Wednesday, January 23, 2008

"நாடு நடுத்தெருவில் நிற்கும் நிலையில் ஆட்சியாளர் தீர்க்கதரிசனத்துடன் செயற்படுவார்களா?"

* அரசும் ஜே.வி.பி.யும் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் நிலையில் இராணுவ தீர்வையே முன்னெடுக்கும் அறிகுறிகள்

சென்றவாரம் `இந்தியன் எக்ஸ் பிறஸ்' பிரதம ஆசிரியர் சேகர் குப்தாவுக்கு வழங்கிய NDTV வாக் த டோக் (Walk the talk) தொலைக்காட்சிப் பேட்டியின் போது 1987 இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் (ராஜிவ்காந்தி- ஜயவர்தன உடன்படிக்கை) சில அம்சங்கள் தனக்கு ஏற்புடையதல்லவாயினும் அது பின்னர் சட்ட வடிவம் பெற்றுள்ளதால் தாம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். `அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதிகாரப் பரவலாக்கம் செய்வதற்கு அதுதான் மிகச் சிறந்த மார்க்கம் என்று நான் உணர்கின்றேன், என ஜனாதிபதி ராஜபக்ஷ அப்பேட்டியில் குறிப்பிட்ட அதேவேளை இலங்கைக்கு எதிர்காலத்தில் எது மிக நன்மை பயக்கக்கூடியதாய் இருக்கும் என்பதை ராஜீவ் காந்தி பகுத்தாய்வு செய்யும் நோக்கு நிறைந்திருந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையும் அதன் வாயிலாக கொண்டுவரப்பட்டதாகிய 13 ஆவது அரசியல் அமைப்புத் திட்டத்தையும் அன்று (1987) ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகத் தீவிரமாக எதிர்த்தாயினும் அதன் கீழ் அமைக்கப்பட்ட மாகாணசபைத் திட்டத்தில் பங்குபற்றி மேல் மாகாணசபை அடங்கலாக சில மாகாணங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், ஐ.தே.க. ஆட்சி காலத்தில் என்றாலும் சரி ஷ்ரீ.ல.சு.க. ஆட்சி காலத்தில் என்றாலும் சரி மாகாணசபைகள் அதிகாரம் அற்ற வெள்ளையானைகள் என்றே கணிக்கப்பட்டு வந்தன. வடக்கு-கிழக்கு மாகாண சபைகள் 1990 முதல் இன்று வரை கலைக்கப்பட்ட நிலையில் உள்ளது என்பது பற்றி நாம் இப்பொழுது அலட்ட வேண்டியதில்லை.

13ஆவது திருத்தத்திற்கு மறுபிறப்பு

இன்று மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பயங்கரவாதம் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும் என்ற போர்வையில் இராணுவ தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உயிர், உடைமை அழிப்புகளும் மனித உரிமை மீறல்களும் கட்டுப்பாடின்றி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இராணுவ அணுகு முறையினை விடுத்து அரசியல் தீர்வு ஒன்றினை எட்டுவதற்கு அரசாங்கம் விரைந்து நகர வேண்டும் என சர்வதேச சமூகம் அதிகளவு அழுத்தம் கொடுத்துள்ள நிலையில் ஜனாதிபதி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக பறைசாற்றியுள்ளார். இதில் உள்ள விசித்திரம் என்னவென்றால் அதுதான் சர்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் (APRC) யோசனையென சோடிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு வைக்கப்பட்டவுள்ளது என்பதாகும். கடந்த ஒன்றரை வருடகாலமாக 57 அமர்வுகளை APRC நடத்திய பின் மலையைக் கொல்லி எலியைப் பிடித்த கதையாகி விடப்போகிறதே என்கின்ற அங்கலாய்ப்பில் APRC பிறிதொரு சுயாதீனமான யோசனை கொண்ட ஆவணமொன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்போவதாக தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும் ஜனாதிபதியின் பார்வை 13 ஆவது திருத்தத்தின் மீதே உள்ளது என்பது தெளிவு. `புதிய மொந்தையில் பழைய கள்' என்பார்கள் அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. வரலாறு முதலில் சாபக்கேடாகவும் அது மீண்டும் நிகழும்போது கேலிக்கூத்தாகிவிடுகிறதாகவும் கார்ள் மார்கஸ் கூறிவைத்ததும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூரத்தக்கதாகும்.

பிரித்தானிய பாராளுமன்ற விவாதம்

இலங்கை பிரச்சினை தொடர்பாக இரண்டாவது தடவையாக அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதமொன்று இடம்பெற்றது. விவாதத்தின் இறுதியில் பதிலுரை நிகழ்த்தியவராகிய அமைச்சர் கிம் ஹவல்ஸ், மீண்டுமொரு பிழையான துவக்கத்தை காண்பதற்கு நாம் விரும்பவில்லையென வலியுறுத்தியிருந்தார். இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு 2007 ஏப்ரலில் இலங்கைக்கு அவர் வருகை தந்திருந்தார். அதாவது ஜனாதிபதி ராஜபக்ஷ பதவிக்கு வந்த கையோடு பிரித்தானியா சென்று இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு கைகொடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரொனி பிளயருக்கு வேண்டுகோள் விடுத்ததையடுத்து வட அயர்லாந்து பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்ட காலமாக உழைத்து பழுத்த அனுபவம் பெற்றவராகிய போல் மேர்ஃபி என்பவர் இலங்கைக்கு உடனடியாக அனுப்பப்பட்டார். மேர்ஃபி ஜனாதிபதி ராஜபக்ஷ அடங்கலாக இங்கு பல முக்கியஸ்தர்களுடன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன் இலங்கையைப் போலவே வட அயர்லாந்தும் 3 தசாப்த கால யுத்தம் காரணமாக மக்கள் அனுபவித்து வந்த அழிவுகளையும் அவலங்களையும் அக்குவேறு ஆணிவேறாக விளக்கியிருந்தார். அதன் பின்னரே ஹவல்ஸின் விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரும் அரசியல் தீர்வின் அவசியத்தினை ஜனாதிபதியிடமும் வற்புறுத்தியிருந்தார். அத்தோடு நின்றுவிடாமல் ஹவல்ஸ் இரண்டு மாதங்கள் கழித்து 2007 ஜூன் முற்பகுதியில் மீண்டும் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்ததாக ஞாபகம் இருக்கின்றது. அத்தோடு சமாதான பேச்சுவார்த்தைகளை மேலும் காலம் தாழ்த்தாமல் நடத்தப்படுவதற்கு அரசாங்கம் ஆவன செய்யவேண்டுமென மிக கண்டிப்பாக கருத்து வெளியிட்டிருந்தார். போல் மேர்ஃபியும் மீண்டுமொரு தடவை விஜயம் செய்ததாக ஞாபகமிருக்கிறது. அவ்வாறாக மேற்கொண்ட முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராகிப் போய்விட்டதே!

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ள போதும் அது இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும் திருப்திப்படுத்தும் முயற்சியென கருதப்படுகின்றது. 13 ஆவது திருத்தம் அமுலாக்கம் என்பதையும் எதிர்த்து வரும் ஜே.வி.பி. முதலில் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக அழித்துவிடவேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்கின்றது. இதனையே அண்மையில் காலி முகாமில் பயிற்சி பெற்று வெளியேறிய கடற்படை வீரர்கள் மத்தியில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கம் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு பகீரத பிரயத்தனம் செய்து வரும் நிலையில் ஜே.வி.பி. யின் வெறுப்பினை சம்பாதிக்க ஒருபோதும் முற்படமாட்டாது. மறு புறத்தில் ஜே.வி.பி.யும் பாராளுமன்றத்தில் இன்று வைத்திருக்கும் பலத்தினை எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்வதற்கு ஷ்ரீ.ல.சு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து நிற்பதும் இன்றியமையாததாகும். ஆயினும் அரசாங்கம்தான் ஜே.வி.பி. க்கு அடிபணிந்து நிற்கின்றது.

எதிர்வரும் சுதந்திர தினக் கொண்டாட்டமும் நாட்டு நிலைமையும்

இன்னும் ஒரு சில நாட்களில் 60 ஆவது ஆண்டு சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த 60 ஆண்டு காலத்தில் நாடு பின்னோக்கி நகர்ந்துள்ளதும் ஆளும் வர்க்கத்தினரால் உணரப்படவில்லை. எப்படிப் பதவியை கைப்பற்றுவது , எப்படி பதவியைத் தக்கவைத்துக் கொள்வது என்பது ஆளும் வர்க்கத்தினரின் கொள்கையாகவே இருந்து வந்துள்ளது. தேசிய இனப்பிரச்சினையை அதற்கான ஆயுதமாகப் பாவித்து தமிழரை அழித்தொழிப்பதையே தமது நிகழ்ச்சி நிரலாகக் கொண்டு அவர்கள் செயற்பட்டு வந்துள்ளனர்.

அதன் காரணமாக நாடு கொடுத்துவரும் விலை தான் என்ன என்பதையிட்டு அவர்கள் இன்னும் தான் சிந்திக்க தலைப்படவில்லை.

வரலாற்றுப் பார்வை

நாடு இன்று எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலையில் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்பது பொருத்தமாயிருக்கும். அதாவது அன்று தமிழரசுக் கட்சித்தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சமஷ்டிக் கோரிக்கையினை முன் வைத்த போது நாடு என்றாவது பிரிந்து போகாமலிருக்க வேண்டுமெனும் நோக்கிலேயே தாம் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைப்பதாக அவர் சூளுரைத்திருந்தார்.

ஆனால், இனப்பிரச்சினையை வைத்து அரசியல் வியாபாரம் நடத்தப் புறப்பட்ட சிங்கள பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினர் ஏட்டிக்குப் போட்டியாகவும் பரஸ்பரம் விரோத குரோதமாகவும் செயற்பட்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சமஷ்டி என்பது பிரிவினை என தென்னிலங்கை மக்களைத் தவறாக வழிநடத்தி கடும் போக்காளரிடம் குரங்கின் கையில் பூமாலை போல கையளித்து விட்டனர்.

ஒற்றையாட்சி அடம்பிடிப்பு

ஒற்றையாட்சி முறைமை மாற்றப்படமாட்டாதென அரசாங்கம் அடம்பிடித்து நிற்கிறது. இது விடயமாக ஐ.தே.க. நிலைப்பாட்டிலும் மாற்றமில்லை.

எனவே, இன்றைய நிலையில் பழைய இடதுசாரிக் கட்சிகள் என்றாலும் சரி, ஜனநாயக முற்போக்கு சக்திகளென பொதுவாக இனங்காணப்படக்கூடிய வட்டாரங்கள் என்றாலும் சரி முட்டையில் மயிர் பிடுங்குவது போல சொற்பதங்களை வைத்து அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. ஒற்றையாட்சி - சமஷ்டி முறைமை விவாதம் அர்த்தமற்றதாகி உள்ளது. உதாரணமாக பிரித்தானியாவை எடுத்துக் கொண்டால் அங்கே ஒற்றையாட்சி முறைமை தான் பின்பற்றப்படுவதாயினும் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் சமச்சீரற்ற முறையில் மீளப்பெறும் நோக்கில் அல்லாமல் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வெல்லாம் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இந்தோனேசியாவில் (ஆச்சே), ஸ்பெயின், நேபாளம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளையும் உதாரணமாக முன் வைக்கின்றனர். அண்மையில் அரசியலமைப்பு கற்கை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அரசியல் கட்சிகளுக்கான செயலமர்வில் இத்தகைய விவாதங்கள் சட்டவல்லுநர் ஒருவரால் முன் வைக்கப்பட்டன. இலங்கையைப் பொறுத்தவரை இவையெல்லாம் எடுபடாத காரியங்கள் என்பதால் இவற்றை உதாரணமாக காட்டுவதில் எதுவித பிரயோசனமும் இல்லை என்பதை அந்த செயலமர்வில் நான் ஆணித்தரமாக சுட்டிக் காட்டியிருந்தேன்.

முன்னர் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தவராகிய செல்வநாயகம் 1957 இல் பண்டார நாயக்காவுடன் செய்து கொண்ட பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவரின் மருமகன் பேராசிரியர் ஜெயரட்ணம் வில்சனும் அது தொடர்பாக புழகாங்கிதம் அடைந்ததாகவும் மேற்படி செயலமர்வில் உரையாற்றிய அரசியல் விஞ்ஞான பேராசிரியர் ஒருவர் தனது உரையில் குறிப்பிட்டார். அவையெல்லாம் காற்றில் பறக்க விட்ட விடயங்கள் அல்லவா என சுட்டிக் காட்டியபோது அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

இன்று நாடு நடுத்தெருவில் நிற்கும் நிலையிலாவது சற்று தீர்க்க தரிசனமாகவும் துணிச்சலாகவும் செயற்பட வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஆட்சியாளர் முன் உள்ளது. அரசியல் தீர்வு முயற்சியில் ஈடுபடுகிறோம் என்ற போர்வையில் இராணுவ முனைப்பை வேகப்படுத்துவது நாட்டையும் மக்களையும் மேலும் அழிப்பதற்கான பாதை என்பதை யாரும் மறுக்க முடியாது.

இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு என்ற பேச்சுக்கு இடமில்லாமல் அரசியல் தீர்வு காண வேண்டிய அவசியத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரித்தானிய பிரதமர் கோர்டன்பிறவுண் - இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் நேற்று முன்தினம் புதுடில்லியில் விடுத்த கூட்டறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருந்ததையும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புறந்தள்ளிவிடக்கூடாது.

வ.திருநாவுக்கரசு

0 Comments: