Sunday, January 13, 2008

தாக்குதல் திட்டங்களுடன் இருதரப்பும் தயார் நிலையில்

கென்யாவின் தேநீரில் பிரித்தானியா மக்களுக்கு கொள்ளைப்பிரியம். உலகிலேயே மூன்றாவது பெரிய தேயிலை உற்பத்தியாகும் நாடு அதுவாகும். அங்கு பிரித்தானியாவின் 60 நிறுவனங்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருவதுடன் பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கி வருகின்றன.

ஆனால் கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கு இடையில் உருவான வன்முறைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் றைலா ஒடின்கா தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கென்யாவில் இனப்படுகொலையையும், இனச்சுத்திகரிப்பையும் ஒத்த நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளதாக ஐ.நா.வின் சார்பு அமைப்பான ஆபிரிக்காவின் கிரேற் லேக் பிராந்தியத்திற்கான சர்வதேச மாநாட்டு அமைப்பு (ஐவெநசயெவழையெட ஊழகெநசநnஉந ழn வாந புசநயவ டுயமநள சுநபழைn) தெரிவித்துள்ளது.

ருவாண்டா, அங்கோலா, புறுண்டி, சூடான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாக 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மத்திய ஆபிரிக்காவின் மோதல்கள் நடைபெறும் பகுதியான கிரேட் லேக் பிரதேசத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்கு என உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

ஆபிரிக்காவின் சந்தை வாய்ப்புக்களை கையகப்படுத்திக்கொள்ள சீனா கடுமையாகப் போராடி வருகையில் (2006 ஆம் ஆண்டு கென்யாவின் எரிபொருளை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தை சீனா பெற்றிருந்தது) அந்த நாடுகளின் விவகாரங்களில் மேற்குலகமும், ஐ.நா.வும் விரைவாக நடவடிக்கை எடுத்து வருவது கவனிக்கத்தக்கது. ஐ.நா.சார்பு அமைப்பு ஒன்று கென்யாவில் இத்தகைய வாசகங்களை பயன்படுத்தியிருப்பது இதுவே முதற்தடவை என கூறப்படுகின்றது.

கென்யாவுடன் ஒப்பிடும் இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலைமை மிகவும் மோசமானது. 2005 ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஜனாதிபதி மஹிந்தவின் அரசு பதவியேற்ற பின்னர் உக்கிரமடைந்த மோதல்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளனர். டசின் கணக்கில் மனிதநேய பணியாளர்களும், ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடல் கடந்து இந்தியாவுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பாடசாலை சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் அதிகம். ஆனால் மேற்குலகத்தினதும், ஐ.நா. அமைப்புக்களினதும் நடவடிக்கைகள் கண்துடைப்பு போன்றதாகவே தொடர்ந்து இருந்து வருகின்றன என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்து. அதனை மறுக்கவும் முடியாது.

சூடான், மியான்மார், கென்யா என்பனவற்றில் நடவடிக்கை எடுப்பதற்கு காட்டப்படும் அவசரம் இலங்கையில் காட்டப்படவில்லை என்பது நிதர்சனமானது. மனித உரிமை அமைப்புக்கள் பல இலங்கையில் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அந்த கோரிக்கைகளை வலுவற்றதாக மாற்றுவதற்கு தேவையான காரணங்களை தேடியே மேற்குலகமும், ஐ.நா.வும் ஓடிக்கொண்டிருந்தன.

உலகக் கோப்பைக்கான துடுப்பாட்ட போட்டியின் போது அனைத்துலக மன்னிப்பு சபை மேற்கொண்ட போராட்டம் கூட மனித உரிமைகளை மேம்படுத்துவதில் எதையும் சாதிக்கவில்லை. மேற்குலகமும், ஐ.நா. அமைப்பும் மயில் இறகால் தடவுவது போன்ற உப்புச் சப்பற்ற கவலைகளை தெரிவித்து வருவதுடன், எதற்கும் பயனற்ற சில தடை முயற்சிகளையும் கொண்டு வருவது போன்று பாசாங்கு செய்து வருகின்றன.

பிராந்திய வல்லரசுகளினதும், மேற்குலகத்தினதும் பலவீனங்களை சரியாகப் புரிந்து கொண்ட அரசு போருக்கான தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தியே வருகின்றது. அதன் வெளிப்பாடாகவே அமைதிக்கான திறவுகோல் என சர்வதேச சமூகத்தால் வர்ணிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை அரசு மிகவும் சுலபமாக தூக்கி எறிந்துள்ளது. எனினும் இந்த நிலையிலும் கவலைகளை தெரிவிப்பதைவிட சர்வதேச சமூகத்தினால் எதனையும் சாதித்து விட முடியவில்லை.
போர்நிறுத்தம் தூக்கி எறியப்பட்டால் அதன் அடுத்த கட்டம் விடுதலைப் புலிகளை தடை செய்வதும், வலிந்த தாக்குதல்களை தீவிரப்படுத்துவதும்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

அதற்கான ஆயத்தங்களில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவே தென்னிலங்கையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார், வவுனியா, மணலாறு, முல்லைத்தீவு பகுதிகளினூடாக சமகாலத்தில் நகர்வுகளை ஆரம்பிப்பதுடன், கிளிநொச்சியை கைப்பற்றுவதை தமது பிரதான இலக்காக கொள்வதுமே படையினரின் தற்போதைய உத்தியாகும்.

இந்த நடவடிக்கைகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று படையணிகள் மன்னார், மணலாறு, வவுனியா களமுனைகளில் நிறுத்தப்பட்டுள்ள போதும், முகமாலையில் இருந்து கிளிநொச்சி நோக்கி நகர்வதற்கான ஆயத்தங்களும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன் முதற்கட்டமாக யாழ். மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 53 ஆவது படையணியின் மூன்று பிரிகேட்டுகள் நாகர்கோவில், முகமாலை, கிளாலி பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

53 ஆவது சிறப்புத் தாக்குதல் படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சமந்த சூரிய பண்டாராவுக்கு தாக்குதல் திட்டங்களுக்கான கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. முகமாலையில் நிலைகொண்டுள்ள பிரிகேட் படையணிக்கு கேணல் அதுல கொடிப்பிலி, கிளாலிப் பகுதியில் நிலைகொண்டுள்ள பிரிகேட்டிற்கு கேணல் சாந்த திஸநாயக்க, நாகர்கோவிலில் நிலைகொண்டுள்ள பிரிகேட்டுக்கு கேணல் நிசந்த ரணவக்காவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

53 ஆவது படையணியுடன் இணைக்கப்பட்டுள்ள கவசத்தாக்குதல் படையணியினரின் பெரும் பகுதி படையினரும் யாழ். குடாநாட்டின் தென்மராட்சி பகுதியிலேயே நிலை கொண்டுள்ளனர்.

இதற்கிடையே இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் பெரும் இராணுவ வெற்றி ஒன்றை பெற்றுவிட படைத்தரப்பு முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான பயிற்சிகளில் விமானப்படையினரின் கிபீர் மற்றும் மிக்-27 தாக்குதல் விமானங்களும், தாக்குதல் உலங்குவானூர்திகளும் ருவான்வெல, டிக்கோவிட்ட, தெரணியகல, கேகாலை, நிட்டம்புவ, மீரிகம பகுதி வான்பரப்பில் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நான்கு வாரங்களாக இந்த பகுதி வான்பரப்பில் பெரும் எண்ணிக்கையான தாக்குதல் விமானங்களின் பறப்புக்களை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த விமானங்கள் இரவு-பகல் வேளைகளில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக மன்னார் பகுதிகளில் நடந்து வரும் மோதல்களும் அரசின் நடவடிக்கைகளை ஓரளவு எதிர்வுகூறி நிற்கின்றன. ஆனால் அந்தப் பகுதிகளில் நடைபெற்று வரும் எதிர்ச்சமர்களில் படையினர் கணிசமான இழப்புக்களை சந்தித்து வருவதாக விடுதலைப் புலிகள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை மன்னாருக்கு தென்கிழக்காக 17 கி.மீ தொலைவில் உள்ள பரப்பங்கடந்தான் பகுதியில் நிலைகொண்டிருந்த 58 ஆவது படையணியின் பிரிகேட் படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட 122 மி.மீ பீரங்கித் தாக்குதலில் 9 இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அதற்கு முதல்நாள் செவ்வாய்க்கிழமை மன்னாரின் முள்ளிக்குளம் பகுதியில் 57 ஆவது படையணியினர் முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அதனை தொடர்ந்து மூன்று மணிநேரம் கடும் சமர் இடம்பெற்றதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் தற்போது இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை வவுனியா பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே விடுதலைப் புலிகளும் படையினரின் நகர்வுகளை முறியடிக்க தம்மை தயார்படுத்தி வருவதாக வன்னியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை மாவட்டத்தில் நிலைகொண்டிருந்து அம்பாந்தோட்டையில் விடுதலைப் புலிகளின் ஆழ ஊடுருவும் படையினரின் நடவடிக்கைகளை வழிநடத்திய கிழக்கு மாகாண புலனாய்வுப்பிரிவுத் தலைவர் கீர்த்தி தற்போது வன்னிக்கு நகர்த்தப்பட்டுள்ளதுடன், விடுதலைப் புலிகளின் சிறப்புத் தாக்குதல் படையணிகளில் ஒன்றான ஜெயந்தன் படையணியின் கட்டளைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

மேலும் வட போர்முனையில் விடுதலைப் புலிகளின் படையணிகள் சுறுசுறுப்பாக இயங்கி வருவதாகவும், அவர்களின் வழங்கல், மற்றும் கட்டளைப்பீடங்கள் முக்கிய போர் முனைகளை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாகவும் படையினரின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடபோர் முனை பெரும் சமருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகையில் இந்த வருடத்தின் முதல் வாரத்தில் கொழும்பில் நடைபெற்ற மூன்று குண்டு வெடிப்புக்களும் போர் நாடு முழுவதற்கும் விஸ்தரிக்கப்போகின்றது என்பதையே எடுத்துக்காட்டி நிற்கின்றது.

பிரகடனப்படுத்தப்படாத ஈழப்போர் பிரகடனப்படுத்தப்பட்ட முழு அளவிலான போராக மாற்றம் பெறுவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கையில் இலங்கை முழுவதையும் பெரும் அச்சம் சூழ்ந்துள்ளது. இது தென்னிலங்கை மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், அரசின் பொருளாதாரத்திலும் கணிசமான தாக்கங்களை உண்டு பண்ணி வருகின்றது.

எனவே அடுத்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்ட போராக மாறப்போகும் நாலாம் கட்ட ஈழப்போர் வன்னியில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துவதைவிட முழு இலங்கையையும் தாக்கத்திற்குள் தள்ளிவிடுவதற்குரிய சாத்தியங்களே அதிகமாகவுள்ளது.

-அருஸ் (வேல்ஸ்)-

0 Comments: