Tuesday, January 22, 2008

யதார்த்தமாகச் சிந்திக்கக்கூடாதா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூயிஸ்ஆர்பர் அம்மையாருக்கு எதிராகக் கொழும்பில் நாளை ஆர்ப் பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஜாதிக விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) ஏற்பாடு செய்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதனை முன்னின்று நடத்தவிருப்பவர் ஜே.வி.பி யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ. ஆவேச மாகப் பேசுவதிலும், தமது ""கோணங்கி'' நியாயங் களை முன்னிலைப்படுத்தி மக்கள் ஆதரவைத் திரட்டுவதிலும் ""கெட்டிக்காரர்'' என்ற பெயரும், மதிப் பீடும் அவருக்கு உண்டு. இது பரவலாகவும் பொது வாகவும் பேசப்படுவதும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக இனவாதத்தைக் கொட்டுவதிலும் அவர் பலே பேர்வழி.

இலங்கையில் தொடரும் வன்முறைகளால் பொது மக்கள் காயமடைந்தால், இலங்கை அரசைச் சர்வதேச நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்று லூயிஸ் அம்மையார் கூறியிருந்தார். அந்தக் கூற்று வீரவன்ஸவுக்கும் ஜே.வி.பிக்கும் கடுப்பேற்றி உள்ளது.
இலங்கை அரசையோ அல்லது இந்நாட்டு இரா ணுவ அதிகாரி எவரையுமோ சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த நாம் அனுமதிக்கமாட்டோம் என்று வீர வன்ஸ சூளுரைத்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இலங்கை அரசு நிறுத்தப்பட்டாலே போதும்; தீர்ப்பு அல்லது குற்றச்சாட்டு சம்பந்தமான அறிக்கை எதனையும் அது பாதகமாக வெளியிட்டுவிட்டால், அதன் பின்னர் இந்த நாடு மொட்டாக்குப் போட்டுக்கொண்டே சர்வதேசத்தில் நடமாட நேரிடும். இதனைத் தடுப் பதற்கு இலங்கையின் பிரஜைஅரசியல் தலைவர் என்ற வகையில் அவர் ஆர்பர் அம்மையாரை எதிர்க் கவும் திட்டவும் முன்வந்திருக்கின்றார் என்று கொள் ளலாம்.
ஆர்பர் அம்மையார் எந்தச் சந்தர்ப்பத்தில் தமது கருத்தை வெளியிட்டார் என்பதை நோக்குவது உகந்தது. ஆறு வருட காலமாக நடைமுறையில் இருந்த இலங்கையின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை, அரசாங்கம் தன் மனம்போன போக்கில் முறித்துக் கொண்டு மக்களின் பேரழிவுக்கும், மனிதாபிமானப் பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வகைசெய்திருக்கிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளப் போவதாக அதிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக சாடைமாடையாக அரசு சமிக்ஞை காட்டத் தொடங் கிய காலத்திலேயே அதனால் ஏற்படப் போகும் பெரும் தீங்குகளை, மனிதாபிமானத்திலும் மனித நேயத்திலும் அக்கறை கொண்ட சகல தரப்புகளும் எடுத்துக் கூறிவந்தன.

ஆனால், இலங்கை அரசு அது குறித்து கிஞ்சித்தும் அக்கறைப்பட்டதாக இல்லை. போர் நிறுத்தத்தை முறித்து, தமிழ்ப் பகுதிகள் மீதான இராணுவ நடவடிக் கையைத் தீவிரப்படுத்தினால் அழியப்போவது, அவ லப்படப் போவது தமிழ் மக்கள்தானே என்ற உள் மனதுடன்தான் நினைத்ததைச் செய்தது.
நான்காம் கட்டப் போர் ஒன்று வெடித்தால் அது முந்தியவற்றைவிட நெருக்கடி மிக்கதாகவும்,பெரும் அழிவுகளைத் தருவதாகவும் இருக்கும் என்று பல தரப்பினரும் எடுத்துக் கூறியிருந்தனர். ஆனால் அது குறித்து அரசாங்கம் மட்டுமின்றி அதற்கு முண்டு கொடுக்கும் அல்லது மறைமுக ஆதரவு கொடுக்கும் ஜே.வி.பி.போன்ற கட்சிகள் கூட செவிசாய்க்க வில்லை; பொருட்படுத்தவில்லை.

இலங்கை அரசு போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்ட பின்னர், கவலை தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்ட ஜப்பான் உட்பட்ட நாடுகள் கூட, போர் மீண்டும் மூள்வதால் உண்டாகக் கூடிய பேரவலங்கள் குறித்துச் சுட்டிக் காட்டியிருந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரத்துக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளில் ஒருவர் என்ற வகையில், ஆர்பர் அம்மையார் கூறிய மனிதாபிமானத்துடன் கருத்தை ஜே.வி.பியின் பிர சாரச் செயலாளரால் ஜீரணிக்க முடியவில்லை. அம்மை யாரின் கருத்துக்கு ""பயங் கரவாதத்துக்கு ஆதர வானது'' என்று சாயம் பூசி அத னைப் பெரும் விவ காரமாக்க முயற்சிக்கிறார்!

போர் நடைபெறும் வேளையில் மனித உரிமைகள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்று அரசின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே வெளிப்படையாகக் கூறியிருக்கின்றனர். அவ்வாறிருக்க, போர் வெடித்தால் மனித அவலம் பெருகிவிடும் என்று ஆர்பர் அம்மை யார் கூறியகருத்துக்குப் பயங்கரவாதச் சாயம் பூசி அதனைப் பூதாகாரமாக்கி அரசியல் லாபம் தேட நினைப்பதும் ஒருவகை அரசியல்தான்!

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படாமல் இருப்பதைக் கண்காணிப்பதற்கு, ஐ.நா.மனித உரி மைக் கண்காணிப்பகம் நிறுவப்படுவதனைத் தலைப் பாகை கட்டிக்கொண்டு எதிர்ப்பவர்கள், அத்தகைய ஓர் அமைப்பு இங்கு இயங்கும் பட்சத்தில் சர்வதேசமோ, சர்வதேச அதிகாரிகளோ இலங்கை அரசைக் கண்டிப் பதற்கும் குறை கூறுவதற்கும் இடம் இருக்காது என் பதனை யதார்த்தமாகச் சிந்திக்கத் தவறியது ஏனோ?

தமது அரசியல் சித்தாந்தங்களுக்கும் நடைமுறைக் கொள்கைகளுக்கும் தடம் மாறல்களுக்கும் எல்லோ ரும் ஒத்து ஊதுவர் என்று நினைப்பது துர்லபமே!


Uthayan.com

0 Comments: