Wednesday, January 9, 2008

எப்போது உணரப் போகிறோம்

மறுபடியும் மாவின் விலை ஏறியுள்ளது. சீனியும் அவ்வாறே. இப்படியே விலையேறிச் செல்லச் செல்ல, எமது மக்களுக்கும், தென்னிலங்கை வாழ் மக்களுக்கும் பெருத்த இடைவெளி தோன்றிப்பருக்கும்.

காரணம், நாம் தென்னிலங்கை மக்களை விடக் குறைந்த ஊதியத்தைப் பெற்றாலும், தென்னிலங்கை மக்களை விடக்கூடிய விலை கொடுத்தே பொருட்களை வாங்குகிறோம். எனவே மிக மோசமான விலையேற்றங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருபவர்கள் நாங்கள்.

என்றோ எம்மை அடிமை கொண்டிருந்த மேல் நாட்டவர்கள் தமது நாகரிகத்துடன் மதம், கலாச்சாரம், உணவுப் பழக்க வழக்கங்களையும் எம்மிடம் உருவாக்கினார்கள். அவர்கள் விட்டுச் சென்ற பின்னரும், அவர்களைத் துரைமாராகக் கணிக்கவும், கண்டால் பயந்து மரியாதை செய்யவும் எம்மக்கள் மறுப்பதில்லை. இன்றும் எம் மக்கள் மேல்நாட்டு நாகரிகத்தில் திளைப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.

இதுவே கணிசமானவர்கள் இரண்டு நேரமாச் சாப்பாடும் ஒருவேளை சோறும் உண்ணுவதன் நோக்கமும். இலங்கை உஷ்ண வலய நாடு இங்கு பிரதான உணவே நெல்லரிசிச் சோறுதான். வன்னியில் உள்ள வயதானவர்களைக் கேட்டாலும், மட்டக்களப்பு வாசிகளைக் கேட்டாலும் அவர்கள் பெருமையாகக் கூறுவது நெல்லரிசிச் சோறும் கொச்சிக்காய்ச் சம்பலும், மரை, மான், பன்றி வற்றல்களும், உடன் இறைச்சியும், சுவையான இலுப் பம்பூப் பாணி, பாலைப்பழப் பாணி, கோழிமுட்டை, பால், தயிர், நெய், இவற்றுடன் குரக்கன், சலாது தட்டைப்பயறு, உழுந்து, ஊறுகாய் வகைகள், வற்றலிட்ட மரக்கறிகள் பருவ காலங்களுக்குரிய பழ வகைகள் மா, பலா, பாலை, வீரை, உலுவிந்தை, மகிள், நாவற்பழம், விளாம்பழம் எத்தனை விதமான உணவுகள், எத்தனை விதமான பானங்கள், பாலுந்தேனும் பெருகியோடும் வளமுள்ளது நமது மண், என்பதுதான். ஆனால்,

படிப்படியாகப் பட்டினக்கரையும், படிப்பறிவும், அதன் பயனாக வந்த உத்தியோகமும், இயந்திரமயமான வாழ்க்கைக்குள் தள்ளிவிடப் பணத்தைக் கொடுத்துப் பொருளைப் பெறும் நிலைக்குள் கொண்டு வந்துவிட்டது. அரைத்த மாவும், வாட்டிய பாணும், சுட்ட பலகாரமும் வாழ்வாகி விட்டது.

இந்த நிலையில் தாம் பெறும் ஊதியத்தில் பெரும் பகுதியைப் பெற்ற பிள்ளையின் பசி போக்கும் பால்மாவுக்குக் கொடுத்துவிட்டு தனது குழந்தைக்கெனத் தனது மார்பில் சுரக்கும் தாய்ப்பாலை வற்றவைக்க மருந்து தேடும் தாய்மாரைக் காண்கிறோம். இன்றைய நிலையில் குழந்தைக்கான தரமான பால்மா ஒரு பேணி அறுநூறு, எழுநூறு ரூபாய் வரை போகிறது. மாதம் நான்கு பேணி வாங்கிப் பச்சைக் குழந்தைக்கு நோயையும் கூடவே வாங்கும் தாய், சுயபொருளாதாரத் திட்டத்தைப் பயன்படுத்தி வீட்டோடு தொழில் செய்தால் பணமும் மிச்சம், வைத்தியச் செலவும் மிச்சம். இன்று எமது பற்றாக்குறைப் பொருளாதாரத்தை எம்மால் நிறைவு செய்யக்கூடிய சகல வளமும் எம்மிடம் உண்டு. ஏராளமான நிலங்கள் உழவு செய்யாமல் வீணாகிக் கிடக்கிறது. இந்த நிலங்களில் விற்பனைக்கன்றி தமது தேவைக்கான பயிர்ச்செய்கையை மேற்கொண்டாலுமே இறக்குமதி செய்யும் மாவில் பெரும் பகுதி குறைக்கப்பட்டு விடுமே.

நல்ல விளைச்சலைக் கொடுத்த நமது நெற்குவைகள் ஆங்காங்கே விவசாயியின் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு மூடை நெல்லில் சுமார் நாற்பது முதல் ஐம்பது கிலோ மா வரை கிடைக்கும். விலையும் கிலோவுக்கு ஆகக்கூடியது நாற்பது ரூபா. அரைக்கும் செலவுட்பட வரலாம். அருமையான மலிவான அரிசி மாவிருக்க கோதுமை மாவுக்கு எழுபத்தேழு ரூபா. ஏறக்குறைய இருமடங்கு. இது தேவையா?

மாறுவோம். எங்கள் பழைய உணவுப் பழக்கங்களுக்கு மாறுவோம். சிறுதானியச் செய்கையை அதிகரித்து வளரச் செய்தால் என்ன குறை. அகங்காரமாக நடக்கும் சிறிலங்கா அரசின் பொருளாதார வலைக்குள் வீழாமல் தப்புவோம்.

இன்னமும் மேல்நாட்டு வருமானங்களில் இங்கிருந்து வாழ்வோர் எம்மிடையே இருக்கின்றனர். அவர்களில் அநேகர் தமக்கான பணத்தை உழைத்தனுப்பும் உறவுகளுடைய மனநிலையைச் சற்றும் கருதாமல், மிக ஆடம்பரமாகச் செலவிடுவதைக் கண்டு அவ்வித வருவாய் இல்லாதவர்களும் அவ்வாறே செலவிட விளைவதைக் காண்கிறோம்.

முத்துப்போன்ற சோளம் இங்கே விளைந்திருக்க அதை அவித்து சுடச்சுடச் சுவையாக உண்ணாமல் நாநூறு ரூபாவுக்கு ஒரு பெரிய பெட்டியின் அடியில் அஞ்சாறு என்ற வகையில் போட்டடைத்த ~கோன் பிளக்ஸ்| வாங்கிப் பாலுடன் கலந்துண்ணும் குழந்தைகளைக் காணும் போது எமது மனம் அங்கலாய்க்கத் தவறுவதில்லை.

குழைத்துண்ணும் மா வகைகளில் எத்தனை ரகம் என்பதை எமது பழைய மக்களிடம் கேட்டுப் பாருங்கள். உழுந்தை வறுத்து அரிசியுடன் கலந்து அரைத்து ஒரு குழையல், பயறு வறுத்து புழுங்கலரிசி வறுவலுடன் ஒரு குழையல், எள்ளை வறுத்துப் பனங்கட்டி சேர்த்திடித்த குழையல், பொரிமா, பொரிவிளாங்காய் எனப் பல மாதங்கள் வரை கெட்டுப் போகாத உணவு வகைகள் அதிகம்.

இன்று கோதுமை ரவையில் லட்டு கோதுமையில் கேக், கோதுமையில் கொத்துரொட்டி, கோதுமையில் ரோல் எனவும் மிதிவெடி, எனவும் காலத்துக்கேற்ப பெயர்களில் பலகாரங்கள் வரத் தொடங்கியுள்ளன.

சைனீஸ் உணவு வகைகள் சைனீஸ் என்பதால் சாதாரண சம்பா அரிசிச் சோற்றுக்குள் பதார்த்தங்களைக் கலந்து அவற்றுக்காக பெருந்தொகைப் பணத்தைக் கறந்துவிடும் கடைகளும்கூட நமது மேல் நாட்டு, வெளிநாட்டு மோகங்களுக்கு நாம் கொடுக்கும் விலைதானே.

காலம் மாறுகிறது. போர் நீளுகிறது. இன்னும் எங்களது பொருளாதாரத்தைச் சீரழிய விடலாமா? எமது பொருளாதார வளத்தில் நாம் தங்கியிருப்பதே எமக்கு ஆரோக்கியமானது. இதை நாம் ஒவ்வொருவரும் எப்போது உணரப்போகிறோம்.

அருமந்த உணவு வகைகளைப் பயிரிடாமலே அழிய வைத்துவிட்டோம். கோதுமை மாவிற்கும் சீனிக்கும் பதிலீட்டுப் பொருட்கள் எம்மிடம் நிறையவே உண்டு. சில வருடங்கள் முன் கருப்பட்டி உற்பத்தியும் பனங்கட்டி உற்பத்தியும் எம்மண்ணில் குடிசைக் கைத்தொழிலாக நடைபெற்றது. போதியளவு பனை இருந்தும் கருப்பணி கட்டுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் பனங்கள் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தியை விற்பதிலும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அறிகிறோம்.

ஆக, மதுபானமான கள்ளிலிருந்து மாற்று மது உற்பத்திக்காக எடுப்பது போக மீதமாகி விடுகிறது கள் எனக் கூறக்கேட்டுள்ளோம். எனவே இந்தத் தொழிலிலும் ஒரு திட்டமிடல் தேவையாகிறது. உற்பத்திகளுக்கான வழிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தேடல் கண்டுபிடிப்புக்கள் இவையே உலகின் வளர்ந்த நாடுகளை மேல் நோக்கி இழுத்தன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏராளமானவர்கள் வேலையற்றோராகக் காணப்படுவதும் ஒரு குறைபாடே. இவர்களைப் பயன்படுத்தவும் அவர்களுடாக வளம் பெருக்கவும் திட்டங்கள் தேவையானதுதான். கன காலமாக எம்மை நிவாரணத்துள் வாழப்பழக்கிய சிங்கள அரசு தன் இலக்கை அடைய நாம் இடங்கொடுக்காமல் உழைக்க முன் வரவும், உள்ளுர் உற்பத்தியில் வாழ முன்வரவும் வேண்டும்.

-மாயா-

0 Comments: