Wednesday, January 9, 2008

"சிறீலங்காவின் போரும் அதனை எதிர்கொள்ளலும்"

பெரும் போருக்கான அறிவிப்பை சிறீலங்கா அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு சாதாரணமானதல்ல. இதை உலகெங்குமுள்ள தமிழர்களும் விடுதலை உணர்வாளர்களும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்குப்பின்னால், மிகப்பயங்கரமான ஒரு வலைப்பின்னலுண்டு. சர்வதேசத்தின் ஆதரவுத்தளத்தை வைத்துக்கொண்டு போர் மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடமுனைகிறது சிங்களத்தரப்பு.

அது இவ்வாறு முன்னரும் சில சந்தர்ப்பங்களில் முயன்றிருக்கிறது. அப்போதெல்லாம் தமிழ் மக்கள் தளராது நின்று போராடியதால் சிங்களத்தரப்பை தோற்கடித்தார்கள். தாங்கள் வெற்றி பெற்றார்கள்.
குறிப்பாக இந்தியாவை புலிகளுடன் மோதவிட்டார் ஜே.ஆர். அப்போது புலிகளின் மையம் வன்னிக் காட்டுக்குள் அடக்கப்பட்டதாக ஜே.ஆர் பகிரங்கமாகவே வெளியே பெருமையடித்தார். அப்போது புலிகளை ஒடுக்கி விட்டதாக இந்தியப் படையினரும் நினைத்தார்கள். ஆனால் தமிழ் மக்களும் புலிகளும் இந்த நிலைமைகளுக் கெல்லாம் ஈடுகொடுத்து வெளியே வந்தார்கள். அடுத்த நெருக்கடி சந்திரிகா குமாரதுங்க காலத்தில் ஏற்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை என்ற பெயரில் பெரும் படையெடுப்பை நடத்தி போராட்டத்தையே முழுதாக ஒடுக்கிவிட சிங்களத்தரப்பு முனைந்தது. அப்போதும் சந்திரிகா குமாரதுங்கவுடன் சர்வதேச சமூகம் கைகோர்த்தே நின்றது. சந்திரிகா சகலதரப்பையும் தன்பக்கம் வைத்துக்கொண்டு தமிழ் மக்களின் மீது போரைத் தொடுத்தார்.

அவர் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளை வெளியேற்றினார். இப்போது மகிந்த, கிழக்கிலிருந்து வெளியேற்றியிருக்கிறார். அவர் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் வெளியேறிய பிறகு அதனை அரசாங்கப் படைகளின் பெரு வெற்றியாகக் கொண்டாடினார். கிழக்கில் வாகரை வெற்றியையும், தொப்பிக்கல வெற்றியையும் கொண்டாடியதைப்போல. பிறகு வன்னியில் ஜெயசிக்குறு படை நடவடிக்கையை மிக நம்பிக்கையாக சந்திரிகா ஆரம்பித்தார். அப்போது அந்த நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவை சர்வதேச சமூகமும், சிங்கள மக்களும், கட்சிகளும் தாராளமாக வழங்கியிருந்தன.

தமிழ் மக்கள் அப்போது பெரும் பொருளாதாரத் தடைக்குள்ளும் போர் முற்றுகைக்குள்ளும் தள்ளப்பட்டார்கள். வன்னியின் ஆழம் வரையில் அரசாங்கத்தின் படைகள் சென்றிருந்தன. ‘கிளைமாக்ஸ்’ எப்பிடி இருக்கப்போகிறது என்று வெளியுலகம் எதிர்பார்த்திருந்தது. அதேவேளை சிங்களத்தரப்பினர் புலிகளின் கதையும் முடிந்தது. தமிழர்களின் போராட்டமும் முடிந்தது என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எல்லா எதிர்பார்ப்பையும் தலைவர் பிரபாகரன் தலைகீழாக மாற்றி புதிய வரலாற்றை எழுதினார்.
எதுவோ நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த சர்வதேச சமூகத்தை பிரபாகரன் தன்னிடம் வரவழைத்தார்.
புரிந்துணர்வு உடன்படிக்கைக் காலத்தில் வன்னியில் சர்வதேச சமூகம் திரண்டிருந்ததற்கான பிரதான காரணம் வன்னி மீதான பெரும்போரை புலிகள் வெற்றிகொண்டதன் காரணமாகவும், கட்டுநாயக்கா விமானத்தளத்தின் மீதான அடியின் நிலைமையினாலும் என்று பலரும் தெரிவித்தமையை இங்கே நினைவு கொள்ளலாம்.

ஆக, ஒரு பெரும் போரை எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதைப்போலவே இப்போதும் வரலாற்றின் நிலைமைகள் கிட்டத்தட்ட வந்திருக்கின்றன. அதற்காகவே இந்த “மீள்நினைவு படுத்தல்” அவசியமானது. அதாவது மீளவும் அதே நிலைமை உருவாகியிருக்கிறது.
அப்போது ஒடுக்குமுறையைச் செய்து கொண்டிருந்த சிறீலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவளித்த அதே சர்வதேச உலகம் இப்போதும் அதேபோல ஆதரவளிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளின் முன்னர் மகிந்த ராஜபக்சவுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த சர்வதேச சமூகம் இப்போது கூட்டுச் சேர்ந்து போரை நடத்துகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சிங்களத்தரப்பு நீதியான
தொரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்திய சர்வதேச சமூகம், இப்போது அந்தக்கதையையும் நிலைப்பாட்டையும் மெல்லக் கைவிட்டிருக்கிறது. போரில் தமிழ் மக்களை தோற்கடிப்பதன் மூலம் சிங்களத்தரப்புக்கு அதிக நன்மைகளிருக்கலாம். ஆனால் சர்வதேச சமூகத்துக்கு அதனால் என்ன நன்மைகளுண்டு என்ற கேள்வி எழுகிறது. அதற்கு முன்னர், இப்போது சர்வதேச சமூகத்தை நோக்கி உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் பெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக இந்திய மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்கக்கூடியவாறான ஒரு இயங்கு நிலையை தமிழக அரசியற்கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் பொதுமக்களும் உருவாக்கவேண்டும். இது ஒரு தொடர் செயற்பாடு என்ற ரீதியில் திட்டமிட்டு இயங்குதல் அவசியம். ஏனெனில் சிறீலங்கா அரசாங்கம் மிக விரைவாக போரை நடத்துவதற்கான முழு ஏற்பாட்டிலும் தீவிரமாகவே ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. அதைப்போல புலம் பெயர்நாடுகளில் உள்ள தமிழர்களும் இலங்கையில் நடக்கின்ற போரை நிறுத்துவதற்கான முழுமுயற்சிகளில் ஈடுபட வேண்டும். குறிப்பாக மேற்குலகின் நடவடிக்கைகளில் சிறீலங்கா தொடர்பாக புதிய அணுகுமுறைக்கான அழுத்தங்களை ஏற்படுத்துதல் அவசியமாக உள்ளது.

தலைவர் பிரபாகரன் மாவீரர்நாள் உரையில் சொன்னதைப்போல உலகெங்கும் பரந்திருக்கின்ற தமிழர்கள் இப்போது பெரும் எழுச்சியுடன் தமது அறிவுப்பலத்தையும் ஒன்று பட்ட நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும். அதற்கான பொறுப்பை இப்போதே இந்தக்கணத்திலிருந்தே ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டு செயலில் இறங்குவது அவசியமானது. ஏனெனில், ஒருபோதும் சிங்களத்தரப்பை நாம் வெற்றி பெற அனுமதிக்க முடியாது. அதுவும் ஒடுக்குமுறையையும் நீதி மறுப்பையும் செய்து கொண்டிருக்கும் அரசும், பேரினவாதமும் வெற்றி பெறுவதற்கு எப்படி அனுமதிக்க முடியும்?
சர்வதேச சமூகம் ஒரு நீதி மறுப்புக்கு பகிரங்கமாகவே தனது ஆதரவைக் கொடுக்கப்போகிறதா என்ற கேள்வியை நாம் உலகத்திசைகளில் வலிமையாக அவர்களுக்கு புரியும் பாசையில் தொடுப்பதன் மூலம் நமக்கான வெற்றிப்பாதையை திறப்பதுடன் எதிர்த்தரப்பை தோற்கடிக்கவும் முடியும்.

களத்தில் புலிகள் காட்டுகின்ற எதிர்ப்புக்கு நிகரான எதிர்ப்பு வலயத்தை ஏனையோர் செய்ய வேண்டும். இது காலத்தின் அவசியமான கட்டளை. எவரெவர் எந்தப்புலத்திலும் எந்தத்தளத்திலும் வாழ்ந்தாலும் தமது தாயக விடுதலைக்காக அவரவர்களுக்கு ஏற்ற வகையில் போராடுவது அவசியமானது. அதுவே பல கதவுகளையும் திறக்கும். அத்துடன் எதிரியை எதிர்ப்பதற்கான முதன்மையான வழியாகவும் அது இருக்கும். பெரும்பாலான விடுதலைப் போராட்டங்களில் இத்தகைய ஒன்று திரண்ட மக்களின் பங்களிப்பும் எழுச்சியுமே விடுதலையைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.

அதைப்போல எங்களுடைய சமூகமும் இப்போது ஒன்றாகத்திரள வேண்டிய சந்தர்ப்பம் வந்திருக்கிறது. அடம்ன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பார்கள்.
கிழக்கிலிருந்து புலிகள் வெளியேறிய பின்னர் அங்கே முஸ்லிம்களின் பாதுகாப்பும் கேள்விக்குரியதாகி விட்ட
தென்று சொல்லப்படுகிறது. ஏன் சிறீலங்கா முஸ்லிம் கொங்கிரசின் தலவைர் றவூப் ஹக்கீம் உட்பட பல முஸ்லிம் அமைப்பினரும் இதை கவலையோடு சொல்கின்றனர். முஸ்லிம்களின் நிலத்தை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளும் அங்கே சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடரப்படுவததாக இந்த முஸ்லிம் தரப்புகள் சொல்கின்றன.

இனவிகிதாசாரத்தை மாற்றுவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுகிறதாக இவர்கள் பகிரங்கமாமகவே தெரிவிக்கிறார்கள். இது எதனைக்காட்டுகிறது.
இப்போது அம்பாறை மாவட்டத்தில் புலிகளின் நடமாட்டமும் தாக்குதல்களும் இருப்பதால் அங்கே கொஞ்சம் முஸ்லிம்களின் நிலையில் பாதுகாப்பிருப்பதாக அங்கிருக்கும் ஒரு முஸ்லிம் நண்பர் சொன்னார். கடந்த ஆண்டில் அம்பாறையில் பதினொரு முஸ்லிம்களை சிறீலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினர் படுகொலை செய்ததையும் அவர் நினைவூட்டினார். எனவே இப்போது ஏற்படவிருக்கும் விளைவுகளைப்பற்றி சகலருக்கும் நன்றாகவே தெரியும். ஆகவே இந்தப்போரை எல்லோருமாகவே இணைந்து முறியடிக்க வேண்டும். அதற்கான களமும் காலமும் முன்னே வந்து நிற்கிறது.

மனோகரன்

0 Comments: