Tuesday, January 8, 2008

சர்வதேசத்திற்கு பேரிடியான அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கைத்தீவில் முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இனப்போர் மிகவும் உக்கிரமான கட்டத்தை அடைந்த போது நோர்வே நாடு அமைதியை நிலைநாட்டவென களமிறங்கியது.

இலங்கையின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிநிச்சயம் என்ற மிகப்பெரிய படை நடவடிக்கை தோல்வி கண்ட பின்னர், வடக்கில் இராணுவத்தின் பலமிக்க தளமான ஆனையிறவு படைத்தளத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிக்கே நோர்வே அனுசரணை வழங்கியது.

ஆனையிறவுத் தளத்தின் வீழ்ச்சியுடன் அந்தத் தளத்தின் பிரதான படையணியான 54 ஆவது படையணி கலைக்கப்பட்ட பின்னர், 55 மற்றும் 53 ஆவது படையணிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தீச்சுவாலை படை நடவடிக்கை மிகப்பெரும் இழப்புக்களை குறுகிய காலத்தில் சந்தித்தபோது அமைதியின் முக்கியத்துவம் தென்னிலங்கையில் உணரப்பட்டது. இதனை மேற்குலகின் பல இராஜதந்திரிகளும் ஒப்புக்கொண்டிருந்தனர்.

2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அப்போதைய நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வன்னிக்கு விஜயம் செய்து, விடுதலைப் புலிகளை சந்தித்த போது இந்த அமைதி முயற்சிகள் ஆரம்பமாகின. அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் நோர்வேயின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட இந்த போர்நிறுத்த உடன்பாடு ஆறாவது ஆண்டை பூர்த்தி செய்வதற்கு இன்னமும் 51 நாட்கள் இருக்கையில் போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை காலை இலங்கையின் தலைநகரான கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலை தொடர்ந்தே அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது. கொம்பனித்தெருவில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலானது இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தை குறிவைத்தே நிகழ்த்தப்பட்டிருந்தது.

கொழும்பில் குண்டு வெடிப்புக்கள் நிகழ்வது இது ஒன்றும் முதற்தடவை அல்ல என்பது மட்டுமல்லாது மோதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் ஆழ ஊடுருவும் படையினர் பல தடவைகள் கிளைமோர் தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளனர். எனவே போர் என்பதை இருதரப்பும் ஏற்க வேண்டியதாகிற்று.
ஆனால் அரசிற்கு ஏற்பட்டுவரும் அரசியல் நெருக்கடிகளும், அரசை தக்கவைப்பதற்கு தேவைப்படும் கடும்போக்காளர்களின் கூட்டணியுமே அரசின் இந்த விலகலுக்கான பிரதான காரணம் என்றே கருதப்படுகிறது.

அரசின் அமைதி முயற்சிகள் என்ற வார்த்தைகளிலும், அதற்கு ஆதாரமாக உருவாக்கப்பட்ட அனைத்துக்கட்சிக் குழுவின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்த அனைத்துலக சமூகத்திற்கு அரசின் இந்த முடிவு பலத்த ஏமாற்றமாகும். எதற்கும் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி வந்த அனைத்துலக சமூகத்திற்கு அரசின் இந்த முடிவு ஒரு நெருக்கடியான நிலையும் கூட.

அனைத்துலக சமூகமும், இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்பாட்டில் இருந்து ஒரு தலைப்பட்சமாக விலகி விடுவார்கள் என்றே எதிர்பார்த்தனர். எனவேதான் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்களை அரசு தீவிரப்படுத்தியதுடன், அவர்களை சீண்டும் முயற்சிகளையும் அரசு அண்மைக்காலமாக தீவிரப்படுத்தி வந்தது.

இதற்கு நல்ல உதாரணமாக கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வின் போது வன்னிப் பகுதி மீதான வான் தாக்குதல்களும், ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்களும் அதிகரிக்கப்பட்டிருந்தன. இந்த தாக்குதல்களில் 26 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அது மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவரும், சமாதான முயற்சிகளின் பேச்சுவார்த்தை குழுத்தலைவருமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனும் வான் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார். ஆனால், எந்தச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் தமது நிதானத்தை தவறவிடவில்லை. அவர்கள் தமது பொறுமையையும் இழக்கவில்லை என்பதையே அவர்களின் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டியிருந்தன.

தாக்குதலுக்கான பதில் தாக்குதல்கள், படையினரின் வலிந்த சமருக்கான எதிர்ச்சமர் என்பதே அவர்களின் உத்தியாக இருந்தது. அனைத்துலகத்தின் போர் விதிமுறைகளை மீறி புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது வான்படையினர் 12 குண்டுகளை வீசிய போதும், விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்பாட்டில் இருந்து தன்னிச்சையாக வெளியேறவில்லை. அரசின் இந்த தாக்குதலை யுனெஸ்கோ அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் கண்டித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முறிந்து போன அமைதி முயற்சிகளுக்கு மீண்டும் புத்துயிர்ப்பு அளிக்கும் ஒரு ஆதாரமாக தொங்கி நிற்கும் போர்நிறுத்த உடன்பாட்டை முறித்து அனைத்துலகத்தின் முகத்தில் கரியைப் பூசும் கைங்கரியத்தை செய்ய விடுதலைப் புலிகள் முற்படவில்லை.

எனவே முற்றிலும் வித்தியாசமான கால கட்டத்தில், வித்தியாசமான சூழலில், வேறுபட்ட பாதையில் அமைதி முயற்சிகள் முன் நகர முற்பட்டதை யாவரும் அறிவார்கள். அதாவது சமாதானத்தை நோக்கிய முயற்சிகள், இலங்கை அரசாங்கத்தின் போர் என இரண்டு முனைகளில் அது நகர்ந்து கொண்டிருந்த போதும் அனைத்துலக சமூகம் மேற்கொண்ட பாரபட்சமான நடவடிக்கைகள் அமைதி முயற்சிகளை முற்றாகவே முடக்கிவிடும் நிலையை ஏற்படுத்தியிருந்தன.

அரசிற்கு வழங்கப்பட்ட படைத்துறை மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என பலவற்றை இதற்கான உதாரணங்களாக அடுக்கிக்கொண்டு போகலாம், எனினும் சமாதான காலத்தில் அனைத்துலக மட்டத்தில் விடுதலைப் புலிகள் மீது கொண்டுவரப்பட்ட தடைகளும் அதற்கான முக்கிய காரணிகளாகும்.

புலிகளின் எதிர்ப்பினையும், இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் ஆட்சேபனையினையும் உதாசீனப்படுத்தி விட்டு, ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர அழுத்தங்களுக்குச் பணிந்து விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டன.

அதாவது தமிழ்மக்களை விரும்பத்தகாதோராகவும், வேண்டத்தகாதோராகவும் அந்த நாடுகள் ஒதுக்கிக் கொண்டதாகவே தமிழ்ச்சமூகம் அதனை கருதிக் கொண்டது. இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகளுக்கு இருந்த சம அந்தஸ்த்து மற்றும் படைவலுச் சமநிலையினை இது கடுமையாகப் பாதித்தது. இலங்கை அரசு கடும்போக்கினைக் கடைப்பிடிக்க இது ஊக்கப்படுத்தியது.

எனினும் போர்நிறுத்த உடன்பாட்டில் இருந்து விடுதலைப் புலிகள் விலகவில்லை.
அமைதி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு வந்த ஆறு ஆண்டுகளில், விக்கிரமசிங்க, பண்டாரநாயக்கா, ராஜபக்ஷ என மூன்று அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் அமைதி முயற்சிகளில் எந்த விதமான முன்னேற்றங்களும் காணப்படவில்லை. ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் படியான எந்த அழுத்தங்களையும் அமைதி முயற்சிகளுக்கு உதவுவதாக கூறிக்கொண்ட அனைத்துலக நாடுகள் இந்த அரசுகள் மீது ஏற்படுத்தவில்லை.

ரணில் விக்கிரமசிங்க அரசு பேச்சுக்களுக்கான காலத்தை இழுத்தடித்ததுடன், டோக்கியோ மாநாட்டின் மூலம் அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் விடுதலைப் புலிகளின் போரிடும் வலுவை முடக்கிவிட முனைந்து நின்றது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் தந்திரமாக அதில் இருந்து வெளியேறியிருந்தனர்.

பின்னர் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபை விடுதலைப் புலிகள் முன்வைத்த போது, தென்னிலங்கை அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. குமாரதுங்க அரசாங்கம் கடும் போக்கான நிலைப்பாட்டை எடுத்தது. அந்த வரைபின் அடிப்படையில் பேச்சுக்களை நடாத்துவதற்கு மறுத்ததுடன், துணை இராணுவக் குழுக்களைப் பயன்படுத்தி நிழல் யுத்தத்தினையும் தீவிரப்படுத்தியது.

அதன் பின்னர் வந்த மகிந்த அரசு போரை தீவிரமாக்கியதுடன், அனைத்துலகத்தை ஏமாற்றும் விதமாக அனைத்துக் கட்சி குழுவினையும் அமைத்திருந்தது. எனினும் அனைத் துக் கட்சி மாநாடு தோற்றுப் போன நிலையில் இரண்டு பெரிய கட்சிகளுக் கிடையிலான புரிந் துணர்வு ஒப்பந்தம் என்ற அடுத்த திட்டம் மேற்கொள் ளப்பட்டது. ஆனால் தென்னிலங்கையில் ஆட்சி அமைக்கும் பலத்தினைக் கொண்டிருக் கின்ற இந்த இருபெரும் கட்சிகளும் பேரின வாதக் கட்சிகள் என்பதே தமிழ் மக்களின் கருத்து.

எனினும் மகிந்த பதவியேற்ற பின்னர் தீவிரமடைந்த பிரகடனப்படுத்தப் படாத நாலாம் கட்ட ஈழப்போரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட் டதுடன். பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிந்து போயின. மனித உரிமை மீறல்கள் உச்சக்கட்டம் அடைந்தன, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது செறிவான வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டன. படை நடவடிக்கைகளும் பெரும் எடுப்பில் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், சமாதான முயற்சிக ளுக்கு உதவு வதாகக் கூறிக்கொள் ளும் சில நாடு கள்கூட அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளை கண்டிக்கத் தவறி யது மட்டுமன்றி, அரசின் போர் திட்டங்களுக்கு ஆதரவாக இராணுவ மற்றும் நிதியுதவிகளை யும் செய்துவருவது அரசை பலப்படுத்தி இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை பலவீனப்படுத்தியது.

அரசின் போர்த் திட்டங்களுக்கு அனுச ரணை வழங்கிய இந்த புறச்சூழ்நிலைகள் தான் மகிந்த அரசாங்கம் முழு அளவில் படை நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்வதற்கான ஊக்கத்தினைக் கொடுத்ததுடன், நோர்வேயின் அனுசரணை முயற்சிகளை தூக்கி எறியவும் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

இரண்டாவது ஜெனிவாப் பேச்சுக்களின் போது விடுதலைப்புலிகள் முன்வைத்த கோரிக்கைகள் முக்கியமானவை. அதாவது தமிழ் மக்கள் எதிர்நோக்கிய மனிதாபிமானப் பிரச்சினையை தீர்த்தல் (ஏ9 பாதை திறத்தல்), இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படுதல் என்பவையே அவை. இந்த கோரிக்கைகளை அரசு நிராகரித்திருந்தது.

ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு அனைத்துலக சமூகம் அரசிற்கு அழுத்தம் கொடுத்திருந்தால் போர்நிறுத்த உடன்பாட்டில் இருந்து இலங்கை அரசு வெளியேறிய செய்தியை அனுசரணைப் பணியில் பல வருடங்கள் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் ஊடகவியலாளர்கள் கூறி அறியவேண்டிய துர்ப்பாக்கிய நிலை வந்திருக்காது.

கடந்த காலங்களில் நடைபெற்ற திம்புப் பேச்சு, இலங்கை இந்திய ஒப்பந்தம், பிரேமதாசா அரசுடன் நிகழ்ந்த பேச்சுக்கள், 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசுடன் நடைபெற்ற பேச்சுக்கள் என்பன தோல்வியடைந்தபோது அவை போராட்டப் பாதையில் வைக்கப்பட்ட பொறி என்றே தமிழ்ச்சமூகம் உணர்ந்து கொண்டது. ஆனால் கடந்த ஆறு வருடங்களில் உலகின் மனித நேயத்தில் முதன்மை நாடாக விளங்கும் நோர்வேயின் தலைமையில் நடைபெற்ற அமைதி முயற்சிகளும் அதனையே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இருந்த போதும் சமாதானப் பாதையில் இருந்து முற்றாக வெளியேற விடுதலைப்புலிகள் விரும்பவில்லை.

சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணக் கட்டமைப்புக்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசிலிருந்து விலக்கிக்கொண்டது. பின்னர் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்து அந்த கட்டமைப்பை முழுமையாக முடங்க செய்திருந்தன.

அதே போலவே வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் இரத்துச் செய்யப்பட்டது. இந்த இரு நிகழ்வுகளும் சமாதான முயற்சிகளில் சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டிருந்த ஒரு சில தமிழ் மக்களின் நம்பிக்கையையும் சாகடித்திருந்தது. அதாவது சிங்கள இனவாதச் சக்திகளை மீறி தமிழ் மக்களுக்கு ஒரு நிவாரணத் திட்டத்தை கூட நடைமுறைப்படுத்த முடியாது என்பது தான் இதன் யதார்த்தம்.

எனவே மீண்டும் ஜே.வி.பி.யுடன் கைகோர்ப்பதற்காக அரசு போர்நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறிக் கொண்டது ஆச்சரிய மான ஒன்றாக தமிழ் மக்களுக்கு இருக்கப் போவதில்லை. மகிந்த பதவியேற்ற பின்னர் மோதல்கள் உக்கிரமடைந்த காலகட்டத்தில் நடைபெற்ற மாவீரர்தின உரையின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையும் அதனையே கோடிட்டு காட்டியிருந்தது.

அதாவது 'சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன. சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேசச் சதிவலைப் பின்னல் இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையிற் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது" என அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அரசின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்துலகத்திற்கு அரசின் இந்த வெளியேற்றம் பேரிடியாக இருக்கலாம். ஏனெனில் இது இலங்கை அரசிற்கு மட்டுமல்லாது அதற்கு ஆதரவளித்து வந்த அனைத்துலக சமூகத்திற்கும் கிடைத்த இராஜதந்திர தோல்வியாகும் என்பதே பல அவதானிகளின் கருத்து.

எனவே பேர்நிறுத்த உடன்பாட்டில் இருந்து இலங்கை அரசு வெளியேறியது இந்த வருட ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் இராஜதந்திர வெற்றியாகும் என்பதே பல மூத்த இராஜதந்திரிகளின் ஒருமித்த கருத்தாகும்.

-அருஸ் (வேல்ஸ்)-

0 Comments: