கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் திணறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நிவாரணத்தைத் தரக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு திராணியற்றதாக இருக்கும் அரசாங்கம் எரிபொருட்களின் விலையை மீண்டும் அதிகரித்ததன் மூலம் மக்களின் சுமையை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 10 ரூபாவாலும் டீசலின் விலையை 5 ரூபாவாலும் மண்ணெண்ணெயின் விலையை 2 ரூபாவாலும் அதிகரித்திருக்கிறது. இதன் பிரகாரம், ஒரு லீற்றர் (90 ஒக்ரேன்) பெற்றோலின் தற்போதைய விலை 127 ரூபாவாகும். ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 80 ரூபாவும் மண்ணெண்ணெயின் விலை 70 ரூபாவுமாகும். கடந்த வருடம் ஜூலை மாதத்திற்குப் பிறகு செய்யப்பட்டிருக்கும் இந்த எரிபொருட்களின் விலை அதிகரிப்பில் ஒரு விசித்திரத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது. விரைவில் எரிபொருட்களின் விலைகள் மீளாய்வு செய்யப்படமாட்டாது என்று பெற்றோலிய வளங்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி அறிவித்து ஒருவாரம் கூட முழுமையாகக் கடந்துவிட முன்னர் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலை அதிகரிப்பைச் செய்திருக்கிறது.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தனது கட்டுப்பாட்டை மீறிய விடயம் என்றும் உலகச் சந்தை நிலைவரங்களின் பிரகாரமே விலைகள் அதிகரிக்கப்படுகின்றன என்று கூறிவிட்டு அரசாங்கம் அதன் பொறுப்பிலிருந்து எளிதாக நழுவிவிடுவதே வழமை. அந்த வழமை இந்தத் தடவையும் தொடர்ந்திருப்பதைக் காண்கின்றோம். எரிபொருட்களின் விலை விவகாரத்தைப் பொறுத்தவரை அரசாங்கத் தலைவர்களினதோ அல்லது அமைச்சர்களினதோ கருத்துக்களையோ அல்லது அறிவிப்புக்களையோ மக்கள் நம்பமுடியாதென்பதால் அடுத்த எரிபொருள் விலை அதிகரிப்பு எப்போதுவந்து தங்கள் தலையில் விழுமோ என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. விலை மீளாய்வு தற்போதைக்கு இல்லை என்று கூறிய அமைச்சர் பௌஸி, `உலகச் சந்தை விலைகளுக்கு ஏற்ப எரிபொருட்களை விற்பனை செய்வதை பெருமளவுக்கு தவிர்த்துவந்ததனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு கோடிக் கணக்கான ரூபா நட்டம் ஏற்பட்டுவந்தது. இனிமேலும், கூட்டுத்தாபனத்தினால் நட்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது' என்று இப்போது தெரிவித்திருக்கிறார். கடந்த வருடம் 300 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசந்த டி மெல் கூறுகிறார். உலகச் சந்தை விலை நிலைவரத்தை நெடுகவும் காரணம் கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கம் அதன் பொருளாதார முகாமைத்துவத்தின் சீர்கேடான தன்மை எரிபொருட்களின் விலை அதிகரிப்பு உட்பட பொருளாதார நெருக்கடிக்கு எந்தளவுக்கு பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறது என்பதை சீர்தூக்கிப் பார்க்கக் கூடிய நேர்மைத் திறத்துடன் இல்லை என்பது தெளிவானது.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு என்பதை மக்களின் அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களின் தன்னியக்கமான அதிகரிப்பாகவே கருதவேண்டும். வாழ்க்கைச் செலவைப் பொறுத்தவரை மக்கள் சகல முனைகளிலும் பாரதூரமான நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த நாள் செலவுக்கு என்ன செய்யப் போகிறோம். என்று ஏங்கிய வண்ணமே அதிகப் பெரும்பான்மையான மக்கள் ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை வதைக்கும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கான எந்தவொரு உருப்படியான செயற்பாடுகளிலும் கவனத்தைச் செலுத்தக் கூடிய பொறுப்புணர்ச்சியுடன் அரசாங்கம் இல்லை. அதேவேளை, பொருளாதார நெருக்கடியைக் குறைந்த பட்சமேனும் தணிப்பதற்கான செயற்பாடுகளில் கவனத்தைச் செலுத்துவதற்கு ஆட்சியாளர்களுக்கு நெருக்குதல்களைக் கொடுக்கக் கூடிய போராட்டங்களை நடத்தக் கூடிய அருகதையுடன் எதிரணிக் கட்சிகளும் இல்லை. மக்களின் முதுகில் சவாரி செய்யும் அரசியல் முடிவில்லாத தொடர்கதையாகச் சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் பாவம் இந்நாட்டு மக்கள்!
www.thinakural.com
Tuesday, January 15, 2008
மக்களின் முதுகில் சவாரி செய்யும் அரசியல்
Posted by tamil at 11:58 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment