Thursday, January 17, 2008

"சுயாதீனக் கண்காணிப்பை வலியுறுத்தும் சம்பவங்கள்"

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோக பூர்வமாக செயலிழந்துபோகும் தறுவாயில் தென்னிலங்கையில், மொனறாகலை மாவட்டத்தில், புத்தளப் பகுதியில் இடம்பெற்ற மிகவும் மோசமான தாக்குதல் சம்பவங்கள் நெஞ்சை அதிரவைப்பன. இருவேறு தாக்குதல்களில் முப்பதுக்கும் அதிகமான அப்பாவிகளின் உயிர்கள் குரூரமாகக் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. அறுபத்தியைந்துக்கும் அதிகமானோர் படுகாயமுற்று அந்தரிக்கின்றனர்.

என்ன நோக்கத்துக்காக, யார் செய்திருந்தாலும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இத்தகைய கோரத் தாக்குதல்களும், குரூர நடவடிக்கைகளும் நியாயப்படுத்த முடியாதவை. வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

சட்டரீதியான, இறைமையுள்ள அரசு என்று தன்னைக் கூறிக்கொண்டு, தமிழர் தாயகத்தின் மீது தனது விமானப் படைகள் மூலம் கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சுக்களை நடத்தி, அப்பாவிப் பொதுமக்களுக்கு பேரிழப்புகளையும், பேரவலங்களையும் ஏற்படுத்தி வரும் அரச பயங்கரவாதத்துக்கு, சற்றும் குறைவானதல்ல அப்பாவிப் பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்படும் கிளைமோர்த் தாக்குதல்களும், அத்தகைய ஏனைய நடவடிக்கைகளுமாகும்.
தமிழர் தாயகத்தில், புலிகளின் இலக்குகளைத் தாக்குகின்றோம் என்று ஆலாபரணம் பண்ணிக்கொண்டு, வானத்திலிருந்து குண்டுகளைக் கொட்டி, பேரழிவு நாசங்களை ஏற்படுத்துவதும், இப்படி கிளைமோர்க்குண்டுகள் மூலம் பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதும் ஒன்றாகக் கருதத்தக்க கொடூரமான நடவடிக்கைகளே.
அரசியல் சுயலாபத்துக்காக ஒரு பக்க இழப்புக்களை மட்டும் கண்டித்துக்கொண்டு, மறுபுறம் "தமிழர் தலைவர்' எனத் தமக்குத் தாமே மகுடம் சூட்டியபடி, அப்பாவித் தமிழருக்குப் பேரவலத்தைத் தரும் தாக்குதல்களைக் கண்டிக்காமல் தவிர்த்துத் தத்துவம் பேசும் சங்கரியார் போல செயற்படாமல், அப்பாவிகளுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களையும் ஒரே குரலில் கண்டிப்போமாக!

இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வுக்கான வாய்ப்புகளை இறுக மூடி, இராணுவ வழித் தீர்வில் ஒற்றைக்காலில் நின்றபடி, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு தூக்கிக் கடாச முற்பட்டபோது அமெரிக்காவிலிருந்து ஐ.நாவரை சகல தரப்புகளுமே இப்படித்தான் ஆகும் என எச்சரித்திருந்தன.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, வன்முறைகள் பெருகி, மனிதப் பேரழிவுக்குத் திறவுகோலாகும் என அனைத்துத் தரப்பினரும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகையில், அதை உதாசீனம் செய்து புறக்கணித்த கொழும்பு அரசும், அத்தகைய செயற்பாட்டின் மூலம் இவ்வாறான வேண்டாத வினைகளுக்கு வெற்றிலை வைத்தது என்பதும் அவதானிக்கப்படவேண்டிய விடயமாகும். ஆனால் இலங்கை அரசு அப்படி நடந்துகொண்டது என்பதாலோ அல்லது தமிழர் தாயகம் மீது இதுபோன்ற கொடூரத் தாக்குதல்களை நடத்தி, அப்பாவித் தமிழர்களைக் கொன்றொழித்து, அவர்களைப் பல்லாயிரக் கணக்கில் இடம்பெயரவைத்து, பெருமளவு உயிர்களைக் காவு கொண்டு, உடைமைகளை நாசமாக்கி "அரச பயங்கரவாதம்' புரிந்து வருகின்றது என்பதாலோ மறுபுறத்தில் கெப்பிற்றிக்கொலாவை, புத்தள போன்ற பகுதிகளில் அப்பாவிப் பொதுமக்கள் பயணம் செய்த பஸ்கள் மீதான குரூர கொடூர தாக்குதல்களை நியாயப்படுத்திவிடவே முடியாது.

தென்பகுதியில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் தாக்குதல்களுக்கு எல்லாம் எடுத்த எடுப்பிலேயே புலிகள் மீது இலங்கை அரசு குற்றம் சுமத்துகின்றது. புலிகளை விட்டால் வேறுயார் இதைச் செய்வர் என்ற கேள்வியின் அடிப்படையில் "செல்லும் செல்லாதவை எல்லாம் செட்டியார் தலையில்' என்பதுபோல புலிகள் மீதே சுமத்தப்பட்டு விடுகின்றன.
நேற்று முன்தினம் இடம்பெற்ற புத்தள தாக்குதல் தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா கூட இத்தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உரிமை கோராவிட்டாலும் அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளப் பாணி தென்படுகின்றது எனக் குறிப்பிட்டு, அதனடிப்படையில் புலிகளே இத்தாக்குதலைச் செய்திருப்பர் என்ற கருத்தை முன்வைக்க எத்தனித்திருப்பது கவனிக்கத்தக்கது.

தென்பகுதியில் மட்டுமல்ல, தமிழர் தாயகத்திலும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்திலும் கூட இவ்வாறு அப்பாவிகளை இலக்குவைக்கும் கோழைத்தனமான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

நவம்பர் 27 ஆம் திகதி, மாவீரர் தினத்தன்று அங்கு இடம்பெற்ற அத்தகைய தாக்குதல் ஒன்றில் பாடசாலைச் சிறார்கள் ஒன்பதுபேர் உட்படப் பதினொரு பேர் உயிரிழந்தமை மறக்கற்பாலதன்று.
எனவே, இவ்வாறு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்ற கொடூரம் குறித்து எதிர்த்தரப்புகள் இரண்டும் மாறி,மாறி முன்மொழியும் குற்றச்சாட்டு அறிவிப்புகளை அறிக்கைகளை மாத்திரம் வைத்துக் கண்டனங்களை வெளியிடுவதில் அர்த்தமில்லை.
இத்தகைய கொடூரங்கள் குறித்து நேரில் பிரசன்னமாகி, சாட்சிகளை விசாரித்து, சான்றுகளை ஆராய்ந்து, விடயங்களைப் பரிசீலித்து, உண்மைகளை அம்பலப்படுத்தக்கூடிய அதிகாரத்துடன் சர்வதேச சுயாதீன கண்காணிப்புப் பொறிமுறை ஒன்று இலங்கையில் இருப்பது அவசியமானது.
இத்தகைய கொடூரங்களைத் தவிர்க்க அதுவே முதல் கட்டமாக முக்கிய வழிமுறையாகும்.
எனவே, புத்தளவில் இடம்பெற்ற கொடூரத் தாக்குதலும், வன்னி மற்றும் யாழ். குடாநாட்டில் தொடரும் அதுபோன்ற கோரங்களும் ஐ.நா.மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு போன்ற சுயாதீன அமைப்பின் அவசியத்தை எமக்கு வலியுறுத்துகின்றன.

தென்பகுதியில் இடம்பெறும் கொடூரத் தாக்குதல்களுக்காக மட்டும் அதிகம் கத்தும் கொழும்பு அரசு, இத்தகைய அனைத்துக் கொடூரங்களுக்குமான சூத்திரதாரிகளைப் பகிரங்கமாக அம்பலப்படுத்தத் தயார் என்றால் ஐ.நா. கண்காணிப்புக் குழுவுக்கு இணங்கவேண்டும். இணங்குமா அது?

Uthayan.com

0 Comments: