இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தனது இடைக்கால அறிக்கையைக் கையளித்துவிட்டது.
"பழைய குருடி கதவைத் திறவடி' என்றமாதிரி இருபது வருடங்களுக்கு முந்திய, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோருவதுதான் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு இப்போது முன்வைத்திருக்கும் இடைக்கால முன்மொழிவு ஆகும்.
இதற்கான ஆவணத்தைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட வள ஆளணியைச் சேர்ந்த நிபுணர் ஒருவர், இந்த ஆவணத் தயாரிப்பிலும் எத்தகைய கூத்துகள் நடந்தன என்பதைக் குறிப்பிட்டு விசனப்பட்டார்.
அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் முன்மொழிவை இடைக்கால சிபார்சாக முன்வைக்க வேண்டும் என்ற வழிகாட்டல் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பின்னர், அக்குழுவின் நிபுணர் அணி தயாரித்த ஐந்தாவது ஆவணமே இப்போது உத்தியோகபூர்வ முன்மொழிவாக வெளியிடப்பட்டிருக்கின்றது.
முதலில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் அடங்கியிருந்த அம்சங்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்த ஆவணங்களில் ஒவ்வொன்றாக வெட்டிக் குறைக்கப்பட்டு, நீக்கப்பட்டு, நீர்த்துப் போகவைக்கப்பட்ட நிலையில் ஒன்றுமில்லாத வார்த்தை ஜாலத்தில் உக்கி, உழுத்துப் போன புஸ்வாண யோசனைத் திட்டம் ஒன்று பெரும் ஆரவார எடுப்புகளோடு இப்போது வெளியிடப்பட்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார் சம்பந்தப்பட்ட ஆவணத் தயாரிப்புடன் தொடர்புபட்ட அந்த வள ஆளணி நிபுணர்.
முதலில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்குப் பகிரப்படவேண்டிய அதிகாரங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் வரையறை செய்து எழுத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் ஜனாதிபதி செயலகத்தின் விருப்பத்துக்கு அமைய ஒவ்வொரு தடவையும் அது வெட்டிக் குறைக்கப்பட்டமையால் சினந்துபோன அந்த நிபுணர், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடமே இவ்விவகாரம் "கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல்' "உலக்கை தேய்ந்து உளிப்பிடியானது போல' குறுகிக் குடங்கிப் போய் விட்டது என்பதை நேரில் கூறி நொந்து கொண்டார்.
மேற்படி இடைக்கால யோசனைக்கான முன்மொழிவில் ஒப்பமிட்ட சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் ஆதங்கமும் விசனமும் கூட இதுதான்.
""அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பகிர்வை மாகாணங்களுக்கு வழங்குங்கள் என்று கோரும் முன்மொழிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்புக்கு அமைவான யோசனைத் திட்டத்தை அவரது ஆசைப்படி அவரிடமே நாங்கள் முன்வைத்தோம். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரப் பகிர்வு விடயங்களை அழுத்திக் கூறிச் சுட்டிக்காட்டக் கூட எமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. பெயருக்குத்தான் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அங்கத்தவர்கள் என்று செயற்பட்டோம். மற்றும்படி ஆட்சித் தலைவரின் "போடுதடி' போல அவர் விரும்பியவற்றை அவர் விரும்பிய வாசகத்தில் அது, அவரிடம் நாங்கள் விடுக்கும் கோரிக்கையாக அதனை நாம் வெளியில் காட்டிக்கொண்டு முன்வைக்க மட்டுமே நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். எமது மனச்சாட்சிப்படி சரி எனப் பட்டதை நாமாக முன்மொழிய அல்லது இந்த ஆவணத்தில் சேர்க்க நாங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. வெறும் தலையாட்டி பொம்மைகளாக இருந்து ஜனாதிபதி விரும்பியதை அவருக்காகச் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். அதுதான் எங்களால் செய்ய முடிந்தது.'' என்று தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர் இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளின் அங்கத்தவர்களும்.
இந்தத் தீர்வு யோசனைப்படி வடக்கில் மாகாணசபை நிர்வாகத்துக்கு ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசனைச் சபை ஒன்று நியமிக்கப்படும் என இந்தத் தீர்வு முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அந்த ஆலோசனைச்சபைக்கு சட்டம், ஒழுங்குவிதிகள், பிரமாணக் குறிப்புகள் போன்றவற்றை வகுத்து வெளியிடக்கூட அதிகாரம் இருக்காது என்பது இப்போது தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது.
வடக்கு மாகாணசபைக்கு உடனடியாகத் தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை என்று காரணம் காட்டி அங்கு ஜனாதிபதியின் கீழான ஆளுநரின் ஆட்சியைத் தொடரவைக்க எத்தனிக்கின்றது அரசுத் தரப்பு. அத்தகைய ஜனாதிபதி ஆட்சியின் கீழ் ஆளுநரின் நிர்வாகத்திற்கு அமைய மாகாண அதிகாரம் செயல்படும்போது கூட அந்த மாகாணசபை தனக்குரிய சட்ட விதிகளையோ அல்லது ஒழுங்குப் பிரமாணங்களையோ தயாரிக்கவோ, விதிக்கவோகூட அதிகாரம் அதற்கு வழங்கப்படவில்லை.
மூல ஆவணத்தில் இருந்த இதுபோன்ற அதிகாரப் பகிர்வைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்ற ஏற்பாடுகளை வெட்டிக்கழித்த பின்னர் அரைகுறைப் பிரசவமாக இந்த யோசனைத் திட்டம் முன்மொழியப்பட்டிருக்கின்றது. அவ்வளவே.
Uthayan.com
Saturday, January 26, 2008
அரைகுறைப் பிரசவமாக வெளிப்பட்ட பரிந்துரை
Posted by tamil at 8:50 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment