Tuesday, January 8, 2008

வலைப்பொறி விரித்தமையை ஒப்புக்கொள்கின்றார் ரணில்

""சர்வதேச சமூகத்தின் தலையீடு, நெருக்குவாரம் மூலம் புலிகளைக் கட்டுப்படுத்தி, அமுக்கும் தனது அந்தரங்கத் திட்டத்தையே "சர்வதேசப் பாதுகாப்பு வலைப் பின்னல்' என ரணில் விக்கிரமசிங்க கூறிவந்தார். சமாதானத்தின் பெயரால், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன், விக்கிரமசிங்க அரசு விரித்துவைத்த அரசு வலைப்பொறிக்குள் சிக்கிவிடாது இருப்பதில் எமது இயக்கத் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. அதேவேளை, சமாதானப் பேச்சுக்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதில் நாம் வெற்றிகண்டோம்.'

நோர்வே அனுசரணையுடனான சமாதானப் பேச்சுகள் பற்றிய தமது மதிப்பாய்வின் முடிவிலே இவ்வாறு குறிப்பிடுகின்றார் அந்த சமாதானப் பேச்சுகளில் தமிழர் தரப்பின் சார்பில் முக்கிய பங்காற்றியவரான புலிகளின் மதியுரைஞர் அமரர் "தேசத்தின் குரல்' அன்டன் பாலசிங்கம்.
இப்போது செயலிழந்துபோவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் வாசகங்களை ஒவ்வொரு சொல்லாக வடித்த சிற்பிகளுள் அவரும் ஒருவர்.

அந்த யுத்தநிறுத்தத்தையும் சமாதான முயற்சிகள் என்ற நடிப்பையும் பயன்படுத்தி புலிகளை சர்வதேச மட்டத்தில் பொறியிலிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசு அப்போது முயன்றது.
நேர்மைத் திறனோடு விடுதலைப் புலிகளுடன் பேசி, நியாயத் தீர்வு காண்பதை விடுத்து, புலிகளை வஞ்சகப்பொறிக்குள் மாட்டி, சிக்கவைத்து மடக்குவதே ரணில் அரசின் தந்திரத் திட்டமாக இருந்தது என்பதை தந்திரோபாயங்களில் ஊறித் திளைத்த புலிகள் சுலபமாகவே உய்த்தறிந்து உணர்ந்துகொண்டு விட்டனர்.

அதன் காரணமாகவே அப்போதைய அமைதிப் பேச்சுகளில் பிடிகொடுக்காமல் நசிந்து, நழுவி, வெளியேறியதோடு மட்டுமல்லாமல், சர்வதேச மட்டத்தில் தமக்கு எதிராகப் பொறி வைத்தவருக்கே, ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மட்டத்தில் வலைவிரித்துத் தமது பொறிக்குள் வீழ்த்தி மண் கவ்வவைத்தனர் அவர்கள்.
தமக்கு எதிராக ரணிலின் தலைமையினால் விரிக்கப்பட்ட சர்வதேச வலைப்பின்னலை, மேலும் இறுக்கமாக்காமல் தடுப்பதை ரணிலைப் பதவிக்கு வரவிடாமல் தடுத்ததன் மூலம் உறுதிசெய்துகொண்ட?992;்கள் புலிகள்.

இப்போது, இப்படிப் புலிகளைப் பொறியிட எத்தனிப்பதற்கு வகை செய்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை தென்னிலங்கை சிங்கள அரசுத் தலைமையே தூக்கியெறிந்து, நிராகரித்திருக்கிறது. இதன்மூலம்,புலிகளுக்கு எதிராக ரணில் பின்னிய சர்வதேச வலைப்பின்னலை சிங்களத் தலைமையைக் கொண்டே அறுத்தெறிய வைத்திருக்கின்றனர் புலிகள்.

இதைத் தாங்கமுடியாது அரற்றுகின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
""இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் காரணமாக சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டோம் என்று புலிகளே பல தடவைகள் கூறிவந்துள்ளனர். அத்தகைய யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசுத் தரப்பே கிழித்தெறிந்து புலிகளை சாதகமடைய அனுகூலமடைய செய்து விட்டனரே. அருமையான வாய்ப்பை நாசமாக்கிவிட்டார்களே!'' என்று இப்போது கூக்குரலிடுகின்றார் ரணில் விக்கிரமசிங்க.

ஆக, தமது யுத்த நிறுத்த ஒப்பந்தம் மூலம் புலிகளைத் தமது தந்திர வலைக்குள் வீழ்த்தி மடக்கத் தாம் முயன்றார் என்பதையும், அதில் தாம் கணிசமான வெற்றிகளை ஈட்டினார் என்பதையும் ரணில் இப்போது ஒப்புக்கொள்கின்றார். யுத்தநிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும் தனது முட்டாள்தனமான நடவடிக்கைமூலம் அதைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டார் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்றும் அவர் குற்றம் சுமத்துகின்றார்.
இந்தக் கூற்றுக்களை சீர்தூக்கிப் பார்ப்பவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலையொட்டி விடுதலைப் புலிகள் தரப்பு நடந்துகொண்ட போக்கின் நியாயத் தன்மையை ஓரளவு புரிந்துகொள்வார்கள். புலிகள் எதற்கு வியூகம் வகுத்தார்களோ எதை எதிர்பார்த்தார்களோ அதை ஒப்பேற்றியிருக்கின்றார்கள் என்பதும் புரியவரும்.
சரி. இவ்வளவும் ஆயிற்று. இனி என்ன?

இந்தக் கேள்விக்கான பதிலையும் மதியுரைஞர் பாலசிங்கம் இறக்க முன்னர் எழுதிய கடைசி நூலின் கடைசி வாசகமாக நாம் அவதானிக்கலாம்.
""இந்தச் சமாதானச் சூழல் நீடித்து, நிலைத்து, தமிழரின் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுமா? அல்லது போர் வெடித்து, தமிழ் மக்களை அவர்களின் சுயநிர்ணயத்தின் இறுதிக்கட்டத் தெரிவாக தனியரசுப் பாதையில் தள்ளிவிடுமா? தமிழர் தேசத்தின் எதிர்கால அரசியல் வரலாறு எந்தத் திசையில் செல்லும் என்பதைச் சிங்கள தேசத்தின் இனவாத சக்திகளே இறுதியாகத் தீர்மானிக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.''
இதுவே, அமைதிப் பேச்சுகளில் சமாதான முயற்சிகளில் தமிழர் தரப்பின் சார்பில் முக்கிய பங்காற்றிய தமிழர் தேசத்தின் குரலின் கடைசிக் கருத்துப்பதிவு.
அவர் கூறியபடி, எது பாதை என்பதை இறுதியாகத் தீர்மானித்து உறுதியாகக் கூறிவிட்டது கொழும்பு அரசு.
அதன் வழி பயணித்து,வருவதை எதிர்கொள்வதைத் தவிர வேறு என்ன மார்க்கம் இருக்க முடியும்?

Uthayan.com

0 Comments: