Sunday, January 6, 2008

காலம் எழுதப்பட்ட வரலாறு

31.12.1999 அன்றுடன் ஓர் ஆயிரியம் அல்லது மில்லெனியம் கழிந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? மூன்று பூச்சியங்களுடன் தொடங்கும் 2000 ஆம் ஆண்டு குறித்து பல வகைப்பட்ட எதிர்வுகூறல்கள் அக்காலத்தில் தெரிவிக்கப்பட்டன. இல்லாமை என்பதைச் சுட்டும் பூச்சியம் தனியே எந்தவிதமான பெறுமதியும் அற்றது. 1 இலிருந்து 9 வரையான எண்களைப் போலன்றி 0 இன் பெறுமதியைத் தெட்டத்தெளிவாகக் குறிப்பிட்டு விடமுடியாது. ஆகையால் தான் கணனிகளின் செயற்பாடுகள் குறித்து முன்னாயத்த நடவடிக்கைகள் பல முடுக்கி விடப்பட்டன. இன்னும் சில மதக்குழுக்களைச் சேர்ந்தவர்களோ ~உலகம் அழியப் போகிறது! உயிர் பிழைக்கவேண்டுமானால் எம்முடன் வாருங்கள், விசேட விண்வெளிக்கூடம் வரு கிறது! அழைத்துச்செல்லப்படுவீர்கள்| என்றெல்லாம் அபத்த மூட்டைகளை அவிழ்த்து விட்டவாறிருந்தனர். இதுவெல்லாம் எதற்காக? நீண்ட காலத்திற்குப் பின்னர் வந்த மூன்று பூச்சியங்களுடன்கூடிய 2000 என்ற ஓர் எண்ணிற்கு உலகத்தை அழித்து விடக்கூடிய சக்தி உண்மையிலே இருந்ததா?

2000 ஆம் ஆண்டிற்கு அவ்வாறான சக்தி இருந்ததா என்பதற்கு முன்பாக, எல்லாவற்றுக்கும் காரணமான 2000 ஆம் ஆண்டு உண்மையிலே எப்போது ஆரம்பிக்கிறது என்று பார்ப்பது சாலப்பொருத்தம் அல்லவா? எவ்வாறான போதும் கணனி தொடர்பான எச்சரிக்கைகள் நியாயமானவையே! ஏனென்றால் தெளிவாக வரையறுக்க முடியாத பூச்சியத்தை, அதிலும் இரண்டு எண்களால் வருடத்தைக் குறிப்பிட்டுவந்த வழக்கத்தின்படி 99 இற்கு அடுத்ததாக 2000 என்பது 00 ஆகவே இடம்பெறும். பெறுமதி இல்லாத இரண்டு எண்களால் உண்மையிலேயே நிகழவிருக்கும் ஒரு வருடம் குறிப்பிடப்படும்போது, கணனியின் மையச்செயலி அதனை எவ்வாறு புரிந்துகொள்ளும் என்பதே அறிவியலின் அன்றைய எச்சரிக்கைக்கு அடிப்படையாக இருந்தது. அதனை அவர்கள் வெற்றிகரமாகக் கையாண்டு விட்டார்களாயினும், அவர்களைப் பொறுத்தவரையில் ஆண்டினைக் குறிப்பிடும் நடைமுறை தொடர்பான சிக்கலையே எதிர்கொண்டிருந்தார்களே தவிர, அந்த 2000 என்ற ஆண்டு தன்னளவில் இவ்வுலகிலும் மனிதர்களிலும் செலுத்தக்கூடிய செல்வாக்குச் சம்பந்தப்பட்டதல்ல! இங்கு கட்டுரையின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட வினாவினை மீண்டும் கேட்டுக்கொள்வோம்: 31.12.1999 அன்றுடன் ஓர் ஆயிரியம் அல்லது மில்லெனியம் கழிந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

முதலில் இன்று நம் வழக்கத்திலுள்ள கிறிகோறியன் ஆண்டு முறையின் குறுகிய வரலாற்றினைச் சற்று நோக்குவது பொருத்தமாக அமையும். 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம மதகுருவான டயோனி சியுஸ் எக்ஸிகுஸ் இனால் பெத்த லேகம்-நட்சத்திரத்தின் அடிப்படையில் யேசு கிறிஸ்துவின் தோற்றத்தையொட்டி கணிப்பிடப்பட்ட, இன்று உலகெங்கும் நடைமுறையிலுள்ள கிறிகோறியன்-வருட நடைமுறை 1431 இல்தான் வத்திக்கானிலேயே பாப்பரசர்களின் புழக்கத்திற்கு வந்தது. தொடர்ந்து 1582 ஒக்ரோபர் 15 ஆம் திகதியன்று அக்காலப்பகுதியில் வழக்கத்திலிருந்த மற்றையதொரு நடைமுறையான யூலியன்-முறை திருத்தப்பட்டு, பாப்பரசர் 13 ஆவது கிறிகொறி அவர்களின் அனுசரணையுடன் புதிய ஆண்டு வழக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆகவேதான் இது கிறிகொறி-ஆண்டு வழக்கு எனக் குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்து காலனித்துவம் காரணமாக உலகெங்கும் இந்நடைமுறை பரவியது. அப்படியானால் 1431 இற்கு முன்னர் காலநகர்வு எவ்வாறுதான் குறிப்பிடப்பட்டு வந்தது என்ற கேள்வி நியாயமானதே! ஒவ்வொரு நாட்டு அரசர்களினதும் ஆட்சிக்காலத்தை ஒட்டியே ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டு வந்தன. இதனால் முகங்கொடுக்கப்பட வேண்டியிருந்த சிக்கல்கள் இன்றைப்போலன்றி அன்றிருந்த எளிமையான வாழ்க்கைப்போக்கு காரணமாகப் பாரதூரமாக இருக்கவில்லை. தற்போது தமிழர்களாகிய எம்மிடமுள்ள திருவள்ளுவர் நடைமுறையின்படி 2038 ஆம் ஆண்டிலே நாம் வாழ்ந்து வருகிறோம்! சீனர்களுக்கு இப்போது 4784! முஸ்லிம் மக்களைப் பொறுத்த மட்டில் இறை தூதர் முகம்மது தனது சொந்த ஊரான மெக்காவிலிருந்து நீங்கி மெதீனாவிலே அடைக்கலம் கோரும் கி.மு. 622 யூலை 6 அன்றிலிருந்தே அவர்கள் கணிப்பிடத் தொடங்குவதால் தற்போது அவர்களுக்கு 1427 ஆம் ஆண்டு!. இந்து மதத்தின் கலியுகக் கணக்குடன் அதிகம் ஒத்துவரக்கூடிய யூதர்களின் ஆண்டு வழக்கத்தின்படி இப்போது நிலவுவது 5767 ஆம் ஆண்டு. அதிலும் உலகம் படைக்கப்பட்டது தொடர்பாக யூதர்கள் மிகத்துல்லியமான கணக்கொன்றைக் குறிப்பிடுகிறார்கள். அதன்படி கி.மு. 3761 ஒக்ரோபர் மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி 11 நிமிடம் 20 செக்கனிற்கு படைப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

மேற்கண்டவாறு அதிதுல்லியமாகப் பேசப்படும் தரவுகள் யாவும் கிறிகோறிய கால அலகிலேயே குறிப்பிடப்படுகின்றன. இங்கு நாம் சில விடயங்களைக் கவனத்திற் கொண்டாக வேண்டும். இன்று உலகெங்கும் நடைமுறையிலுள்ள கிறிகோறிய வருடமானது ஒரு சூரிய ஆண்டைக்கொண்டதாகவும் (365.2421896698 நாட்கள் அல்லது 365 நாட்களையும், 5 மணித்தியாலங்களையும், 48 நிமிடங்களையும் 46 செக்கன்களையும் உள்ளடக்கியது), ஒரு மாதம் 29.5305888531 சந்திர நாட்களையும் (அல்லது 29 நாட்களையும் 12 மணித்தியாலங்களையும் 44 நிமிடங்களையும் 3 செக்கன்களையும் உள்ளடக்கியது) கொண்டதாக உள்ளது. முழுமையற்ற தசம இலக்கங்களான இவற்றை ஒரு வழி செய்வதற்காகவே லீப் வருடம் மற்றும் மாதம் உள்ளடக்கும் 30, 31 என ஒழுங்கற்ற விதத்தில் பகுக்கப்பட்டிருக்கும் நாட்கள் போன்ற வழமைகள் காணப்படுகின்றன. எட்டாவது என்று அர்த்தம் தரும் ஒக்ரோபர் மாதம் ரோமர் ஆட்சியிலே கி.மு. 7 ஆம் நூற்றாண்டிலே பத்து மாதங்களை மட்டுமே ஒரு வருடம் கொண்டிருந்த காலத்திலே உண்மையாகவே எட்டாவது மாதமாகத் தான் இருந்தது! 365 நாட்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கால்வாசி நாளினை 4 வருடங்களுக்கு ஒருமுறை சேர்த்து, 28 நாட்களை மட்டும் பெற்றிருக்கும் பெப்ரவரி மாதத்திற்கு கொடுத்து விடும் நல்லெண்ண அடிப்படையிலான லீப்-வருட ஒழுங்கை ஏற்படுத்தியது யூலியஸ் சீசர் தான்! அவனை வென்றவர்களே யூலை, ஓகஸ்ட் என்றெல்லாம் மாதங்களிற்குத் தத்தம் பெயர்களைச் சூட்டிக்கொண்டார்கள். இவர்களின் காலத்திலேயே சனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்கள் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டன. ஆக கிறிகோறிய நடைமுறையானது தொடர்ந்து பல சீர்திருத்தங்களுக்கு உட்பட்டு வந்துள்ளதைக் கண்டுகொள்ளக்கூடியதாய் உள்ளது. வேறு விதத்தில் சொல்வதானால் நீட்டலளவையைப் பொறுத்தவரையில் தமிழினம் ஒரு காலத்தில் குதிரையின் உரோமத்தின் தடிப்பைக்கூட ஓர் அலகாகக் கொள்ளும் அளவிற்குத் துல்லியத்தைக் கடைப்பிடித்து வந்ததை நம் பழம்பெரும் இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். ஆனாலும், பின்னாளில் ஆங்கிலேய அளவைகளைப் பின்பற்றிய நாம் ஓரளவு அவற்றிலிருந்து விடுபட்டு உலகெங்கும் நடைமுறையிலுள்ள மெட்றிக் முறைமையை இன்று நமது வழக்கத்திற்குட்படுத்தி வருகிறோம். அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படுவதற்கு எளிமையாக உள்ள இந்நடைமுறை இன்று கொண்டிருக்கும் செல்வாக்கைப் போலவே கிறிகோறிய முறைமையும் பல போட்டியாளர்களைத் தோற்கடித்து இன்றைய நிலையை எட்டியுள்ளது.

6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம மதகுருவான டயோனிசியுஸ் எக்ஸிகுஸ் அவர்கள் பெத்தலேகம்-நட்சத்திரத்தின் அடிப்படையில் யேசு கிறிஸ்து தோன்றிய காலத்தை அன்றைய வளங்களைக்கொண்டு கணிப்பிட முடிந்ததை மெச்சிக் கொள்ள வேண்டுமாயினும், வானியலாளர்களின் கருத்துப்படி கிறிஸ்துவின் பிறப்பு உண்மையிலே கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேதான் நிகழ்ந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது (ஆதாரம்: ஞரயசமள ரூ உழ.). இந்தக் கருத்தைக் கண்களை மூடியவாறு மறுதலிக்கும் பட்சத்திலும் வேறொரு சிக்கலுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டிவருகிறது. குழந்தை ஒன்றின் வயது அது பிறக்கும் நாளன்று ஒன்று எனக் கொள்ளப்படுவதில்லை. மாறாக அதன் வயது கணித அடிப்படையில் பூச்சியத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. அதன்படி முதலாவது வயது குறிப்பிடப்படுவதும், இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டாவது வயது ஆரம்பித்துள்ளது எனவும் கருதி வருகின்றோம். யேசு கிறிஸ்து பிறந்த காலத்திலேயே அவரது பிறப்பை அடிப்படையாகக்கொண்ட வருட நடைமுறையும் இருந்திருக்குமென எவரும் எதிர்பார்க்க முடியாது. அவரது தத்துவார்த்த நெறி மக்களில் பெரும்பகுதியினரின் உள்ளங்களை ஆகர்சித்துக் கொண்ட பிற்காலத்திலேதான் அதற்கான ஒரு புறச்சூழல் ஏற்பட்டிருக்க முடியும். அதன்படி கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம மதகுரு வான டயோனிசியுஸ் எக்ஸிகுஸ் இனால் பெத்தலேகம்- நட்சத்திரத்தின் நிலையத்தின் அடிப்படையில் யேசு கிறிஸ்துவின் தோற்றத்தையொட்டி கணிப்பிடப்பட்ட கிறிகோறியன் (பிற்காலத்திலேதான் இது கிறிகோறிய முறை எனப் பெயர் பெற்றது) வருட நடைமுறை திட்டமிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் உலகளாவிய நடைமுறையாக இது கடைப்பிடிக்கப்படத் தொடங்கியது 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே! இங்கு கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் டயோனிசியுஸ் எக்ஸி குஸ் இன் கணிப்பீட்டிலே கிறிஸ்து பிறந்த வருடம் பூச்சியமாக அன்றி ஒன்று ஆகவே கொள்ளப்பட்டது. அதாவது ஒரு வருடத்திற்குக்குரிய கணக்கை அவர் தவறவிட்டு விட்டார். அந்த வகையிலே 2007 ஆம் ஆண்டென்று நாம் தற்போது கருதுவது உண்மையிலே 2006 ஐத் தான்! அந்தவகையிலே 2000 ஆம் ஆண்டு என்பது பழைய ஆயிரியத்திற்குரியதே என்பதும் 2001 இலேதான் மில்லெனியம் தொடங்குகின்றது என்ற வாதத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.

அதேவேளை உலகெங்கும் கிறிகோறிய (கி.பி.) ஆண்டு வழக்கமானது சகல நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தபோதிலும் பல்வேறு சமய, கலாச்சார, பாரம்பரியப் பின்னணியுடன் பூமியிலே வாழ்ந்து வரும் 6 பில்லியன் மக்களும் முழுமனதாக இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்களா என்பது கேள்விக்குரியது. ஏனென்றால்- பழைய ஐதீக வழக்கில் தீவிர பற்றுப் பாராட்டிவரும் ஒத்தொடொக்ஸ்-துறவிகள் இன்னமும்தான் பழைய யூலியன்- நடைமுறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் 21 ஆம் நூற்றாண்டு பிறந்தது 14.01.2000 அன்றாகும்.

- 100 கோடிக்குக் குறையாத இந்துக்களுக்கு கலியுகம் தொடங்கி ஐந்து ஆயிரியங்கள் கடந்து விட்டன என்பதுடன் அவர்களுடைய வருடப்பிறப்பு 14.04.2000 அன்று என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

- உலகிலுள்ள மக்களில் ஆறிலொரு பங்கினர் சீனர்கள் என்பதனால் அவர்களின் வழக்கத்தினையும் புறக்கணித்து விட முடியாதல்லவா! அவர்கள் (ஆயிரியத்தை அல்ல) புத்தாண்டைக் கொண்டாடியது 05.02.2000 அன்றாகும்.

- பாரசீகர் எனப்படும் ஈரானியர்கள் புத்தாண்டைக் கொண்டாடியது 20-21.03.2000 அன்றாகும்.

- ஒரு பில்லியன் (100 கோடி) முஸ்லிம்கள் புத்தாண்டைக் கொண்டாடியது 06.04.2000 அன்றாகும்.

- இதேபோல யூதர்கள் 30.09.2000 அன்று (உலகம் உருவாக்கப்பட்ட 5761 ஆவது ஆண்டை) தமது புத்தாண்டு விழாவினைக் கொண்டாடினார்கள்.

புவி தன்னையும் சூரியனை நீள்வட்ட ஒழுக்கிலும் சுற்றி வருவதை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்டவையே நமது நாட்களும் வருடங்களும்! நாம் வாழும் இந்தப் பூமி தோற்றம் பெற்றது இற்றைக்கு சுமாராக 4 000 000 000 ஆண்டுகளுக்கு முன்பென்பதை மனதில் இருத்திக் கொண்டு ஒரு விடயம்: 400 000 000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமி தன்னைத்தான் ஒருமுறை சுற்றுவதற்கு 22 மணித்தியாலங்களும், சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு 399 நாட்களும் எடுத்திருந்தன. நமது மூதாதையர்கள் சமுத்திரங்களிலே (ராட்சத சுறா, திமிங்கிலம் இன்னும் கடல்வாழ் அழகிய டைனோசர்கள்தான் குறிப்பிடப்படுகின்றன) வாழ்ந்து வந்த அக்கால நிலவரம் பற்றி நுண்ணுயிர்களின் கனிமப்படிவுகளை இலத்திரனியல்-நுணுக்குக் காட்டிகொண்டு பார்த்ததனூடாக இவ்வுண்மை தெரியவந்துள்ளது. அதேபோல இன்னும் 180 000 000 வருடங்களிலே நமது நாட்கள் ஒவ்வொன்றும் 25 மணித்தியாலங்களைக் கொண்டிருக்கும். இப்படியெல்லாம் நுணுக்கமான சிக்கல்களைப் பற்றிப் பேசவேண்டி வந்ததற்கு என்ன காரணம்? ஒரு காலத்திலே சூரிய வெளிச்சத்தினால் ஏற்படும் தத்தம் நிழல்களை வைத்து அன்றாட அலுவல்களை முன்னெடுத்த மனித குலம் பின்னாளில் சூரிய மணிக்கூடு, நீர் மணிக்கூடு, சுவாலை மணிக்கூடு, மணல் மணிக்கூடு, ஊசல் மணிக்கூடு, பொறிமுறை மணிக்கூடு என்றெல்லாம் பல கட்டங்களைத்தாண்டிவந்து இன்று சேசியம் அணுவைப் பயன்படுத்தி காலத்தை அதிதுல்லியமான அலகுகளில் அளவிடுகின்றது.

சரி, இவ்வளவு தூரம் நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த மனிதனின் நேரத்திற்கான உணர்வுதான் என்ன? இருள் நிறைந்த கருப்பையில் இருந்த குழந்தை வெளியே வருகிறது. நாளொன்றுக்கு 20 மணித்தியாலங்கள் வரை தூக்கம் போடுகின்றது. பின்னர் மெல்ல மெல்ல பகலையும் இரவையும் உணர்ந்து அதற்கேற்ப தன்னை வழக்கப்படுத்திக்கொள்ள பயில்கின்றது. புற உலகின் நாள் வெளிச்சமும் இருளுமே காலம் பற்றிய புரிதலை மனிதனுக்குள் ஏற்படுத்துகின்றது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 40 வருடங்களுக்கு முன்னர் அகப்பட்ட அப்பாவிகளை இருட்டுக்குள் விட்டு சோதித்ததில் முழுநாள் என்பது 22, 23, 25 என்றெல்லாம் மாறுபட்ட மணித்தியாலங்களைக் கொண்டிருந்ததாக அவர்களால் உணரப்பட்டிருக்கிறது. இதற்கென மனித உடலில் காணப்படும் பாகமானது ஒரு நெல்மணியைவிடப் பெரியதல்ல! இது தவிர மரபணுக்களிலும் நேரத்துடன் தொடர்புடைய கூறேதாவது உள்ளதா என்ற தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் மிருகங்களிடத்தில் நேரத்திற்குப் பொறுப்பான மரபுக்கூறினை அடையாளம் கண்டுவிட்டார்கள்.

மேற்கண்ட யாவற்றையும் கட்டுரையில் குறிப்பிடுவதற்கான காரணம்: கால இடைவெளிகளும் பரிமாணங்களும் நிச்சயமாக உள்ளவைதான்! இவற்றை அளவிடுவதன் மூலம் தனது வாழ்வியலை எளிதாக்குவதற்காக மனிதன் கண்டுபிடித்தவைதான் மணித்தியாலங்கள், நாட்காட்டிகள், மீற்றர், லீற்றர், கிலோ இன்னும் ஏனையவை யாவும்! அப்படியிருக்க இவ்வலகுகளின் பயனாக வெளிப்படும் எண்களுக்கென்று உலகத்தை அழித்து விடும் அல்லது ஒரு மனிதனின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கிவிடும் சக்தியேதும் இருப்பதாகச் சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பதையிட்டு நாம் சிந்திக்கவேண்டும். அதாவது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றிற்கு அவனுடைய எதிர்காலத்தைத் தனித்தே தீர்மானிக்கக்கூடிய அபூர்வ சக்தியேதும் இருக்கமுடியுமா? அதேவேளை மனிதனின் காலம் அவரவர் கைகளிலேயே இருப்பதை உணர்ந்து, எங்களின் எதிர்காலத்தை எதிரிகளைத் தீர்மானிக்க அனுமதியாது, நிகழ்காலத்தின் தேவைகளை நினைவில் நிறைத்து இனத்தின் எதிர்காலத்தை எல்லோருமாகச் சேர்ந்து எழுதுவோம்!!.

-சு.ஞாலவன்-

0 Comments: