தமிழர் தேசியத்துக்காகவும், தமிழரின் நியாயமான உரிமைகளுக்காகவும், கௌரவமான வாழ்வுக்காகவும் குரல் எழுப்பி வந்த ஒரு தமிழ் அரசியல்வாதி துப்பாக்கி முனையில் சாகடிக்கப்பட்டிருக்கின்றார். பெரும்பான்மையினரின் கட்சிக்குள் இருந்துகொண்டே சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகத் துணிச்சலுடன் போராடி வந்த ஓர் அரசியல் நெஞ்சுறுதியாளனின் மூச்சு பேச்சு ஆயுதப் பலாத்காரத்தால் நசுக்கப்பட்டிருக்கின்றது; அடக்கப் பட்டிருக்கின்றது.
மகேஸ்வரன் எம்.பியின் கொலைக்குப் பல்வேறு தரப்புகள் மீதும் மாறி, மாறி குற்றம் சுமத்தப்படுகின்றது. குற்றவாளி யாராகவும் இருக்கலாம். இக்கொடூரக் கொலைக்குத் தூண்டிய பின்னணியில் எந்த அரசியல் தலைமையும் இருக்கலாம்.
ஆனால் இக் கொலைக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் இதற்கு வழிசெய்த கடுங் குற்றத்தில் இருந்து பொறுப்பில் இருந்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு என்ன காரணத்தைக் கூறியும் தப்பி விட முடியாது.
மகேஸ்வரனுக்குப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உயிராபத்து உள்ளது என்பது வெளிப்படையான விடயம். இலங்கையின் அரசியல் மற்றும் அன்றாட நடப்புகளை மேலோட்டமாகக் கவனிப்பவர்களால் கூட இதனை ஊகித்து விட முடியும். அத்துடன் ஏற்கனவே ஒரு தடவை துப்பாக்கிதாரியினால் அவர் இலக்கு வைக்கப்பட்டவர் என்பதும் தெரிந்த அம்சம்தான்.
அத்தகையவருக்கு அதிரடிப்படையினர் உட்படப் பதினெட்டு மெய்க்காவலர்களை இந்த அரசு ஏற்கனவே வழங்கியிருந்தது அவருக்கு உள்ள உயிராபத்தை உணர்ந்திருந்ததால்.
ஆனால் சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்னரே அந்தப் பாதுகாப்பு வெறும் இரண்டு பொலிஸ்காரர்களாக நியாயமற்ற முறையில் அடியோடு குறைக்கப்பட்டது. அதுவே இந்தக் கொடூரக் கொலைக்கு இலகுவாக வழி செய்தது என்பது துலாம்பரம்.
தமக்கு உயிராபத்து உள்ளது என்பதை எழுத்துமூலம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மகேஸ்வரன் தெரிவித்தும் கூட அது குறித்துக் கவனம் எடுக்காமல் அக் கோரிக்கையை உதாசீனம் செய்து இந்தக் கொடூரக் கொலைக்கு இலகுவான சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்து இக் கொலைக்கு ஒரு வழியில் காரணமாகியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் வரை மகேஸ்வரன் எம். பிக்கு விசேட அதிரடிப்படையினர் உட்பட 18 மெய்க்காவலர்கள், அவர்களுக்கான வாகனங்கள் போன்றவை வழங்கப்பட்டிருந்தமை ஏன்? அது திடீரென இரண்டு பொலிஸ்காரர்களாகக் குறைக்கப்பட்டமை ஏன்?
அரசியல் சித்து விளையாட்டுக்கும், அரசியல் அதிகாரப் போட்டிக்கும் பாதுகாப்பு விவகாரத்தைத் துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தும் அரசுத் தலைமையின் கீழ்த்தரமான கேவலப் போக்கே இதற்குக் காரணம் என்பது துலாம்பரமாக வெள்ளிடைமலையாக புலப்படும் விடயங்களாகும்.
இலங்கையில் அதிகாரத்தைத் தக்கவைக்கும் அரசியல் போட்டா போட்டியில் பாதுகாப்பு விவகாரங்களே பணயம் வைக்கப்படுகின்றன என்பது இங்கு நமது கண்களுக்கு அப்பட்டமாகப் புலப்படும் அம்சமாகும்.
அரசியல் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக, தென்னிலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளைத் "தாஜா' செய்ய விரும்புகிறது அரசுத் தலைமை. அதற்காக அவர்களைச் சமாளிப்பதற்காக அவர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதற்காக தமிழர் தேசம் மீது கொடூரப் போரை யுத்தவெறியோடு தொடுப்பதற்கு சன்னதம் கொண்டு நிற்கின்றது அது.
இப்படிப் பிரதான தேசிய அரசியலை நடத்துவதற்கே பாதுகாப்பு மற்றும் போர் போன்ற விடயங்களைத் துச்சமாகக் கையாண்டு முழு இலங்கைத் தீவையும் நட்டாற்றில் மூழ்கடிக்கும் அரசியல் தலைமைகளுக்கு, தமது அரசியல் எதிர்ப்பு சக்திகளை அடக்குவதற்கு அதே பாதுகாப்பு விடயங்களைப் பயன்படுத்துவது ஒரு பெரிய விடயமே அல்ல.
மகேஸ்வரனைச் சுட்டுக் கொலை செய்த குற்றத்தை விட, தமது அரசியல் இலக்குகளையும், உள்நோக்குகளையும் எட்டுவதற்காக ஜனநாயக அரசியலில் இருக்கும் எதிர்த்தரப்பாரின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளும், அச்சுறுத்தலுக்குள்ளும் ஆழ்த்தும் அதிகாரப் போக்கே கொடுங்குற்றமாகும்.
அரசியல் இலக்குகளை அடைவதற்கு வன்முறை அல்லது புரட்சிகர நடவடிக்கைகளை நாடுவோரை "பயங்கரவாதிகள்' என்று சித்திரிப்போர், இவ்வாறு அரசியல் நோக்கங்களை அடைவதற்காக எதிர்த்தரப்பில் உள்ள ஜனநாயக அரசியல்வாதிகளின் உயிர்களை ஆபத்துக்குள் ஆழ்த்தும் வகையில் நடவடிக்கை எடுத்து அதிகாரங்களைப் பிரயோகிக்கும் அதிகார வர்க்கத்தின் செயற்பாட்டை "அதிகாரப் பயங்கரவாதம்' என்று வரையறை செய்ய முன்வருவார்களா?
அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் அம்சத்தையும், அதிகாரத்தையும் தங்களின் சொந்த வீட்டுச் சொத்துப் போலவும், தமது சுயநல அரசியல் நோக்கங்களுக்கும், இலக்குக்கும் ஏற்றவாறு பயன்படுத்தும் விவகாரமாகவும் கையாளும் அதிகார அரசியல்வாதிகளும் ஒரு வகையில் "பயங்கரவாதி'களே என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.
Uthayan.com
Thursday, January 3, 2008
குற்றவாளிக் கூண்டில் "அதிகாரப் பயங்கரவாதம்'!
Posted by tamil at 9:15 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment