Monday, January 14, 2008

நீதித்துறையுடன் பொருத தயாராகும் அரச நிர்வாகம்

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நான்காம் கட்ட ஈழப்போர் முழு அளவில் வெடிக்கப்போவது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையில் நேரடி முரண்பாடு முற்றி வெளிப்படப் போவதும் இங்கு அரங்கேறுகின்றது.
நீதித்துறையின் உயர் பீடமான உயர்நீதிமன்றத்தை அரசின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தாறுமாறாக விமர்சித்திருக்கின்றார். அதேவேளை, உயர்நீதிமன்றத்தின் ஓர் உத்தரவையும் மீறி, வருவது வரட்டும், மாற்று நடவடிக்கையைத் தான் எடுக்கப்போவதாக நிறைவேற்று அதிகாரம் சூளுரைத்திருப்பதாகவும் தகவல்.

சிறுபான்மையினரின் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்காக யார் குரல் எழுப்பினாலும் அரசுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் சீற்றம் ஏற்படுவதையே நாம் இலங்கையில் பொதுவான விடயமாக அவதானித்து வருகின்றோம்.

இலங்கையில் பாதிப்புற்றுள்ள சிறுபான்மையினரான தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் மனித நேயப் பணியாளர்களுக்கும் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும் உள்ள நெருக்கடி குறித்து குரல் எழுப்பிய ஐ.நா.வின் கீழ்நிலைச் செயலாளரையே "பயங்கரவாதிகளின் கைக்கூலி' என விமர்சித்த நாட்டின் தலைவர்கள் இங்குதான் உள்ளனர். அதனால், இப்போது நாட்டின் உயர்நீதிமன்றத்தை "புலிகளுடன் ஒப்பந்தம் செய்து அதை நிறைவேற்றும் தரப்பு' என்ற சாரப்பட அவர்கள் விமர்சித்திருக்கின்றமை ஆச்சரியப்படத்தக்கதல்ல.
தாறுமாறாக சோதனைத் தடைகளை அமைத்து, மக்களின் போக்குவரத்து மற்றும் நடமாட்ட சுதந்திரத்தைப் பறிப்பது முற்றிலும் தவறானது என உயர்நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றது.

அதேபோல, இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகளின்றி வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தி, மக்களின் தனிப்பட்ட வாழ்வியல் உரிமைகளுக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் என்றும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருக்கிறது.
இந்த உத்தரவுகளையே கடுமையாக விமர்சித்திருக்கின்றார், முன்னர் ஐ.நா. கீழ்நிலைச் செயலாளரை "பயங்கரவாதிகளின் கைக்கூலி' என வர்ணித்த அரசின் சிரேஷ்ட அமைச்சரும், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதம கொரடாவுமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.
இலங்கையின் உயர்நீதிமன்றம் உட்பட பிரதான நீதிமன்றங்கள் கொழும்பு ஹல்ஸ்டோர்ப்பில் புதுக்கடையில் உள்ளன.

ஆகவே, உயர் நீதிமன்றத்தை, "அளுத் கடையின்' (புதுக்கடையின்) சட்ட உத்தரவு என்று குறிப்பிட்டு, அவர் கூறியிருக்கும் கருத்து, உயர்நீதிமன்றத்தின் தனித்துவத்துக்கு சவால் விடும் நடவடிக்கையாகும்.

""அளுத்கடைச் சட்டத்தின் உத்தரவுகள் விடுதலைப் புலிகள் தலைநகருக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்துவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றன.'' என்று கடுமையாக விமர்சித்திருக்கின்றார் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்?975;ாபுள்ளே.

இதேவேளை நாட்டின் நிர்வாகம் குறித்து, உயர்நீதிமன்றத்தின் அமர்வு ஒன்றில் பிரதம நீதியரசர் சரத் நந்தன சில்வா, பகிரங்கமாகக் கூறிய ஒரு கருத்தும் இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
கொழும்பில் தமிழர்கள் வகைதொகையின்றி நியாயமான காரணமின்றி கைது செய்யப்படுகின்றமையை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு கடந்த திங்களன்று விசாரணைக்கு வந்தபோதே நீதிமன்றத்தில் இவ்விடயம் குறித்துப் பகிரங்கமாகக் குறிப்பிட்டார் பிரதம நீதியரசர்.

""இதேபோன்ற சூழ்நிலைக்கு ( மக்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்படுகின்றமைக்கு) 1997 1998 இலும் முகம் கொடுக்க வேண்டி நேர்ந்தது. ஆனால் அப்போது அறிவார்ந்த நிர்வாகம் ஒன்று இங்கு இருந்தது. ஆனால் இப்போது குருட்டு நிர்வாகமே உள்ளது.'' என்று அப்பட்டமாகக் கூறியிருக்கிறார் பிரதம நீதியரசர்.

அதேசமயம், வீதிகளில் தடைநிலைகள் அமைத்தல் மற்றும் கைதுகள் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை உதாசீனம் செய்யும் வகையில் நிறைவேற்று அதிகாரம் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக சூளுரைத்திருக்கின்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக, சட்டமியற்றும் துறையான நாடாளுமன்றமும், நிறைவேற்று அதிகாரமும் சேர்ந்து நீதித்துறையுடன் பொருதுவதற்கான ஒரு சூழலுக்குக் கருக்கட்டியிருப்பதாகவே தோன்றுகின்றது.
இதேபோன்றதோர் சூழ்நிலை மற்றொரு தென்கிழக்காசிய நாடான பாகிஸ்தானிலும் அண்மையில் உருவானதும், அங்கு சர்வாதிகாரமாகச் செயற்படும் நிறைவேற்று அதிகாரம், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறித்து அதைக் கபளீகரம் செய்தமையையும் சர்வதேசம் நேரடியாக அவதானித்தது.
இலங்கையில், அரசுடனும், நிறைவேற்று அதிகாரத்துடனும் நீதித்துறைக்கு இப்போது ஏற்பட்டுள்ள முரண்பாடு எங்கு போய் முடியப் போகின்றது?

உரிமைகள் மறுக்கப்பட்டு, நாதியற்று, அல்லலுறும் தரப்புகளுக்கு நீதி வழங்கும் நீதித்துறையே இப்போது சவாலுக்கு உள்ளாகும் அவலம் இத்தேசத்தில் ஏற்பட்டிருக்கிறது.
நீதித்துறையின் தனித்துவமும், சுயாதீனமும், அதிகாரமும் நிலைத்து நீடித்துச் செல்லுபடியாகுமா? அல்லது அடங்கிப் போகுமா அடங்கிப் போக வைக்கப்படுமா ? காலம் விரைவில் பதில் கூறும்.


Uthayan.com

0 Comments: