Wednesday, January 9, 2008

"ஜே.வி.பி.யின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்பட்டுவரும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசு"

2002 பெப்ரவரி 22 இல் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏறத்தாழ கடந்த 2 வருடங்களாக செயலிழந்து காகிதத்தில் மட்டும் இருந்து வந்துள்ளது. ஆயினும், அதனை சென்ற வாரம் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தன்னிச்சையாக இரத்துச் செய்து எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அதிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிச் செல்வதாக அறிவித்துள்ளதும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வெளியேறுவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதும் யாரும் அறிந்ததே. ஒப்பந்தத்தினை அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதில் ஆச்சரியமேதுமில்லை. ஏனென்றால் அதனை இரத்துச் செய்து விடுதலைப் புலிகளை தடைசெய்து அவர்களை முற்றாகத் தோற்கடிக்கும் முகமாக யுத்தம்தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்பதே ஜே.வி.பி.யினரின் விடாப்பிடியான கோரிக்கையாகும். அந்த நிகழ்ச்சி நிரலையே அரசாங்கம் அச்சொட்டாக நிறைவேற்றி வருவது கண்கூடு.

ஜனாதிபதியின் புத்தாண்டுச் செய்தி

ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்திருந்த புத்தாண்டுச் செய்தியில் பயங்கரவாதம் இந்த நாட்டிலிருந்து பூண்டோடு ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் நாட்டுக்கு கூடுதலான சுதந்திரமும் ஜனநாயகமும் கொண்டு வரப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். சென்ற வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் "சன்சலா" அபிவிருத்தி திட்டத்தினை செய்மதி மூலம் ஆரம்பித்து உரையாற்றும் போதும் புத்தாண்டுச் செய்தியை மீள வலியுறுத்தியுள்ளார். 1979 ஜூலையில் பயங்கரவாத தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கையோடு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன பிரிகேடியர் வீரத்துங்கவை யாழ்ப்பாணம் சென்று பயங்கரவாதத்தை 6 மாத காலத்தில் பூண்டோடு அழித்து விட்டுவருமாறு அனுப்பிவைத்த நிகழ்வு தான் இச்சந்தர்ப்பத்தில் ஞாபகத்திற்கு வருகிறது. 6 மாதத்தில் கொழும்பு திரும்பிய வீரதுங்க காரியம் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இக்கட்டுரையில் அதனை விபரிக்க வேண்டியதில்லை. 2008 இல் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படுமென பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்த புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் இராணுவத் தளபதி லெப்ரினட் ஜெனரல் சரத் பொன்சேகா விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 6 மாதத்தில் கொல்லப்பட்டுவிடுவார். நாளொன்றுக்கு 10 புலிகள் கொல்லப்பட்டு வன்னியிலுள்ள 3,000க்கு மேற்பட்ட புலிகளை ஒழித்துக்கட்டி விடலாமென தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார். 2008 யுத்த ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2008 `வெற்றிவருடம்' என ஜெனீவாவிலுள்ள இலங்கை தூதுவர் தயான் ஜலத்திலக்க அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச சமூகம் விசனம்

நிற்க யுத்த நிறுத்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதையிட்டு ஐ.நா. செயலாளர் நாயகம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார். மேலும், விடுதலைப் புலிகள் மீது ஏலவே தடைவிதித்துள்ள அமெரிக்கா மற்றும் பிரித்தானியா, பிரான்ஸ் அடங்கலாக பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அடுத்து இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் இது தொடர்பாக தமது விசனத்தைத் தெரிவித்துள்ளதுடன் இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு காண்பதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. இவை எதனையும் அரசாங்கம் செவிமடுப்பதற்கு தயாராயில்லை என்பதையே காண முடிகிறது. ஆக, சர்வதேச சமூகத்தின் வெறுப்பினைச் சம்பாதிப்பதையிட்டோ அதனிடமிருந்து அந்நியப்படுவதையிட்டோ அரசாங்கம் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. அதாவது இது ஒரு விவேகமற்ற போக்கு என்பது சிறிதும் உணரப்படவில்லை. இலங்கை அரசாங்கம் எல்லாவிடயங்களிலும் சர்வதேச சமூகம் போடுகின்ற தாளத்திற்கு ஆட வேண்டுமென்பதல்ல. ஆனால், நாட்டைச் சின்னாபின்னமாக்கும் கைங்கரியத்தில் கங்கணம் கட்டி நிற்கும் ஜே.வி.பி. மற்றும் ஜே.எச்.யூ.வினரின் தாளத்திற்கு ஆடி நாட்டை மேலும் குட்டிச்சுவராக்கக்கூடாது என்பதே எமது ஆழ்ந்த அக்கறையாகும்.

ஜனாதிபதி ஆலோசகர் தனபால இராஜிநாமா

இதனிடையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்ட கையோடு ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியிலிருந்து கலாநிதி ஜயந்த தனபால இராஜிநாமா செய்துள்ளார். அவர் தனது தனிப்பட்ட காரணத்துக்காகவே இராஜிநாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளபோதும் முன்னாள் சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகமாகச் செயற்பட்டவர் என்ற வகையிலும் முன்னாள் ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் மட்டுமல்லாமல் சென்ற தடவை ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்குப் போட்டியிட்டவர் என்ற வகையிலும் அவர் தொடர்ந்து ஜனாதிபதி ஆலோசகராக செயற்பட முடியாத மன உளைச்சல் நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டார் என்பதுதான் உண்மை எனலாம்.

சிங்கள- பௌத்த நாடு- பேரினவாதிகளின் சிந்தனை

இலங்கை ஒரு சிங்கள- பௌத்த நாடு என்பது பேரினவாதிகளின் நிலைப்பாடாகும். அவர்களைப் பொறுத்தவரை ஏனைய இன, மதம் சார்ந்த மக்களை ஒரு பொருட்டாக எண்ண வேண்டியதில்லை. அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இது தத்ரூபமாக வெளிக்கொணரப்பட்டது. 26.12.2007 ஆம் திகதி ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க ஏற்பாடு செய்திருந்த நத்தார் கொண்டாட்டம் கந்தானையில் நடைபெற்றது. அதில் பங்குபற்றிக் கொண்டிருந்தவராகிய ஜனாதிபதி ஆலோசகர் ஒருவர் அங்கே இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கூறியதாவது; "இலங்கை வாழ் மக்களில் 80 சதவீதமானோர் சிங்கள பௌத்தர்கள். அவர்கள் தான் மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர். எனவே, அவர்களைப் பற்றியே ஜனாதிபதி ராஜபக்ஷ அக்கறை கொண்டிருக்க வேண்டுமே ஒழிய, அவர் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது கரிசனை காட்டத் தேவையில்லை". இதைக் கேட்டு அங்கலாய்ப்படைந்த சமாதானச் செயலக முக்கியஸ்தராகிய பிறிதொரு விருந்தினர் வடக்கில் தமிழர் படும் அவலங்களை அரசாங்கம் அறிந்திருக்கவில்லை. விமானக் குண்டுகள் வீசுவதன் காரணமாக அப்பாவி பொதுமக்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு வருகின்றனரே எனக் கூறிய போது, "அது அவர்களுக்கு வேண்டும்" என அந்த ஜனாதிபதி ஆலோசகர் கூறியதாக செய்தி வெளியாகியிருந்தது. ("சன்டே லீடர்" 30.12.2007)

ஐ.தே.க. வெளிப்படுத்தியுள்ள விசனம்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை அரசாங்கம் ரத்துச் செய்ததையிட்டு ஐ.தே.க. கடுமையான விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு அடித்தளமானதாக அமைந்துள்ளது. இதற்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். இந்த அரசாங்கத்தின் இனவாத, இரத்தவெறி பிடித்த யுத்த முழக்க கொள்கைகள் மீது சர்வதேச சமூகம் தனது கடுமையான விசனத்தை ஏலவே வெளிப்படுத்தியுள்ளது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் அவசியமானவையாயினும் நீண்டகால சமாதானத்தை பேச்சுவார்த்தைகள் மூலமே கொண்டுவர முடியும். ஜனநாயக வழிமுறைகள் மூலமாகவே பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது என்பதை புத்த பெருமான் கூறியிருக்கிறார். பயங்கரவாதத்திற்கு பயங்கரவாதம் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. எல்லா சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்றெல்லாம் ஐ.தே.க. தனது அறிக்கையில் சூளுரைத்துள்ளது. இவ்வாறான விதத்தில் ஐ.தே.க. வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாடானது சற்று ஆச்சரியத்துக்குரியதாய் உள்ளது.

ஏனென்றால், யுத்தம் திறமையாக நடத்தப்படவில்லையென குறிப்பாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மீது கடந்த காலத்தில் ஐ.தே.க. குற்றம் சுமத்திய வண்ணம் இருந்தது. அவரை அப்பதவியிலிருந்து நீக்கி விட்டு அந்த இடத்திற்கு முன்னாள் மூத்த இராணுவ அதிகாரியாகிய ஜானக்க பெரேராவை நியமிக்க வேண்டுமென ஐ.தே.க. விடாப்பிடியாக கோரி வந்தது. மேலும், சமஷ்டி தீர்வு நிபந்தனையின் (அதாவது 2003 ஒஸ்லோ/ டோக்கியோ பிரகடனத்தின் பிரகாரம் எட்டப்பட்ட சமஷ்டித் தீர்வு யோசனையை) தாம் விலகிக் கொள்வதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது பிந்திய நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தது. அந்த வகையில் காலத்துக்குக் காலம் காணப்படும் ஏமாற்று வித்தைகள், கவர்ச்சிக் கதைகள் தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாகவிருத்தல் வேண்டும்.

2008 விடுதலைப் புலிகளை பூண்டோடு ஒழிக்கும் யுத்த ஆண்டு என அரசாங்கம் காய்கள் நகர்த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த கால அனுபவங்களைக் கணக்கில் எடுக்காமல் பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டிய கடப்பாட்டினை அரசாங்கம் முற்றாகப் புறந்தள்ளிவிட்டு தனது இராணுவ இலக்கை மட்டும் நோக்கி நகர்வது மேலும் பாரிய அழிவுகளைக் கொண்டு வரும். அத்துடன், பணவீக்கமும் விலைவாசிகளும் மேலும் வேகமாக அதிகரிக்குமே ஒழிய நாட்டுக்கு ஒருவித நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஆத்திரப்பட்டு முடிவுகள் மேற்கொள்வது பொறுப்பு வாய்ந்த அரசாங்கமொன்றின் தெரிவாக இருக்கக்கூடாது.

வ.திருநாவுக்கரசு

0 Comments: