Sunday, January 27, 2008

`படுகொலைகளுக்கு கருணாநிதி துணைபோகப்போகிறாரா?'

கச்சதீவு நெடுந்தீவு கடலில் வைக்கப்படும் கண்ணிவெடிகள் மனிதாபிமானத்துக்கு வைக்கப்படும் அணுகுண்டுகள் என்று கடுமையாக சாடியிருக்கும் தமிழக முன்னணி நாளேடான `தினமணி' நடக்க இருக்கும் படுகொலைகளுக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி துணைபோகப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
`என்ன கொடுமை இது' என்று மகுடமிட்டு நேற்று சனிக்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் தினமணி, இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் எடுத்துக்கூறி கடல் கண்ணிவெடிகளை அகற்றத் தவறினால் வரலாறு மன்னிக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இலங்கை கடற்படை கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருப்பதால் தமிழக மீனவர்கள் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டிச் செல்ல வேண்டாம் என்று மாநில உளவுப் பிரிவு மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பது, அவர்களுக்கு எதிராக இலங்கை அரசு போர் தொடுப்பது, விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்கள் வருவதை முடக்குவது போன்றவை வேண்டுமானால், இலங்கை அரசின் உள்நாட்டு விவகாரமாக இருக்கலாம். ஆனால், இந்திய மீனவர்கள் தங்களது தொழிலைத் தொடர முடியாமல் செய்வதும், மரண பயத்துடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதும் எப்படி இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருக்க முடியும்?

கச்சதீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே உள்ள கடல் பகுதி மீன்வளம் நிறைந்த பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். கச்சதீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்தது மிகப்பெரிய தவறு என்று அன்றுமுதல் இன்றுவரை அத்தனை மீனவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கச்சதீவில் வலைகளை உலர்த்தும் நியாயமான உரிமைகூட நமது மீனவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

பன்னாட்டுக் கடல் எல்லை எது என்பதை வேலியிட்டோ, சோதனைச் சாவடிகள் அமைத்தோ, எச்சரிக்கைப் பலகை அல்லது விளக்குகள் மூலமாகவோ தெளிவுபடுத்த முடியாத பரந்து விரிந்து கிடக்கும் கடல் நிலவொளி மட்டுமே துணையாக நடுக்கடலில் மீன் பிடிப்பவர்கள், எல்லையை அறியமாட்டார்கள் என்பது பச்சிளம் குழந்தைக்குக்கூடத் தெரியும். அவர்கள் தவறுதலாக நுழைந்தால், படகுகள் கண்ணிவெடியில் சிக்கி வெடித்துச் சிதறும் பேரபாயம். என்ன கொடுமை இது?

நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிற நாகரிக சித்தாந்தத்தையே தகர்க்கும் வகையில், ஒரு விரோதிக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி மீனவர்களைப் பழிவாங்கும் திட்டம்தான் இந்தக் கண்ணிவெடிகள் அமைக்கும் முயற்சி. இந்தக் கொலைவெறி முயற்சியை எப்படி அனுமதிப்பது?

ஆயுதக் கடத்தல் மற்றும் புலிகளின் ஊடுருவலைத் தடுக்க இலங்கை அரசு எடுக்கும் முயற்சிகள், இந்திய மீனவர்களின் உயிரைப் பறிக்கும் விதத்திலும், இந்தியாவின் இறையாண்மையை அச்சுறுத்தும் விதத்திலும் அமையும்போது அதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்குமேயானால், அந்த அரசு தனது கடமையைச் செய்யத் தவறிவிட்ட அரசு என்று தான் கொள்ள வேண்டும்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்குக் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை தருவதில் தனக்கு உடன்பாடில்லை என்று கருத்துத் தெரிவிக்கும் தமிழக முதல்வர், நடக்க இருக்கும் படுகொலைகளுக்குத் துணை போகப் போகிறாரா?

கடலுக்கடியில் வைக்கப்படும் கண்ணிவெடிகள், மனிதாபிமானத்துக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் வைக்கப்படும் அணுகுண்டுகள். இதை நமது முதல்வர் நமது பிரதமருக்கும் நமது பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கும் எடுத்துக்கூறி கண்ணிவெடிகளை அகற்றத் தவறினால் சரித்திரம் மன்னிக்காது.

www.thinakkural.com

0 Comments: