Friday, January 25, 2008

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளா? அரசுத் தரப்புப் பிரதிநிதிகளா?

"மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக' சுமார் ஒன்றரை வருடத்துக்கும் அதிகமான காலத்தை இழுத்தடித்து, ஒவ்வொன்றும் பல மணி நேரம் நீடித்த அறுபதுக்கும் அதிகமான அமர்வுகளை நடத்தி, கடைசியில் ஒரு சிறிய இடைக்கால அறிக்கையை முன்வைத்திருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு.

ஆக, 1988இல், இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளை, நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியைக் கோரும் ஒரு துண்டு ஆவணத்தோடு வந்திருக்கிறது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு.

அரசமைப்புச் சட்டத்தில் விலாவாரியாகக் குறிப்பிடப்பட்டு, சட்டரீதியான அந்தஸ்தும் பெற்றுள்ள இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு யாருடைய சிபார்சும் அவசியமானதல்ல. ஜனாதிபதியே தம்பாட்டில் அதைச் செய்யமுடியும். அதற்கான அதிகார வலுவும் சட்டப்பலமும் அவர் கைவசம் உள்ளன.

அறுபது அமர்வுகளுக்கு மேல் கூடி ஆராய்ந்து, ஒன்றரை வருடத்தை இழுத்தடித்தபின்னர், யதார்த்தத்தில் ஏற்கனவே உள்ள ஒரு விடயத்தைத்தான் ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்ட முடிந்திருக்கின்றது இந்த அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால்.
அப்படியிருந்தும் கூட, அரசமைப்பின் அந்தப் பதின்மூன்றாவது திருத்தத்தில் மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய முக்கியமான அதிகாரங்கள் இவை, இவைதாம் என்று வற்புறுத்திக் கூறக்கூட அந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவால் இயலாமல் போயிற்று என்பதுதான் விசனத்துக்குரிய விவகாரம்.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படவில்லை. பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.கட்சியும், ஜே.வி.பியும் அதிலிருந்து வெளியேறிய நிலையில் அதில் ஆக பதினான்கு கட்சிகளின் பிரதிநிதிகளே எஞ்சியிருந்தனர்.
அந்தப் பதினான்கு கட்சிகளில் பன்னிரண்டு கட்சிகள் மஹிந்தரின் அரசில் அமைச்சுப் பதவிகளுடன் அவரின் அடிவருடிகளாக ஒட்டிக்கொண்டு இருப்பவை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகப் பிரிவு, ஜாதிக ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய ஐக்கிய கூட்டமைப்பு (நு ஆ), மலையக மக்கள் முன்னணி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய காங்கிரஸ், லங்கா சமசமாஜக் கட்சி ஆகியனவே அந்தப் பன்னிரண்டுமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், மேலக மக்கள் முன்னணியுமே அரசுக்கு வெளியே இருப்பவை.
இவ்வாறு பதினான்கில் பன்னிரண்டு கட்சிகள் அரசுக்குள் அடிவருடிகளாக இருப்பதனால்தான் போலும், ஜனாதிபதி மஹிந்தரின் எதிர்பார்ப்பை அப்படியே எழுத்து வடிவத்தில் தமது இடைக்காலத் திட்டமாகக் கொண்டுவந்து ஒப்புவித்திருக்கின்றன அக்கட்சிகள்.

அதிகாரப்பகிர்வுக்கான அரசமைப்பின் அந்தப் பதின்மூன்றாவது திருத்தத்தில் பல முக்கிய அதிகார விடயங்கள் மாகாணங்களுக்கும், மத்திய அரசுக்கும் பொதுவான அதிகாரப் பட்டியலில் உள்ளன. அவற்றை ஜனாதிபதியோ அரசோ விரும்பினால்தான் மாகாணங்களுக்கு விட்டுக்கொடுக்க முடியும்.
அப்படியான பிரதான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குங்கள் என்று ஜனாதிபதியைப் பார்த்து சிபார்சு செய்யக்கூட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தைரியமும் திராணியும் இருக்கவில்லை. இது தொடர்பான தமது அதிருப்தியை தங்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு போனமையைத் தவிர உருப்படியாகத் தமது உணர்வை நிலைப்பாட்டை அவர்களால் வெளிப்படுத்தவே முடியவில்லை என்பதுதான் நிலைமை.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் ஜனாதிபதிக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள சிபார்சின் பிரகாரம், ஏற்கனவே பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் கிழக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படும். வடக்கு மாகாண சபையை நிர்வகிக்க இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படும் என்றெல்லாம் கூறப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தொடரும் இராணுவ அராஜக நிலையில் சுயாதீனமான சுதந்திரமான ஒரு தேர்தலுக்கு இப்போதைக்கு வாய்ப்பே இல்லை என்பது தெளிவு.

அதேசமயம், வடக்கு மாகாண சபைக்கு இடைக்கால நிர்வாகம் என்பதும் வெறும் "கப்ஸா'.
அங்கு ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாகாண ஆளுநரே ஆட்சி நிர்வாகத்தைத் தொடர்வார். அவருக்கு ஆலோசனை வழங்குவதற்கே ஓர் இடைக்கால ஆலோசனைக்குழு அமைக்கப்படுமாம். அதுவே, ஜனாதிபதியின் விருப்பை நிறைவு செய்யும் விதத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் ஒப்படைக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கான ஆட்சி ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநராலேயே கொண்டு நடத்தப்படும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் செய்யும் எண்ணம் ஜனாதிபதி மஹிந்தருக்கு இல்லவே இல்லை என்பதும் உறுதி.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அங்கு ஆளுநருக்கு வெறும் ஆலோசனைகளை மட்டும் வழங்கும் சபையை அமைக்க எண்ணும் ஜனாதிபதியும் அவரது அரசுப் பிரதிநிதிகளும், அந்த ஆலோசனைக்குழுவை இடைக்கால நிர்வாகமாகக் காட்ட எத்தனிக்கின்றமை விநோதமானது.
ஆக, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் எதிர்பார்ப்பை சிரமேற்கொண்டு தாங்கி நிறைவு செய்திருக்கின்றது. அவ்வளவே.

Uthayan.com

0 Comments: