Saturday, January 26, 2008

போர்நிறுத்தல் உடன்பாட்டின் முறிவும் ஈழப்போரின் இன்றைய பரிமாணமும்

-எரிமலை-


நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகி விட்டது. வலுவாக்கப்பட்டு, குவிக்கப்பட்ட ஆயுதப்படைகளின் துணையுடன் போரின் மூலம் மட்டுமே தமிழீழ மக்களின் விடுதலை இலட்சியத்தினைத் தோற்கடித்து விடலாம் என்ற முடிவுடன் முரண்பாட்டின் மையத்திற்குப் போரினை சிறிலங்கா மீள அழைத்து வந்துள்ளது. மறுபுறம், இந்தப் போரினை எதிர்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத கால கட்டத்திற்குள் தமிழீழ தேசமும்- புலிகள் அமைப்பும் நுழைந்துள்ளது.

இந்தப் பின்னணியில் இந்தப் போரின் எதிர்காலப் பரிமாணம் என்ன, ஈழப்போரின் புதிய அத்தியாயம் வெறுமனே தமிழர் (புலிகளின்) படைகளுக்கும், சிங்களப் படைகளுக்குமிடையேயான போர் என்ற வரைபுக்குள் அடங்கிவிடுமா அல்லது இது உலக, ஆசிய மற்றும் தென்னாசிய வல்லரசுகளும் சம்பந்தப்பட்ட பரந்த தளத்தில் இடம்பெறுகின்றதா?

***

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கிய கடல் ஒழுங்கையில், அதிகம் அச்சுறுத்தப்பட்ட பகுதியாகக் கருதப்படும் (ஆப்கானிஸ்தான் போர், பாகிஸ்தான் அணுகுண்டு, அல்-ஹைய்தா பதுங்குமிடங்கள் போன்ற விடயங்களால்) தென்னாசியாவின் பாதுகாப்பான வெளியெல்லையில் அமைந்துள்ள இலங்கைத்தீவில் இடம்பெறும் போர் சர்வதேச நலன்களுடன் தொடர்புபட்ட முக்கியமானதொரு சர்வதேச விவகாரம் என்பது இப்போது பரவலாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். நோர்வே மத்தியத்துவம், யப்பான் சிறப்புத்தூதுவர், இணைத் தலைமை நாடுகள் என்கின்ற வடிவில் மேற்குலகின் நிறுவனமயப்படுத்தப்பட்ட அணுகுமுறை இலங்கை இனச் சிக்கலுக்குள் செல்வாக்குச் செலுத்துகின்றது. இந்தியா என்ற உலக வல்லரசாகும் அபிலாசை கொண்ட பிராந்திய சக்தி தனது செல்வாக்கு எல்லைகளுக்குள் இலங்கை விவகாரத்தினை முடக்கிக் கையாள முற்படுகின்றது என்பது சுமார் போரின் முப்பது ஆண்டுகால வரலாறு கூறும் உண்மையாகும்.

இன்று, சீனாவின் முத்துச்சரம் எனும் கடல்சார் வியூகவிரிப்பில் இலங்கைத்தீவும் ஒரு முத்தாகக் கோர்க்கப்பட்டுள்ளது என்பதும் பொருளாதார-இராணுவ வலுவுடன் துரித வலு விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ள சீனா இலங்கைத் தீவில் தனது செல்வாக்கினைப் பெருக்கி வருகின்றது என்பது பிறிதொரு உண்மையாகும். யப்பான், ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல தரப்பும் இலங்கைத்தீவின் புவிசார் அமைவிடம் காரணமாக இலங்கைத்தீவின் மீது ஆர்வத்தினைக் கொண்டவர்களாகவே செயற்படுகின்றனர்.

இத்தகைய சர்வதேச உண்மைகள் மத்தியில் சிறிய தேசிய இனமான தமிழீழ மக்கள் தமக்கான படைப்பலத்தினைக் கட்டியெழுப்பி- பிரபாகரன் எனும் வலுவான தேசியத் தலைவரின் தலைமையில்-தங்களின் விடுதலைக்கான போரினைச் சிங்கள அரச அதிகாரத்திற்கு எதிராக நடாத்துகின்றனர். சிங்களத் தரப்பிடம் அகப்பட்டுக்கிடக்கும் அரச அதிகாரத் தினை (State Power) வசப்படுத்தி தமக்கான சுயமான அரசினை கட்டியெழுப்புவதற்கான போரில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், இலங்கைத்தீவின் அரச அதிகாரங்களை வசப்படுத்தி வைத்துள்ள சிங்கள தேசம் சர்வதேச விரிப்பினுள் தன்னைப் பொருத்திக்கொண்டு விடுதலைக்கான தமிழ் மக்களின் போரினை நசுக்க முற்படுகின்றது.

இந்தப் பின்னணியில், தற்போது ஆரம்பமாகியுள்ள அடுத்தகட்ட ஈழப் போரில் சர்வதேச சக்திகள் தங்களை எவ்வாறு பொருத்திக் கொள்கின்றன என்று ஆராய்வது கற்றலுக்குச் சுவாரஷ்யமானதும், விவாதிக்கப்பட வேண்டியதுமான முக்கிய விடயமாகும்.

***

இன்றைய உலக இயக்கம் ஒழுங்கற்ற அச்சில் இயங்குகின்றது (Anar chic Order) என்று விபரிக்கப்படுகின்றது. அமெரிக்கா முன்னெடுக்கும் வெளியுறவுக்கொள்கையில் காணப்படும் தன்னிச்சையான தன்மையும், சீனா முன்னெடுக்கும் கொள்கைகளில் காணப்படும் ஈவிரக்கமற்ற வணிக வலுவிரிவாக்கமும், ஐரோப்பிய ஒன்றியம் தனது புதிய ஒருங்கிணைக்கப்பட்ட வடிவத்தில் உலக விவகாரங்களை அணுக முற்படுவதும், மீள வலுப்பெற்று வரும் ரஷ்யாவின் உலகப்பார்வையும் இந்தக் கடுமையான யதார்த்தவாத அணுகுமுறையைப் பலப்படுத்துகின்றது. மறுபுறம், எரிபொருள் சிக்கல், சுற்றுப்புறச் சூழல் விவகாரம், பயங்கரவாதம் பற்றிய தன்னிச்சையான பார்வைகள், மாற்றங் காணும் வணிக வலுவிரிவாக்கம் போன்றன இத்தகைய அணுமுறைகளின் பின்னே புதிய விசைகளைப் பிறப்பிக்கின்றது. இதனால் உலக உறவுகளில் இப்போது நடைமுறை வாத அணுகுமுறை (Realisme) வெளிப்படையானதாகவுள்ளது. இந்த நடைமுறைவாத இயக்கப்போக்கில் நாடுகளின் நலன்களே மையத்தில் முடிவுகளைத் தீர்மானிக்கும். இதனால் இன்று சர்வதேச சட்டங்கள் எனப்படு பவையும், ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புக்களும் தங்களது செல்லுபடியாகும் தன்மையை இழந்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதனால் உலகம் சட்டங்களாலும், மனித நேய விழுமியங்களாலும் ஆளப்படாது நலன்களாலும், பலத்தினாலும் வழி நடத்தப்படுகின்றது என்கின்ற யதார்த்தம் வெளிப்படையாக இன்றைய உறவுகளில் ஆளுமை செய்கின்றது.

மறுபுறம், இந்தச் சர்வதேச ஒழுங்குகளில் அரசுகளே (States) இன்றைய உலகின் அடிப்படைக் கூறுகள் என்று வகுக்கப்பட்டுள்ளன. சர்வதேச மன்றங்களும், செயற்பாடுகளும், சட்டங்களும் இந்த அரசு என்ற கூறுகளினால் ஆக்கப்பட்ட விவகாரங்களாகவே எழுந்துள்ளது.

இந்த நடைமுறைவாதக் கோட்பாட்டினுள் பொருத்திப் பார்த்தால் சிங்கள அரசு எவ்வாறு உலக விவகாரங்களைக் கையாளுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

***

இன்று சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களும் மற்றும் மனிதாபிமானச்சட்ட மீறல்களும் மேற்குலகாலும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களாலும், ஐ.நா. போன்ற சர்வதேச மன்றங்களாலும் முக்கிய உலக விவகாரங்களில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை கவுன்சில், பாதுகாப்புச் சபையின் சிறுவரும் போரும் தொடர்பான பணிக்குழு போன்ற முக்கிய மையங்களில் சிறிலங்கா தொடர்பான விவகாரங்கள் விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது. (கவனிக்க: இன்றுவரை) தாக்கமுள்ள கண்டனங்கள், தண்டனைகள் சிறிலங்காவிற்கு எதிராக முன்னெடுக்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டு தமிழர்களினால் முன்வைக்கப்படுகின்றது.

இந்தச் சூழலை எவ்வாறு சின்னஞ் சிறிய சிறிலங்கா எதிர்கொள்கிறது?

சிறிலங்கா தனது இராஜதந்திரக் காய்களை நடைமுறைவாத உறவுகள் ஊடு நகர்த்துகின்றது. இன்று சர்வதேச விவகாரங்களில் தாக்கம் செலுத்தும் ஆசிய வலுநிலை மற்றும் ஆசிய நாடுகளின் ஒற்றுமை என்பன மனித உரிமைகள் விவகாரங்களில் சிறிலங்காவிற்குச் சாதகமாக அமைகின்றது. இதனை நடைமுறையில் நோக்கினால், சிறிலங்கா பெரும் மனித வதைகளைப் புரிகின்றபோதும் பிராந்திய வல்லரசான இந்தியா இதில் கரிசனை கொள்ளவில்லை. சீன வல்லரசு உச்ச உலக அமைப்பான பாதுகாப்புச்சபை வரையில் சிறிலங்காவின் நிலைப்பாட்டைத் தாங்கிப் பிடிக்கும் வெளிப்படையான சூழலுள்ளது. மேலும், பாகிஸ்தான் தலைமை தாங்கும் இஸ்லாமிய நாடுகளின் அணி போன்றன சிறிலங்கா சார்பு நிலைப்பாட்டினை எடுக்கின்றது. இந்த நிலைப்பாடானது மேற்குலகின் மனித உரிமைகள், சனநாயகம் போன்ற போதனைகளுக்கு (அல்லது இராஜதந்திரக் கருவிகளுக்கு) எதிராகப் பொதுவாக ஆசிய அரசுகள் கட்டியுள்ள காப்பரண்களாகும். ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் மத்தியில் மேற்குலகு இந்த விடயங்களைத் தனது கருவிகளாகப் பயன்படுத்தித் தங்கள் நாடுகளில் தலையிடுவதாக நம்புகின்றன. சிறிலங்கா இந்த எதிர்ப்புணர்வினுள் மறைப்பெடுத்துப் பதுங்கியுள்ளது.

மறுபுறம், இராணுவ மற்றும் வியூக ரீதியான சிறிலங்காவின் அணுகுமுறையானது தனது புவிசார் நிலைப்பாட்டினை (புநழ Pழடவைiஉள) பாவித்து நிகழ்த்தப்படுகின்றது. ஒருபுறம், தமிழர்களுக்கு எதிரான போரில் கட்டற்ற இராணுவ, வியூக உதவிகளை வழங்கக்கூடிய சீனாவினையும், பாகிஸ்தானையும் சிறிலங்கா தனது பிரதான இராணுவத் தளவாட விநியோகத்தர்களாக வைத்துள்ளது. இந்த நாடுகள் தங்கள் அணுகுமுறைகளில் அரச அதிகாரத்தினை மட்டுமே ஆதரிக்கும் வலுவான நிலைப்பாடுகளைக் கொண்டவை. ஆபிரிக்க விவகாரங்கள் பலவற்றில் சீனாவின் இத்தகைய போக்கு மேற்குலகிற்குக் கடும் யதார்த்தவாத அணுகுமுறையினைக் கற்பித்தது. சூடானின் டர்பூர் (னுயசகரச) இனச்சுத்திகரிப்புப் பற்றிய மேற்குலக மற்றும் ஐ.நா. குற்றச்சாட்டுக்களைச் சீனா உட்பட ஆசிய-ஆபிரிக்க-அரபு நாடுகளின் ஆதரவுகளுடன் வலுவாகவே எதிர்கொள்வதை ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளலாம். சூடானின் எண்ணெய்வளம் இந்த மாயஜாலத்தினைப் புரிகின்;றது.

சிறிலங்காவிற்குத் தான் வழங்கும் இந்த உறுதியான ஆதரவிற்குப் பிரதிபலனாகச் சீனா சிறிலங்காவில் தன் கால்களை ஆழமாகவே பதித்துள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்குள் நுழைவாயில்களைக் கொண்ட காலியில் உள்ள சீன ஆயுதக் களஞ்சியம், அம்பாந்தோட்டையில் உள்ள சீனத் துறைமுக வசதிகள் என்பன சீனாவின் இந்தப் புவிசார் ஆர்வத்தினை வெளிப்படுத்துகின்றன.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை எப்போதும் இந்தியாவைச்சுற்றித் தனது வியூக உறவுகளை வைத்திருக்கவே விரும்பும் என்பது வெளிப்படையானது. குறிப்பாக, இந்தியாவின் வியூக முக்கியத்துவமுள்ள தென்பிராந்தியத்தினை நோக்குவதற்குச் சிறிலங்காவில் கிடைக்கும் வசதிகள் பாகிஸ்தானிற்கு மிகுந்த பலனுள்ளவை. இந்தச் சீன மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தல்களைச் சில பொதுவாதக் காரணிகளால் இந்தியாவும் மேற்குலகும் கூட்டாக எதிர்கொள்ள விரும்புகின்ற போதும் இருதரப்புக்கும் இடையே நிலவும் வேறுபல முரண்பாடுகள் (கவனிக்க: இந்தியா தன்னை உலக வல்லரசாக விரிவாக்கம் செய்யும் முனைப்பிலுள்ளது) தவிர்க்க முடியாத பரஸ்பர நலன்சார் முரண்பாடுகளை உருவாக்குகின்றது. தனது காலடியில் சீனா, பாகிஸ்தான் மட்டுமல்ல மேற்குலகும் தளமமைப்பை அடிப்படையில் விரும்பாது. இது இந்தியாவிற்கு நீண்டகால இராணுவ, வியூக முனைகளில் இடையூறாக அமையும் என்பதை இந்தியக் கடற்படையும், பிறதரப்புகளும் தெளிவாக அறிந்து வைத்துள்ளன.

எனினும், இலங்கைத்தீவின் இனச்சிக்கலைப் பாவித்து சீனாவும், மேற்குலகும் இலங்கைக்குள் கால்பதித்துவிட்டது என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டது. இந்தியா இந்த ஏற்பாட்டிற்குள் ஒரு நுட்பமான கோட்டை வரையப் பார்க்கின்றது. கடந்த 20 வருடங்களாகவே புலிகளுடனான முரண்பாடு என்கின்ற தோற்றத்தைப் பாவித்து சிறிலங்காவுடன் (சிங்கள அரச அதிகாரத்துடன்) தன் நிலையை வலுப்படுத்த இந்தியா முயல்கின்றது. மறுபுறம், தமிழர்களின் வலுவிரி வாக்கத்துடன் எப்போது தேவைப்பட்டாலும் சமரசத்தினை எட்டக்கூடிய விதத்தில் தமிழகத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையேயுள்ள தீர்க்கமான பிணைப்பை இந்தியா பாதுகாத்து வருகின்றது.

இந்த இரு தோணிகளில் பயணம் செய்யும் வித்தைக்கு, மேற்குலகின் நிறுவனவடிவப்படுத்தப்பட்ட தலையீடு அசௌகரகத்தினை ஏற்படுத்துகின்றது. மேற்குலக ஏற்பாட்டிலான போர்நிறுத்தல் உடன்பாடும்-இனச்சிக்கல் தணிப்பு முயற்சிகளும் தளம்பலை ஏற்படுத்துகின்றது.

மேற்குலகினைப் பொறுத்தவரை சீனாவின் வியூகத்தில் சிறிலங்கா இணையாமல் தடுப்பதற்கும், தங்களது செல்வாக்கின் கீழ் திருமலை உட்பட்ட முக்கிய மையங்களை வைத்திருப்பதற்குமான அணுகுமுறையினை மேற்கொள்கின்றது. குறிப்பாக பாகிஸ்தானால் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் குழப்பம் இந்தத் தேவைக்கு மேலும் வலுச்சேர்க்கின்றது. போர்நிறுத்தல் உடன்பாடு, சமாதானப் பேச்சுவார்த்தைகள், இணைத்தலைமை நாடுகள் உட்பட்ட நடவடிக்கைகளை மேற்குலகம் மேற்கொண்டது. இவை வெளிப்படையாகச் சிறிலங்கா அரசினை மையப்படுத்திய நடவடிக்கைகளாகவே அமைந்தன. அல்லது, அத்தகைய மையப்படுத்தலுடனான தலையீட்டையே சிறிலங்கா ஏற்றுக்கொண்டது. இந்த மேற்குலக வரைபடத்தில் தமிழர்களின் ஆயுதம் தரித்த விடுதலைப் போர் இடைநிறுத்தப்பட்டு, தமது கண்காணிப்புக்குள்-தாராளவாத பொருளாதாரக் கொள்கை கொண்டதாக (டுiடிநசயட நுஉழழெஅiஉ Pழடiஉநைள) அரசு அதிகாரம் இயங்க வேண்டும். இங்கு முக்கிய விடயம் தமிழர்களின் ஆயுதம் தரித்த போரினை நிறுத்த வேண்டுமாயின் அதன் ஆதாரமான இனச்சிக்கல் தீர்க்கப்படல் வேண்டும். அல்லது தமிழர்களுக்கும் அரச அதிகாரத்தில் பங்கு வழங்கப்பட்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்படல் வேண்டும். மறுபுறம், இனச்சிக்கல் தீர்வுக்கான வழிமுறைகளில் இரு அரசுகளை (சிங்கள- தமிழ் அரசுகள்) உருவாக்கினால் அதன் விளைவுகள் எவ்வாறு என்பது மேற்குலகிற்கு 'தெரியாத பூதம்' போன்றதாக இருக்கும். இந்த வரைபடத்தில் தமிழீழ கோரிக்கையைப் பற்றி நிற்கும் புலிகள் இயக்கம் குறுங்கால நோக்கில் பிரச்சினையானதாக உள்ளது. எனினும், இலங்கைத்தீவின் நடைமுறையில் புலிகளையும் உள்ளடக்கிய தீர்வுத்திட்டமே தேவைப்பட்டது என்பதுடன் புலிகளின் இராணுவ வலு முக்கியமானதொரு கூறாக இலங்கைத்தீவினுள் செல்வாக்குச் செலுத்துவது மறுக்க முடியாத பிராந்திய நடைமுறையாகும்;. இதனால் புலிகளையும் உள்வாங்கி- பகுதியாக அங்கீகரித்துச் செயற்பட மேற்கு முனைகின்றது.

சிறிலங்கா சர்வதேச சக்திகளின் இந்த வியூக நலன்கள் சார் அணுகுமுறைகளைப் புரிந்துகொண்டு காய்களை நகர்த்தி இராணுவ வழிப்பட்ட தனது நோக்கினைப் பலப்படுத்திக் கொண்டது. படைப்பல வலு அதிகரிக்கப்பட்டது. பலதரப்பு அணுகுமுறைகள் மூலம் உளவு மற்றும் தொழில்நுட்பத் தகவல்கள் பெறப்பட்டன.

எனினும், குறுங்காலத்தில் பயன் தந்த இந்த அணுகுமுறைகள் சிறிலங்காவின் மத்திய காலம் அல்லது நீண்டகால நலன்களுக்குப் பயன் தருமா? சிறிலங்காவின் குறுங்கால நலன்களுக்கு உதவும் உலக சக்திகள் தங்களது நீண்டகால நலன்களைப் பிரதி பலனாகப் பெறும் என்பது வெளிப்படையான கணக்கு.

***

சிறிலங்கா தங்களின் முரண்பாடுகளைப் பயன்படுத்தித் தனது நலன்களுக்கான நகர்வுகளை முன்னெடுக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளும் மேற்குலகும், இந்தியாவும், சீனாவும் பிற தரப்புக்களும் அந்த நகர்வுகளின் விளைவுகளைத் தங்களது அளவுகோல்களில் அளவிடுகின்றன. தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கான பலவித முயற்சிகளையும் மேற்கொள்கின்றன.

இந்தியாவும், மேற்குலகும் தனது நடவடிக்கைகளுக்கு இயல்பாகவே இடையூறு செய்ய முற்படும் என்பதையும் சீனா கணித்தே வைத்துள்ளது. எனினும், சிங்கள தேசியவாதத்தின் வளர்ச்சியும், அதற்கு எதிரான தமிழர் ஆயுத எதிர்ப்பு இயக்கமும் தனது வாய்ப்புக்களை எப்போதும் பிரகாசமாகவே வைக்கும் என்பதையும் சீனா அறியும். மேலும் நீண்டகாலம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய மின் உற்பத்தி, பிற உட்கட்டுமானத் துறைகளில் சீனா முதலீடு செய்து வருகின்றது. தற்போது மன்னார் எண்ணெய் அகழ்வுப் பணிகளில் சீனாவும் ஈடுபடும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. சீனா தமிழர் தரப்புக்களுடனான தொடர்புகளைத் தவிர்த்து வருகின்ற போதும் சிங்கள அதிகாரத்தின் பலதரப்புக்களுடனும் நேச உறவுகளைப் பேணி வருகின்றது.

இலங்கைத் தீவின் இன முரண்பாடு மிக முக்கியமானதொரு வியூக விடயம் என்பதை எப்போதும் இந்தியா வெளிப்படுத்தியே வந்துள்ளது. இலங்கை இனச்சிக்கலின் தரப்புக் களான சிறிலங்கா அரசு, அரசியல் கட்சிகள், இராணுவத் தளபதிகள், துணைப்படைக்குழுக்களின் தலைவர்கள், ஊடகங்கள் எனப்பல தரப்புடனும் உறவாடல்களைப் புரிகின்றது. சிறிலங்காவின் பொருளாதாரத் தினைத் தனது வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் இழுத்துப் பிணணத்து வைத்துள்ளது. எரிபொருட் களஞ்சியங்கள் முதல் பல வியூக நலன்சார் விடயங்களில் முதலீடுகளைச் செய்துள்ளது. புலிகளின் தேசிய தலைமைப் பாத்திரமும்-புலிகளுடனான உறவுச் சிக்கலும் இந்தியாவிற்கு மிக முக்கிய சிக்கலான விடயமாகும். இதனால், இலங்கை விவகாரத்தில் இந்தியாவினால் முழுமையான செல்வாக்கினைச் செலுத்த முடியவில்லை.

மறுபுறம், மேற்குலகம் சிறிலங்காவின் அணுகுமுறையினையும், தனது சக போட்டிச் சக்திகளின் செல்வாக்குகளையும் சரியாகவே கணித்துக் காய்களை நகர்த்துகின்றது. போர்நிறுத்தல் உடன்பாடு மேற்குலகத்தரப்புக்கு நிறுவனமயப்பட்ட தலையீட்டு வடிவத்தினைத் தருகின்றது. புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட சூழல் நிலவினாலும் நோர்வே ஊடாகத் தமிழர்களின் பிரதான அரசியல், இராணுவ தலைமையின் தொடர்பாடல்கள் பேணப்படுகின்றன. கொழும்பின் மேட்டுக்குடிகளை பிரதிபலிக்கும் சிங்களத் தலைமைகள், இராணுவ-சமூக மற்றும் பொருளாதாரத் தலைமைகளின் மீது மேற்குலகிற்குச் செல்வாக்குள்ளது. எனினும், தேசியவாத முரண்பாடு முற்றியுள்ள இலங்கைத்தீவில் பிற சக்திகளின் செல்வாக்குகளை இல்லாதொழிப்பதற்கும் முக்கிய துறைமுகங்கள் மற்றும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைச் செல்வாக்கிற்குள் வைத்திருப்பதற்கும் தவிர்க்க முடியாத தலையீட்டினைச் செய்யும் எதிர்கால வாய்ப்புக்களை மேற்குலகு கட்டியெழுப்பி வருகின்றது என்றே ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மனித வதைகள் மற்றும் மனிதாபிமானச் சிக்கல்களை மையப்படுத்திய மனிதாபிமான தலையீட்டுக்கான சாத்தியங்கள் இங்கு முக்கியமானது. (கவனிக்க: சிறிலங்கா மீதும், புலிகள் மீதும் தொடர்ச்சியாக மேற்குலக ஊடகங்களும், நிறுவனங்களும் மனித உரிமை மீறல் பட்டியல்களை வெளியிடுகின்றன- ஐ.நா. தலையீடு கோரப்படுகின்றது. மறுபுறம்-சிங்களத்திடம் உள்ள அரச அதிகாரங்கள் தமிழ் மக்களினால் வலிந்து பெறப்பட்டு பிரயோகிக்கப்படும் சூழல் ஏற்பட்டால் இருதரப்புக்கும் இணக்கமுள்ள தரப்பாகத் தன்னை மேற்கு நிலை நிறுத்தும் வாய்ப்புக்களும் உள்ளன. (கவனிக்க: கிளிநொச்சிக்குப் போய் வருவதற்கு நிரந்தர உரிமை கோரும் இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை) ஒரு மோசமான சூழலில், நலன்கள் அச்சுறுத்தப்பட்டால், பிராந்திய சக்திகளுடன் இணைந்து இலங்கைத்தீவினுள் வலிந்த வழிகளில் செல்வாக்குச் செலுத்தவும் மேற்குத் தயங்காது என்கின்ற விவாதங்களும் நிலவுகின்றன.

இத்தகைய சிக்கலான சர்வதேச ஆர்வத்தின் மத்தியிலேயே தமிழர்களின் ஆயுதம் தரித்த விடுதலைப் போர் இடம்பெறுகின்றது. தமிழர்கள் எதிர்கொள்வது வெறுமனே சிறிலங்காவை மட்டுமல்ல என்பதும் புரியப்படுகின்றது. இந்தப் புரிதலுடனேயே தமிழர்களின் 'வாய்ப்புக்கள் எங்குள்ளது' என்ற கேள்வி ஆராயப்படல் வேண்டும்.

அடிப்படையில் எமக்கான பிரதான நுழைவாயில்கள் எப்போதும் இந்த நடைமுறைவாத உறவுப் புள்ளிகளில் நாங்களும் செல்வாக்குச் செலுத்துவதில் தங்கியுள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியக் கடற்பாதைகளில் எமது கிழக்குப் பகுதிக் கடற்கரைகள் அமைந்துள்ளன. திருமலைத் துறைமுகம் புதிய உலக அமைவில் செல்வாக்குப் பெறும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. மன்னாரின் புதிய எண்ணெய்வளக் கண்டுபிடிப்புக்களும், அதனை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கூறு போட்டு விற்பதற்குச் சிறிலங்கா எடுக்கும் முயற்சிகளும் முக்கியமானவையாகிவிட்டன. மேலும், மதவாத மற்றும் அடிப்படைவாதச் செல்வாக்கு அதிகரிக்கும் தென்னாசியப் பிராந்தியத்தில் ஈழத் தமிழர்களினதும், புலிகள் இயக்கத்தினதும் மத அடிப்படைகளற்ற, சமூக முன்னேற்றத்தினைப் பொருளாதாரக் கொள்கைகளாகக் கொண்ட சிந்தனைகள் செல்வாக்குச் செலுத்துவது முக்கியமானதொரு சமூக நிலவரமாகும்.

இத்தகைய பலவித வாய்ப்புக்களின் மையமாகத் தமிழர்களின் வலு விரிவாக்கம் காணப்படுகின்றது. முப்படைக் கட்டுமானங்களையும் கொண்டதும், தேவைப்படும் இடங்களில் அந்த வலுவினைப் பிரயோகிக்கக்கூடிய தலைமை தமிழர்களிடம் காணப்படுகின்றது. மறுபுறம், கட்டுப்பாட்டுப் பகுதியினையும், வடிவமைக்கப்பட்ட அரச கட்டுமானங்களையும் கொண்டதாக அங்கீகரிக்கப்படாத (னுந-குயஉவழ ளுவயவந) தமிழீழ அரசு எழுந்து நிற்கின்றது. சர்வதேசம் இந்தத் தமிழீழ அரசுடன் தொடர்பாடல்களைப் புரிகின்றது. இந்த ஒழுங்குமுறை பல்வேறு போட் யிடும் சர்வதேச சக்திகளுக்கு இலங்கைத் தீவு தொடர்பாக மாற்றுப்பாதையைக் கொடுக்கின்றது. இத்தகைய வாய்ப்புக்களினைத் தமிழர்களின் நலன்களுக்காகப் பாவிக்கும் முனைப்புத் தமிழீழ தேசியத் தலைமையிடம் காணப்படுவது மற்றுமொரு கோட்டிட்டுக் காட்டப்படும் கூறாகும்.

***

இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் போர் என்பது வெல்லப்படும் அடிப்படைகளைக் கொண்டதொரு போர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்த வெற்றிபெறும் 'அடிப்படைகளைப் பாதுகாப்பதும்' 'வலுப்படுத்துவதுமே' இன்றுள்ள தமிழீழ மக்கள் திரளினதும், புலத்துத் தமிழ்மக்களினதும் செயற்பாடாக அமைகின்றன.

இந்தப் 'பாதுகாக்கும்-வலுப்படுத்தும்' செயற்பாடுகள் என்பது படைக் கட்டுமானங்களை வலுப்படுத்தல், கட்டுப்பாட்டுப்பகுதிகளைப் பாதுகாத்தல், விரிவடைய வைத்தல் என்பதுடன் நேரிடையாகத் தொடர்புபட்டது. மிக அதிகளவு அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன் சிறிலங்கா தற்போது முடுக்கிவிட்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் தமிழர்களின் இந்தக் கூறினை வலுவிழக்க வைக்கும் வியூக நோக்கலிலானதாகும். கட்டுப்பாட்டுப் பகுதிகளை இல்லாதொழிப்பதும், புலிகள் இயக்கத்தின் இராணுவ வலிமையை இல்லாதொழிப்பதும் இன்று சிறிலங்காவின் எதிர்கால ஆக்கிரமிப்பிற்கான இறுதியான வழியாகி விட்டது. இது இலங்கைத்தீவினை முழுமையாகவே ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்காவிற்கு சாவா-வாழ்வா போர் என்று கூட விபரிக்கலாம். இங்கு சிறிலங்காவின் சாவு என்பது இலங்கைத்தீவின் வடகிழக்குப் பகுதிகளிற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட அரச அதிகாரம் தமிழீழத்தின் கைகளுக்கு மாற்றப்படுதல் என்று புரிந்து கொள்ளலாம்.

சர்வதேச அரங்கில் புலிகள் தலைமை தாங்கும் தமிழர்களின் 'அரசு' நிகழ்த்தும் உறவாடல்கள் ~அடிப்படைகளைப் பாதுகாத்தல்-நிலைப்படுத்தல் நடவடிக்கையின் அடுத்த கூறாக அமைகின்றன. இந்த உறவாடல்கள் சர்வதேச வாய்ப்புக்களுடன் தமிழர் நலன்களைப் பிரதிபலிக்கும் உறவாடலில் ஈடுபடும். தமிழீழ நலன்களுடன் பலதரப்பு நலன்சார் அரசியலைப் பேசவைக்கும். தமிழர்களைத் தனது எல்லைகளுக்குள் கட்டிப்போட முயலும் இந்தியாவுக்கும், சிறிலங்கா அரச அதிகாரத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தனது நலன்களைக் காக்கலாம் என்று நினைக்கும் சீனாவுக்கும், சிங்கள அரச அதிகாரத்தினை மையத்தில் வைத்தவாறு (State Centric) தமிழர்களை கையாள முயலும் மேற்குலகும் தமிழர் அரச அதிகாரம் என்ற நடைமுறையை அங்கீகரிப்பதற்குத் தமிழர்களின் இராஜதந்திர வலு முயற்சிகளை மேற்கொள்ளும்.

இவ்வாறான, வெற்றிகளுக்கான அடிப்படைகள் மீது தமிழீழ தேசிய தலைமை கட்டியெழுப்பும் போரானது அடிப்படையில் ஒரு மக்கள் போராகும். மக்களின் கட்டற்ற ஆதரவுடனும், பங்குபற்றுதலுடனும் இந்தப் போர் முன்னெடுக்கப்படுவதால் வெற்றி பெறும் முக்கிய அடிப்படை அங்கு வலுவாக முரசறைகின்றது.

0 Comments: