யுத்த நிறுத்தமும் செத்துச் செயலிழந்து விட்டது. அதைப் புதைகுழியில் புதைத்துமாயிற்று.
நான்காவது ஈழ யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட கையோடு கிளைமோர்களிலும்,விமானக்குண்டு வீச்சுகளிலும், ஷெல் தாக்குதல்களிலும் பலியாகும் அப்பாவிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
யுத்த நிறுத்தம் ஒழிந்து, கண்காணிப்புக் குழு செயலிழந்தமை, இலங்கைத் தீவில் சட்டவிரோதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல் போன்ற மோசமான மனித உரிமை மீறல்களுக்கு திறந்த "லைசென்ஸ்' வழங்கியது போன்ற நிலைமையைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறு வன்முறையும், அராஜகமும், அட்டகாசமுமாக சூடு பறக்கும் இன்றைய சூழ்நிலைக்கு மேலும் வலுச் சேர்க்குமாற் போல அறிக்கை வெளியிட்டிருக்கின்றது இந்த ஜனாதிபதியையும், அவரது அரசையும் கடும் பௌத்த சிங்களத் தீவிரவாத நிலைப்பாட்டுக்கு நெட்டித்தள்ளிவரும் பேரினவாதக் கட்சியான ஜே.வி.பி.
* யுத்த நிறுத்தத்தை ரத்துச் செய்த நல்ல முடிவைத் தொடர்ந்து புலிகள் இயக்கம் மீதும் தடை விதியுங்கள்!
* அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை நிரந்தரமாக வெளியேற்றுங்கள்!
* இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் எந்த மூன்றாந் தரப்பினரதோ அல்லது ஏதேனும் சர்வதேசத் தரப்புகளினதோ தலையீட்டுக்கு இடமே அளிக்காதீர்கள்!
*அதிகாரப் பரவலாக்கல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வகட்சிக்குழுவை உடனடியாகக் கலையுங்கள்!
* அதிகாரப் பரவலாக்கல் திட்டம் பற்றிய முயற்சிகளைக் கைவிட்டு, அது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அரசமைப்பை மாற்றும் எத்தனங்களை முற்றாக ரத்துச் செய்யுங்கள்!
இவ்வாறு இலங்கை அரசுக்குக் கடுமையாக "ஆலோசனை' கூறியிருக்கின்றது ஜே.வி.பி.
அக்கட்சியின் உயர் பீடமான அரசியல் சபை பல்வேறு விடயங்களை ஆராய்ந்த பின்னர் இந்தக் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்திருக்கின்றது.
இவை வெறும் "ஆலோசனைகள்' என்ற பெயரில் முன்வைக்கப்பட்டாலும் அவற்றின் அழுத்தம் அதையும் தாண்டியது என்பது வெளிப்படை.
நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிராத மஹிந்தவின் சிறுபான்மை அரசுக்கு, நாடாளுமன்ற ஆயுளை நீடிப்பதற்கு "உயிர்' கொடுப்பது எதிர்க்கட்சிகளின் வரிசையில் அமர்ந்திருக்கும் ஜே.வி.பியே என்பது ஊரறிந்த இரகசியம்.
ஆகவே, இப்போது ஜே.வி.பியின் அரசியல் சபை முன்வைத்திருக்கும் மோசமான சர்வதேச சிக்கல்களை அரசுக்கு வாங்கித் தரக்கூடிய இந்த உபதேசங்களும் வெறும் "ஆலோசனைகள்' என்ற அளவோடு அடங்கிவிடும் என எதிர்பார்க்க முடியாது.
அவை, "அறிவுறுத்தல்களாக' உணரப்பட்டு, அரசுக்குரிய "வழிகாட்டுதல்களாக' வழிப்படுத்தப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
அத்தகைய வழிகாட்டுதல்களைப் பணிப்புரைகளாக ஏற்று சிரம் மேற்கொண்டு இந்த அரசு செயற்படுத்த முனைந்தாலும் வியப்பதற்கில்லை.
வன்னிக் காட்டில் வகுக்கப்பட்ட திட்டத்துக்கு அமைய வன்னியின் நிகழ்ச்சி நிரல்படி இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் யாரிடம் செல்லவேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டது என்று கூறப்படுவது உண்மைதான்.
ஆனால், அந்த நிறைவேற்று அதிகாரமும், அதன் கீழான அரசும் எத்தகைய நிகழ்ச்சி நிரலில் போர் வெறித் திட்டத்தில் செயற்பட வேண்டும்என்பதைத் தீர்மானித்து வழிப்படுத்துவது என்னவோ பெலவத்தையிலுள்ள ஜே.வி.பியின் தலைமைச் செயலகம்தான் என்பது இன்றைய நிலையில் அப்பட்டமான உண்மை.
ஆனால், அத்தகைய தீர்மானங்கள் கூட வன்னிக்கு சாதகமாக அமைவதுதான் வியப்பிலும் வியப்புக்குரிய விவகாரமாகும்.
கொழும்பு அரசு எவ்வளவுக்கு எவ்வளவு போர்த்தீவிரம் கொண்டு, யுத்த வெறியோடு அலைகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு தனது அரசியல் இலக்குகளை இறுதி நோக்கத்தை எட்டுவது மிகமிகச் சுலபம் என்று கணிப்பிடுகின்றது புலிகள் அமைப்பு.
புலிகளின் அந்த எதிர்பார்ப்பை விருப்பை கனகச்சிதமாக நிறைவு செய்யும் செயற்போக்கில் இந்த அரசை வழிப்படுத்துவதற்கு ஜே.வி.பி. துடியாய்த் துடிப்பது புலிகளுக்கு சாதகமான மிகமிகப் பொருத்தமான சூழ்நிலையாகும்.
சர்வதேச ரீதியில் எங்கோ தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற இக்கட்டுக்குள் மாட்டிக் கிடந்த விடுதலைப் புலிகளுக்கு, இலங்கை அரசைக் கொண்டுவித்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முறிக்கச் செய்து, சர்வதேசத்தில் சாதகமான போக்கைத் திரட்டித் தந்திருக்கின்றது ஜே.வி.பி.
அத்தோடு அமையாமல் புலிகளுக்கு தமிழர் தரப்புக்கு இன்னும் சாதகமாக சர்வதேசத்தை வழிப்படுத்தத் துடியாய்த் துடிக்கிறது பௌத்த சிங்கள மேலாண்மைச் செருக்கில் குதிக்கும் ஜே.வி.பி.
அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை வெளியேற்றுவது முதற்கொண்டு, அதிகாரப் பரவலாக்கல் திட்டங்களை அடியோடு நிராகரிப்பது வரை அரசுக்கு ஜே.வி.பி. வற்புறுத்தும் அம்சங்கள் சர்வதேச அரசியலில் புலிகளுக்கு மிக மிக சாதகமான அம்சங்கள்.
புலிகளுக்கு தமிழ்த் தேசியத்துக்கு வேட்டு வைப்பதாக நினைத்துக்கொண்டு அதற்கு மாலைசூட்டுகிறது ஜே.வி.பியின் அரைகுறைத் தந்திரோபாயம். அதற்காக ஜே.வி.பிக்கும், அதன் தலைவர்களுக்கும் தமிழர் தரப்பு நன்றி கூறவேண்டும்.
Uthayan.com
Thursday, January 17, 2008
புலிகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றது ஜே.வி.பி.
Posted by tamil at 7:14 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment