Tuesday, January 22, 2008

"தீவு எரியுமா இல்லை தீர்வு எரியுமா ?"

இலங்கையில் யுத்த நிறுத்தம் முடிந்தது, நாலாபக்கமும் பெரும் போர் வெடிக்கப் போகிறது என்று கூறிவந்த சிறீலங்கா அரசு இப்போது தீர்வுத்திட்டம் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக 63 வரையான கூட்டங்களை நடாத்திய பல கட்சியினர் இப்போது ஓர் இடைக்கால தீர்வை முன்வைக்கிறார்கள். இது வரும் 23 ம் திகதி அவசர அவசரமாக வருகிறது. இதில் மகிந்த ராஜபக்ஸ கேட்டதற்கு அமைவாக 13 வது திருத்தச் சட்டத்தை அமல் செய்வது தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து எழுந்துள்ள கேள்விகள் பின்வருமாறு.

01. இலங்கையின் வரலாற்று முக்கியமான குடியரசு தின விழாவிற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வருவதானால் ஒரு தீர்வுத்திட்டம் அவசியம் என்று கூறப்பட்டிருந்தது. அதற்காக இந்த அவசரத்திட்டம் வருகிறதா ?

02. இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்த 13 வது திருத்தச் சட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தவை என்று சொல்கிறது. வடக்கு கிழக்கை இணைக்க முடியாது என்று நீதிமன்று தெரிவித்த நிலையில் இப்போது அதன் இணைப்பை வலியுறுத்தும் 13 வது திருத்தச் சட்டம் மட்டும் அவசரமாக வருவது மன்மோகன் சிங்கை அழைப்பதற்கான அழைப்பிதழா ?

03. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிறவுணும் சற்று முன்னர் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு சொல்லியிருக்கிறார்கள். ஒன்றிணைந்த இலங்கைத் தீவிற்குள் கூடுதல் அதிகாரப் பரவலாக்கல் மூலம் மட்டுமே பிரச்சனையை தீர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இப்போது அதற்கான பதிலைத்தான் தேட முயல்கிறதா சிறீலங்கா ?

04. யுத்த நிறுத்தத்தில் இருந்து வெளியேறி சர்வதேச வெறுப்பைத் தேடிய மகிந்த அரசு அதை ஈடுகட்ட இப்படியொரு அவசர நாடகமாடுகிறதா ?

05. வடக்குக் கிழக்கை இணைக்கும்படி நீதி மன்று வழங்கிய தீர்ப்புக்கு எதிராக செயற்பட்டால் ஜே.வி.பியை எதிர்க்க நேரிடும். இந்த நிலையில் 13 வது திருத்தச்சட்டத்தை மறுபடியும் கொண்டு வந்தால் ஜே.வி.பியையும் பகைக்காமல் இந்தியாவையும் பகைக்காமல் காரியத்தை கொண்டோடலாம் என்று நினைக்கிறதா அரசு ?

06. தீர்வுத் திட்டம் மேசைக்கு வராமல் அவசரமாக ஓர் இடைக்கால தீர்வு ஆலோசனை எதற்காக ? கடந்த 30 வருடங்களாக ஏற்படாத அவசரம் இப்போது மட்டும் ஏன் வந்தது ?

07. விடுதலைப் புலிகள் இல்லாத ஒரு தீர்வுத்திட்டம் சாத்தியமான ஒன்றாகுமா ?

08. பேச்சுக்களின் போது விடுதலைப்புலிகள் சமர்ப்பித்த தீர்வுத்திட்ட யோசனை என்னவானது ?

09. கிழக்கில் தேர்தல் நடாத்துவதை தடுக்க இயலாது என்று கூறியுள்ள அதே நீதிமன்று மீண்டும் வரும் 13 வது திருத்தச் சட்டத்தை நீதமன்றை அவமதிக்கும் செயல் என்று தடை செய்யாதா ?

10. போருக்கு புறப்பட்ட அரசு இப்போது தீர்வுக்கும் புறப்பட்டுள்ளது சரியா ?

விடை

01. தீர்வை நெருங்குவது ஒரு அரசியல் பொறுமைசார் கலை. சிறீலங்கா அரசு அதைக் கொண்டுவருதற்குரிய தற்றுணிபை இதுவரை பெறவில்லை.

02. தீர்வை அமல் செய்வது ஜனநாயகக் கட்டுமானங்களின் ஜீவநாடி. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தையே காப்பாற்ற முடியாத சிறீலங்கா அரசை நம்பி எந்தத் தீர்வையும் யாரும் ஏற்க முன்வருவார்கள் என்று கூற முடியாது. தமிழர் கூட்டமைப்பு அதைத்தான் கூறியிருக்கிறது.

03. ஒப்புக் கொண்ட சொல்லைக் காப்பாற்றுவது அரசியல் கண்ணியமாகும். சிறலங்கா அரசு அன்று மாவட்டசபைகளுக்கு கொடுப்பதாக ஒப்புக் கொண்ட அதிகாரத்தையே வழங்க மறுத்த வரலாறு கொண்ட அரசாகும்.

04. நோர்வேயின் யுத்த நிறுத்தத்தை மடியில் வைத்திருந்தால் விடுதலைப்புலிகளை நிராகரித்து ஒரு தீர்வை வைக்க முடியாது. எனவேதான் யுத்த நிறுத்தத்தில் இருந்து சிறீலங்கா அரசு விலகியிருக்கிறது. இப்போது தன்னிச்சையான ஒரு தீர்வுக்குள் போவதற்கான பாதையை போட யுத்த நிறுத்த விலகல் அவசியமாயிருக்கிறது. இதற்கு பதிலடியாகவே விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை வரிக்கு வரி கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளனர்.

05. பிரபாகரன் மாவீரர் உரையில் சொன்ன விடயங்கள் அத்தனையும் சரி என்பதை மகிந்த அரசு தனது செயல்களினால் உறுதி செய்து உலக மன்றுக்கு கொடுத்திருக்கிறது.

06. போரிலும் விசுவாசமில்லை ! சமாதானத்திலும் விசுவாசமில்லை என்பதால்தான் கடந்த முப்பதாண்டுகளாக இலங்கைத் தீவு போரினாலும் எரிகிறது ! தீர்வினாலும் எரிகிறது ! எதையாவது செய்யுங்கள் ஆனால் அதை விசுவாசமாகச் செய்யுங்கள்

www.alaikal.com

0 Comments: