Wednesday, January 16, 2008

இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையும் ஜனாதிபதியும்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு 1987 ஜூலை இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் மீது திடீரென ஒரு அக்கறை பிறந்திருக்கிறது. 20 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவும் கொழும்பில் கைச்சாத்திட்ட அந்த உடன்படிக்கை குறித்து வெளியுலகின் கவனத்தைத் தூண்டக்கூடியதாக இதுகாலவரை - பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையிலும் சரி, எதிர்க்கட்சித் தலைவராகவும் பின்னர் பிரதமராகவும் பதவிவகித்த வேளைகளிலும் சரி, ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வந்து இதுவரையான இரு வருடங்களிலும் சரி- கருத்தெதையும் அவர் கூறியதில்லை.
இன நெருக்கடியை ஜனாதிபதி ராஜபக்‌ஷ கையாளுகின்ற முறை குறித்து பெரும் சர்ச்சைகள் தோன்றியிருக்கின்ற தற்போதைய தருணத்திலே உடன்படிக்கை தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் கருத்து அரசியல் மற்றும் இராஜ தந்திர வட்டாரங்களில் பலவிதமான கேள்விகளைக் கிளப்பியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சி சேவையின் `வோக் த ரோக்' நிகழ்ச்சியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சேகர் குப்தாவுக்கு பேட்டியொன்றை அளித்த ஜனாதிபதி ராஜபக்‌ஷ, இந்திய - இலங்கை உடன்படிக்கையில் விதந்துரைக்கப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கல் திட்டம் இனநெருக்கடிக்கு சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது. என்று குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையின் அன்றைய நிகழ்வுப் போக்குகளை நன்றாகத் தெரிந்து கொண்ட- தெளிவான தூரநோக்குடைய மகத்தான தலைவர் என்று காலஞ்சென்ற ராஜீவ் காந்தியை வர்ணித்த ஜனாதிபதி, தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கைக்கு மாகாண சபைகள் திட்டம் நடைமுறைச் சாத்தியமான ஒரு பதில் என்று கூறியிருக்கிறார். விடுதலைப் புலிகளின் மனோபாவத்தை நன்கு தெரிந்து வைத்திருக்கும் இந்தியாவினால் அவர்கள் மீது நெருக்குதலைப் பிரயோகிக்கக் கூடியதாக இருக்கும். அதனால், இனநெருக்கடித் தீர்வு முயற்சிகளில் இந்தியாவின் மத்தியஸ்தத்தை நாடுவதாகத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, நோர்வே அல்லது அமெரிக்கா அல்லது வேறு எந்தவொரு மேற்கு நாட்டையும் விட இந்தியாவின் மத்தியஸ்தத்தையே இலங்கையர்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனாதிபதி ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவின் இறுதி அறிக்கை அடுத்தவாரம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் இந்திய- இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதையடுத்து மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்காக அரசியலமைப்பில் செய்யப்பட்ட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதிநிதித்துவக் குழு விதந்துரைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இத்தகைய தருணத்தில் தான் உடன்படிக்கைக்குச் சார்பான தனது கருத்தை ஜனாதிபதி வெளியிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இரு வருடங்களுக்கு முன்னர் சர்வகட்சி மகாநாட்டைக் கூட்டிய நாள் முதல் ஜனாதிபதியும் அரசாங்கமும் இனநெருக்கடிக்கு காணப்படக்கூடிய எந்தவொரு அரசியல் தீர்வுமே இலங்கை நிலைவரங்களுக்கு பொருத்தமானதாகவும் உள் நாட்டில் உருவகிக்கப்பட்டதாகவும் (Home Grown) இருக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அத்துடன், ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சர்வ கட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவுக்கு சமர்ப்பித்த யோசனைகளில் மாவட்டத்தை அதிகாரப் பரவலாக்கல் அலகாகக்கொண்ட அரசியல் தீர்வு பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தது. இவையெல்லாவற்றிற்கும் அப்பால் இப்போது மாகாண சபைகள் குறித்து ஜனாதிபதி பேசுகிறார்.

வெளியான செய்திகள் சரியானவையாக இருக்குமானால் இரு வருடகாலமாக 58 தடவைகள் கூடி பல்வேறு யோசனை அறிக்கைகளை ஆராய்ந்த சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழுவினால் 20 வருடங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை விட சிறப்பானதொரு அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை வரைய முடியவில்லையா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. தற்போது இருக்கின்ற அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளுக்கு அப்பால் தான் எதற்குமே இணங்கப்போவதில்லை என்று சிங்கள கடும்போக்கு அரசியல் சக்திகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக இந்திய- இலங்கை உடன்படிக்கை மீது ஜனாதிபதிக்கு இப்போது அக்கறை பிறந்திருக்கிறதா? வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்று அந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து ஜனாதிபதியின் கருத்து என்ன? அரசியல் தீர்வு யோசனைகளை முன்வைக்காமல் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இந்தியாவினால் தெரிவிக்கப்பட்டிருக்கக் கூடிய அதிருப்தியைத் தணிப்பதற்கான ஒரு தந்திரோபாயமா அந்த உடன்படிக்கை மீதான திடீர் அக்கறை? விடை வேண்டி நிற்கும் முக்கியமான கேள்விகள் இவை.

thinakkural.com

0 Comments: