Sunday, January 6, 2008

"எதிர்வரப்போகின்ற பெரும் போரும் மகிந்த அரசின் எதிர்காலமும்"

சிறீலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றி விடப்போவதாக அறிவித்துள்ளது. அதற்கான பாரிய படைநடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது பருவமழை பெய்து தணிந்துள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் சிறீலங்காவின் படைநடவடிக்கைகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வன்னியின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பல நடவடிக்கைகள் மழைக்காலத்திலும் மேற்கொள்ளப்பட்டுத்தான் வந்தன.

ஆனாலும் மழைக்காலங்களில் சிறீலங்காப் படைகளின் நகர்வு முயற்சிகள் பொதுவாக சாத்தியப்படுவதில்லை. படையினர் தங்கள் கனரக வாகனங்களைக் கொண்டு பாரிய நகர்வுகளை மேற்கொள்வது மழைக்காலங்களில் முடியாத காரியம். எனினும் இந்த மழை நாட்களிலும் பல நகர்வு முயற்சிகளில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்டனர். அதன் முலம் பல இழப்புக்களையும் எதிர்கொண்டனர். மன்னார் மற்றும், மன்னார் - வவுனியா எல்லைப் பகுதிகளில் கடும் எறிகணைத் தாக்குதல்களையும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களையும் மேற்கொண்டு குறிப்பிட்ட சில பகுதிகளையேனும் கைப்பற்றிவிடலாம் என பல தடவைகள் சிறீலங்காப் படையினர் முயன்று பார்த்தனர்.

விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதல்களால் அவை முடியாமற்போயின. அதேவேளை, விடுதலைப் புலிகள் மழைக்காலத்தில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நகர்வுகளை மேற்கொள்ளலாம் என்கிற அச்சமும் படையினருக்கு ஏற்பட்டிருந்தது. எனவே அதனைத்தடுக்கும் வகையிலும், குழப்பும் வகையிலும் படையினர் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொடர்ந்தும் மன்னார் களமுனைகளில் நாளாந்தம் மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. எவ்வாறேனும் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு சில நிலப்பரப்புகளையாவது பிடித்து விடவேண்டும் என்கிற ஆவல் சிறீலங்கா அரசிற்கு உள்ளது.

ஆனால், களமுனை அவர்கள் நினைத்ததைப் போல் சுலபமானதாக இல்லை. மாறாக அதிக எண்ணிக்கை
யிலான படையினரின் இழப்புக்களை சந்திக்கும் நிலையில் படையினர் உள்ளனர். அவ்வப்போது தென்னிலங்கை அரசியல் நகர்வுகளுக்குத் தேவையான சில படைநகர்வுகளையாவது வடகளமுனையில் படையினர் மேற்கொள்ள«ண்டும் என்பது அரசுத்
தலைமையின் எதிர்பார்ப்பு. சில நாட்களுக்கு முன்னர், மன்னார் களமுனைகளில் கடும் இழப்புக்களை சந்தித்த படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான ஆண்டான் குளத்தைக் கைப்பற்றியதாக அறிவித்தனர்.

ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.
வன்னியின் வடபோர் முனையிலும் அடிக்கடி நகர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விடுதலைப் புலிகளால் அவை முறியடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாகர்கோவில் படைத்தளத்திலிருந்து பலத்த எறிகணைகளின் சூட்டாதரவுடன் படையினர் வடமராட்சி கிழக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறும் படைநடவடிக்கையன்றை மேற்கொண்டனர். அதுவும் அவர்களுக்கு படுதோல்வியிலேயே முடிந்தது. விடுதலைப் புலிகளின் பதில் நடவடிக்கையினால் அவர்கள் பழைய நிலைகளுக்குத் திரும்பிச்செல்ல நேரிட்டது. தொடர்ந்து படைநடவடிக்கைகளை மேற்கொள்வதனுாடாக விடுதலைப் புலிகளுக்கு ஆள் இழப்புக்களை ஏற்படுத்துவதோடு, ஆயுத இழப்புக்களையும் எற்படுத்தலாம் என்பது அரசின் நோக்கம்.

விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த ஆயுதக் கப்பல்களை கடலில் தாக்கியழித்
தள்ளதாகவும், மேலும் அயுதங்களை விடுதலைப் புலிகள் பெற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும், அதற்கு இந்தியக்கடற்படையின் உதவிகளும் இருப்பதாகவும் அரசாங்கம் கூறிவருகிறது. பெரும்போர் ஒன்றை வன்னி மீது தொடுப்பதற்கு முன்பாக விடுதலைப் புலிகளின் சுடுதிறனை பெருமளவு இழக்கச்செய்வதும் தற்போதைய படைநடவடிக்கையின் முக்கிய நோக்கமாகவுள்ளது.
கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையினைப் போல வன்னியில் மேற்கொள்வது சாத்தியமானதல்ல என்பதை சிறீலங்கா அரசும் அதன் படைத்துறையும் புரிந்து கொண்டிருந்தாலும், சிறீலங்கா அரசாங்கம் தனது போர் நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கும் நிலையில் இல்லை.

அது பாரிய நடவடிக்கைகளுக்கான ஆயத்தங்களை மேற்கொண்ட வண்ணமேயுள்ளது. சமாதானம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக கருத்துக்களை உதாசீனம் செய்து கொண்டும். எந்த நாடாக இருந்தாலும் சரி அவற்றுடன் தொடர்பு கொண்டு போருக்கான நிதிகளையும், ஆயுதங்களையும் பெற்றுக் கொள்ளும் நகர்வுகளில் சிறீலங்கா அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. முன்னைய சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழர்களுக்கெதிரான போரில் வெற்றி கூறினார். அதன்படிதான் தற்போது மகிந்த ராஜபக்ச அரசும் நடந்து வருகிறது. ஆனால், தற்போது இப்பிராந்தியத்தின் ஒழுங்கையும், ஏன் உலக ஒழுங்கினையுமே சீர்குலைக்கும் வகையில் சிறீலங்கா அரசின் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அமெரிக்கா தற்போது சிறீலங்கா மீது கொடுத்துவரும் அழுத்தங்களை இதன் பின்னணியிலேயே நாம் பார்க்கலாம். சிறீலங்காவில் நிலவும் இனப்பிரச்சினைக்கான சமாதான முயற்சிகளில் ஆர்வம் கொண்ட அனைத்துலக நாடுகளும், அனைத்துலக மனித உரிமைகளுக்கான அமைப்புகளும் இலங்கையில் இடம்பெற்று வரும் பாரிய மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுத்து வருகின்றன. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகள், நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வந்தும், அதற்கான செயற்பாடுகளில் சிறீலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தாததுடன் பல மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதாகக் கூறி இழுத்தடித்து பின் அவற்றை மூடிமறைத்தும் உள்ளது.

பிரான்சைத் தளமாகக் கொண்ட ‘அக்சன் பம்’ நிறுவனப் பணியாளர்கள் படையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளை இதற்கு உதாரணமாக்கொள்ளலாம். இதன்காரணமாக ஐ.நா.வின் மனித உரிமை கண்காணிப்பகத்தை கொழும்பில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அனைத்துலக சமூகமும், மனித உரிமைகள் அமைப்பும் தொடர்ந்தும் வலியுறுத்திவர அதனை சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் அமெரிக்கா, சிறீலங்காவின் முடிவை மீள்பரிசீலனை செய்ய வெண்டும் எனக் கேட்டிருந்தது.

தொடர்ந்து, சிறீலங்காவிற்கான படைத்துறை உதவிகளை இடைநிறுத்தப்போவதாகவும் அறிவித்திருந்தது. அமெரிக்கா வறிய நாடுகளுக்கு வழங்கி வரும் ‘மில்லேனியம் சவால்’ திட்டத்தின் கீழான கடனுதவியும் சிறீலங்காவிற்கு இம்முறை நிறுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக கருத்துக்களை சிறீலங்கா மறுத்து வருகின்ற காரணத்திற்காகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக பொதுவாகக் கூறப்பட்டாலும், அதுவல்ல காரணம். சிறீலங்கா அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக ஈரானிடம் சென்று படைத்துறை உதவிகளைக் கோரியது.

சீனாவிடம் உதவிகளைக் கோரியது. தற்போது ரஷ்யாவிடமும் படைத்துறை உதவிகளை நாடியுள்ளது. ரஷ்யக் குழுவினர் கடந்தவாரம் சிறீலங்காவிற்கு வருகை தந்து சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சினருடம் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். இத்தாலியக் குழுவொன்றும் வருகை தந்திருந்தது, இந்தியப்டைத்துறையின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவினரும் வருகை தந்திருந்தனர். இக்குழுக்கள் தனித்தனியாக சிறீலங்காத் தரப்புடன் கலந்துரையாடல்களை நடத்தியிருக்கின்றன.
இதன் பின்பு சிறீலங்கா அரசாங்கம் அமெரிக்கா, சிறீலங்காவிற்கான உதவிகளை இடைநிறுத்துவதாக தெரிவித்திருந்தமைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்டது.

அமெரிக்காவின் நிபந்தனைகள் எதனையும் சிறீலங்கா ஏற்றுக்கொள்ளாது எனவும், அமெரிக்காவிற்கு அடிபணியாதெனவும், அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்கா சிறீலங்காவிற்கு யுத்த உபகரணங்கள் வழங்குவதை நிறுத்துவதால் சிறீலங்காவிற்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் அண்மையில் அமெரிக்கா, சிறீலங்கா கடற்படைக்கு தாக்குதல் ஆயுதமற்ற பத்துப்படகுகளை வழங்கியதெனவும், இது குதிரையை வழங்கிவிட்டு கடிவாளத்தை வழங்காத நடவடிக்கையாகும் எனவும் அமெரிக்காவின் போர் உபகரணங்களுக்குப்பதிலாக சிறீலங்காவிற்கு ஐந்து நாடுகள் உதவ முன்வந்துள்ளன எனவும் அவர் மிகக்காட்டமாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இது உண்மையில் சிறீலங்கா அரசாங்கத்தின் கருத்தாகவே கொள்ளத்தக்கது. இந்நிலையில் அமெரிக்கா மேலும் பல அழுத்தங்களை சிறீலங்கா மீது பிரயோகிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சிறீலங்கா அரசு உலகின் பலம் பொருந்திய நாடுகளை எல்லாம் பகைத்துக் கொண்டும், ஒன்றையன்று சிக்கல்களுக்குள்ளாக்கிவிட்டும் இலங்கையில் ஒரு இனத்தின் மீதான அழிவுகரப் போரை நடத்தியே தீருவது என ஒற்றைக்காலில் நிற்கிறது.

நடைபெறப்போகின்ற போர் நிச்சயம் சிறீலங்கா அரசாங்கம் நினைப்பது போல் அவர்களுக்கு சாதகமாக அமையாது. இந்தப்போரில் சிறீலங்காவிற்கு படுதோல்வி ஏற்பட்டால், போரினை அரசியலுக்காக பயன்படுத்தும் அவர்களது அரசியலும், சிங்கள மக்களின் ஆதரவும், அனைத்துலகின் நிலைப்பாடுகளுமாக யாவுமே தவிடுபொடியாகிவிடும்.

வேனில்

1 Comment:

இவன் said...

போரில் தோல்வியடைந்தாள் இலங்கை அரசுக்கு உலகின் பலமூலைகளில் இருந்து பிரச்சனை தோன்றுவது மறுக்கமுடியாத உண்மை.

ஆனால் விடுதலை புலிகளின் படைபலம் எப்படியுள்ளது என்பதுதான் இப்பொழுதைய மிகப் பெரிய கேள்வி. புலிகளின் மனோபலம், ஆட்பலம் பற்றி எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் 21-ம் நூற்றாண்டில் இராணுவரீதியிலான வெற்றியை இட்டுவதில் தொழில் நூட்ப உத்தியே இன்றியமையாத ஒன்று.

இன்றைய காலகட்டத்தில் சிங்கள அரசு உலகநாடுகள் பலவற்றிடம் சென்று ஆயுத பிச்சை எடுத்து அதன் ஆயுத பலத்தையும், ஆயுத தொழில் நூட்பத்தையும் பல மடங்கு பலபடுத்தியுள்ளது. (இதற்கு இரண்டும் கேட்டான் இந்திய அரசும் சேடை போய்யுள்ளது வேறுவிசயம்!) இந்த சூல்நிலையில் போர் ஒப்பந்த நிறைவு நாளில்லிருந்து (Jan 16, 2008) சிங்கள அரசு பல நவீன ஆயுதங்களை களம் இறக்குமாயின் தமிழ் இனத்திற்கே பேராபத்து காத்திருக்கிறது.

நாலம் கட்ட ஈழப்போரில் அதிஉயர் தொழில் நூட்பம் கொண்ட போர்கருவிகளே வெற்றியை எளிதாக்கும். புலிகள் இப்போரில் வெற்றியிட்ட அதிமுக்கியமான இரண்டு கருவிகள் அவர்களுக்கு முக்கியமாக தேவை, அவை நவீன ராடார் கருவிம், விமான எதிர்ப்பு ஏவுகணைகளும்மே(கவனிக்க விமான எதிர்ப்பு துப்பாக்கியள்ள).