Tuesday, January 29, 2008

பாதாள உலகக் கும்பல்களுக்கு உயிர், உரமூட்டும் எத்தனங்கள்

பட்டறிவிலிருந்து பாடங்களைப் பழுதறப் படித்துக் கொள்வதில் தென்னிலங்கை தொடர்ந்தும் தவறிழைத்தே வருகின்றது.

தென்னிலங்கையின் மொனறாகலைப் பகுதியில் ஊடுருவியுள்ளனர் என்று கருதப்படும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கு உள்ளூர் கிராமவாசிகளுக்கு ஆயிரக்கணக்கில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வழங்குவதற்கு கொழும்பு அதிகார வர்க்கம் எடுத்திருக்கும் தீர்மானம், பட்டறிவை சரிவரப் பிரயோகிக்கத் தவறியதால் எழுந்த தப்பு என்றே தோன்றுகின்றது.
வடக்கு கிழக்குத் தமிழர்களின் இன உரிமைக்கான யுத்தத்தை ஒரு முனையில் எதிர்கொள்ளும் கொழும்பு அரசு மறுமுனையில் பாதாள உலகம் என்ற மிகப் பயங்கர கொடூர வன்முறைக் கும்பல்களின் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு நிற்கின்றது.

நாட்டை இன யுத்தம் ஆட்டிப்படைப்பது போல தென்னிலங்கைச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் இந்தப் பாதாள உலகக் கும்பலும் ஆட்டிப்படைத்து வருகின்றது என்பது வெள்ளிடை மலையாக துலாம்பரமான விடயம்.

உண்மையில் இருபத்தியைந்துக்கும் குறையாத ஆயுத இயக்கங்கள் செயற்பட்டு, அவற்றில் இருபதுக்கும் குறையாத இயக்கங்கள் திடீரென முடக்கப்பட்ட தமிழர் சமூகத்தில்தான் பாதாள உலகக் கும்பல்களின் அராஜகம் தீவிரமாக வேரூன்றியிருக்க வேண்டும்.
ஆனால், அதற்கு மாறாக, சட்டரீதியான அரச நிர்வாகம் தொடர்ந்து பேணப்பட்ட தென்னிலங்கையில்தான் பாதாள உலகக் கும்பல் வேர்விட்டு ஆழப் பதிந்து, சமூகத்தில் புரையோடித் தனது கோரப் பிடியை வலுவாக்கிக் கொண்டிருக்கின்றது.

அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் நோக்கில் தமது கல்வியை குடும்ப வாழ்வை துறந்து, பல்வேறு இயக்கங்களில் இணைந்த ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், அவர்கள் சார்ந்த சுமார் இருபது இயக்கங்கள் வரை திடீரென முடக்கப்பட்டபோது, அந்த இயக்கங்களுக்குரிய ஆயுதங்களுடன் நட்டாற்றில் விடப்பட்டனர். அத்தகைய சூழலில் தனித்தனியாக பல பாதாள உலகக் கும்பல்கள் தமிழர்கள் மத்தியிலிருந்து இலகுவாகத் தோற்றம் பெறக்கூடிய சூழலும், வாய்ப்பும், சந்தர்ப்பமும் ஏன் அதற்கான கட்டாயமும் கூட இருந்தன. ஆனால் தெய்வாதீனமாக அப்படி ஏதும் நேராமல் போயிற்று.

ஆனாலும், தென்னிலங்கையில் இன்று கொடூர அராஜகங்களைப் புரியும் பாதாள உலகக் கும்பல்கள் போல தமிழர்கள் மத்தியில் இன்று கொடூரமும், அராஜகமும், அட்டகாசமும் இழைக்கப்படாமல் இல்லை.

அவற்றுக்கு, சீருடைத்தரப்புகளுக்கு அப்பால் ஒட்டுக் குழுக்களும், துணைப்படைகளுமே பின்னணிச் சூத்திரதாரிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இவை தமிழர் மத்தியிலிருந்து தாமாக உருவெடுத்த பாதாள உலகக் கும்பல்கள் அல்ல. தமிழர் தாயகத்தில் சில அழிவு வேலைகளுக்கு எனத் தெற்கால் ஊட்டி வளர்க்கப்பட்ட கோடரிக் காம்புக் குழுக்களே அவை.

இதேசமயம், தெற்கில் தனது சட்ட ரீதியான ஆட்சி தொடர்வதாக இலங்கையை நிர்வகித்த கொழும்பு அரசுகள் தொடர்ந்து கூறிவந்தாலும், தூர நோக்கின்றி தீர்க்கதரிசனமின்றி அவை மேற்கொண்ட நடவடிக்கைகள் தென்னிலங்கையில் என்றும் அடக்க முடியா பெரும் பாதாள உலகக் கும்பல்களின் சாம்ராச்சியம் வித்தூன்றி விருட்சமாக விருத்தி காண்பதற்கு வழி செய்துவிட்டன.

தென்னிலங்கையில் எழுந்த ஜே.வி.பியினரின் கிளர்ச்சியை அடக்கவென தெற்கில் அரசியல்வாதிகள் உட்படப் பல தரப்பினருக்கு அரசு "சப்ளை' செய்த சுமார் பதினையாயிரம் ஆயுதங்களும் அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் தமிழர்களை அடக்கவென கண், மண் தெரியாமல் ஆயுதங்களை வாங்கிக் குவித்து, விநியோகித்து, சிங்கள இளைஞர்கள் எல்லோரையும் தாரதம்மியம் பார்க்காமல் படைகளுக்குச் சேர்த்து, அவர்களிடம் ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பிய நடவடிக்கைகளும் எல்லைப்புற சிங்கள மக்களுக்குத் தற்பாதுகாப்புக்கு என்ற பெயரில் விநியோகித்த பல்லாயிரம் ஆயுதங்களும் ஒன்று சேர்ந்து, தெற்கில் பெரும் பாதாள உலகக் கும்பல் என்ற தனித்தனி இராச்சியங்களை ஸ்தாபித்து, உயிரூட்டி, விஸ்வரூபமாக வளர்த்துவிட்டிருக்கின்றன.

முன்னரே எல்லைப்புறச் சிங்கள மக்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தமைபோல இப்போது தென்னிலங்கைக் காட்டுப்புற மக்களுக்கு ஆயுதங்களை வழங்கத் தீர்மானம் எடுத்துத் தன் தலையில் மேலும் மண் வாரிப் போடத் தயாராகிறது போலும் தென்னிலங்கை.
ஏற்கனவே முப்பத்தியையாயிரத்துக்கும் அதிகமான சட்ட விரோத ஆயுதங்கள் தென்னிலங்கையில் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளன என்று கணிப்பிடப்படுகின்றது. அந்தத் தொகையை மேலும் அதிகரித்து, அந்தப் பாதாள உலகை மேலும் விஸ்தரித்துப் பலப்படுத்த தெற்குத் தானாகவே முயலும்போது தன் தலையில் தானே மண் அள்ளிப் போடும்போது யார் அதைத் தடுக்க முடியும்?

Uthayan.com

2 Comments:

இறக்குவானை நிர்ஷன் said...

காலம் பதில்சொல்லும்.

பனிமலர் said...

யாழ், இராணுவ தளபதி புதிதாக ஒரு கூற்றினை கூச்சமில்லாமல் பரப்புகிறாரர். அதை சார்ந்த கருத்துகளை எழுதவும்.