Monday, January 7, 2008

ஆட்டுவித்தால் ஆடாதார் யார்?

ஏற்கனவே செத்துச் செயலிழந்து சேடம் இழுத்துக் கொண்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ளும் முடிவை இலங்கை அரசு இப்போது, இந்தச் சந்தர்ப்பத்தில், யுத்த வெறிப் பழி தன் மீது விழக்கூடியதாக, ஒரு தலைப்பட்சமாக, எடுத்தது ஏன் என்ற கேள்வி பல தரப்புகளிலும் இருந்து எழுப்பப்படுகின்றது.

கடந்த ஆறு ஆண்டுகளாக இதுவரை காலமும் யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாக யுத்த நிறுத்த ஒப்பந்தம் தெரிவித்தாலும் அது பெயரளவிலேயே என்பதும், நடைமுறையில் யுத்த நிறுத்தம் என்று ஏதும் பேணப்படவேயில்லை என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. பெயருக்கு காகிதத்தில் யுத்த நிறுத்த இணக்கம் நீடிக்க, மறுபுறம் முழு அளவிலான யுத்தம் களத்தில் செயலில் அரங்கேறிக் கொண்டுதான் இருந்தது.

புலிகள் மீது முழு அளவிலான யுத்தம் ஒன்றை அரசு கட்டவிழ்த்து விடத் தீர்மானித்தால் கூட, பெயரளவில் நீடித்த யுத்த நிறுத்தத்தை அப்படியே காகிதத்தில் தொடர விட்டுவிட்டு, மறுபுறத்தில் தனது இராணுவச் செயற்பாட்டுத் திட்டத்தையோ அல்லது முழு யுத்தத்தையோ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசினால் முன்னெடுத்திருக்க முடியும்.
அப்படியிருக்க அதைச் செய்யாமல் விடுத்து யுத்த நிறுத்தத்தை முறித்த தரப்பு தானே என்ற அபவாதத்தை சர்வதேச சமூகத்தின் முன்னால் தானாகவே சம்பாதித்துச் சுவீகரித்துக் கொண்டு இத்தகைய முடிவுக்கு கொழும்பு அரசு ஏன் சென்றது என்ற கேள்வி இச்சமயத்தில் எழுவது நியாயமானதே.

தென்னிலங்கை அரசியல் கள நிலைவரப் போக்கைத் தனக்குச் சாதகமாகத் திசை திருப்புவதற்கு வேறு வழியே இல்லை என்ற எண்ணத்தில்தான் இத்தகைய அமிலச் சோதனைக்கு அரசுத் தலைமை தயாராகி, அதன் வழி சென்றிருக்கின்றது. ஆனால் தனது இந்த முடிவின் மூலம் தனது அரசின் மூக்கணாங்கயிறு லகான் தென்னிலங்கை பௌத்த, சிங்கள மேலாண்மைப் போக்குத் தீவிரவாதிகளின் கைகளில்தான் சிக்கிக் கொண்டுள்ளது என்பதைக் கூறாமல் கூறி ஒப்புக்கொண்டிருக்கிறது அரசுத் தலைமை என்பதும் கவனிக்கத்தக்கது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மேற்படி மேலாண்மைச் செருக்குப் பிடித்த ஜே.வி.பியுடனும், ஜாதிக ஹெல உறுமயவுடனும் தேர்தல் ஒப்பந்தம் செய்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் தமது புதிய உத்தேச அரசு கிழித்தெறியும் என்றுதான் அந்த ஒப்பந்தம் மூலம் ஒப்புக்கொண்டிருந்தார்.
ஆனால், அதைக் காலங்கடந்து சுமார் இரண்டாண்டுகள் தாமதமாகி இப்போது செயற்படுத்த முற்பட்டிருக்கின்றார் அவர்.

இடதுசாரி, மாக்ஸிஸ கோட்பாட்டாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஜே.வி.பி., மஹிந்தரின் அரசை நாடாளுமன்ற ஆசனங்களின் அட்சரகணிதக் கணக்குப்படி இக்கட்டுக்குள் நெருக்கடிக்குள் தள்ளி, அதன் மூலம் தன் விருப்பப்படி ஆட்டுவிக்கவும் செய்கின்றது. இந்த இடதுசாரிக் கோமாளிகளின் விருப்புக்கு அமைய அரசியல் நடவடிக்கைகள் அரங்கேறுவதையே இப்போது கொழும்பில் காண்கிறோம்.

உள்ளூர், உள்நாட்டு விடயங்களில் மட்டுமல்ல, சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர விவகாரங்களில் கூட இந்த இடதுசாரித் தீவிரவாதிகளின் விருப்பப்படியே இயங்கும் கட்டாயத்துக்குள் மஹிந்தரின் நிர்வாகம் சிக்கியிருப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.
மேற்குலகையும், ஐ. நா. போன்ற பொது அமைப்புகளையும் புறக்கணித்து, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட்டு விலகிச் சென்று, சீனா போன்ற சிவப்பு அரசுகளை அரவணைத்து இலங்கை அரசியல் நிர்வாகம் செயற்பட வேண்டும் என்பதுதான் ஜே.வி.பியின் இலக்கு, நோக்கம், விருப்பம் எல்லாம்.
அக்கட்சி எதிர்பார்த்தபடியே எல்லாம் கனகச்சிதமாக நடந்தேறுகின்றன.
இலங்கையில் செயற்படும் ஐ.நா. அமைப்புகள் மற்றும் சர்வதேச தொண்டர் அமைப்புகள் போன்றவை மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அரசுப் பிரதிநிதிகள் வெளியிட்டுவரும் அறிவிப்புகள், அறிக்கைகள்
அனைத்துலக சமூகத்தின் சிரத்தைக்கும் ஊன்றிய கவனிப்புக்கும் உள்ளான மனித உரிமைகள், அவசர மனிதாபிமானப் பணிகள், இடம்பெயர்ந்தோரின் அவலங்கள், போர்நிறுத்தம் போன்ற விவகாரங்களில் சர்வதேசத்தை குறிப்பாக மேற்குலகை துச்சமாக மதித்துத் தூக்கியெறியும் விதத்தில் கொழும்பு அரசு நடந்து கொள்கின்றமை
அதற்குப் பதிலாகவும் பிரதிபலிப்பாகவும் இராஜதந்திர வார்த்தைப் பிரயோகங்களில் மேற்குலகு வெளியிடும் அறிவிப்புகள்
இவைபோன்ற, பிற இன்னோரன்ன செயற்பாடுகள் ஜே.வி.பி. மாக்ஸிஸ வாதிகளின் விருப்பப்படியே சர்வதேச விவகாரங்களையும் கொழும்பு அரசு கையாள்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு.

புலிகளுடனான யுத்த நிறுத்தத்திலிருந்து இலங்கை அரசு விலகியமைகூட அவ்வாறு ஜே.வி.பியின் விருப்பத்தை நிறைவு செய்யும் பூரணப்படுத்தும் ஒரு செயற்பாடுதான் என்பதும் தெளிவு.

புலிகள் மீது தடைவிதிப்பு, தமிழர் தாயகத்தின் மீது கொடூரப் போர் என்பனவும் ஜே.வி.பி. விருப்பப்படி இனிக் கட்டவிழும் என்பதும் திண்ணம்.
அதேசமயம், மேற்குலகைப் புறக்கணிக்கும் ஜே.வி.பியின் சித்தாந்தத்தை மேலும் செயற்படுத்துவதற்காக சர்வதேச மட்டத்திலும் பல கற்றுக்குட்டித்தன நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என்றும் நம்பலாம்.
ஆட்டுவித்தால் ஆடாதார் யார் ஒருவர்.........?

Uthayan.com

0 Comments: