சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு நீர்கொழும்பு வீதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சரான தசநாயக்கவும் அவரது மெய்ப்பாதுகாவலர் மற்றும் சாரதி ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்.
அதேதினம் சிறிலங்கா லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அண்மையாக தொலைபேசிக் கூண்டுக்குள்ளிருந்து மற்றுமொரு குண்டு வெடித்து கொழும்பை பதற்றத்துக்குள்ளாக்கியுள்ளbr />?ு.
இதற்கு முன்னதாகக் கடும் பாதுகாப்பு நிறைந்ததும், மிக முக்கியஸ்தர்கள் பலரும் பயணம் செய்யும் கொம்பனித் தெருவில் இடம்பெற்ற ஒரு கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்காப் படையினர் உட்பட ஐவர் கொல்லப்;பட்டிருந்தனர்.
ஒருவார காலத்துள் அடுத்தடுத்து கொழும்பின் மையப் பகுதியிலும் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் இடம்பெற்ற இத்தகைய தாக்குதல்களானது கொழும்பின் பாதுகாப்புக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
அதேவேளை சிறிலங்காவின் அதியுயர் பாதுகாப்புத் திட்டத்துள் உள்ளடக்கப்பட்டுள்ள நாட்டின் தலைநகரான கொழும்பு ஒரு அபாயம் நிறைந்த நகராக மாறிவருவதை இக்குண்டு வெடிப்புக்கள் காட்டுகிறது.
கொழும்பின் இந்த நிலையானது அரசிற்குப் பல்வேறு வழிகளிலும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியதொன்றாகும்.
கொழும்பிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வெடிக்கும் குண்டுகளானது ஒன்றில் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்ட குண்டுகளாகவே அல்லது தாக்குதல் இலக்கிற்காகப் பொருத்தி வைக்கப்பட்ட கிளைமோர்க் குண்டுகளாகவோ காணப்படுகின்றன.
இதேவேளை இக்குண்டுகள் மூலம் தாக்குதல்களை நிகழ்த்தும் தாக்குதல்தாரிகள் தமது தாக்குதலை வெற்றிகரமாக நடாத்திவிட்டு மறைந்து விடுகின்றனர்.
இவ்வாறு மறைந்து வருகின்ற தாக்குதல்தாரிகளைக் கண்டுபிடிக்கவோ கைது செய்யவோ முடியாத நிலையில் சிறிலங்காவின் முப்படையினரும் திணறுகின்றனர்.
இந்நிலையானது சிறிலங்கா அரசின் கொழும்பைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் காணப்படும் ஓட்டைகளை வெளிப்படுத்துகிறது.
முப்படையினரின் இந்த இயலாமையானது கொழும்பில் மேலும் பல குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறும் என்ற அச்சத்தைத் தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆயினும் இந்த உண்மையை மூடி மறைத்து நாட்டின் தலை நகரம் மிகுந்த பாதுகாப்பின் மத்தியில் உள்ளதாகக் காட்டிக்கொள்ள சிறிலங்கா அரசும், அதன் படைகளும் பல்வேறு அறிக்கைகளை விடுத்து வருவதோடு, நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகக் காட்டிக்கொள்ள முயல்கின்றனர்.
இதில் கொழும்பிலும் அதன் புற நகரங்களிலும் திடீர் திடீரென வீதிச் சோதனைகளை நடாத்துவதோடு திடீர்ச் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு கைது நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
ஆனால் இந்த நடவடிக்கைகளின் போது அப்பாவிப் பொதுமக்களே பாதிக்கப்படுவதுடன் தண்டிக்கப்படவும் செய்கின்றனர்.
இத்தகைய குண்டுத் தாக்குதல்கள் மேலும் தொடருமாக இருந்தால் சிறிலங்கா அரசு கொழும்பைப் பாதுகாக்கும் விடயத்தில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் கொழும்பின் பாதுகாப்பிற்காக சிறிலங்கா அரசு ஏற்கெனவே பல ஆயிரக்கணக்கான முப்படையினரை அங்கு ஈடுபடுத்தியுள்ள நிலையில் மேலும் பல ஆயிரக்கணக்கான படையினருக்கான தேவை உருவாகும்.
அதேவேளை அரச உயர் அதிகாரிகள், படைத்தளபதிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் பயணங்கள் யாவும் பாதுகாப்பற்ற நிலைமைக்குத் தள்ளப்படுவதானது சர்வதேச ரீதியில் சிறிலங்காவில் செய்யப்படும் முதலீடுகளிற்கான பாதுகாப்பற்ற தன்மையாகக் கருதப்படும்.
இது கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைக்குள் கொழும்பைத் தள்ளிவிடுவதாக அமையும். இதனைத் தடுக்க இருக்கும் ஒரே வழி கொழுப்பின் பாதுகாப்பு ஏற்பாட்டை மேலும் இறுக்கி அதியுச்ச உசார் நிலைக்குக் கொண்டு வரவேண்டும். ஆனாலும் அப்போதும் கூட தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே.
அத்தோடு இதனை செய்ய வேண்டுமானால் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து கொழும்பிற்கு படைகளை நகர்த்த வேண்டிய தேவை சிறிலங்கா அரசிற்கு ஏற்படும்.
ஆனால் அவ்வாறானதொரு இயலுமையை சிறிலங்கா அரசு கொண்டிருக்கிறதா என்றால் இல்லையென்றுதான் கூறவேண்டும்.
ஏனெனில் அநுராதபுரம் ஹெப்பிற்றிக்கொல வீதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலையடுத்து இப்பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஊர்காவற்படையினரை யால பகுதிக்கு மகிந்த அரசு மாற்றியதன் காரணமாகவே ஹெப்பிற்றிக்கொலா பகுதியில் தாக்குதல் இடம்பெற்றதெனவும் இது மகிந்த தனது சொந்த மாவட்டத்தைப் பாதுகாப்பதற்காக ஏனைய மாவட்டங்களைப் பலிக்கடாவாக்கி வருவதையே காட்டுகிறது எனவும் அரசுக்கெதிரான கண்டனக் குரல்கள் ஏற்கெனவே எழுந்திருந்தன.
அந்தளவுக்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவதற்குப் பொலிசார் மற்றும் முப்படையினரின் பற்றாக்குறையில் சிறிலங்கா அரசு காணப்படுகிறது என்பதே உண்மை.
இந்த நிலையில் போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து ஒருதலைபட்சமாக சிறிலங்கா அரசு விலகியுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் போர் தீவிரமடையுமாக இருந்தால் சிறிலங்கா அரசிற்குப் படையினரின் தேவை இன்னும் அதிகமாகவே இருக்கச் செய்யும். இந்த நிலையில் தென்னிலங்கையிலிருந்து வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு படையினரைச் சிறிலங்கா அரசு நகர்த்துவதா அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து கொழும்பின் பாதுகாப்பிற்கு படையினரை நகர்த்துவதா என்ற குழப்பத்தில் சிறிலங்கா அரசு சிக்கித் திணற வேண்டியிருக்கும்.
கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் வெடிக்கும் குண்டுகளானது, போரானது இத்தீவின் முழுவதற்குமானதேயொழிய அது வடக்கிற்கு மட்டுமானதோ அல்லது கிழக்கிற்கு மட்டுமானதோ அல்ல என்பதையே புலப்படுத்துகிறது.
இன்று உலகின் அதிக குண்டு வெடிப்புக்களுக்கு உள்ளாகும் ஒரு நாட்டின் தலைநகரின் வரிசையில் கொழும்பும் ஒன்றாக மாறி வருவதையே அடுத்தடுத்து சிறிலங்காவின் தலைநகரில் வெடிக்கும் குண்டுகள் வெளிப்படுத்துகின்றன.
இக்குண்டு வெடிப்புக்கள் ஏற்படுத்தும் நேரடி அழிவுகளுக்கு அப்பால் மறைமுகமாக அது ஏற்படுத்தப்போகும் அரசியல், இராணுவ, பொருளாதார இழப்பு என்பது சிறிலங்கா அரசினால் இலகுவில் ஈடுசெய்யக் கூடியதொன்றாக இருக்கப் போவதில்லை.
இது விரைவாகவே சிறிலங்கா அரசைப் பலவீனப்படுத்துகின்ற ஒன்றாக அமையலாம்.
இந்த நிலையில் சிங்கள தேசத்தின் உள்ளங்கையாக இருக்கக்கூடிய அதன் தலைநகரான கொழும்பில் வெடிக்கும் குண்டுகள் அதன் எதிர்காலத்தை எங்கே கொண்டு செல்லப்போகிறது என்பதற்கு சிறிலங்கா அரசின் போர்வெறியே அதற்குப் பதில் சொல்லப்போகிறது.
-சிவசுப்பிரமணியம்-
Saturday, January 12, 2008
உள்ளங்கைக்குள் வெடிக்கும் குண்டு
Posted by tamil at 12:11 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment