Sunday, January 20, 2008

ஜே.வி.பியின் ஒரே வழி.......

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தினால் தான் தேசப்பற்றாளர்களைப் போருக்கு ஆதரவாக அணிதிரட்ட முடியும் என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியிருக்கின்றார்.

முழு அளவிலான யுத்தம் ஒன்று மகிந்த ராஜபக்ச அரசாங் கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் அதாவது போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்து இண்டு வார காலக்கெடுவும் முடிந்துவிட்ட நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்திருக்கிறார்.

மகிந்த ராஜபக்ச சனாதிபதியாகப் பதவியேற்றது முதல் அதனை இவ்வாறான ஒரு நிலைக்கு விரைந்து தள்ளுவதில் ஜே.வி.பி ஒரு பாரிய பங்கை வகித்திருக்கின்றது.

முதலில் சிங்களப் படைகளின் உளவுரணை அதிகரிப்பதாகக் கூறி அல்லிமலர் இயக்கம் என்ற பெயரில் படைமுகாம் படை முகாமாகச் சென்ற ஜே.வி.பி. பிரமுகர்கள் படையினர் மத்தியில் பெரும் இனவாதப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்த அல்லிமலர் இயக்கம் அரசியல் சாராதது எனக் கூறிக்கொள்ளப்பட்ட போதும் ஜே.வி.பி.யினது செல்வாக்கு இதில் மேலோங்கிக் காணப்பட்டது. ஒரு நிலையில் படையினர் மத்தியில் தமக் கெதிராகக் கூடத் தூண்டுதல் இடம் பெற்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுவிட மகிந்த ராஜபக்ச இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்திவிட்டார்.

தமது ஆதரவின்றி மகிந்த அரசாங்கம் நீடிக்கமுடியாது என்ற நிலையில் மகிந்த ராஜபக்சவை தமது விருப்பப்படியெல்லாம் ஆட்டுவிப்பதில் ஜே.வி.பி தீவிரமாக ஈடுபட்டது. சமாதானப் பேச்சுவார்த்தையிலிருந்து மகிந்த ராஜபக்சவை விலகச் செய்வதில் ஜே.வி.பி. பாரிய அழுத்தம் கொடுத்தது அல்லது விலகுவதற்கு அது உதவிபுரிந்தது என்றும் கூறலாம்.

இதனையடுத்து கடந்த வரவு செலவுத்திட்டத்தின்போது மட்டு மல்ல அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கும் கூட ஜே.வி.பி முன்வைத்த நிபந்தனைகள், பேச்சுவார்த்தைகள் சமாதான முயற்சிகளிலிருந்து அரசாங்கம் விலகவேண்டும். நேரடியாக யுத்தத்தில் குதிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இப்போது போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகிக்கொண்டு நேரடியாக யுத்தத்தை நடத்துவது என்ற முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த நிலைக்கு மகிந்த வருவதற்குத் தாம் கொடுத்த அழுத்தமே காரணம் என ஜே.வி.பி. பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அடுத்து விடுதலைப் புலிகளைத் தடைசெய்தல் அந்நிய நாடுகளின் தலையீடுகளைத் தடுத்து நிறுத்தல் எனத் தேசப்பற்றுடன் மகிந்த அரசாங்கத்தைச் செயற்படச் செய்வது என்ற திடமான முடிவுடன் ஜே.வி.பி. இருக்கின்றது.

இதனையெல்லாம் அது தவறான வழியில் செல்லும் மகிந்த அரசாங்கத்தைத் திருத்தி நல்வழிப்படுத்தும் செயலாக அது பெருமைப்பட்டுக் கொள்கின்றது.

ஆனால் இதுவரை அது பெரிதாக வாய்திறக்காத விடயம் விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாகும். பாதுகாப்புச் செலவீனத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாவரை நிதி ஒதுக்கப்பட்டபோதும் அதற்காகவே வரவு-செலவுத்திட்டத்தைத் தோற்கடிக்க விரும்பாது அது செயற்பட்டது.
நாளுக்கு நாள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள் என்பன விலை ஏறியபோதும் அதற்கு எதிராகக் குரல் எழுப்புவது என்பது யுத்தத்திற்கெதிராகச் செயற்பட்டதாகிவிடும். அது தேசத்துரோகம் ஆகிவிடும் என அது கூறிவந்தது.

அதாவது பாதுகாப்புச் செலவினத்திற்கு எதிராகவும் விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்தும் போராட்டம் நடத்தினால் அது தேசத்துரோகம் எனக்கூறிவந்தது. இப்பொழுது விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தினாலேயே தேசப்பற்றாளர்களைப் போருக்கு அணிதிரட்ட முடியும் என அது கூறுகின்றது,

தேசப்பற்றாளர்கள் என ஜே.வி.பி.யினர் கூறுவது தம்மையும் தமது ஆதரவாளர்களையுமேயாகும்.

இன்று இவர்கள் மட்டுமல்ல சிங்கள தேசமே விலைவாசி ஏற்றம் வாழ்க்கைச் செலவு என்பவற்றால் என்றுமில்லாத நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது. முன்னர் சிறிலங்கா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட வேண்டிய தேவையே அற்றுப் போய்விட்டது. இன்று அது ஒவ்வொரு குடும்பத்திலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. ஜே.வி.பி கூறித்தான் புரிந்துகொண்டோ அல்லது உணர்ந்து கொண்டோ எவரும் இந்த விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராடத் தேவையில்லை. இது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

எனவே பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள சிங்கள மக்களைத் தம்வசமிழுக்கும் நோக்குடன் இவ்வாறான ஒரு கோசத்தை முன்வைக்க வேண்டிய தேவை ஜே.வி.பிக்கு ஏற்பட்டு விட்டது.

இதன் காரணமாகவே ஜே.வி.பி. விலைவாசி ஏற்றம் பற்றிக் கதைக்க அது ஆரம்பித்துள்ளது.

அதாவது மகிந்த அரசாங்கத்தை முழு அளவிலான யுத்தத்திற்குள் இழுத்துவிட்டு அதன் தோல்விக்கு- வீழ்ச்சிக்கு வழிகோலி விட்ட ஜே.வி.பி. அதனை ஒரேயடியாக வீழ்த்தும் ஆயுதமாக இப்போது விலைவாசி ஏற்றத்தை எடுத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டமையையே ஜே.வி.பி.யின் இந்த நடவடிக்கை புலப்படுத்துகின்றது. போரை நடத்திக்கொண்டே பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது என்பது எவ்வாறு என்ற கேள்வியை ஜே.வி.பி.யிடம் கொடுத்தால் ஜே.வி.பி.யிடமே அதற்குப் பதிலில்லை.

வளர்ச்சியைவிட நெருக்கடியைச் சந்தித்து இக்கட்டான நிலையில் விலைவாசி அதிகரிப்பையோ பொருளாதார வீழ்ச்சியையோ எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முடியாத கையறுநிலையை மகிந்த அரசாங்கம் அடைந்துள்ள நிலையில் ஜே.வி.பி கேட்டாலும் கேட்காவிட்டாலும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது என்பது முற்றிலுமே இயலாத காரியம்.

இந்நிலையில். அவ்வாறு கட்டுப்படுத்தினால் தான் தேசப்பற்றாளரின் ஆதரவு கிடைக்கும் என்ற ஜே.வி.பி.யின் கூற்றானது மகிந்தவை நட்டாற்றில் கைவிட்டது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

-வேலவன்-

0 Comments: