Tuesday, January 1, 2008

விடுதலைப் போராட்டத்தில் தோல்வி நிரந்தரமில்லை

* கியூபா தேசிய விடுதலை தினத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தினத்தையும் முன்னிட்டு இன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் `விடுதலைப் பண்பாட்டு மாலைப் பொழுது' நிகழ்வு நடைபெறுவதை யொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது
இ.தம்பையா

இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது தற்போது தேசிய இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும்படி வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்கக்கூடாது தடுப்பது என்பதாக சிங்கள மக்கள் மத்தியில் பலமான அபிப்பிராயமாக்கப்பட்டுள்ளது. அந்த எதிர்ப்பானது நாட்டுப் பிரிவினைக்கு எதிரானது பயங்கரவாதத்திற்கு எதிரானது ஈற்றில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானதாக கற்பிக்கப்பட்டுள்ளது.

அதனால் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது சுயநிர்ணய உரிமை மறுப்பாக காட்டப்பட்டுள்ளது. அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுத்தர வெளிநாடுகள் தயாராக இருப்பது போலவும் ஏகாதிபத்திய எதிர்ப்பின் காரணமாகத்தான் அது சாத்தியப்படவில்லை போலவும் காடப்படுகிறது.

ஆக ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது சுயநிர்ணய உரிமை மறுப்பு என்றும், சுயநிர்ணய உரிமை என்பது ஏகாதிபத்திய சார்பு என்றும் காட்டப்பட்டுள்ளது. இதற்கு சிங்கள மக்கள் மத்தியிலுள்ள தேசியவாத சக்திகளினதும் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தேசிய வாத சக்திகளினதும் பிரசாரமாகும்.

பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்களில் இடதுசாரி சக்திகள் அனைத்து மக்களையும் இணைத்துக் கொள்வதில் கவனஞ் செலுத்திய போதும் சிங்கள தேசியவாதிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலையிலேயே அவையும் செயற்பட்ட சில சந்தர்ப்பங்கள் தமிழ் மக்கள் மத்தியில் கீறல்களை ஏற்படுத்தின. 1931 டொனமூர் சீர்திருத்தத்தை அடுத்து நடைபெற்ற தேர்தலை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் பகிஷ்கரித்த போது, அதனை ஆதரிப்பதாக தெரிவித்த இடதுசாரிகள் தேர்தலில் போட்டியிட்டனர். சோல்பரி சீர்திருத்தத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படுவதிலும் கூடிய அழுத்தங்களை கொடுக்கவில்லை.

ஆங்கில கல்வி கற்ற மேட்டுக்குடி தமிழர்கள் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ் உயர்பதவிகள், வகித்தமையை, தமிழர்களுக்குப் பிரிட்டிஷார் சலுகைகளை வழங்கியதாக சிங்கள மக்களிடம் காட்டப்பட்டது. அந்த தமிழ் மேட்டுக்குடியினரில் அதிகமானோர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்பதும் பிரிட்டிஷாரின் செல்வாக்கினால் மதம் மாறியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அநாகரிக தர்மபால போன்றோரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு பௌத்த, சிங்கள மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டதாகவே இருந்தது.

1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இலங்கையின் ஆட்சி விவகாரத்தை கைவிட்டபிறகும் தமிழ் மேட்டுக்குடியினரின் பிரிட்டிஷின் சார்பு நிலைப்பாடும் சிங்கள மக்கள் மத்தியில் இலங்கைத் தேசியம் என்பது சிங்களத் தேசிய வாதமாக வளர்த்தெடுக்கப்படுவதற்கு துணை புரிந்தது எனலாம்.

இதன் வளர்ச்சியாகவே 1972 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட குடியரசு அரசியல் யாப்பும் அமைந்தது. அதாவது பிரிட்டிஷாரிடமிருந்து முற்றாக விலகிக் கொள்வது என்ற சிங்கள தேசியவாத நிலைப்பாடு தமிழ் மக்கள் "பிரிட்டிஷாரிடம் அனுபவித்த சலுகைகளை" பறிப்பதாகவும் இந்நாட்டில் வாழும் ஏனைய இனங்களை முற்றாக நிரகரிப்பதாகவும் வளர்க்கப்பட்டது.

பின்னர் 1978 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அரசியல் யாப்பு சிங்கள தேசியவாதம் இந்நாட்டில் வாழும் ஏனைய தேசிய இனங்களை நிராகரித்து ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாட்டை உறுதி செய்வதாக அமைந்தது. அந்த நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் தமிழ்த் தேசிய தலைமைகள் சிங்கள தேசியத்தைவிட ஏகாதிபத்தியத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் நிலைப்பாடுகளை எடுத்து அதற்கு நியாயம் கற்பிக்கலாயிற்று.

ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும் எந்தவொரு மேலாதிக்கத்திற்கு அடிபணியா சுதந்திர இலங்கை நாடும் என்பதன் அவசியம் சிங்கள மக்களிடமோ, தமிழ் மக்களிடமோ சரியாக சென்றடையாமல் இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் இலங்கை அரசை ஏகாதிபத்தியத்தின் வாடிக்கை அரசாகவே வைத்திருப்பதன் அடிப்படையிலேயே ஏகாதிபத்தியம் பற்றி மக்களுக்கு மாயை ஊட்டி வருகின்றன. இது தமிழ் மக்கள் மத்தியிலும் ஆளும் வர்க்க நிலைப்பாட்டுடன் இருக்கும் சக்திகளுக்கும் பொருந்தும்.

பூகோளமயமாதல் எனும் நிகழ்ச்சி நிரலின்படி ஏகாதிபத்தியத்தின் அனைத்து தீர்மானங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவை யுத்தத்தின் போராலும், பொருளாதாரப் பிரச்சினைகளினாலும் மூடி மறைக்கப்படுகின்றன.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த தேசிய முதலாளித்துவ சக்திகள் இன்று சர்வதேச மூலதனத்திடம் மண்டியிட்டிருக்கின்றன. ஏகாதிபத்தியத்திற்கும் இலங்கை மக்களுக்குமான முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு செயற்பட வேண்டிய இடதுசாரிகள் செயலிழந்துள்ளனர். மக்களோ வாழ்க்கைச் செலவு அதிகரிப்பாலும், யுத்தக் கொடுமையாலும் பெரும் துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் விடுதலை பண்பாட்டு மாலைப் பொழுது என்ற நிகழ்ச்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமாகவும் கியூப தேசிய விடுதலை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதனை இவ்வருடத்துடன் 5 ஆவது தடவையாக சர்வதேச ஒத்துழைப்பு மக்கள் அமையம் நடத்துகிறது.

கியூப தேசிய விடுதலை தினத்தை அடையாளமாகக் கொண்டு சோஷலிஸ கியூபாவினதும், கியூப மக்களினதும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான நிலைப்பாட்டிற்கும் போராட்டங்களுக்கும் ஒத்துழைப்பு தெரிவிப்பதாகவும் இந்நிகழ்வு அமைகிறது.

கியூபாவினுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தின் அனுபவங்களும் அதன் சோஷலிஸ கட்டுமான அனுபவங்கள் ஏனைய நாடுகளிலிருந்து வித்தியாசப்பட்டதாகும். அதேபோன்று தற்போது லத்தீன் அமெரிக்க மக்களிடையே ஏற்பட்டிருக்கும் விழிப்பும் வித்தியாசமாகும். கியூப மக்கள் ஜொசி மார்டி காலத்திலிருந்து `தேசம் அல்லது சாவு' என்ற சுலோகத்தின் கீழ் உண்மையாகவே தேசப்பற்றுக் கொண்டவர்களாக அவர்களது பண்பாட்டை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது தலைவர்களும் மக்களை உண்மையாக நேசிப்பவர்களாக மக்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர். பிடல் கஸ்ரோ, சேகுவேரா உட்பட பல தலைவர்கள் கியூப மக்களுக்கு கிடைத்தமை வரலாற்றில் முக்கிய பெறுமதியான விடயங்களாகும். இன்று ராவுல் கஸ்ரோ அவரது சகோதரனான பிடல் கஸ்ரோவின் சுகயீனத்தினால் நாட்டுத் தலைவர் பதவியை ஏற்று பலவிதமான சவால்களுக்கு மத்தியில் கியூப நாட்டிற்கும் மக்களுக்கும் தலைமை தாங்கி வருகிறார்.

சோவியத் யூனியானை சார்ந்தே இருந்து வந்த கியூபா சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு நின்று பிடிக்காது என்றே பல முதலாளித்துவ ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதற்கு மாறாக, பெரும் வல்லரசுகளுக்கு எதிராக சுயசார்புடன் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. கியூபா வளர்முக நாடுகளுடன் இறுக்கமான உறவை வளர்த்துக் கொண்டு அவற்றுக்கும் உதவிக்கொண்டு அவற்றின் ஒத்துழைப்பை பெற்று வருகிறது.

கியூபாவில் அரசாங்கத்தின் இலவச கல்வி, மருத்துவம் போன்றவை சென்றடையாத மக்களே இல்லை. வேலைவாய்ப்பு இல்லாலும் இல்லை. குறிப்பாக மருத்துவம் விஞ்ஞான ஆய்வு போன்ற துறைகளில் வளர்ச்சியடைந்ததாக சொல்லப்படுகின்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இரு இணையாக இருக்கிறது.

அதன் முன்மாதிரிகளை வளர்முக நாடுகள் பின்பற்றுவது அவசியம். அதன் போராட்டப் பாரம்பரியத்தையும் விடுதலை உணர்வையும் போராடுகின்ற சக்திகள் பாடமாகக் கொள்வது அவசியம்.

இப்படி கியூபா ஏனைய நாடுகளுக்கும் மக்களுக்கும் முன்மாதிரியாகவும், பாடமாகவும் அமைந்துவிடுமென்பதால் தான் கியூபாவில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்ய ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து சதிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிடல் கஸ்ரோவை பல தடவைகள் கொலை செய்ய சி.ஐ.ஏ. நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

ஜொசி மார்டி முதல் பிடல்கஸ்ரோ வரை கியூபாவில் பல தேசிய விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 1959 ஜனவரி முதலாம் திகதி தேசிய விடுதலைப் போராட்டத்தின் வெற்றிவரை பல பின்னடைவுகளும், தோல்விகளும் ஏற்பட்டன. அவை நிரந்தரமானவை அல்ல என்பது வரலாற்றினால் நிரூபிக்கப்பட்டுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிடல் கஸ்ரோவை மட்டுமல்ல, கியூபாவையும், கியூப மக்களையும் வரலாறு விடுதலை செய்தது. அயராது போராட்டத்தின் மூலம், போராட்டத்தினை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்ட பண்பாட்டின் காரணமாக கியூப மக்கள் இன்றும் எவருக்கும் அடிபணியாது இருக்கின்றனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் ஏகாதிபத்திய சதிகளிலிருந்தும் விடுபட்டு விடுதலைக்கு உதாரணமாக சோஷலிசக் கட்டுமானங்களுக்கு உதாரணமாக உலக வரலாற்றில் கியூபா, நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொள்ள வாழ்த்துவோம்.

(கட்டுரையாளர் சர்வதேச ஒத்துழைப்பு மக்கள் அமையத்தின் மத்திய இணைப்பாளர்)
thinakkural.com

0 Comments: