Saturday, January 19, 2008

இலங்கை நிலைமை தொடர்பான சர்வதேச எண்ணப்போக்கு என்ன?

மொனறாகலை மாவட்டம், புத்தள பகுதியில் அப்பாவிப் பொதுமக்கள் பயணம் செய்த பஸ் மீது கடந்த புதனன்று காலை நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைக் கண்டித்து நேற்று நாம் வரைந்த ஆசிரிய தலையங்கத்தின் மை காய்வதற்குள்ளாகவே, அப் பகுதியை ஒட்டிய காட்டுப் பிரதேசத்துக்குள் இருந்து ஒன்பது அப்பாவிப் பொதுமக்களின் சடலங்கள் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல்வெளியாகியிருக்கின்றது. மொனறாகலைக் கொடூரங்கள் பற்றிய தகவல்கள் நாடு முழுவதிலும் பதற்றமான ஒரு சூழ்நிலையைத் தோற்றுவித்திருக்கின்றன.

தமிழர் தாயகத்தில் ஒரு சிறு பகுதியான யாழ். குடாநாட்டில் தினசரி ஐந்து, ஆறுபேர் படுகொலை செய்யப்படுகின்ற மோசமான நிலைமை இன்று வரை வழமைபோலத் தொடருகின்ற நிலைமையின்போது ஏற்படாத பதற்றம்
யாழ். குடாநாட்டுக்கு வெளியில் பிற தமிழர் தாயகப் பிரதேசங்களில் தினசரி தமிழர்கள் வகைதொகையின்றிக் கொல்லப்படுகின்ற கொடூரம் தொடர்கின்றமை குறித்து இங்கு ஏற்படாத சிரத்தை மற்றும் கவனம்
இப்போது தென்னிலங்கையில் அப்பாவி உயிர்கள் அநியாயமாகக் காவுகொள்ளப்படுகின்ற கோரம் தொடங்கியுள்ளபோது இங்கு ஏற்பட்டிருக்கின்றது.
இத்தகைய மோசமான வன்முறைப் புயலுக்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காகத்தான், யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகாதீர்கள் என்று சம்பந்தப்பட்ட தரப்புகளை சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வற்புறுத்தி வலியுறுத்தி வந்தது.

ஐ.நா., அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான நாடுகள், இலங்கை அரசு புலிகளுடன் செய்து கொண்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேற எடுத்த முடிவை உடனடியாகவே குறை கூறி, பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டமைக்குக் காரணம் இத்தகைய மனிதப் பேரழிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். அத்தகைய நன்நோக்கத்திலேயே அவை யுத்த நிறுத்தத்திலிருந்து விலகாதீர் என அறிவுறுத்தின.
ஆனால், அக் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகின; புறக்குடத்து நீராகி வீணாகிப் போயின.

இப்போது பேரவலம் தரும் போரவலம் முழு வீச்சில் வெளிப்படத் தொடங்கி விட்டது.
ஒரு பக்கத்து நடவடிக்கையைப் பார்த்து "பயங்கரவாதம்' என்று கண்டிப்பதாலோ அல்லது மறுபக்கத்து குளறுபடிகளைப் பார்த்து "அரச பயங்கரவாதம்' என்று விமர்சிப்பதாலோ இப்பிரச்சினையைத் தீர்த்துவிட தீர்வுகாண முடியாது என்பது திண்ணம்.
யுத்த நிறுத்தத்திலிருந்து விலக ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசு எடுத்த முடிவு சர்வதேச மட்டத்தில் பெரும் அதிருப்திக்கும் விசனத்துக்கும் சினத்துக்கும் உள்ளாகியிருக்கின்றது என்பதே இன்றைய நிலைமை.

எனினும், ஓர் இறைமையுள்ள நாட்டுக்குக் கொடுக்கப்பட வேண்டிய சர்வதேச மட்ட இராஜதந்திர கௌரவம் கருதி சர்வதேச நாடுகள் இது விடயத்தில் அடக்கி வாசிக்கின்றன. தங்களது கருத்துக்களை இராஜதந்திர மொழியிலேயே இப்போதைக்கு அவை வெளிப்படுத்தி வருகின்றன.
ஆனால், சர்வதேச சமூகத்தின் இத்தகைய அடக்கி வாசிப்பை அல்லது மெத்தனப் போக்கை கொழும்பு அரசின் போர்த்தீவிரப் போக்குக்கான அதன் அங்கீகாரமாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.
எனினும், இலங்கை அரச உயர் மட்டத்தில் சிலர் அப்படித்தான் அர்த்தப்படுத்த முயல்கின்றார்கள் என்பதுதான் வியப்புக்குரியது.

""இலங்கை அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியமை குறித்து சர்வதேச நாடுகள் எவையும் இலங்கை அரசைப் பிழையாக விமர்சிக்கவில்லை. அந்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தச்சொல்லி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவுமில்லை'' என்று இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா செய்தியாளர்களிடம் கூறியிருக்கின்றார்.

இலங்கை நிலைமை தொடர்பான சர்வதேச சமூகத்தின் எண்ணப் போக்கை அவர் தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றாரோ அல்லது தவறாகப் புரிந்து கொண்டவர்போல பாசாங்கு பண்ணுகின்றாரோ தெரியவில்லை.

யுத்த நிறுத்தத்திலிருந்து விலகிய போக்குக்கு எதிராக சர்வதேச எதிர்ப்புணர்வு வலுத்து வருவதையும் தற்போது இடம்பெற்று வரும் கோரக் கொடூரக் கொலைகள் அதற்கு எண்ணெய் வார்த்து வருவதையும்
சம்பந்தப்பட்ட தரப்புகள் உணராமல் இருக்கின்றமை வியப்புக்குரியதே.

Uthayan.com

0 Comments: