Wednesday, January 2, 2008

ஆண்டு தொடக்கங்களில் சிங்களம் தந்த புத்தாண்டுப் பரிசுகள்

புத்தாண்டு பிறந்துவிட்டது கடந்த கால கசப்புக்கள் எல்லாம் நீங்கி நிம்மதியான ஆண்டாக இவ்வாண்டு அமையுமா என்ற ஏக்கங்கள் ஒவ்வொரு புத்தாண்டைப்போல இவ்வாண்டும் பல எதிர்பார்ப்புகளை எம்மவரிடையே ஏற்படுத்திவிட்டிருக்கும் என்ற நிலையில் 'வரலாறு களை மறந்துவிடாதே" எனச் சொல்லி நிற்கிறது காலம்.

ஒவ்வொரு சாதாரண மனிதன் இடத்திலும் புதுமையான விடயம் ஒன்று புகுந்துவிட்டால் அதில் அவனிற்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கும். அதன் ஒரு வடிவமாகவே கால நகர்வால் பிறக்கின்ற புத்தாண்டிலும் மனிதனின் எதிர்பார்ப்புகள் பல பொதிந்திருக்கும் 'பழையன கழிதலும் புதியன புகுதலுமான" சம்பவங்களும் புதிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் அதிக நாட்டமும் என புதிய வழிப்பிரவேசத்தில் மனிதமனம் அவாவி நிற்கும். ஆனால், ஈழத் தமிழர்களின் வாழ்வில் புத்தாண்டுகள் என்னத்தைத் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றன. தமிழினம் எதிர்பார்ப்பது போல் புத்தாண்டுகளில் சிங்கள அடக்குமுறையாளர்களின் மனங்கள் மாற்றம் அடைந்திருக்கின்றனவா என்று பார்த்தால் இரத்தம் தோய்ந்த கசப்பான சம்பவங்களை ஆண்டுத் தொடங்கங்களில் சிங்களம் எமக்குப் பரிசாகத் தந்திருக்கிறது என்ற உண்மை புலப்படும்.

1958 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வாகனங்களில் சிங்கள சிறி எழுத்து பொறிக்கும் சட்டமும் இரண்டு வருடம் கழித்து 1960 ஆம் ஆண்டு அப்போதைய சிறிமாவோ அரசால் நீதிமன்ற நிர்வாக மொழியாக சிங்கள மொழி மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டமும் தமிழ் மக்களை ஆண்டுத் தொடக்கங்களிலேயே சீண்டிப்பார்த்த சிங்கள ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் வரலாறுகள் இற்றைவரை எம்மினத்தை அழிக்கும் நடவடிக்கைகளாகத் தொடர்கின்றன.

இந்த நிலையில் தற்போதைய சிங்கள ஆட்சியாளர் மகிந்தவின் காலத்தில் 2006 ஆம் ஆண்டு, 2007 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழினத்தை உலுப்பிய படுகொலைச் சம்பவங்களை இத்தருணத்தில் நினைவூட்டிப் பார்ப்பது எமது இனத்தின் விழிப்பிற்கு உதவியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

சிங்கள மக்களிடையே இனவாதக் கருத்துக்களைப் போதிக்கும் சர்வதேச முகத்தின் முன்னே சமாதான அவதாரமாய் காட்டியும் 2005 ஆம் ஆண்டு பிற்பகுதியில் சனாதிபதியாக ஆட்சிபீடமேறிய மகிந்த ராஜபக்ச, ஆரம்பத்திலேயே தமிழின விரோதப் போக்கை சிறுக சிறுக வெளிப்படுத்த தொடங்கியிருந்தார். அதன் ஒரு பெரிய வெளிப்பாடாக அடுத்த ஆண்டு 2006 ஆம் ஆண்டு பிறப்பிலே மகிந்த அரசு தமிழினத்திற்குத் தந்த புத்தாண்டுப் பரிசை உணர்வுள்ள எந்தத் தமிழனும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

வழமை போலவே பல எதிர்பார்ப்புக்களை சுமந்தவர்களாய் 2006 ஆம் ஆண்டை வரவேற்ற தமிழினம் மறுநாள் பொழுதுகளையும் கழித்திருந்த வேளை இரண்டாம் திகதி மாலை 7.45 மணிக்கு நடந்த அந்த கொடூரம் புத்தாண்டு எதிர்பார்ப்புகளை எல்லாம் புஸ்வாணமாக்கியிருந் தது.

அன்று மாலை அந்த மாணவர்கள் குழு தமது திருகோணமலை நிலத்தில் அமைந்துள்ள கடற்கரையின் காந்தி சிலை அருகே ஒன்று கூடுகின்றனர் வழமை போலவே.

கல்வி என்ற தெரிவிலே உயர்கல்வி வரைத் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்திருந்த அந்த மாணவ நண்பர்கள் தாம் நண்பர்களைச் சந்தித்துக் கதைக்கும் அவசியத்தை வீட்டில் பெற்றோரிடம் சொல்லிவிட்டு அவ்விடத்தில் கூடிக் கதைத்துக் கொண்டிருந்தனர்.

திடீரென அங்கு வந்த சிங்களப்படை வாகனம் அவர்கள் அனைவரையும் சுற்றிவளைத்துப் பிடிக்கின்றது. அடித்து உதைத்து வாகனத்தில் ஏற்றுகிறார்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என அந்த மாணவர்களால் வினா எழுப்பி விடைகாண முடியாத நேரப்பொழுதில், கொண்டு செல்லப்பட்ட மாணவர்கள் வாகனத்திலிருந்து அடித்துத் தள்ளப்பட்டு ஒவ்வொருவராய் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அந்தக் கடற்கரையே துப்பாக்கி வேட்டோசையால் அதிர்கிறது ஐந்து மாணவர்களின் உயிர் துடி துடித்துப் பிரிகிறது இரு மாணவர்கள் குற்றுயிராய்க் கிடக்கிறார்கள்.

ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த அந்தப் பகுதி மக்கள் சம்பவ இடம் நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அங்கு நின்ற படைகளால் மக்கள் திருப்பி விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

மறுநாள் சிறிலங்காவின் ஊடக செய்திகள் இவ்வாறாகச் செய்திகளை வெளிவிடுகின்றன இராணுவத்தினரைத் தாக்குவதற்காக கைக்குண்டுகளுடன் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் கையில் வைத்திருந்த கைக்குண்டு வெடித்ததனால் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

'இராணுவத்தைத் தாக்க வந்த புலிகள் மீது இராணுவத்தினர் தாக்கியதில் ஐந்து புலிகள் கொல்லப்பட்டனர்" என்றவாறான செய்திகள் தமிழ் மக்கள் மனங்களை ஆத்திரம் கொள்ளச் செய்தன.

நீண்ட நேரத்தின் பின்னே காயப்பட்டவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி சிறிலங்காக் காவல்துறையினர் மருத்துவமனையில் கொண்டு போய்ப்போட்டனர்.

இறந்தவர்கள் பயங்கரவாதிகள் என உறுதிப்படுத்தி ஒப்பமிட்டாலே சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைப்போம் எனச் சிறிலங்காக் காவல்துறை அறிவித்தது. இந்நிலையில் கொதிப்படைந்த அந்த மக்களின் ஆர்ப்பாட்டங்களின் பின் நீண்ட இழுபறிக்கு மத்தியிலேயே சடலங்களை ஒப்படைத்தனர்.

மரண விசாரணையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தாலேயே மாணவர்கள் உயிர் இழந்திருப்பது உறுதியானது. இவ்வாறான நிலையில் தாக்க வந்தவர்களையே இராணுவத்தினர் தாக்க வேண்டி வந்தது என மழுப்பும் பாணியில் சிங்கள இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க அறிக்கை மேல் அறிக்கைவிட்டார்.

இவ்விடயத்தில் இன்னுமொன்றையும் பார்க்கவேண்டும். இராணுவத்தைத் தாக்கும் பொதுமக்களை இராணுவத்தினர் சுடலாம் என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவத்திற்கு உத்தரவிட்டு சில நாட்களிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனூடாகவே அப்பாவி மாணவர்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட சம்பவத்தையும் பார்க்கவேண்டும்.

இந்தப் படுகொலைக்கு யார் பொறுப்பு என உடனடியாகக் கூறிவிட முடியவில்லை எனப் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவும் வழமை போலவே அறிக்கை விட்டு விட்டு அடங்கி விடுகிறது.

தமிழர் தேசம் கிளர்ந்தெழுந்தது. திருமலை நகரத்தில் கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்படாமலேயே தமது இயல்பு நிலை முடங்கியது தமிழீழம் எங்கணும் இப்படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்பாவித் தமிழர்களையே பயங்கரவாதிகளாக்கிய சிங்களத்தின் செயல்கண்டு இறந்தவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கதிகலங்கி அழுதார்கள்.

1985 ஆம் ஆண்டு பிறந்த கோகிதராஜா றொகான், சண்முகராசா கஜேந்திரன், மனோ கரன் ரஜீகர், யோ.ஹேமச்சந்திரன், தங்கத்துரை சிவானந்தா அகிய ஐந்து மாணவர்களும் ஒரே பாடசாலையில் கல்வி கற்று உயர்தரத்திற்குத் தேறி அடுத்த கட்ட கல்வி நடவடிக்கைகளுக் காக தயாராகியிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் பெற்றோரிடம் கூறிவிட்டு கடற்கரைக்குச் சென்று சில மணி நேரத்தில் ஒரு மாணவன் தனது தந்தையிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டு 'அப்பா எங்கள ஆமி சுற்றிவளைச்சு பிடிச்சு முட்டுக்கால்ல இருந்திவைத்திருக்கிறாங்கள்" என்று பதற்றத்துடன் கூறியிருக்கிறான் அதுவே இறுதியாக அந்த மாணவர்கள் குழுவிடம் இருந்து வந்த அபாய செய்தியாக இருந்தது.

பெற்றோர்கள் பதறியடித்து அங்கு சென்று சேர்ந்த நேரத்தில் எல்லாமே முடிந்து விட்டிருந்தது. சிங்களவனின் பார்வையில் அப்பாவித் தமிழன் அர்ப்ப பிராணியாகவே கணிக்கப்பட்டு கொல்லப்படும் சம்பவங்களின் தொடர்ச்சியாக அன்றைய தினம் ஐந்து தமிழ் மாணவர்கள் இரையாக்கப்பட்டார்கள்.

புத்தாண்டு பிறந்த செய்தியுடன் புதிய நல்வரவுகளை எதிர்பார்த்திருந்த தமிழினத்திற்கு சிங்களம் தந்த புத்தாண்டு சிறப்புப் பரிசு படுகொலையுடன் தொடங்கியது. இது 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தின் செய்தியாக இருக்க 2007 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதை விஞ்சும் விதத்தில் சிங்களம் தந்த தமிழினப் படுகொலையினை அடுத்ததாக இத்தருணத்தில் நினைவூட்டிப் பார்க்கவேண்டும். 2007 ஆம் ஆண்டு பிறப்பெடுத்து ஒரு நாள் கழிந்து இரண்டாம் திகதி மாணவர்கள் படுகொலையின் ஓராண்டு பூர்த்தியன்று மன்னார் இலுப்பைக்கடவை படகுத்துறை கிராமத்தில் காலை 9.30 மணியளவில் சிறிலங்காப்படைகளின் மிகை ஒலி விமானங்கள் படுகொலையைத் தொடக்கிவிட்டன.

இடம்பெயர்ந்த நிலையில் மிக வசதிக் குறைவுகளுடன் வாழ்ந்து வந்த அந்த படகுத்துறை கிராம மக்கள் மீது சிங்கள விமானப் படை நிகழ்த்திய கோரக்குண்டு வீச்சில் சிறுவர்கள், கர்ப்பிணிகள் உட்பட 16 அப்பாவித் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 40 வரையான மக்கள் படுகாயங்களுக்குள்ளாகினர். தமிழர் மனங்கள் ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் சீண்டப்பட்டன அப்பாவித் தமிழர்களின் அவலப் படுகொலை கண்டு மனித நேயவாதிகள் கலங்கினர். ஆனால் சிங்கள அரசோ வழமை போலவே மன்னாரில் புலிகளின் முகாமை அழித்துவிட்டதாக அறிக்கை விட்டது. அதனை சில ஊடகங்களும் பெரிதுபடுத்திப்போட்டன. சாதாரண ஓலைக்குடில்களும் வெட்டையான மணற்பரப்பும் சிங்கள விமானப் படைக்கு புலிகளின் முகாம்களாகத் தெரிந்ததில் வியப்பில்லை. ஏனெனில் நவாலி சென் பீற்றர் தேவலாயமே அவர்களுக்குப் புலிகளின் இலக்காகத் தென்பட்டபோது இது பெரிய விடயமில்லை. ஆகவே தமிழர்கள் எல்லாம் புலிகள் எனப்பார்க்கும் சிங்கள மனோபலத்தில் படகுத்துறை இடம்பெயர்ந்தோர் குடியிருப்பும் புலிகளின் நிலைகளே.

சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மன்னார் ஆயர் வண இராயப்பு ஜோசப் அடிகளார் விடுதலைப் புலிகளின் இலக்குகளோ அல்லது நடமாட்டங்களோ இல்லாத மக்கள் குடியிருப்புக்கள் மீதே விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடாத்தின. இது முற்று முழுதான அரச பயங்கரவாத செயல் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு புத்தாண்டு செய்தியாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்; 'இவ்வாண்டு இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் அமைதியான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான சுதந்திரமான வாழ்வு மலரவேண்டும் என வேண்டுகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

யாழ். ஆயரின் வாழ்த்துச் செய்தி அவ்வாறான எதிர்பார்க்கையைத் தெரிவிக்கையில், மறுநாள் நியத்தில் நடந்த படுகொலையின் காட்சிகளை சாட்சியாய் சொன்ன மன்னார் ஆயரின் கூற்று, சிங்களத்தின் போர் நிலைப் போக்கை சென்ற ஆண்டின் தொடக்கத்திலும் எமக்கு உணர்த்தியது. இவ்வாறாக ஆண்டுத் தொடக்கங்களில் சிங்களப்படைகளால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைகள் எம்மை சிங்கள தேசம் குறித்த எச்சரிக்கை நிலைக்கு இட்டுச் சென்றிருக்கவேண்டும். சிங்களத் தலைவர்கள் தமது மக்களுக்கு வெளியிடுகின்ற வாழ்த்துச் செய்திகளில் தமிழினம் மயங்கிவிடக்கூடாது. மகிந்த ராஜபக்ச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளில் கடந்த இரு ஆண்டுகளில் சமாதானம், சுபீட்சம் பற்றி தெரிவித்து மறுநாள்களிலேயே இந்தப்படுகொலைகள் இடம்பெற்றிருந்தமையையும் இவ் விடத்தில் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.

தமிழனை அழிப்பதிலேயே சிங்களம் திருப்தி காணுகின்றது என்ற யதார்த்த நிலையையும் நாம் உணர்ந்தவர்களாக வேண்டும். ஏனெனில் இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் சிங்களவர்களைப் பொறுத்தவரை புலிகளே. இந்நிலை மகிந்தவின் தற்போதைய ஆட்சிக்காலத்தில் மேலும் விரிவடைந்து செல்கின்ற நிலையே காணப்படுகின்றது.

இந்நிலையில், திருகோணமலை மாணவர்கள் படுகொலை சம்பவத்தையும் படகுத்துறைப் படுகொலை சம்பவத்தையும் நினைவில் கொண்டு சிங்கள தேசம் குறித்த எச்சரிக்கை உணர்வுகளைப் பாடமாய்க் கொண்டவர்களாய் இந்தப் புதிய ஆண்டிற்குள் பிரவேசித்து எமது நிரந்தர வாழ்வை உறுதிப்படுத்துவோம்.

ஆண்டுத் தொடக்கங்களில் சிங்களப்படைகள் நடாத்திய தமிழினப் படுகொலைகளை வரலாறாய் நினைவூட்டிப் பார்க்கும் இவ்வேளை இவ்வாண்டின் ஆரம்பமான நேற்றைய தினம் சிங்கள தேசத்தில் நிகழ்ந்த படுகொலை சம்பவம் ஒன்றும் தமிழினத்தை கவலை கொள்ள வைத்துள்ளது என்ற செய்தியும் இவ்வாண்டுத் தொடக்கத்தில் பதிவாகியுள்ளது.

கொழும்பு வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டு வந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியுடன் சிங்கள தேசத்தின் தமிழிழனத்திற்கான புத்தாண்டுப் பரிசு இவ்வாண்டின் பரிசாகத் தொடங்கப்பட்டிருக்கிறது என்ற வேதனைக்குரிய செய்தியினையும் நாம் இவ்விடத்தில் பதிவாக்கவேண்டியதாயிற்று.

-ப.துஷ்யந்தன்-

0 Comments: