருக்கின்றார் என்றும், அந்த வழிகாட்டலை சிரம்மேல் ஏற்று அதையே தனது முடிவாக முன்வைக்க அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சம்மதித்து விட்டது என்றும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

அது உண்மையென்றால், சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டு, பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆழக் குழி வெட்டி நீளப் புதைக்கப்பட்ட செத்துப்போன திட்டத்தை மீண்டும் தோண்டி எடுத்துக்கொண்டு வருகின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்பதுதான் அர்த்தம்.

இத்தகைய திட்டம் கொண்டு வரப்பட்டால் மீள நடைமுறைப்படுத்தப்பட்டால் அதன் பெயரில் அதிகாரத்தையும், பதவி சுகத்தையும் அனுபவிக்கலாம் என்று கனவு காணும் சில தமிழர் தரப்புகள் இந்த யோசனைத் திட்டத்தில் சவாரிவிடும் எண்ணத்தில் சந்தோஷ மிதப்பில் திளைப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இதே திட்டம் முன்னர் கொண்டு வரப்பட்டபோது, அதற்காக உயிரும், உதிரமும் கொடுத்து, இதனை "மலை என நம்பி' ஆழமறியாமல் காலை விட்ட தமிழர் தரப்புகள், கடைசியில் இது உப்புச் சப்பற்ற வெறும் மாயாஜாலம் கானல் நீர் என்பதைப் பட்டறிந்து வேறு வழியின்றி தம்பாட்டில் ஒருதலைப்பட்சமாக "தமிழீழப் பிரகடனம்' செய்து விட்டு நாட்டை விட்டு ஓடும் நிலைக்கும் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்யும் அவலத்துக்கும் தள்ளப்பட்டன என்பது கடந்த கால வரலாறு.

மாகாணசபை என்ற மாய மானை நம்பி களத்தில் இறங்கிய காரணத்தால் இன்னமும் அரசியல் அந்தகாரத்தில் இருந்து மீள முடியாத அவலத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழர் தரப்புகளை முன்அனுபவப் பாடமாகக் கொள்வதே நல்லது.

சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியத் துருப்புகள் இலங்கையில் நிலைகொண்டிருக்க, இந்தியத் தரப்பின் வலிமையான பின்புற ஆதரவுடன், பதின்மூன்றாவது அரசமைப்புத் திருத்த ஏற்பாடுகளில் உள்ள அதிகாரப் பரவலாக்கலை தென்னிலங்கைச் சிங்களத்தைக் கொண்டு நடைமுறைப் படுத்த முடியாமல் போன வரலாற்றுப் பாடம் இருக்கத்தக்கதாக, அந்த மாகாணசபை என்ற ஏட்டுச் சுரைக்காயை நம்பி, சில தரப்பினர் தமிழர் பிரதிநிதிகள் என்று தங்களைக் கூறிக்கொண்டு, அந்த க் கானல் நீரைத் தேடிப் போகிறார்கள். இதே மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கி அதிவேக அரசியல் நீரோட்டத்தில் அள்ளுண்டு போன முதல்வர்களின் அனுபவம்தான் இவர்களுக்கும் நேரப்போகின் றது என்பது நிச்சயம்.
அதுவும் தமிழர் தேசம் மீது கொடூரப் போரைத் தொடுப்பதற்கு சந்நதம் கொண்டு நிற்கும் தென்னிலங்கை அரசு, அதேசமயம், இருபது வருடங்களாக சட்டப்புத்தகத்தில் இருக்கத்தக்கதாகத் தான் நடைமுறைப்படுத்த மறுத்த இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்புப் பிரசன்னத்துடன் கூடிய அழுத்தத்தின்போது கூட செய்யாமல் அடம்பிடித்த அதிகாரப் பகிர்வை இப்போது விட்டுக்கொடுப்புத் தாராளத்துடன் வழங்க முன்வரும் என்று கனவு காண்பது அபத்தமன்றி வேறில்லை.

சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகின்ற காலத்தை இழுத்தடிக்கின்ற கொழும்பு அரசின் நாடகத்தில் இது மற்றோர் அங்கம். அவ்வளவே. சில தமிழர் தரப்புகள் இதற்குத் துணை போகின்றமை வழமையான "கோடரிக் காம்பு' வேலைதான்.


Uthayan.com

0 Comments: